சென்னையில் புதிதாகவோ அல்லது கொஞ்ச காலமாகவோ குடியிருப்பவர்களுக்கு இது பொதுவான அனுபவமாக இருக்க கூடும் . தனது சொந்த ஊரின் பெருமையைப் பற்றி இங்கே நாக்கு தெறிக்க பேசுபவர்கள், அங்கே அவர்களது, உறவினர்களைப் பார்த்தவுடன் சென்னை புகழ் பாட ஆரம்பித்து விடுவாரகள் .சென்னையில் என்னவெல்லாம் இருக்கிறது என்னன்ன சாப்பிடலாம்,எங்கு செல்லலாம், நெரிசல் மிக்க சாலைகள் ,அசத்தும் மால்கள் ,சுவையான உணவு வகைகள் , கடற் கரை என்று அவர்களது பேச்சு நீண்டு கொண்டே போகும்.பொதுவாகவே இதை அனைவரும் விரும்பி ரசிப்பர் .
அப்படித்தான் ஒரு நாள் நான் சென்னை புகழ்பாடும் வேளையில் ஒரு புகைப்படத்தை காட்டினேன் ,அது கலர் குஞ்சுகளை விற்பனை செய்யும் பெண்ணின் புகைப்படம் . எனது உறவினருக்கோ ஆச்சர்யமான ஆச்சர்யம்.
சென்னையில் இப்படியும் இருக்கா என ஆச்சர்யப் பட்டார் ,இங்கேயே இப்போது இப்படி யாரும் வாங்கி வளர்ப்பதில்லையே , இதெல்லாம் அந்தக் காலம் ,இது சென்னை தானா? நான் சென்னை ஏதோ மாடர்ன் சிட்டி என்றல்லவா நினைத்தேன் என்று கூறினார்.
நான் சென்னையை விவரித்த விதத்தை வைத்து அவர் அதனை ஏதோ நியூ யார்க் ரேஞ்சுக்கு கற்பனை செய்து வைத்து இருந்தார் போலும். ஆனால் அது சத்தியமாக சென்னை தான்.காலை 11 மணிக்கு நான் ஜிம் மில் இருந்து நடந்து வந்து கொண்டிருந்த போது மார்க்கெட் அருகில் கண்ட காட்சி அது.கண்கவர் வண்ணங்கள் என்னை சுண்டி இழுக்கவே அதை புகைப்படம் எடுத்தேன்,
கோழி குஞ்சுகள் என்றுமே என் இதயத்தை நெருங்கியவை.
என்னுடைய மகள் -மிகவும் சிறியவள் அப்போது..அவளுக்கு இரண்டு வயது இருக்கலாம்.பள்ளி செல்ல ஆரம்பிக்கவில்லை .வீட்டில் துறு துறு வென சுற்றிக் வருவாள் .பேச்சு,பேச்சு ,பேச்சு எப்போதும் பேச்சு தான். அவளுடைய மழலைக் கேள்விகளுக்கு பதில் சொல்லி மாளாது .அவளுடைய சில்மிசங்களால் வீட்டில் எப்போதும் நகைப்பாய் இருக்கும்.அவளுடைய பொழுதுபோக்கிற்காக விதவித மான விளையாட்டுகள் விளையாடுவோம்.தண்ணீர் தொட்டியில் காகிதக் கப்பல் விடுவது (கப்பல் விடும் போது அந்த அறையே தண்ணீரில் மிதக்கும்.)சுவற்றில் எழுதுவது(டீச்சர் விளையாட்டு ),காகிதங்களை கசக்குவது என்று புதுப்புது விளையாட்டுகளைக்கண்டு பிடிப்பாள் .ஒரு நாள் காரில் வரும் போது கலர் கோழிக்குஞ்சுகள் விற்பவரை வீதியில் கண்டோம்,இதே மாதிரி தான் .வீட்டிற்க்கு வந்தவுடன் என் கணவரிடம் சொன்னேன் ,'வாங்கி இருக்கலாம் அல்லவா?!' என்றார். அருமை மகள் பார்த்து ரசிப்பாள் என்றார்.உடனே டிரைவரை அதே இடத்திற்கு அனுப்பி வாங்கி வரச் சொன்னார்.
டிரைவர் அடித்துப் பிடித்து காரை எடுத்துக் கொண்டு சென்றால் ,வியாபாரி அந்த இடத்தை விட்டு கிளம்பி விட்டார்,அங்கே சென்றார் இங்கே சென்றார் என்று சுமார் நான்கு கிலோ மீட்டர் தள்ளி அருகில் உள்ள கிராமத்தில் அவரை பிடிக்க முடிந்தது.
இனி அடுத்த கூத்து..டிரைவரின் ஆர்வ கோளாறு -ஒன்று , இரண்டு என்று வாங்காமல் பத்து கோழிக் குஞ்சுகளை வாங்கி வந்தார் .வீடெங்கும் மஞ்சள்,பச்சை,ஆரஞ்சு என வண்ணமயமாக குஞ்சுகள்."கீச் கீச் " என ஓயாத சத்தம் வேறு.என் மகளின் சந்தோசத்தை கேட்கவா வேண்டும்?
நாள்தோறும் ஒரு கதை என்று அந்த குஞ்சுகளுடன் பொழுது கழிந்தது.இதில் அந்த குஞ்சுகளை கண்டு ரசிக்க என அக்கம் பக்கம் உள்ள வாண்டுகள் எல்லோரும் வீட்டில் தினமும் கூடி விடுவர் . வீடு ஏதோ திருவிழா வீதி போல் இருக்கும்.குஞ்சுகள் கொஞ்சம் பெரியவை ஆனவுடன் மண்ணை கிளற ஆசைபட்டன .உடனே வெளியே உள்ள தோட்டத்தில் விட்டு காவல் காத்தேன்.ஒரு முறை அவை தோட்டத்தில் இருந்த போது பருந்து ஒன்று ஒரு குஞ்சைக் கவ்வி சென்றது .நான் விடவில்லை.அதன் பின்னாலே ஓடி கல்லெடுத்து வீசினேன்.பருந்து குஞ்சை கீழே போட்டு விட்டது ..ஒரு பூனை ஒன்று குஞ்சு ஒன்றை கொன்று விட்டது .இப்படி தினந்தோறும் சுவையான சம்பவங்கள் என்றாலும், மூன்று மாதங்களுக்குப் பின் மிஞ்சியது என்னவோ மூன்று குஞ்சுகள் மட்டுமே.கலர் எல்லாம் போய் கோழிகளாய் அவை உலவி வந்தன .இப்போது அனைவருக்கும் கோழிகளின் மேல் உள்ள ஆர்வம் குறைந்து விட்டது.வீட்டில் கோழி வளர்த்து வந்த ஒருவரிடம் அவற்றை ஒப்படைத்து விட்டோம். என்றாலும் என் மனம் அவற்றை அடிக்கடி தேடும்.அவரிடம் அவ்வப்போது விசாரிப்பேன்.நல்லா இருக்கும்மா என்பார்.
இதெல்லாம் நடந்து முடிந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.இப்போதும்,பழைய நினைவுகள் நிழலாடும் போது ,கோழி வளர்த்த கதையை எனதருமை மகளிடம் சிலாகித்துக் கூறுவேன்.அவள் சிரித்துக் கொண்டே ' அம்மா பதினாறு வயதினிலே சப்பாணி மாதிரி ,ஆடு வளத்திங்க ..கோழி வளத்திங்க .கடைசில இந்த அருணா தான் துணைக்கு இருக்கா ..பாத்திங்களா 'என்று நகைப்பின் ஊடே கூறுவாள்.நானும் சிரித்துக் கொள்வேன் .பசுமை நிறைந்த நினைவுகள்.....
முருகேஸ்வரி ரவி .
2 Attachments