ரொம்பவும் யோசித்து பால்கனியில் பூஞ்செடிகள் வளர்க்கலாம் என்று என் கணவர் யோசனை கூறினார். உடனடியாக ஆறு மண் தொட்டிகள் வாங்கினேன். வளர்ப்பதற்கு இலகுவாக இருக்கட்டுமே என்று குரோட்டன்ஸ் வாங்கி நட்டேன். என்னுடைய பால்கனி தோட்டம் ரெடி. என்னதான் இருந்தாலும் தாவரப்பச்சை கண்ணுக்கு அளிக்கும் குளுமை இருக்கிறதே- அட டா! ஜன்னல் வழியே நின்று பால்கனி தோட்டத்தை பார்த்துப் பார்த்து ரசிப்பேன். எங்கள் வீட்டிற்கு யாராவது வந்தால் அவர்களிடம் அதைக் காட்டி சிறு குழந்தை போல் குதூகலிப்பேன்.
இவ்வாறாக நான் குரோட்டன்ஸ்களுடன் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் என் தங்கை என்னை போனில் அழைத்து அவளது உறவினர் ஒருவர் மொட்டை மாடியில் தோட்டமே போட்டிருக்கிறார்கள், போய்ப்பாருங்கள் என்றாள். ஒரு நாள் நானும் சென்றேன், மொட்டை மாடியைப் பார்த்து அசந்து விட்டேன். அவர்களது மாடி என்பது சிறியது தான், இரண்டு அறைகளின் அளவு தான் இருக்கும். ஆனால் அதில் எத்தனை செடிகள்?!?!ஆச்சர்யப்படுத்தும் விஷயம் என்னவென்றால் அவை பூஞ்செடி குரோட்டன்ஸ் போன்ற அலங்காரமான செடிகள் அல்ல. அனைத்தும் காய்கறிகள். ஆக, மொட்டை மாடியில் அவர் விவசாயமே செய்து வருகிறார்..ஹாட்ஸ் ஆஃப்
சுகந்திக்கா என்னைப்போல் மண் தொட்டிகளில் அவற்றை வளர்க்கவில்லை. அனைத்துமே பிளாஸ்டிக்கு கவர் தான். அதற்கென்றே பிரத்யேகமாக தயாரித்து விற்கப்படும் கவர்கள். நர்சரி கேக் என்று ஒன்று விற்கப்படுகிறதாம். பார்க்க செங்கல் போல தோற்றமளிக்கிறது. ஒன்றின் விலை எண்பது ரூபாயாம். அவர் அதனை கொடைக்கானல் செல்லும் வழியில் வாடிப்பட்டியில் வாங்கி உள்ளார். அந்த நர்சரி கேக்கை ஒரு பெரிய அகலமான வாளியில் போட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். உடனே அது புஸுபுஸு என ஊதி பெரியதாகி விடுகிறது.
நர்சரி கேக் - ஒரு பங்கு
மண்புழு உரம். - ஒரு பங்கு
ஆர்கானிக் உரம்- ஒரு பங்கு
சாதாரண மண். - இரண்டு பங்கு
இவை அனைத்தையும் கொடுக்கப்பட்டுள்ள விகித்த்தில் கலந்து கொள்ள வேண்டும். கவர்களில் தட்டி வைக்க வேண்டும். தொட்டியில் வைக்காமல் கவரில் வைப்பதால் நாமே வெவ்வேறு இடத்தில் மாற்றி வைத்துக் கொள்ளலாம். வரிசையாக அவர்கள் அடுக்கி வைத்திருந்ததைப் பார்க்க மிகவும் அழகாக இருந்தது.
என்னென்ன இருந்தன தெரியுமா?!மிக ஆச்சர்யமாக இருந்தது. தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கோஸ், முருங்கை, மல்லி, புதினா, புடலை, காளிபிளவர், கீரை என்று அனைத்துமே இருந்தன. வீட்டில் அன்றாடம் சமையலுக்கு அதிலிருந்து காய்கறிகளை எடுத்துப் கொள்வார்களாம். எப்பேற்ப்பட்ட முயற்சி, ஆர்வம்!! எனக்கு அவர்களைப் புகழ வார்த்தைகளே கிடைக்க வில்லை. மணி பிளாண்ட்களிலும் ரோஜாக்களிலும் சந்தோசப்படும் நாம் எங்கே , தேர்ந்த விவசாயியைப் போலப் பயிரிட்டிருக்கும் அவர் எங்கே! முயன்றால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தினார் அவர். வாய் மூடாமல் ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருந்த என்னை சாப்பிட அழைத்தார்கள். மணக்க மணக்க கத்தரிக்காய் காரக்குழம்பும் கொத்தமல்லி துவையலும் பரிமாறினார்கள். அவை அவர்கள் வீட்டில் காய்த்தவை என்று நான் சொல்லவும் வேண்டுமோ? பிரமாதமாய் இருந்தது. ஒரு பிடி பிடித்தேன்.
கிளம்பும் முன் நியாபகமாய் மண்புழு அளித்த சக்தி மண் புழு உரக்காரின் போன் நம்பர் கொடுத்தார்கள். வீட்டில் தோட்டம் அமைக்க விரும்புவோருக்கு உபயோகப்படும் என்பதால் இங்கு தருகிறேன் - சக்தி மண் புழு உரம்-99947998312 , 9842147960
வீட்டிற்குள்ளேயே தோட்டம் அமைத்தால் எத்தனை உன்னதமாய் இருக்கும் தெரியுமா? விவசாயம் என்னவென்றே தெரியாமல் வளரும் நம் குழந்தைகளுக்கு இது ஒரு அறிமுகமாய் அமையும் . மேலும் தாவரப் பச்சை கண்ணிற்கு அளிக்கும் இத த்தை என்னவென்று வருணிப்பது! வளர்ந்து வரும் நகரச் சூழலில் இது போல வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், மண்ணில்லா விவசாயம் என நாமும் மாறிக்கொள்வது தான் புத்திசாலித்தனம்.