Wednesday, December 9, 2015

பிறந்த நாள்



ராஜாவுக்கு பிறந்த நாள் இன்னும் இரண்டு நாட்களில் வந்து விடும். ராஜா எப்பவும் தன் பிறந்த நாளுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருப்பான். அம்மா, அப்பா, அக்கா என்று எல்லோரும் ஏதாவது ஒரு கிப்ட் தருவார்கள். ஆனாலும் அவனுக்கு அவனுடைய தாத்தா ஏகாம்பரம் தரும் கிப்ட் தான் ஸ்பெஷல். 
         அவன் அப்படித்தான். சிறு வயதிலிருந்தே  அவருடன் ரொம்ப நெருக்கம். காலையில் பள்ளிக்குச் செல்லும் செல்லும் போது பிரியாவிடை கொடுத்து கிளம்புவதிலிருந்து, மாலையில் அவருடன் வாக்கிங் செல்வது வரை எல்லாமே அவனுக்கு பிடித்தமான செயல்கள். அவன் இரவு உணவருந்துவது அவர் கூடத்தான். இரவில் தனக்குத் தெரிந்த இதிகாசக் கதைகள் முதல் தற்போது படித்த நாகரீக கதைகள் அனைத்தையும் அவனுடன் பகிர்ந்து கொள்வார். ராஜாவும் தான் கற்ற நவீன சமாச்சாரங்களை அவருக்கு கற்றுத் தருவான். 'டச்' ஃபோனின் சகல சமாச்சாரங்களும் அவருக்கு அத்துப்படி.
        அவனுடைய பத்தாவது பிறந்த நாளுக்கு நாய்க்குட்டி ஒன்றைப் பரிசளித்தார். அவனுடைய பன்னிரெண்டாவது பிறந்த நாளுக்கு மாங்கன்று ஒன்றைப் பரிசளித்தார். அன்றிலிருந்து அவனுக்குத் தோட்டக்கலையின் மீது ஆர்வம் வந்துவிட்டது. இப்போது அவன் வீட்டில் நிறைய பூஞ்செடிகள் பூத்துக் குலுங்கின்றன.
        அவனது பிறந்த நாளும் வந்தது.காலையில் தோசை வார்த்துக் கொண்டிருந்த அம்மாவிடம் கேட்டான்," அம்மா, தாத்தா என்ன கிப்ட் தரப் போறார்மா? உனக்கு ஏதாவது தெரியுமா?" என்று ஆர்வமுடன் கேட்டான். " தெரியலையே..ஆனா இது வரைக்கும் ஒண்ணும் வாங்கின மாதிரித் தெரியலை."  அம்மாவுக்கு வீட்டிற்குள் நுழையும் ஒரு சிறு எறும்பு கூடத் தெரியும். அவளே தெரியவில்லை என்றால்....ஒரு வேளை தாத்தா ஒண்ணும் வாங்கலையோ?? தாத்தா எதுவுமே நடக்காத்து போல் வீட்டில் சுற்றிக் கொண்டிருந்தார். இன்று பதினெட்டாவது பிறந்த நாள். பெரிய சர்ப்ரைஸ் இருக்கும் என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்.
       மணி பன்னிரெண்டடித்தது. தாத்தா,"ராஜா.. உனக்கு லன்ச் ஒரு ஸ்பெஷல் இடத்தில் . வா போகலாம்" என்று சட்டையை மாட்டிக்கொண்டு அழைத்தார். " எங்கே தாத்தா?" என்று ஆர்வமுடன் ராஜா கேட்டான்." காட்றேன்..காட்றேன்" என்றவாறே திரும்பி," அம்மா.. மருமகளே! நாங்க ரெண்டு பேரும் வெளியே சாப்பிட்டுக்கிறோம்" என்றார்.'ஓ! லன்ச் வாங்கித்தரப் போறாராக்கும்..' என்று எண்ணியவாறே," அம்மா..பை.." என்று தாத்தாவைப் பின் தொடர்ந்தான்.
        இரண்டு தெருக்கள் வரை நடத்தியே கூட்டிச் சென்றார் தாத்தா. ' எங்கே என்று சொன்னால் பைக்கில் கூட்டிக் கொண்டு போகலாம்' என்று அவன் மனதில் தோன்றியது. அங்கே ஒரு அனாதை ஆசிரம ம் இருந்தது. அங்கு அனைவரும் அவனுக்காக வரிசையாக காத்திருந்தனர். அவன் உள்ளே நுழைந்ததும் " ஹேப்பி பர்த் டே டு யூ..." என்று கோரஸாகப் பாடினார்கள். சிஸ்டர் வந்து, " தம்பி, நீ தான் ராஜாவா? ஹேப்பி பர்த்டே.. என்னோடு வா" என்று உள்ளே அழைத்துச் சென்றார்கள்.
          ராஜா நெகிழ்ந்து விட்டான். திரும்பி தாத்தாவைப் பார்த்தான். அவர் புன்னகைத்தார். சிஸ்டர் உள்ளே அழைத்து சென்று," தம்பி ராஜா, இன்று உன் தயவால், உன் பிறந்த நாளை முன்னிட்டு இந்தக் குழந்தைகள் வயிறார சாப்பிடப் போகிறார்கள். உன் தாத்தா இந்த ஏற்பாட்டை செய்துள்ளார். வா.. உன் கைகளால் அவர்களுக்கு இனிப்பு கொடு. " என்றார். அனைவரும் வரிசையாக அமர்ந்நதிருந்தனர். ராஜா ஒவ்வொவருக்காய் இனிப்பு வழங்கினான். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டு," நன்றி அண்ணா" என்று கூறிய போது அவன் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. அவனும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டான். சில குழந்தைகள் அவனிடம் ஓடி வந்து பேசின. சில அவன் பேரைச் சொல்லி புன்னகைத்தன. 
          சுமார் ஒரு மணி நேரம் கழிந்திருக்கும். தாத்தா," கிளம்பலாமா ராஜா?" என்று கேட்டார். உண்மையில் அவனுக்குக் கிளம்ப மனமில்லை. என்றாலும்,"ம்...ம்.." என்றான். சிஸ்டர், ஆசிரியர்கள், குழந்தைகள் அனைவருக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டு கிளம்பினர். வழியெங்கும் மௌனமாய் வந்தான். வீடு நெருங்கியது. தாத்தாவைப் பார்த்து " தேங்க்ஸ் தாத்தா" என்றான். தாத்தா புன்னகைத்தார். இருவரின் மனமும் நிறைந்திருந்தது.
         -முருகேஸ்வரி ரவி,
            சென்னை-13.

Saturday, December 5, 2015

இலக்கை நோக்கிய பயணம்

பிரையன் டிரேசி.

                 உலகில் உள்ள சுயமுன்னேற்ற பயிலரங்குகள் அனைத்திலும் மிகப் பிரபலமான பெயர் " பிரையன் டிரேசி". தன்னுடைய உற்சாகமான உரைகளாலும், புதுமையான பயிற்சிப் பட்டறைகளாலும் உலகின் இளைஞர்கள் அனைவரையும் கவர்ந்தவர் இந்த எண்பது வயது இளைஞர். மிக சமீபத்தில் சென்னைக்கு வந்து தனது ஆணித்தரமான உரையால் உன்னத இலக்குகளை நேர்த்தியாக அடைய சில இலகுவான முறைகளை கற்றுத்தந்தார்.  அவற்றின் சில துளிகள்:
                   பெரும்பாலானோருக்கு தாங்கள் குறி வைக்கும் இலக்குகள் வெறும் கனவுகளாகவே இருக்கும் போது ஒரு சிலரால் மட்டும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்குகள் அனைத்தையும் எப்படி அடைந்து விட முடிகிறது?  இலக்குகளை நிர்ணயிக்கவும் , அவற்றை நோக்கி பயணிக்க எடுக்க வேண்டிய முயற்சிகள் பற்றியும், வெற்றியடைய பின்பற்ற வேண்டிய உத்திகளைப் பற்றியும் தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்தார்.
                   எந்த அளவுக்கு உங்களால் முடியுமோ அந்த அளவுக்கு தெளிவாகவும், விரிவாகவும் உங்கள் இலக்குகளை நீங்கள் வரையறுக்க வேண்டும். இலக்குகள் தான் உங்களை உந்தித் தள்ளும் மாபெரும் சக்தி. இலக்கில்லா மனிதனின் சக்தி, தெளிவில்லாத நீரோடையைப் போல பெருமளவு வீணாகின்றது. வெற்றியடைய ஒரு சுலபமான வழி உள்ளது. அடுத்த ஒரு ஆண்டுக்கு பத்து இலக்குகளை நிர்ணயிங்கள். அவற்றை ஒரு வாரத்திற்குரிய இலக்குகள், ஒரு மாத த்திற்குரிய இலக்குகள், ஆறு மாத த்திற்குரிய இலக்குகள், ஒரு வருடத்திற்குரிய இலக்குகள் என பிரித்துக் கொள்ளுங்கள். அவற்றை அடைய எல்லாவிதமான முயற்சிகளையும் தொடர்ந்து செய்து வாருங்கள். ஒரு வருடத்தின் இறுதியில் நீங்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கண்டால் நீங்களே வியந்து போவீர்கள். 
                    தடைகளைக் கண்டு தளர வேண்டாம். தடைகள் யாவும் நாம் தகர்த்தெறிவதற்காகவே தோன்றுவன. தடைகளில் இருபது சதவீதம் மட்டுமே வெளியிலிருந்து வரும். எண்பது சதவீத தடைகள் மனத்தடைகள் தாம். மனத்தடைகளை வென்று விட்டால் அதுவே வெற்றிக்கும், மகிழ்ச்சிக்குமான ஒரு வழிப்பாதையாய் அமையும்.
                    நம் படைப்பாற்றலை வெளிக்கொணரும் திறவுகோல் என்ன என்பதை முதலில் கண்டுணர வேண்டும். நம்முடைய மிகப்பெரிய இலக்குகளை அடைய இருபது வழிகளை எழுத வேண்டும்.முதல் ஐந்து வழிகள் மிகவும் எளிதானவையாக இருக்க வேண்டும். அடுத்த ஐந்து வழிகள் கடினமானதாக இருக்க வேண்டும்.  அதற்கு அடுத்த ஐந்து வழிகள் வலி ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். அதற்கு அடுத்த ஐந்து வழிகள் மிகவும் கடினமான,  எளிதில் செயல்படுத்த முடியாத, வலி ஏற்படுத்தும் வழியாக இருக்க வேண்டும். அந்த இருபதாவது வழி தான் நம்முடைய வழி.  அதனை செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம்.
                           எதுவுமே கடினமல்ல. எதையும் கற்று கொள்ளலாம். எதற்கும் காலம் கடந்து விடவில்லை. இன்றைக்கு பெரும் சாதனையாக கருதப்படும் வியாபாரத் திறன்கள், விற்பனைத்திறன்கள், பணம் பண்ணும் திறன்கள் யாவும் கற்றுக் கொள்ளும் அளவிற்கு எளிதானவையே, முறையாக பயிற்சி செய்தால். இன்றைக்குப் பெரும் பணக்கார ர்களாய்த் திகழும் எல்லோரும் ஒரு கால கட்டத்தில் எளியவர்களாய்த் திகழ்ந்தவர்களே. அவர்கள் ஆற்றிய சாதனைகள் யாவும் கடும் முயற்சிக்குப் பின் கிடைக்கப்பெற்றவையே ஆகும். 
           இலக்குகளை எழுதுங்கள். பின் காலக்கெடுவை நிர்ணயிங்கள். பின் அதனை நோக்கி உங்கள் பயணத்தை தொடங்குங்கள். " ஆயிரம் மைல்களுக்கான பயணம் ஒரு சின்ன அடியில் தான் தொடங்குகிறது." நாம் பட்டியலிட்ட வழிமுறைகளை ஒழுங்கு படுத்த வேண்டும். எந்த வரிசைக்கிரமத்தின் படி செய்ய வேண்டும், எதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். இருபது சதவித ஒழுங்கு படுத்தலின் நேரம் நமது எண்பது சதவீத உழைப்பை நிர்ணயிக்கும்.
              சுருக்கமாக பிரையன் டிரேசி அவர்களின் அறிவுரை:
1. உன் லட்சியம் எதுவோ அதை காகித த்தில் எழுது.
2. நேரம், அளவு, செயல் திட்டம் என முடிந்த அளவு காகித த்தை நிரப்பு.
3. உன் லட்சியத்தை ஏற்கனவே அடைந்தவரைப் பட்டியலிடு.
4. அவர்கள் என்ன செய்ததினால் வெற்றி அடைந்தார்கள் என கண்டுபிடி.
5. நீயும் அதையே செய்.
வெற்றி பெற நமக்குத் தேவையான குணநலன்களாக இவற்றை பட்டியலிடுகிறார். தெளிவு, தகுதி, அர்ப்பணிப்பு, படைப்புத்திறன், கொள்கை மாறாதிருத்தல், கற்றலை நிறுத்தாதிருத்தல். அறிவியல் கண்ணோட்டத்துடன் , ஆனால் எளியதாக புரிந்து கொள்ளும் வகையில் வெற்றிப்படிகளில் ஏறுவது எப்படி என விளக்குகிறார்.
                    இந்த வழிமுறைகளை நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்கிக் கொண்டாமானால் நமது இலக்குகளை வெகு விரைவில் தொட்டு விடலாம். திருவள்ளுவர் மிக அழகாக இரண்டு அடிகளில் கூறுகிறார்,
" தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
    மெய்வருத்த கூலி தரும்." 

Tuesday, December 1, 2015

கோயிலுக்குப் போகலாம்

            ஞாயிற்றுக்கிழமைகளில் கண்ணனும் அவனுடைய நண்பன் ரவியும் தவறாமல் மாலையில் சந்திப்பார்கள். பூங்காவில் அமர்ந்து சிறிது நேரம் அளவளாவி விட்டு இரவு எட்டு மணி ஆனதும் அவரவர் வீட்டிற்கு சென்று விடுவர்.
             அன்று கண்ணனுக்குப் பிறந்த நாள். சந்தோசமாகப் பேசிக் கொண்டிருந்த போது அருகில் உள்ள கோயிலில் மணி அடித்தது. " கண்ணா கோயிலுக்குப் போகலாமா? உன் பிறந்த நாளன்று உன் பெயரில் ஒரு அர்ச்சனை செய்துவிட்டு வரலாம்." என்றான் ரவி. "ஓ! போகலாமே" என்றவாறே டக்கென்று எழுந்தான் கண்ணன்.
              அந்த பூங்காவின் மிக அருகில் ஒரு பிரபலமான கோயில் இருந்தது. அதன் உட்பிரகாரமும் வெளிப்பிரகாரமும் மிக விசாலமாக இருக்கும். கோயிலைச்சுற்றி சுமார் நூறு கடைகள் இருக்கும். எப்போதும் வியாபாரம் ஜே..ஜே என்று இருக்கும். செவ்வாய் , வெள்ளி என்றில்லாமல் எல்லா நாளும் கூட்டம் அலைமோதும். 
               சுவாமிக்கு கண்ணன் பெயரில் ரவி அர்ச்சனை செய்தான். கண்ணன் அமைதியாய் சாமி கும்பிட்டான். ரவி அர்ச்சகர் தட்டில் பத்து ரூபாய் போட்டான். அவர் அவனுக்கு விபூதி ,பிரசாதம் தந்தார். கண்ணன் ஒன்றும் போடவில்லை. அர்ச்சகர் அவனை கண்டுகொள்ளாமல் சென்று விட்டார்.  கண்ணன் ரவியினுடையதை எடுத்து இட்டுக் கொண்டான். கோயில் உண்டியலில் கண்ணன் காணிக்கை போடுவான் என்று ரவி எதிர்பார்த்தான். ஆனால் அவன் செய்யவில்லை. கண்ணனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது போல என்று ரவி எண்ணிக் கொண்டான். ஆனால் கேட்கவில்லை. பைக்கை நோக்கி சென்றனர்.
               பைக்கில் ஏறியவாறே கண்ணன்," ரவி நான் ஒரு கோயிலுக்கு கூட்டிட்டு போறேன். வர்றியா?" என்றான். தலையை ஆட்டியவாறே பைக்கில் ரவி அவன் பின் ஏறினான். ஊருக்கு வெளியே இருந்தது அந்த கோயில். கூட்டமே இல்லை. பழமையான பாரம்பரியமான கோயில் அது. ஒன்றிரண்டு வயதானவர்கள் மட்டும் அமர்ந்திருந்தனர். அர்ச்சகர் நிதானமாக மந்திரம் சொல்லி பூஜை செய்தார். விபூதி தட்டில் ஐம்பது ரூபாய் போட்டான் கண்ணன். அவர் அவனை ஆசிர்வாதம் செய்தார். 
                உண்டியலில் ஆயிரம் ரூபாய் போட்டான். ஐந்து நிமிடம் தியானம் செய்தான். பின் " போகலாமா?" என்று எழுந்தான்.
                 ரவி அவனை ஆச்சர்யமாகப் பார்த்தான். அவன் மனதில் ஓடியது கண்ணனுக்கு புரிந்தது போல. " அங்கு வேறு மாதிரியும் இங்கு வேறு மாதிரியும் நடந்து கொள்கிறேன் என்று பார்க்கிறாயா? அந்தக் கோயில் வியாபார மயமாகிவிட்டது. நான் ஒருவன் கொடுப்பதால் அங்கு நிறையப் போவதில்லை. ஆனால் இங்கே நான் கொடுத்த பணம் உரிய வகையில் செலவிடப்படும். " என்று புன்னகைத்தான். ரவியின் மனதில் கண்ணன் பல மடங்கு உயர்ந்தான். கண்ணனை மனதார வாழ்த்தியவாறு ரவி அவன் பைக்கில் ஏறினான்.

Wednesday, November 18, 2015

அடுக்கு மாடி குடியிருப்பு

தான் வாழும் வீட்டை ஒருவர் எத்தனை தூரம் நேசிக்கிறார் என்பது அவர்தம் பேச்சிலேயே தெரிந்து கொள்ளலாம். சொந்த வீடோ வாடகை வீடோ தன் வீட்டைப் பற்றி பேசும்போது அவர்தம் பேச்சில் பெருமை கொப்பளிக்கும்.
   இன்றைய காலகட்டத்தில் நகர்ப்பறங்களில் வீடு என்பது அடுக்குமாடி குடியிருப்புகளாகவே உள்ளன. ஜன நெரிசல் மிகுந்த பெரு நகரங்களில் தனி வீடு என்பது எட்டாத கனவு என்று உறுதிபட கூறலாம். அடுக்குமாடிக் குடியிருப்புகளே மக்களின் வீட்டுத்தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. மழைக்காலக் காளான்கள் போல நகரங்களெங்கும் தோன்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளே இதற்கு சான்று.
         நகரங்களில் வீட்டுமனை வாங்கி அதில் வீட்டைக் கட்டமைப்பது என்பது இயலாத காரியம். அனைத்து விதமான சமூக்க்கட்டமைப்புகள் கொண்ட பகுதியில் வீட்டு மனைகள் காண்பது அரிதாகி விட்டது. அதனால் சொந்த வீட்டு கனவில் மிதக்கும் அனைவரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கவே ஆர்வம் காட்டுகின்றனர்.
       நவீன அபார்ட்மெண்ட் வாழ்க்கையை விரும்பாதவர்கள் பலர் இருப்பினும் அது தரும் சௌகரியங்களை குறைத்து மதிப்பிட முடியாது. வீட்டுப் பராமரிப்பு என்பது மிகப்பெரிய பணி. கணவன், மனைவி என்று இருவரும் வேலைக்கு செல்லும் இந்தக் கால கட்டத்தில் சிறு , சிறு ரிப்பேர் வேலைகள் ஏற்ப்பட்டால் தனி வீடு என்றால் திண்டாட்டாம் தான். அடுக்குமாடி குடியிருப்பு எனில் அங்குள்ள சங்கத்தின்(அசோசியேசன்) பணியாளர்கள் அதை நிவர்த்தி செய்து விடுகின்றனர். திடக்கழிவு, கழிவு நீர்அகற்றல், நீர் விநியோகம், சலவை போன்ற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் பொதுவாய்  கிடைக்கின்றன. 
உலகில் எவரும் சமரசம் செய்து கொள்ள  விரும்பாத்து பாதுகாப்பு. அது அடுக்கு மாடி குடியிருப்பில் செக்யுரிட்டி மூலம் வழங்கப்படுகிறது. காவலாளிகள் பலர்நியமிக்கப்பட்டு ரோந்து வருகின்றனர். உள்ளே வரும் எவரும் பரிசோதிக்கப் பட்டே அனுப்பப்படுகின்றனர். ஆதலால் திருட்டு பயம் கிடையாது. அடுக்குமாடி குடியிருப்புகள் இப்போது எட்டு முதல் இருபது மாடிகளைக் கொண்டதாக அமைகின்றன. பொதுவாக தரைத்தளம் வாகனங்கள் நிறுத்தப் படுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சீரான படிக்கட்டுகளும் மற்றும் மின்தூக்கிகளும் அமைக்கப்படுகின்றன. மின்தடை ஏற்படும் நேரங்களில் அவற்றை இயக்குவதற்காக ஜெனரேட்டர் வசதியும் செய்து தரப்படுகிறது. குழந்தைகள் விளையாடுவதற்கென பூங்காவும் , வயதில் மூத்தோர் நடை பயில நடைமேடையும் பொதுவாக அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளிலும் உள்ளன. இதர வசதிகளாக உடற்பயிற்சிக்கூடம், நீச்சல் குளம், மருந்தகம், குழந்தைகள் காப்பகம், பல்பொருள் அங்காடி போன்ற வசதிகளும் செய்து தரப்படுகின்றன. இப்படி மக்களுக்கு தேவையான அடிப்படை மற்றும் பல நவீன சொகுசு அம்சங்களை உள்ளடக்கி சிறந்த தொழில்நுட்பத்தின் சின்னமாக அடுக்குமாடி குடியிருப்புகள் திகழ்கின்றன.
      வெளிநாடுகளில் குறுகிய பரப்பளவு கொண்ட இடத்திலும் வீடுகளை அழகாக  கட்டமைத்து அசத்துகிறார்கள். ஒரே அறையிலேயே அனைத்து வகையான தேவைகளையும் நிவர்த்தி செய்யும் அளவிற்கு இடவசதியை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். சிறிய இடத்திற்குள் எப்படி இத்தனை வசதிகளை உள்ளடக்கிக் கொள்ள முடிகிறது என்று ஆச்சர்யப்பட வைக்கிறார்கள்.  ஒரே இடத்துக்குள் அனைத்துப் பொருட்களையும் இடம்பெற செய்தாலும் அறையை அலங்காரத்தால் அழகு படுத்தி விடுகிறார்கள். அது போன்று திட்டமிட்டு செயல்பட்டால் சிறிய இடத்திலும் கனவு இல்லத்தைக் கச்சிதமாய் கட்டமைத்து விடலாம். இலட்சக்கணக்கில் செலவு செய்து வீடு வாங்கிய பின் அதன் உள்ளமைப்பில் கவனம் செலுத்தினால் வீடு சிறப்பாக அமையும்.
      அடுக்கு மாடி வீடுகளின் உள்ளமைப்பில்  சின்ன சின்ன சங்கதிகளை சரிபார்த்தால் மிகச்சிறந்த வீட்டில் குடியேறலாம். முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியது , வரவேற்பறை பெரியதாக உள்ளதா என்பதை. வரவேற்பறைக்கு அதிக இடத்தை ஒதுக்கினால் வீடு சிறியதாக இருக்கும்
தோற்றத்தை போக்கிவிடும். சாப்பிடும் அறை, சமையலறை போன்றவற்றை வரவேற்பறையின் ஒரு பகுதியாக வடிவமைக்கலாம். குளியலறை, கழிவறை போன்றவற்றை தனித்தனியே அமைத்தால் அதுவே அதிக இடத்தை ஆக்ரமித்து விடும். அதன் ஒரு அங்கமாக வாஷ்பேசின் அமைத்தால் இடம் மீதியாகும். இது போன்ற சின்ன சின்ன விசயங்களில் கூடுதல் கவனம் செலுத்தினால் சிறிய வீடு கூட சிறிது விசாலமாய்த் தெரியும்.
          அடுக்கு மாடியிருப்புகளில் வீடுகள் வாங்குவோர் முக்கியமாக நிலத்திற்கான ஆவணங்கள், கிரயப்பத்திரம், பட்டா, சிட்டா, அங்கிகாரச் சான்றிதழ், வில்லங்க சான்றிதழ், சட்ட வல்லுனர் ஒப்புதல் சான்றிதழ், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். கட்டப்பட்ட இடத்திற்கான மண் பரிசோதனை, கான்கிரீட் பரிசோதனை சான்றிதழ் உள்ளனவா என்று ஆராய வேண்டும். எத்தனை தளங்களுக்கு அனுமதி பெற்று கட்டப்பட்ட அடுக்குமாடி என்று முக்கியமாகப் பார்க்க வேண்டும். பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதன் தரம் உறுதியாக இருக்கிறதா என்பதே முக்கியம்.
      இவ்வாறு அவசர உலகில் நகரத்து சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க வாழ்வியல் ரீதியாகவும், பொருளியல் ரீதியாகவும் அடுக்குமாடி குடியிருப்புகள் பெரிதும் உதவுகின்றன. அவை கான்கிரீட் தோட்டம் என்றாலும் நம் மனமென்னும் வண்ணத்துப்ப்பூச்சி விரும்பி வாழும் உறைவிடம் ஆகும். வாழ்க்கையையே சங்கீதமாக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் அனைவரும் விரும்பும் பூலோக சொர்க்கம் என்றால் மிகையல்ல.கவிப்பேர ரசு வைரமுத்துவின் வைர வரிகளில் கூறுவதென்றால்..
"இது மாடி வீடு, ஜோடி வீடு
  அட கோயில் கொஞ்சம் போரடித்தால்
   தெய்வம் வந்து வாழும் வீடு..."

        

Thursday, November 12, 2015

தீபாவளி


பண்டிகைகள்பற்றி நமது தொலைக்காட்சிகளும் விளம்பரங்களும் நினைவு படுத்தாவிடில், இன்றைய வேகமான உலகில் பண்டிகைகளை நாம் மறந்து போயிருக்கலாம் என்ற சந்தேகம் என்னுள் அவ்வப்போது எழும். தீபாவளி வருவதற்கு ஒரு மாத த்திற்கு முன்பிருந்தே கார்த்தி " கம்ம்மிங்... கம்ம்மிங்" என்று நினைவு படுத்திக் கொண்டே இருந்தார். கமல்ஹாசன் மற்றும் சூர்யா தம் பங்கிற்கு அபிமானத்தையும் டோட்டலி ஹேப்பி ஃபேமிலி என்றும் வற்புறுத்தி க்கொண்டிருந்தனர். இது போன்ற விளம்பரங்கள் தவிர தீபாவளி தரும் விடுமுறை மட்டுமே தீபாவளியை இன்றைய காலகட்டத்தில் நினைவில் நிறுத்துகிறது.
      சில பல வருடங்களுக்கு முன்னர் தீபாவளித் திருநாள் என்பது வாழ்க்கையோடு இணைந்த பொன்னாளாக கருதப்பட்டது. அது தந்த சின்ன சின்ன சந்தோசங்களை இன்றைய தலைமுறை சரிவர புரிந்து கொள்ளவில்லை என்றே கூறலாம். தீபாளிக்கு பத்து நாட்களுக்கு முன்பிருந்தே வீட்டுப் பெண்கள் என்னென்ன பலகாரங்கள் சுடவேண்டும் என்று திட்டமிட்டு தினமொன்று என்ற வித த்தில் விதவிதமாய் பலகாரம் சுட்டது அந்தக்காலம். சமயங்களில் பக்குவம் தவறும் போது பக்கத்து வீட்டுப் பெண்களுடன் கலந்து பேசி ஏதாவது செய்து சரிக்கட்டி விடுவர். கடுக் முடுக் என்று பக்குவம் தவறிய பலகாரங்கள் கூட அப்போது வீட்டில் உள்ளோருக்கு தேனாய்த் தித்தித்தது. இந்தக் காலத்து கதையே வேறு. ஸ்வீட் பாக்ஸே சரணம் என்று மக்கள் சாஷ்டாங்கமாய் பலகாரக் கடைகளிடம் சரணாகதி ஆகி விட்டனர். கேட்டால் நேரமில்லை என்ற பதிலே பிரதானமாய் வரும். தீபாவளி அன்றே கூட பல பேர் வீட்டில் உணவு விடுதிக்கு  சென்று விடுகின்றனர் அல்லது அங்கிருந்து தருவித்து உண்ணுகிறார்கள். எண்ணெய் குளியலை மறந்து விட்டீர்கள் என்று நான் நினைவு படுத்தினால் சின்ன வாண்டு கூட ' பழைய பஞ்சாங்கம்' என்று என்னை எள்ளி நகையாடும். சீயக்காய்த்தூளை ஷாம்பூக்கள் கபளீகரம் செய்து ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது.
         தீபாவளி என்றாலே பட்டாசு தான் பிரதானம். சில நாட்களுக்கு முன்பிருந்தே பட்டாசு வெடிக்கத் தொடங்கி, தீபாவளியன்று அடைமழை பெய்தாலும்் நமத்துப் போன கம்பி மத்தாப்பு மற்றும் குச்சி மத்தாப்புக்ளுடன் போராடுவது அந்தக் காலம். இன்று மத்தாப்புகள் மற்றும் பட்டாசுகள் கொளுத்தி மகிழும் மகிழ்ச்சியை அறியாமலேயே குழந்தைகள் வளர்கின்றனர். " பூமிக்கு கேடு, காற்றுக்கு மாசு" என்று பெரிய மனித தோரணையுடன் குழந்தைகள் பேசுகின்றன. குழந்தைப்பருவத்திற்கே உரித்தான இன்பங்களைத் தர மறுப்பது அல்லவா இச்செய்கை? இது போன்ற பிரச்சாரங்களால் ஒரு தொழிலே நசிந்தது வருவதை அவர்கள் அறிவார்களா? இதனை நம்பி வாழும் ஆயிரக்கணக்கானவர்களின் இயல்வாழ்க்கை பாதிக்கப்படுவதை உணர்வார்களா?
       " எங்கள் வீட்டில் இவ்வளவு பட்டாசு வாங்கினார்கள்..எங்கள் வீட்டில் இன்னென்ன பலகாரம் செய்தார்கள்" என்று தோழர்களிடம் பெருமை பொங்க கதைத்த காலம் அது. அவர்களுடன் பகிர்ந்து உண்டு, வெடிகளை பரிமாறி வெடித்த காலம் அது. குழுவாய் சேர்ந்தே பெரும்பான்மையான செயல்கள் அமைந்ததால் பகிர்தளித்தல்,சகிப்புத்தன்மை , சமயோசிதம்,பேச்சுத்திறன், கூட்டு முயற்சி, தன்னம்பிக்கை போன்ற குணங்கள் வளர்ந்தன. இப்போதும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பரிசளிக்கின்றனர். அது பெரும்பாலும் டேப்லெட் அல்லது செல் பேசியாகவே இருக்கிறது. இருக்கிறவர் இல்லாதவர் அனைவரும் தங்கள் தகுதிக்கேற்ப வாங்கிக் கொடுக்கிறார்கள். பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களில் விளையாடுவர் என்ற பரந்த எண்ணம் போலும். இவை தரும் விளையாட்டுகள் குழந்தைகள் மனதில் தனிமை உணர்ச்சியையும், வன்முறை உணர்ச்சியையும் தூண்டுகின்றன என்று ஆய்வுகள் சொல்கின்றன. அவர்கள் மெல்ல மெல்ல இழந்து வரும் குழந்தைப் பருவ மகிழ்ச்சியை மீட்டெடுக்கும் சந்தர்ப்பமாக பண்டிகைகளைப் பார்க்க வேண்டும்.
         தீபாவளி யன்று வீட்டின்பெரியவர்களைச் சந்தித்து அவர்களிடம் ஆசி வாங்குவது அன்றைய வழக்கம். நாமே மூத்தவர்களாக இருந்தால் இளையவர்கள் நம்மைத் தேடி வந்து ஆசிர்வாதம் வாங்கினர். ஆனால் டிவியே கதியென்று காலை முதல் அதன் முன்னரே தவம் கிடப்பது இன்றைய வழக்கம். தொலைக்காட்சி சானல்கள் வேறு ' உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக.... திரைக்கு வந்து சில நாட்களே ஆன...செம ஹிட், தெறி ஹிட், சரவெடி ஹிட்" என்று சகட்டு மேனிக்கு புதுப்படங்களை அள்ளித் தெளிக்கின்றன. பிறகு கேட்கவா வேண்டும்? உறவினர்களுக்கு , நண்பர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க தான் ஃபேஸ்புக் , வாட்ஸ் அப்,ஹைக் என்று எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றதே. புத்தாடைகளை அணிந்துஇரண்டு கம்பி மத்தப்புகளை கையில் பிடித்த வாறு ஃபோட்டோ அப்லோட் செய்து" செம தீபாவளி மச்சி.." என்று ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வது தான் தீபாவளிக் கொண்டாட்டம்.
           அன்றைய தலைமுறை தீபாவளி மலர்கள் அத்தனையையும் படித்து  ஆன்மீக்க் கருத்துகள், தகவல்கள்,தலைசிறந்த சிறுகதைகள் என்று ரசித்த தலைமுறை. ஆனால் இன்று எத்தனை பேருக்கு தீபாவளி ஏன் கொண்டாடுகின்றனர் என்ற வரலாறு தெரியும் என்பது கேள்விக்குறி. கற்றுத்தர சென்ற தலைமுறைக்கு விருப்பம் இல்லையா அல்லது கற்றுக்கொள்ள இன்றைய தலைமுறைக்கு விருப்பம் இல்லையா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இரு இளம் பெண்கள் பேசிக்கொண்டதைக்கேட்டேன்," எங்கள் காலேஜில் தீபாவளிக்கு ஒரு பிரசெண்டேஷன்( presentation) பண்ணினார்கள். அதில் நரகாசுரனை கிருஷ்ணர் கொன்றதைத்தான் நாம் தீபாவளி என்று கொண்டாடுகிறோம் என்று சொன்னார்கள்" என்று பேசிக்கொண்டார்கள். இது போன்ற தகவல்கள் கூட இன்றைய இளம் தலைமுறைக்கு பிரசெண்டேஷன் மூலமாகத்தான் சென்றடைகின்றன என்ற யதார்த்த உண்மை திகைக்க  வைக்கிறது. மொத்ததில் தீபாவளி என்பது மக்களின் திருவிழா என்பதை விட வியாபாரிகளின் திருவிழா என்று  கூறலாம்.

Wednesday, November 4, 2015

டிப்ஸ்.....

உண்ணவும், உறங்கவும், கதை பேசுவதற்கான இடம் மட்டுமா வீடு??அன்னையின் மார்போடு அணையும் கதகதப்பைத் தர வல்லதல்லவா வீடு!!வெயில், மழை, பனி, குளிர் என அனைத்திலிருந்தும் நம்மைக் காக்கும் வீடு. நம் துக்கம், சந்தோசம், கோபம், விருப்பு, வெறுப்பு என்று அனைத்து உணர்ச்சிகளையும் மௌனமாய் உள்வாங்கிக் கொள்ளும் உயிரற்ற, ஆனால் உயிருக்குயிரான இடமல்லவா வீடு!
        ஆனால் அதைப் பராமரிப்பதில் நம் காட்டும் அக்கறையை பற்றி சொல்ல வாரத்தைகளில்லை. பல லட்சம் செலவு செலவு செய்து வீட்டைக் கட்டி வந்தவுடன் முடிந்து விடுவதில்லை. அதனை அழகு படுத்துவதிலும் பராமரிப்பதிலும் தான் உண்மையான திறமை உள்ளது. அது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. மிக எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் நம்முடைய வீட்டை அனைவரும் ரசித்து பாராட்டும் வண்ணம் அமைக்கலாம்.
             வீடு பொலிவுடன் திகழ அலங்காரமான, படோபமான பொருட்கள் தேவை என்றில்லை. எளிமை தான் என்றுமே அழகு. வீடெங்கும் நிறைந்திருக்கும் தேவையற்ற பொருட்களை நீக்கினாலேயே வீடு அழகு பெற்றுவிடும். வீடு சிறியதாக இருக்கிறது, ஆனால் பொருட்கள் எக்கச்சக்கமாக இருக்கிறது , எதை எங்கே வைப்பது என்றே தெரியவில்லை என்று புலம்புபவர்களுக்கு ஒரு வார்த்தை.. பழையன கழிந்த பிறகு மட்டுமே புதியன புக வேண்டும். தேவைக்கு அதிகமான பொருட்களை சேர்க்காதீர்கள். என்றாவது ஒரு நாள் தேவைப்படும் என்று பழைய பொருட்களை சேகரிக்காதீர்கள்.  ஒரு பொருளை ஒரு மாத த்திற்கு ஒரு முறையேனும் நாம் உபயோகிக்கவில்லையெனின் அதன் பயன்பாடு நமக்குத்தேவையில்லை என்றே அர்த்தம். அதை தூர வீசிவிடலாம். மனமில்லை எனின் அட்டைப்பெட்டியில் போட்டு லாஃப்ட் என்னும் பரணில் வைத்துவிட்டு தேவையான நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
         வீட்டின் ஒவ்வொரு பகுதியும் முக்கியமானதே. சிலர் விருந்தாளிகள் வரலாம் என்று வரவேற்பறையை மட்டும் சுத்தமாக வைத்துக்கொண்டு பிற அறைகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவர். இது தவறு. சமையலறை, படுக்கையறை, குளியலறை என்று வீடு முழுக்கவுமே கண்ணும் கருத்துமாக பராமரிக்க வேண்டியது அவசியம். கூடுதலாக சில நிமிடங்கள் வீட்டைப் பேணுவதில் செலவழித்தால் இது சாத்தியமே.
           வீட்டின் தரையை தினமும் சுத்தம் செய்து போலவே சமையல் மேடையையும், சிங்க் ஐயும் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். குளியலறையை தினமும் கழுவி நீரில்லாமல் துடைத்து விட்டால் அவை நீண்ட நாட்கள் பொலிவுற விளங்கும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஃபிரிட்ஜ் இல் உள்ள காய், பழவகைகளை கை பார்க்க வேண்டும். பழைய மீந்த குழம்பு வகைகளை தூர வீச வேண்டும். வாரம் ஒரு முறை மைக்ரோவேவ் மற்றும் ஃபிரிட்ஜை சுத்தமாக துடைக்க வேண்டும். மாதமொரு முறை அனைத்து கப்போர்ட்களையும் ஒதுக்கி பேப்பர் மாற்ற வேண்டும். சமையலறைப் பொருட்களை சரி பார்த்து வெயிலில் காய வைக்க வேண்டியவற்றை வெயிலில் காய வைத்து எடுத்து வைக்க வேண்டும்.மின் சாதனங்களை உபயோகப்படுத்தவில்லை என்றாலும் அடிக்கடி துடைத்து சரிபார்த்து உள்ளே வைக்க வேண்டும். அழையா விருந்தாளிகளாய் வரும் தூசியும், பூச்சிகளும், தன்னுடன் அழைத்து வருவது நோய்நொடிகளைத்தான் என்பதை உணர்ந்து சுத்தத்தை பேண வேண்டும்.
        வீட்டிற்கு விருந்தினர் வரும் வீடு அழகாய்த் திகழ வேண்டும் என்பது அனைவரின் அவாவும் கூட. அந்நேரம் அனைத்தையும் ஒதுக்கி அடுக்கி வைக்காமல் எப்போதுமே அது போல் வைத்திருப்பது தான் சாமர்த்தியம். எந்தப்பொருளையையுமே எடுத்த இடத்திலேயே திருப்பி வைத்தாலே பாதி வேலை முடிந்துவிடும்.எந்தப் பொருளையும் தேடாமல் எடுத்துக்கொடுக்கும் நம் வீட்டில் பொருட்கள் இருக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைவரும் இணைந்து முயன்றால் மட்டுமே வீட்டை அழகாக பராமரிக்க முடியும். வீட்டை கலைநயத்துடன் கட்டமைத்து, உள் அலங்காரம் செய்திருந்தாலும் அதை பராமரிப்பதைப் பொறுத்தே வீட்டின் அழகு வெளிப்படும்.
 

Tuesday, October 13, 2015

மனம் கவர்ந்த வீடு




மாதம் ஐந்தாயிரம் சம்பளம் வாங்குபவரானாலும் சரி, ஐந்து லட்சம் சம்பளம் வாங்குபவரானாலும் சரி சொந்த வீடு ஆசை கட்டும் இல்லாதவர் இந்த உலகில் இல்லை. பெரிய மாடமாளிகையோ சிறிய ஓலைக்குடிசையோ .. வீடு கட்டும் பாக்கியமும் அதற்குரிய சூழ்நிலையும் நம்மில் எத்தனை பேருக்கு அமைகிறது?! பொதுவாக எல்லோருக்கும் தன்னுடைய நடு வயதில் தான் வீடு கட்டும் எண்ணமே முளை விடும். அதன் பிறகு அதனை செயல்படுத்த இன்னும் கொஞ்சம் காலம் எடுத்துக் கொள்வர். ஆனால் என்னுடைய முப்பத்திரண்டாவது வயதிலேயே எங்களுக்கு அந்த யோகம் கிட்டியது. எங்களுக்கு திருமணமாகி ஏழாவது ஆண்டிலேயே நாங்கள் வீடு கட்ட ஆரம்பித்தோம்.
      இளம் வயது என்றாலும் எனக்கும் என் மனைவிக்கும் அப்போதே அதன் மீது அதீத ஆர்வம். வீடு செங்கல் கட்டடமாக உயரும் போதே வீட்டை சுற்றி மரங்கள் நட்டேன். அவை வெகு சீக்கிரமே வளர்ந்து நிழல் கொடுக்க ஆரம்பித்து விட்டன. மேஸ்திரி சுத்தி மரம் இருப்பதால் வெயில் தெரியாம வேலை பாக்க முடியுது என்பார். போரிங் போட்டு தண்ணீர் உள்ள இடத்திலேயே நாங்கள் வீடு கட்டியதால் கட்டிட வேலை, மரங்கள் இரண்டிற்குமே தண்ணீர் போதுமானதாக இருந்தது. வீடு மெது மெதுவாக வளர்ந்தது. அதன் ஒவ்வொரு வளர்ச்சியையும் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டேன். வானம் தோண்டியது,நிலை தூக்கியது, தட்டோடு போட்டது , பெயிண்ட் அடித்தது என்று அனைத்தையுமே புகைப்படம் எடுத்து வைத்துள்ளேன். இன்றும் அவ்வப்போது எடுத்துப் பார்த்து மகிழ்வேன். 




      வீடு கட்டி முடித்தாயிற்று.. அதற்கு என்ன பெயர் பெயர் வைக்கலாம் என்று நானும் என் மனைவியும் நீண்டதொரு ஆராய்ச்சி செய்தோம் . Dream castle என்று வாயில் நுழையாத பெயர்களை எல்லாம் அவள் கூறினாள். எனக்கு என்னவோ என் இல்லாளின் பெயர் தான் பிடித்தது. அதனால் முருகேஸ்வரி இல்லம் என்று முடிவு செய்தேன். வீட்டில் வேலை செய்த மேஸ்திரி , சித்தாள், ஆசாரி, பெயிண்டர் என்று அனைவருக்கும்  துணிமணி எடுத்துக் கொடுத்து ஒரு நாள் விருந்து வைத்தோம். 
      பால் காய்ச்சுவதையும் மிக விமரிசையாக செய்தோம்.உறவினர்கள் அனைவரையும் அழைத்தோம். அனைவரும் வந்து வாழ்த்தி விட்டு சென்றனர். இப்போது தான் உன் திருமணத்திற்கு வந்தோம் அதற்குள் மறுபடியும் எல்லோரையும் அழைத்து விட்டாயே என்று மகிழ்ந்து கூறினர். பால் காய்ச்சும் ஃபங்ஷன் இனிதே  முடிந்தாலும் வீட்டில் வைத்திருந்த டேப் ரிக்கார்டர் அப்போது தொலைந்து விட்டது. முதலில் மனம் சஞ்சலம் அடைந்தாலும் ஏதோ திருஷ்டி ...இப்போது இந்த சம்பவத்தினால் கழிந்து விட்டது என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.
       இப்போது நாங்கள் வீடு கட்டி முடித்து சுமார் இருபது வருடங்கள் ஆகிவிட்டன. என்றாலும் எங்கள் இல்லம் இன்றும் புத்தம் புதியது போல் காட்சி அளிக்கின்றது. ஹால் பெரியதாக அமைந்தபடியால் நான் என் குழந்தைகளின் பிறந்த நாள் பார்ட்டிகள், நண்பர்கள் கெட் டுகதர் அனைத்தையும் அங்கேயே வைத்துக் கொள்வேன்.
        இப்போதெல்லாம் வீடு கட்டி முடிந்தவுடன் landscaping artist இடம் சென்று விடுகிறார்கள். ஆனால் நான் அப்போதே என் தோட்டத்தை வடிவமைத்தேன். சிறு வயதிலேயே மரம்செடி வளர்ப்பதிலும் செல்லப்பிராணிகள் வளர்ப்பதிலும் எனக்கு ஆர்வம் அதிகம். அந்த ஆர்வம் நான் வீடு கட்ட ஆரம்பித்தவுடன் ஆல் போல் தழைத்தோங்கியது. வீட்டின் வலப்புறத்தில் புல்வெளியும் இடது புறத்தில் பூஞ்செடிகள் கொண்ட பூந்தொட்டிகளை வரிசையாக அடுக்கி வைத்தேன். மிகப் பெரிய சிமெண்ட் தொட்டிகள் வாங்கி அவற்றில் மீன்கள் வளர்க்கின்றேன். பூக்கள் போன்ற வடிவுடைய அந்த தொட்டிகள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்.அதில் அல்லி மலர்கள் வளர்த்தேன். ஏனோ அவை நீண்ட நாள் நிலைக்கவில்லை. மீன்கள் இருப்பதால் அந்தத் தொட்டிகளை குழந்தைகள் விரும்பிப் பார்ப்பர்.
          மா, தென்னை, பலா, சாத்துக்குடி, எலுமிச்சை, மாதுளை, கொய்யா, ப ப்பாளி என்று அனைத்து வகை மரங்களையும் வீட்டைச் சுற்றி நட்டு வைத்துள்ளேன். என்னுடைய பேராசைக்கு என் வீட்டை சுற்றியுள்ள இடம் போதவில்லை. எங்காவது வெளியூர்களுக்குச் சென்றால் கட்டாயம் நர்சரிக்குச் செல்வேன் . இப்பொழுதெல்லாம் மரக்கன்றுகள் வாங்குவதில்லை. பூஞ்செடிகளோடு சரி. மரங்கள் அதிகம் இருப்பதால் வீட்டைச்சுற்றி அடர்த்தியாக நிழல் உள்ளது. வெயில் இல்லை. இதனால் துணிமணி காயப்போட மிகவும் கடினமாக உள்ளது என்று என் மனைவி புகார் வாசித்துக் கொண்டே இருந்தாள். பின்னர் மொட்டை மாடியில் காயப்போட தொடங்கி விட்டாள்.
            வீட்டிற்கு யார் வந்தாலும் எங்கள் தோட்டத்தின் அழகில் மயங்கி அதனை சுற்றிப் பார்த்த பின்னரே உள்ளே நுழைவார்கள். பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள் என்று இப்போது வலியுறுத்தப் படுகின்றது. வாட்ஸ் அப் பில் கூட குறுஞ்செய்திகள் வருகின்றன. ஆனால் நான் அப்போதிருந்தே என் தோட்டத்தில் மூன்று இடங்களில் பறவைகளுக்காக தண்ணீர் ஊற்றி வருகிறேன். 

        சிவகாசியில் மயில்கள் அதிகம் இருக்கின்றன. எங்கள் வீடு சோலை வனம் போல இருப்பதால் அவை அடிக்கடி விஜயம் செய்யும்.
" கிளி கொஞ்சிப் பேச..
கருங்குயில் இசை விருந்து நல்க..
வண்டுகள் நீண்ட ரீங்காரம் செய்து பாடச..
சோலையில் அடியெடுத்து ஊன்றி உடல் புளகித்து ஆடும் மயில்நடனத்தால்...
தென்றல் உலவும் சோலையே  சிலிர்க்கிறது."  என்று நான்
 எங்கேயோ படித்த வரிகளுக்குச் சான்றாக  இப்போது என் வீடு திகழ்கின்றது.
     மழை பெய்தால் இடம் மிகவும் ரம்யமாய் இருக்கும். எனக்கு வேறு எதுவும் தேவையில்லை ..பார்க்க இது ஒன்று மட்டும் இருந்தால் போதும் என்று பாடத்தோன்றும். முன்பெல்லாம் குழந்தைகளுடன் மழையில் குளித்து மகிழ்வேன். மறுநாள் குழந்தைகளுக்கு வரப்போகும் காய்ச்சலை எண்ணி என் மனைவி கவலைப்படுவாள். ஆனால் மழையில் நனையும் இன்பம் அவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில் உறுதியாய் நிற்பேன்.
      வீட்டின் அருகிலேயே கிணறு ஒன்றும் உள்ளது. அதில் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும். மோட்டார் போட்டும் குளிக்கலாம். நீந்தியும் மகிழலாம். அதற்காகவே உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரும் வருவார்கள். குடும்பத்தில் உள்ள அனைவரும் கிணற்றில் தான் நீந்தக் கற்றுக்கொண்டோம். இப்போது மூன்றாவது தலைமுறை அந்தக்கிணற்றில் விடுமுறை நாட்களில் நீந்தக் கற்றுக் கொள்கிறது. சைக்கிள் ஓட்டப் பழகுவதற்கும் வீட்டின் அருகில் உள்ள இடம் ஏதுவாயிருக்கும். என் மகள்கள் இருவரும் அப்படித்தான் ஓட்டக் கற்றுக்கொண்டார்கள்.
     இப்படியாக என் உள்ளம் கவர்ந்த என் வீட்டைப் பற்றி நான் கூறிக்கொண்டே போகலாம். எங்கள் சிந்தனையில் உதித்த எங்கள் சித்தமாக உள்ள எங்கள் வீடு என் மனைவி முன்பே கூறியது போல் ட்ரீம் காஸில்( dream castle) தான். மனைவி சொன்னால் மறுக்க முடியுமா?


                 
               


       

Monday, October 12, 2015

எனக்குப் பிடித்த வீடு




கதவு பற்றிய புகைப்படக்கட்டுரை ஒன்றை தி இந்து ஆங்கிலத்தில் வாசித்துக்கொண்டிருந்தேன். ஜெய்ப்பூரில் உள்ள பாரம்பரியம் மிக்க வீடுகளின் கதவுகளைப் பற்றி அதன் ஆசிரியர் சிலாகித்து எழுதியிருந்தார். உடனே எனக்கு என் அம்மா வீட்டின் கதவு நினைவுக்கு வந்தது.
        சிவகாசியில் நான் பிறந்தேன். எனக்கு சுமார் பன்னிரெண்டு வயது இருக்கும் போது என் தந்தை எங்கள்
 வீட்டைக் கட்டினார். வீட்டின் ஒவ்வொரு வளர்ச்சியையும் என் தந்தை ரசித்து ரசித்து கட்டுவதையும், அதைப்பற்றி அனைவரிடமும் பெருமை பொங்க பேசுவதையும்  நான் சிறு வயதில் கண்டு வியந்திருக்கிறேன். வீட்டில் மார்பிள் தரை போட்டிருந்தோம். அதை வாங்குவதற்கு அந்தக் காலத்திலேயே என் தந்தை, ஆசாரி, இன்ஜினியர் மூவரும் ராஜஸ்தான் வரை சென்றனர். ஆசாரி திரும்பி வந்தவுடன் என் தந்தைக்கு ஒரே புகழாரம் தான், தான் எத்தனையோ வீடுகளில் வேலை செய்திருந்தாலும் தன்னை யாரும் இந்த அளவுக்கு மதித்து ஊருக்கு அழைத்து போய் மரியாதை செய்ததில்லை என்று நெகிழ்ந்து கூறினார்.
         வீட்டின் எல்லாம் கதவுகளும் வேலைப்பாடு மிக்கதாய் தான் இருந்தன என்றாலும் நிலைக்கதவு மிகவும் அழகிய வேலைப்பாடு கொண்டதாய் இருக்கும். ஆசாரி அக்கதவுகளை செதுக்கி செதுக்கி செய்த நாட்கள் இன்றும் என் நினைவிலாடுகின்றன. பாலிஷ் போட்டு சும்மா பளபளவென்று மின்னும். அப்போதெல்லாம் எங்கள் வீட்டிற்கு வருபவர்கள் கதவு மிகவும் அழகாய் இருக்கின்றது என்று கண்டிப்பாய் பாராட்டி விட்டு செல்வார்கள். திருஷ்டி படுகின்றது என்று என் அன்னை கதவின் மேல் ஒரு சிறிய நிலைக்கண்ணாடி ஒன்றை மாட்டி வைத்தார்கள். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கூட சமீபத்தில்," கதவும் ஜன்னலும்  வீட்டின் அடையாளங்கள் மட்டும் அல்ல.அவை பண்பாட்டின் சின்னங்கள்." என்று எழுதியிருந்தார்.




       நாங்கள் நால்வர். எங்கள் உலகமே அந்த வெராண்டாவில் தான் சுழலும். அனைவரும் ஒரே பள்ளியில் படித்ததால், மாலையில் பள்ளி விட்டு வந்தவுடன் அவரவர் வகுப்பில் என்னென்ன நடந்தது என்று வெராண்டாவில் உட்கார்ந்து விவாதிப்போம். வெராண்டாவின் கிரில்கள் மிகவும் வித்தியாசமானவை. என் தந்தை தெய்வ பக்தி மிக்கவர். கிருஷ்ணர் அபிமானி. எனக்கு கூட அதனாலேயே அந்த பெயரையே வைத்துள்ளார். அவருடைய அந்த அபிமானம் எங்கள் வீட்டு  கிரில்களில் பிரதிபலித்தது. வீடெங்கும் கிருஷ்ணர் நீக்கமற கிரில்கள் மூலம் நீக்கமற நிறைந்திருப்பார். வாசலில் மிகப்பெரிய குத்துவிளக்குகள் இரண்டு, பக்கத்து கிரில்களில் ராதையுடன் கிருஷ்ணரும், ஊஞ்சலாடும் குழந்தைக் கிருஷ்ணரும் இருக்கும். அந்த வெராண்டாவிற்கு ஜன்னல்கள் கிடையாது. கிரில்கள் மட்டுமே. அதனை ஒரு ஆர்டிஸ்ட்  மூலம் வரைந்து பின் கிரில் செய்பவரிடம் கொடுத்து ஸ்பெஷலாக டிசைன் செய்ததாக என் தந்தை கூறியுள்ளார். அதைப் பற்றி அவ்வளவு பெருமை அவருக்கு. புதிதாய் வீடு கட்டுபவர்கள் கிரில் டிசைன் மிகவும் அழகாய் இருக்கிறதென்று வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு போன சம்பவங்களும் உண்டு. 
      நிலா ஒளியுயோடு வரும் போது லட்சக்கணக்கான நட்சத்திரங்களையும் கொண்டு வருவதைப் போல அந்த கிரில்களுடன் கலந்த நினைவுகள் பல வந்து மோதுகின்றன.கிரில்கள் எத்தனைதான் அழகாய் இருந்தாலும் அவற்றால் என் அன்னைக்கு ஒரு கஷ்டம் ஏற்ப்பட்டது. அவற்றைத்துடைப்பது கடினமாயிருந்தது. நுணுக்கமான வேலைப்பாடுகளை அவை கொண்டிருந்தமையால் தூசியை அகற்றுவது கடினமாயிருந்தது. ஆனால் என் அன்னை ஓர் உபாயம் செய்வார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் கிரில்கள் , கதவுகள், ஜன்னல்கள் ஆகியவற்றை நாங்கள் துடைத்து சுத்தம் செய்தால் மாலையில் அனைவரையும் திரைப்படத்திற்கு அழைத்துச் செல்வதாக உறுதியளிப்பார்கள். தியேட்டர் வீட்டின் அருகிலேயே இருந்தது. நாங்கள் அனைவரும் அத்தனை சுட்டி..விரைவிலேயே முடித்து விட்டு மதியமே அழைத்து செல்லச்சொல்வோம்.

          பொதுவாகவே சிறிய ஊர்களில் கொல்லைப் புறங்களில் தான் அதிகம் பழங்குவார்கள். என் அம்மா வீட்டிலும் அப்படித்தான். என் அன்னை காய்கறி அரிவது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது என்று அனைத்தையும் அங்குதான் செய்வார். அந்த இடத்தில் ஒரு ஊஞ்சல் உண்டு. நாங்கள் அதில் ஆடிக்கொண்டே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்போம் அல்லது வேலை செய்து கொண்டிருப்போம். முருங்கை மரத்தின் காய்களைப் பறிப்பது, இருக்கும் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது போன்ற வேலைகளைப் பகிர்ந்து செய்வோம்.
       வாழ்க்கை என்னும் நீரோடை எங்கள் நால்வரையும் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்றாலும், பண்டிகை , விடுமுறை ஆகிய நாட்களில் நாங்கள் அனைவரும் குடும்ப சகிதம் அம்மா வீட்டில் இணைந்து விடுவோம். நாங்கள் பேசிய பேச்சுக்கள்,விளையாடிய விளையாட்டுகள் என்று இரவு நெடுநேரம் வரை பேசி மகிழ்வோம். வீட்டின் ஒவ்வொரு பொருளும் ஒரு சம்பவத்தை நினைவு படுத்துவதாய்த் தோன்றும். பழைய ஆல்பங்களை எடுத்துப் பார்ப்போம். ஆச்சர்யம் என்னவென்றால் எங்கள் குழந்தைகளுக்கும் எங்களுடைய அம்மா வீடு மிகவும் பிடித்துப்போனது தான். அவர்களுக்கும் சைக்கிள் பழக, வீதிகளில் விளையாட என்று மிகவும் வசதியாக இருப்பதால் அங்கு செல்ல ஆசைப்படுகிறார்கள். 
         நான் சின்ன வயதில் பார்த்த போது என்னுடன் பேசிப் பழகி விளையாடிய என் வயதை ஒத்தவர்கள் இப்போது யாரும் அங்கில்லை. காலத்திற்கேற்ப பல மாற்றங்கள் அருகாமையில் உள்ள வீடுகளில். என்றாலும் மிக நீண்ட பெரிய படிகளில் உட்கார்ந்து கொண்டு நாங்கள் நால்வரும் பழைய கதைகளைப் பேசிக்கொண்டிருப்போம்.பக்கத்து வீட்டுப் பெண்களுடன் போட்டி போட்டுக்கொண்டு வாசலை அடைத்துகோலங்கள் போட்டது,  ஓவர் டாங்கு நிரம்பி வழியும் நீரில் குளித்தது, பால் ஐஸ் , கப் ஐஸ் என்று தெருவில் போகும் ஒன்றைக் கூட விடாமல் வாங்கி சாப்பிட்டது, பள்ளியிலிருந்து சைக்கிள் ஓட்டிக்கொண்டு வராமல் தோழிகளுடன் பேசிக்கொண்டே உருட்டிக்கொண்டே வீடு வரை வந்தது என்று நினைவலைகள் நீண்டு  கொண்டே போகும். 


       இப்படியாக என் அம்மா வீடு தான் என் மனம் கவர்ந்த வீடு என்று சொல்வேன். பூலோகத்தில் உள்ள சொர்க்கம் தான் அது. மீண்டும் நான் சிறுமியாய் உணரப்படும் தருணங்களைத் தர வல்லது.
                      - கிருஷ்ண குமாரி மதன்.
                           தூத்துக்குடி.

       

Tuesday, September 15, 2015

மனம் விரும்புதே...


வீடு என்பது கல்லும், மண்ணும், செங்கலும் அல்ல. அன்பு, அழகு, தூய்மை என்பன போன்ற இடுபொருட்களால் நிறைந்தது. சில வருடங்களுக்கு முன்பு வரை சிவகாசியில் சொந்த வீட்டில் வாழ்ந்து வந்தோம். என் கணவரின் தொழில் நிமித்தமாக சென்னைக்கு மாற்றலாகி வந்த போது, அபார்ட்மெண்டில் வாழ வேண்டிய கட்டாயமும், சூழலும் ஏற்பட்டது. 
     மிகப்பெரிய வீட்டில் காலாற நடந்து பழகிய எங்களுக்கு, திரும்பியவுடன் கிச்சன், திரும்பியவுடன் பெட்ரூம் என்று அனைத்தும்  அருகருகே இருந்தது ஆச்சர்யமான விஷயம். குழந்தைகள் பள்ளிக்குச் சென்றவுடன் ஓடி ஓடி வீட்டை ஒதுக்கும் வழக்கம் உள்ள எனக்கு, அந்த வேலை மிகச்சுலபமாய் முடிவதை உணர முடிந்தது. 
    அபாண்டமெண்ட் வந்ததால், வீட்டிற்கு சாமான்களை வாங்கிவிட்டு பின் உபயோகமில்லாதவற்றை பரண் மீது தூக்கிவைக்கும் வழக்கம் நின்று போனது. எந்தப் பொருளை வாங்குவதானாலும் , 'இது தேவைதானா? இடத்தை அடைக்காதா?' என்று ஒரு முறைக்கு இரு முறை யோசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் வீட்டில் தேவையற்ற பொருட்கள் குவிவது குறைந்தது. வேலையும் சுளுவாயிற்று. குறைந்தபட்ச தேவைகளுடன் நிறைவான வாழ்க்கை வாழ்வது எப்படி என்று புரிந்தது.
     சில வீடுகள் இறுக்கமாயிருக்கும். போதிய வெளிச்சம் இருக்காது. பகல் நேரங்களிலும் லைட் போட்டே இருக்க வேண்டியதிருக்கும். போதுமான ஜன்னல்கள் இல்லாத தால் காற்று வராது. ஆனால் எங்கள் அபார்ட்மெண்டில் ஒவ்வொரு பெட்ரூமிற்கு அருகிலும் ஒரு பால்கனி உண்டு. அதனால் கதவைத்திறந்தால் பளீரென்ற வெளிச்சமும், திமுதிமுவென்று காற்றும் வரும்.
    வீடு கடற்கரைக்கு அருகே இருப்பதால் காற்று வாங்க என்று எங்கேயும் செல்ல வேண்டியதில்லை. பால்கனியில் நின்றால் போதும் தென்றல் வந்து வருடும். நகரங்கள் பொதுவாய் கான்கிரீட் காடுகளாய்த் திகழ்கின்றன என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால் எங்கள் பால்கனியில் அமர்ந்தால் சோலைவனம் போல நாலாபுறமும் மரங்கள் தெரிகின்றன. பக்கத்து வீட்டில் மிகப்பெரிய மாமரம் ஒன்று உள்ளது. அதனை நான் ரசித்துக்கொண்டே இருப்பேன். பூத்து, பின் காய்த்து, பின் தளிர்பச்சையில் புது இலைகளுடன் என்று அதன் வளர்ச்சியை வருடந்தோறும் உணர்வு பூர்வமாய் கண்டு கழிப்பேன். வெள்ளிக்கிழமைதோறும் பக்கத்து வீட்டு பெரியம்மா மாலையில் கோலமிட்டு துளசிமாடத்தில் விளக்கேற்றி வழிபடுவார்கள். அதனையும் மேலேயிருந்தே கண்டு ரசிப்பேன் .
    மாலை மணி நான்கு ஆனவுடன் பள்ளி விட்டு வரும் குழந்தைகள் கீழே விளையாட ஆரம்பித்து விடுவார்கள். நான் பால்கனியில் ஒரு சேர் போட்டு அமர்ந்து கொண்டு அவர்களை வேடிக்கை பார்ப்பேன். அவர்கள் சைக்கிள் ஓட்டுவதும் ஓடிப்பிடித்து விளையாடுவது, கண்ணாமூச்சி, கிரிக்கெட் என வித விதமாய் விளையாடுவார்கள். சமயங்களில் பெரியவர்கள் இறகுப்பந்து விளையாடுவதும் உண்டு.
        பச்சைக்கிளிகள் அதிகம் இருக்கும். அதன் கீச் கீச் ஒலியைக்கேட்டவுடன் ஓடிச்சென்று பார்ப்பேன் . அவை பறந்த வண்ணம் இருக்கும் நம் வீட்டிற்கு அவை வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அவற்றிற்கு தினமும் அரிசியும் தண்ணீரும் பால்கனியில் வைக்கிறேன். என்றாலும்  கிளிகளின் கடைக்கண் பார்வை எங்கள் வீட்டின் மீது படவில்லை. செடி கொடி இருந்தால் அவை வரும் என்று ஒருவர் சொன்னார் . இப்போது சில பூந்தொட்டிகள் வைத்து செடிகள் வளர்க்கின்றேன். காகங்கள் தான் வருகின்றன. அவை உரிமையாய் வந்து கத்தி என்னைக்கூப்பிடும். என் கணவரோ என்னைக் கேலி செய்வார்,'உன் ஃபிரண்டஸ் உன்னைக் கூப்பிடுகிறார்கள் .. பார்' என்று. என்றேனும் ஒருநாள் கிளிகள் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். புறாக்களுக்கும் பஞ்சமில்லை. அருகிலுள்ள மருத்துவமனையில் ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த கூரையில் அவை த த்தி த த்தி நடந்து பேரணி நடத்தும். பைனாக்குலர் வைத்துக்கொண்டு அவற்றைப்பார்த்து ரசிப்பேன்.என் இளைய மகள், " அம்மா உன் அலப்பறைக்கு்ஒரு அளவே இல்லையா?" என்று கிண்டல் அடிப்பாள்.
     அம்மா மடியில் சாய்ந்து கொண்டு கதைகள் கேட்பது போன்ற இன்பத்தை இந்த பால்கனி எனக்கு அளிக்கின்றது. மொட்டை மாடியில் வைத்து சாதம் ஊட்டும் அம்மாவிடம் கதைகள் கேட்ட காலம் ஒன்று உண்டு. இளமைக்கால நினைவுகளை திகட்ட திகட்ட நினைத்துப் பார்த்து மகிழும் வழக்கம் எனக்கு உண்டு. அம்மா நினைவு வந்து அவ்வப்போது தனிமை வாட்டும் போது பால்கனியில் அமர்ந்து நிலவையே பார்த்துக் கொண்டிருப்பேன். நிலவு 'வருத்தப்படாதே நான் அருகில் வருகிறேன்' என்று கூறியவாறு அருகில் வருவது போல் தோன்றும். 
இப்படி என் வீட்டின் பால்கனி என் உள்ளத்தைக்கவர்ந்து ராஜாங்கம் நடத்துகின்றது.வீட்டிற்கு விருந்தினர் யார் வந்தாலும் அவர்களிடம் பால்கனி புராணம் பாடாமல் விடுவதில்லை.இப்போது 
பால்கனி தான் என் கண்ணிற்கும், மனதிற்கும் இதமளிக்கும் சோலை.





Thursday, September 10, 2015

விசுவாசத்துக்கேத்த வீக்கம் .



ராமு ராகேஷ் சாரிடம் டிரைவராக இருபது வருடங்களாக இருக்கிறான். அவர் அவனுக்கு ஒரு குறையும் வைத்ததில்லை. உண்மையைச் சொல்வது என்றால் அவன் முகம் கொஞ்சம் சோர்வாக இருந்தால் கூட கவனித்து அவனுக்கு என்ன பிரச்னை என்று அறிந்து உதவுவார். ராமுவும் கால நேரம் பார்க்காமல் அவர் குடும்பத்துக்கு உழைத்துள்ளான். 
       டிரைவர்தான் என்றாலும் ராமு சிறுக சிறுக சேமித்த பணத்தைக் கொண்டு சொந்த வீடு ஒன்று கட்டி விட்டான். பிள்ளைகள் இருவருமே படிக்கிறார்கள். கடவுள் புண்ணியத்தில் இருவருமே நன்றாகப் படிப்பதால் அவனுக்கு எந்தக் கவலையுமில்லை. ஆனால் இப்போது கொஞ்ச நாட்களாக மனைவி லட்சுமி தான் மகனை எப்படியாவது இன்ஜினியரிங் படிக்க வைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறாள். நம் வசதிக்கு அது தோதுப்படாது என்று சொன்னால் அவளுக்குப் புரியவில்லை. பையனுடைய எதிர்காலம் நல்லா இருக்கும்.. எப்படியாவது பணம் புரட்டிக் கொடுய்யா என்று நச்சரித்துக் கொண்டிருக்கிறாள்.
            அதெல்லாம் வேண்டாம் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டான். விரலுக்கு தகுந்த வீக்கம் போதும். அவன் ஆர்ட்ஸ் காலேஜில் பி.எஸ்ஸி படிக்கட்டும். போதும் என்றான். மகனும் ஒத்துக் கொண்டான். மனைவியும் அமைதியாகி விட்டாள். இந்த மனுசனை ஒண்ணும் பண்ணமுடியாது, பிழைக்கத் தெரியாதவன் என்று முடிவு கட்டி விட்டாள் போலும் .
              ரிசல்ட் வந்தது. ராமுவின் மகன் 1110 மார்க் வாங்கியிருந்தான். சந்தோசத்தில் ராமுவிற்கு தலைகால் புரியவில்லை. முதலில் ராகேஷ் சாருக்கு தான் சொல்ல வேண்டும் என்று மகனை கூட்டிக்கொண்டு ஸ்வீட் வாங்கிக் கொண்டு அவரைப் பார்க்க ஓடினான்.
            " ஐயா.. என் பையன் நல்ல மார்க் வாங்கி பாசாயிட்டான். முதல்ல உங்ககிட்ட தான் சொல்லணும்னு கூட்டி வந்தேன். தம்பி ஆசிர்வாதம்  வாங்கிக்கோ. உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கின பிறகு தான் சார் நாங்க கோயிலுக்கே போகப்போறோம்," என்று சந்தோசமாக்க் கூறினான்.
            ராகேஷ் அவனை தூக்கி நிறுத்தியவாறே," நானும் உனக்கு ஒரு பரிசு வைத்திருக்கிறேன்" என்று ஒரு கவரை நீட்டினார். அது.. நகரில் உள்ள தலைசிறந்த இன்ஜினியரிங் காலேஜில் அவனை சேர்ப்பதற்கான அட்மிஷன் கடிதம். அதுவும் அவன் விரும்பும் பிரிவை எடுத்துக் கொள்ளலாம் என்ற சலுகை வேறு அளிக்கப்பட்டிருந்தது. 
           ராமு விக்கித்துப்போய் நின்று விட்டான் . அவன் கண்களில் நீர் திரண்டது. பேச நா எழவில்லை. ராகேஷ் " நீ சொல்லவில்லை என்றால் எனக்குத் தெரியாதா?!" என்று புன்னகைத்தார்.

Tuesday, September 8, 2015

ஒரு பக்க கதை

" உங்கம்மா சீரியல் பாக்கும் போது இடியே விழுந்தாலும் அவங்களுக்குத் தெரியாது..கோவுச்சுக்காதீங்க..உள்ளதைச்சொன்னேன்."
" உங்க தம்பி தேவைன்னா மட்டும் தான் இந்தப் பக்கம் தலை காட்டுவார். இல்லைன்னா நம்ம இருக்கிற திசை பக்கம் திரும்ப கூட மாட்டார்."
" நீங்க எப்பவுமே இப்படித்தான். அவசரப்படுவீங்க. அவசரப்பட்டா ஜோலி ஆகாதுன்னு உங்களுக்குப் புரியாது. தப்புன்னா மன்னிச்சுக்கோங்க."
"உங்க குடும்பத்துல எல்லோருக்கும் இதே பழக்கம் தான். பணத்தை வாரி இறைக்கிறது.. அப்புறம் உக்காந்து வருத்தப்படறது...ஆனா இதெல்லாம் சொல்றதுக்கு நான் யாரு? நானாட்டம் என் வேலை உண்டு நான் உண்டுன்னு இருக்கிறேன்."
இவையெல்லாம் ராஜேஷுடைய சகதர்மினி  
சுதாவின் வார்த்தைகள். சுதா சும்மா இருக்க மாட்டாள். வார்த்தை குத்தீட்டிகளால் காயப்படுத்துவாள். அப்புறம் எனக்கு எதுக்கு பொல்லாப்பு என ஒதுங்கிக் கொள்வாள். இதை சொல்லாமலேயே இருக்கலாம். ராஜேஷின் மனம் புண்படுவதாவது குறையும் என்று அவனுக்குத் தோன்றும்.
             இதைப்பற்றி ஜாடை மாடையாக  குறை சொல்லாதே என்று சொல்லிப்பார்ததான் ராஜேஷ். ஆனால் சுதாவிற்கு மண்டையில் ஏறுகிற மாதிரி தெரியவில்லை. அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று யோசிக்கலானான்.
             ஒரு ஞாயிற்றுக்கிழமையில் காலையிலேயே ஆரம்பித்தான்..." காபியில் சூடு கம்மி..ஆனால் நான் ஏன் சொல்லணும். சொன்னா உனக்கு கோபம் வரும்" என்றபடி அந்தப்பக்கம் திரும்பிக் கொண்டான். சுதாவிற்கு சுருக் என்றிருந்தது. காபி சூடாகத்தான் இருந்தது. அவன் வேண்டுமென்றே சொல்கிறான் என்று அவளுக்குப் புரிந்தது.
               காலை டிபனின் போது," இதே தானா தினமும்...போர்" என்றான்." இதை நான் சொன்னா தப்பாயிடும். எனவே நான் கப்சிப்..." என பொய்யாக வாயை மூடிக்கொண்டான். சுதா கஷ்டப்பட்டு கோபத்தை அடக்கிக் கொண்டாள். 
               மதியம் சாப்பிடும் போதும் ஏதாவது ஆரம்பிப்பான் என்று சுதா எதிர்பார்த்தாள் . ஆனால் அவன் அமைதியாய் சாப்பிட்டான். அவளுக்கு நிம்மதியாக இருந்தது. ஆனால் அவன் வேறு வித்த்தில் ஆரம்பித்தான். " சிலர் வீட்டை எப்படி சுத்தமா வைச்சிருக்காங்க..ம்ம்ம்..அய்யோ எனக்கு ஏன் இந்த பொல்லாப்பு."
           அவ்வளவு தான் இதற்கு மேல் சுதாவிற்கு பொறுத்துக் கொள்ள முடியவில்லை. " நீங்கள் எதை மனதில் வைத்துக் கொண்டு இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? சொல்வதை நேரடியாக சொல்வது தானே???இதென்ன இரட்டை வேடம்? " என்று பிலுபிலுவென பிடித்துக்கொண்டாள்.
             ராஜேஷ் அவளையே பாரத்துக் கொண்டிருந்தான். பின் மெல்ல ஆரம்பித்தான்" நீ இப்படித்தான் செய்கிறாய். யாரையாவது குறை சொல்கிறாய். பின் உனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாத து போல பேசுகிறாயே. நீ நடந்து கொள்ளும் வித்த்தைக் உனக்கு உணர்த்தவே இப்படி நடந்து கொண்டேன். மற்றபடி உன் மீது எனக்கு வருத்தமே கிடையாது . இனி புரிந்து நடந்து கொள்வாய் என நம்புகிறேன்.." என்றவாறே அவளை அணைத்துக் கொண்டாள். தவறை உணர்ந்தவளாய் சுதா அவனது அணைப்பில் மகிழ்ந்தாள்.

Thursday, August 20, 2015

சென்னை 376


தமிழ்நாட்டின் மொத்த ஜனத்தொகைக்கும் மனதின் எங்கோ ஒரு ஓரத்தில் கண்டிப்பாக இந்த ஆசை இருக்கும். ஒரு முறையாவது சென்னையை சென்று பார்த்து விட்டு வர வேண்டும் என்று. திரைப்படங்களும் பத்திரிகைகளும் சென்னையைப் பற்றி அப்படி ஒரு பூதாகர பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளன. சென்னையின் பிரதான வீதிகள்,மயக்கும் மால்கள், சிறந்த திரையரங்குகள், கடற்கரை, உணவு விடுதிகள் என நம்மை தூண்டில் போட்டு இழுப்பவை ஏராளம். ஆனால் நுழைந்தவுடன் ஏற்படுவதென்னவோ ஏமாற்றம் தான். தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து சென்னைக்கு வரும் எவரும் முதலில் மிரண்டு தான் போய்விடுவர்.
          சென்னையில் நுழைந்தவுடன் நம்மைத் திகைக்க வைப்பது அதன் ஜனநெரிசல் தான். எங்கு பார்த்தாலும் கொத்துக்கொத்தாய் மனிதர்கள். ஒலிப்பான்களை அழுத்திக் கொண்டே  மிக வேகமாக எதையோ சாதிக்கப் போகிறாற் போல பறக்கும் வாகனங்கள். அவை கக்கும் நச்சுப் புகை. இவற்றைத் தாண்டி சென்னை நகருக்குள் நுழைந்தால் நாம் சந்திக்கும் கேள்விகள் எத்தனை எத்தனை? புதிதாய் சென்னை வரும் அப்பாவிகளிடம் ஆட்டோக்கார ர்கள் வந்து மிரட்டலாய் கேள்வி கேட்கும் போது அவர்கள் சற்றே திகிலடைந்து விடுவர். ஊரிலிருந்து எச்சரித்து அனுப்பப்பட்ட அந்த நபர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தான் போக வேண்டிய இடத்தைக் கூறினால், எட்டாத ஒரு கட்டணத்தைக் கூறி அடுத்த மிரட்டலைத் தொடுப்பார். ஒரு விஷயத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சென்னைவாசிகளிடம் அவர்கள் எவ்வளவு தைரியமாகப் பேசுகிறார்களோ அதே தைரியத்துடன் நாமும் பேச வேண்டும் . இல்லையென்றால் கதை கந்தலாகிவிடும். இங்கு வாழ ஆரம்பித்தவுடன் இன்னொரு விஷயமும் நமக்குப் புலப்படும். சென்னை என்பது ஓரே மாதிரியான மக்களைக் கொண்டது அல்ல. மாம்பலம், மயிலாப்பூர் , தாம்பரம், சாந்தோம் என்று பல்வேறு விதமான பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித த்தில் தனித்தன்மை வாய்ந்தது.
           ஆட்டோவில் ஏறி அமர்ந்து பயணம் செய்து இடத்தை அடையும் போது ஏதோ சாதனை செய்து விட்டாற் போல கட்டாயம் எண்ணத்தோன்றும். ஐந்து நிமிடங்கள், பத்து நிமிடங்களில் பயணம் செய்த நபர்களுக்கு அரை மணி நேரம், ஒரு மணி நேர பயணம் இங்கு சர்வசாதாரணம் என்ற உண்மையை ஜீரணிக்க சில காலம் ஆகும். 
           சென்னை வாழ் மக்களுக்கென்றே சில பிரத்யேக குணங்கள் உண்டு. பொதுவாக இங்குள்ள மக்கள் உதவும் குணம் மிக்கவர்கள். ஒரு அட்ரஸ் கேட்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், இருக்கும் வேலையெல்லாம் விட்டு விட்டு கர்ம சிரத்தையாய் வந்து வழி சொல்வார்கள். சமயங்களில் அது தவறாக கூட இருக்கலாம். தமக்கு தெரியவில்லை என்றால் கூட வழி சொல்வதில் வல்லவர்கள். சுத்தம் சுகாதாரம் பேணுவதில் அவர்களுக்கு இணை வேறு எவரும் இல்லை. பேப்பர் கப்பில் காபி குடிப்பவர் என்றால் ஜாக்கிரதையாக கப்பை நசுக்கி விட்டு குப்பைத்தொட்டியின் அருகே கீழே வீசி எறிவார்கள். (கவனிக்க..குப்பைத்தொட்டியின் உள்ளே அல்ல). அதென்னவோ குப்பைக் கவர் எடுத்து வரும் அனைவருக்கும் தான் பெரிய கபில் தேவ் என்ற எண்ணம் ஏற்பட்டு விடுகிறது. பௌலிங் போடுவது போல் குப்பைத்தொட்டியை குறி வைத்து வீசுகிறார்கள். ஆனால் அது மிகச்சரியாக வெளியே விழுந்து பல்லைக் காட்டும். ஆனால் இதைப் பற்றியெல்லாம் சென்னை வாழ் மக்கள் கண்டு கொள்ளவே மாட்டர்கள். அவ்வப்போது அவர்களுக்கு குப்பையைப் பற்றி திடீர் ஞானோதயம் ஏற்படும் . ஷார்ட்ஸ், தொப்பி,கான்வாஸ் ஷூஸ் சகிதம் வாக்கிங் செல்லும் மகானுபாவர்கள் இதைப் பற்றி பேசிக்கொண்டே செல்வார்கள். எக்ஸ்நோரா போன்ற அமைப்புகளின் மூலம் குப்பைத்தொட்டிகள் வாங்கிக் கொடுத்து கடைக்கார ர்களை வாடிக்கையாளர்களிடம் அதில் போடச்சொல்லி வற்புறுத்துவார்கள். கடைக்கார ர்கள் பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டுவார்கள். ஆனால் எல்லாம் பத்து நாட்களுக்குத்தான். அதன் பின் பழையபடி குப்பைகள் வீதியை அலங்கரிக்கும். 
         மழை பெய்தால் சென்னை நகரம் அடையும் திண்டாட்டத்தை சொல்லி மாளாது. ஒரு சின்ன தூறலுக்கே டிராபிக்கால் சென்னை ஸ்தம்பித்து விடும். வீதிகளில் நீர் வழிந்தோடும். காய்ச்சல் , வாந்தி, பேதி என்று நோய்கள் சரமாரியாகத் தாக்கும். இத்தனையையும் தாண்டி தங்கள் சகஜ வாழ்க்கையைத் தொடர அனைவரும் பாடுபடுவர். இதனை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். ஆனால் இப்பொழுதெல்லாம் சென்னை வறண்ட பூமியாகி ஆகிவிட்டது. மழையைப் பார்ப்பதே அபூர்வமாகிவிட்டது.
      சென்னை மக்கள் சுறுசுறுப்பானவர்கள். அதிகாலை ஆறு மணிக்கே கையில் சப்பாட்டுடன் இரண்டு பஸ் மாறி பணியிடங்களுக்கு செல்பவர்களை கண்டிருக்கிறேன். சிறு நகரங்களில் ஒன்பது மணிக்கு பணிக்கு செல்ல வேண்டிய நபர் காலை எட்டரை மணிக்கு பாட்டு கேட்டுக்கொண்டே அடி பம்ப் இல் தண்ணி அடித்துக் கொண்டிருப்பார். அவரால் அரைமணி நேரத்தில் குளித்து சாப்பிட்டு அலுவலகத்தை அடைய முடியும். ஆனால் இங்கு அதுவல்ல கதை. நாள்தோறும் இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய சூழல் அநேகம் பேருக்கு உள்ளது.
          ரசனையுடன் ஆடை அணிவதில் இவர்களுக்கு நிகர் எவரும் இல்லை. பஞ்சு மிட்டாய் கலர், ஆரஞ்சு மிட்டாய் கலர் என்று எள்ளி நகையாடப்படும் வண்ணங்களில் ஆடைகளை விரும்பி அணிவர். ஹேர் கலரிங் செய்து பெண்களுக்கு இணையாக ஆண்களும் நீண்ட கூந்தல் வளர்ப்பர். ஒரு மாலை வேளை மெரினாவிற்கு சென்றால் எத்தனை விதமானவர்களைப் பார்க்கலாம். தலையில் கலர்ப்பூ, காலில் கொலுசு, நெற்றியில்குங்குமத்துடன் சிலர். குதிகால் செருப்பு, அலைபாயும் கூந்தல், குட்டைப் பாவாடை, நுனிநாக்கு ஆங்கிலம் என்று சிலர். காதில் ஹெட்போன், நைந்த ஜீன்ஸ்,பந்தாவாக ஒரு பைக், மற்றும் நண்பர் கூட்டம் என்று சிலர். பஞ்சென நரைத்த தலை, பழைய கால அருமைபெருமைப் பேச்சு, இசையில் அதீத ஈடுபாடு என்று சிலர். இப்படி கலவையான மக்கள் கூட்டம் காண எங்கும் கிடைக்காது. 
          சென்னை மக்கள் உணவுப்பரியர்கள். பாரம்பரிய உணவு விடுதிகள், தெருவோரங்களில் இருக்கும் கையேந்தி பவன்கள், மேலை நாட்டு துரித உணவகங்கள், வடக்கத்திய சாட் உணவகங்கள் , சைனீஸ் உணவகங்கள் என்று உணவு வகைகளுக்கு பஞ்சமே கிடையாது. அனைத்திலும் ஜேஜே என்று கூட்டம் மொய்க்கும். சென்னையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பல உண்டு. வழிப்பாட்டுத்தலங்களும் அனைத்து மத த்தினருக்கும் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும். சென்னை மக்களின் பேச்சுத்திறமையை குறைத்து எடை போடக்கூடாது. தன்னம்பிக்கையை மிளிர பேசும் அவர்கள் சென்னையை ஒரு போதும் விட்டுத் தர மாட்டார்கள். இப்படி சென்னையைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம் . முழுமையாக ஒரு கட்டுரையில் கூறுவது என்பது மெரினாவை ஒரு கண்ணாடிக் குடுவைக்குள் அடைப்பது போல இயலாத காரியம்.

           

Tuesday, July 28, 2015

மகிழ்ச்சி பரவட்டும்

கத்தரிக்காயை இன்னொரு முறை அமுக்கிப் பார்த்தாலே சிடுசிடுக்கும் காய்கறிப்பெண், ஆட்டோவில் ஏறும் போதே இத்தனை லக்கேஜா என முணுமுணுக்கும் ஆட்டோக்கார ர்,  தினமும் சாம்பார்தானா என்று கோப ப்படும் குழந்தைகள் என்று திரும்பிய பக்கமெல்லாம் எள்ளலும் ஏச்சுகளும் சோர்வடைய செய்கின்றன.பழைய நினைவுகள் அடிக்கடி வந்து சோர்வை அதிகப்படுத்துகிறது. எங்கே தொலைத்தேன் எனது உற்சாகத்தை? துள்ளலும் துடிப்புமாய்த் திகழ்ந்த அந்த பழைய முருகேஸ்வரி எங்கே போனாள்? எனக்கே எனக்கென்று செலவிட சில மணித்துளிகள் கூட என்னிடம் இல்லையே.என் நேரம் அனைவராலும்
 பயன்படுத்தப்படுகிறதே. வீட்டில் சும்மா தானே இருக்கிறாய் என்று பாரங்கள் திணிக்கப்படுகின்றதே. இது போன்ற எண்ணங்கள் அடிக்கடி வந்து ஆயாசப் படுத்துகின்றன. 
              என்றாலும் தினந்தோறும் நான் சந்திக்கும் சில சுவாரசிய நபர்கள் தம்மைச் சுற்றி மகிழ்ச்சியைப் பரப்பி என்னுள்ளும் மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்துகின்றனர். சிரித்த முகம், செய்யும் வேலையை ஈடுபாட்டுடன் செய்தல், உற்சாகமூட்டும் பேச்சு என்று வலம்வரும் இவர்களை சந்தித்தால் மனதில் உற்சாகம் தானாகவே தொற்றிக்கொள்ளும். இப்படிப் பட்டவர்களை நாம் தேடிப்போகத்தேவையில்லை. தானாகவே நம்மிடம் வந்து பேசி நம்மை உற்சாகப்படுத்திவிடுவர்.
              ஒரு முறை கால் டாக்சி ஒன்றில் ஏறினேன். கால் டாக்சி டிரைவர்கள் பற்றி பலரும் பல விதமாக பேசிக் கொண்டிருக்க பயம் என்னைத் தொற்றிக்கொண்டது. பேசா மடந்தையாய் அமர்ந்திருந்தேன். ஆனால் அந்த டிரைவருக்கு அமைதியாய் இருப்பது பிடிக்கவில்லை. டூரிஸ்ட்கைடாக செயல்பட ஆரம்பித்தார். போரூரிலிருந்து ராயபுரம் வரும் வரை ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் சொல்லிக் கொண்டே வந்தார். எனக்கும் இப்போது ஆர்வம் பிறந்து விட்டது. ம் கொட்டிக்கொண்டே, கதை கேட்டுக்கொண்டே வந்தேன். DLFA பில்டிங், சிவாஜி கணேசன் வீடு, கல்யாண் ஜூவல்லர்ஸ், ஜெமினி ஃபிளை ஓவர், அமெரிக்கன் எம்பஸி என்று வழியில் வருவனவற்றையெல்லாம் சுவைபட விவரித்துக் கொண்டே வந்தார். இவற்றில் சில ஏற்கனவே நான் அறிந்தவை, சில எனக்குத்தெரியாதவை. தெரிந்தவற்றை ஏற்கனவே தெரியும் என்று கூறி அவருடைய flowவை நிறுத்த நான் விரும்பவில்லை. என் கணவரும் அவருடைய கதைகளை விரும்பிக் கேட்ட வண்ணம் வந்தார். எனினும் அவர் அமெரிக்கன் எம்பஸியைக் காட்டிய போது என்னவர் ரகசியத்தை உடைத்து விட்டார். " தெரியுங்க.. நாங்களும் இந்த ஊரு தான்.." என்று. அந்த டிரைவர் ஆச்சரியத்துடன்," உங்கப் பேச்சைப் பாத்து திருநெல்வேலி என்று நினைத்து விட்டேன் சார். ஊருக்கு புதுசு என்று நினைத்து தான் விபரம் சொன்னேன் சார்" என்றார். அனைவரும் சிரித்துக்கொண்டோம் . அதன் பின் அவர் மௌனமாகவே இருந்தார். இப்போது நாங்கள் அவரிடம் பேசிக்கொண்டே வந்தோம். சொந்த ஊர், மனைவி, குழந்தைகள் என்று கதை சுழன்றது. அந்த ஒரு மணி நேரத்தில் ஒரு நெருங்கிய நண்பருடன் உரையாடியதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. வீடு வந்து விட்டது. நாங்கள் இறங்கிக் கொண்டோம். என்றாலும் அவரிடம் இருந்த உற்சாகம் ஏற்கனவே என்னில் தொற்றியிருந்தது. 
                  மளிகைக்கடை அண்ணாச்சியும் அப்படித்தான். பேச்சுக் கொடுத்தால் பழைய கதை, நடப்பு வாழ்க்கை என்று அனைத்தையும் அலசுவார். சமயத்தில் சிந்துபாத் கதையின்    
 போக்கைப் பற்றி கூட அலசுவார் என்றால்  பார்த்துக் கொள்ளுங்களேன். தக்காளிப்பழம் மலிவாய் இருக்கிறது என்றால் அதிகமாய் ஒரு கிலோ போடுவார். ' அண்ணாச்சி .. தேவையில்லை. பிரிட்ஜில் இடமில்லை' என்றால் விடமாட்டார். ' அவ்ளோ பெரிய பங்களாவில் இந்த ஒரு கிலோ தக்காளிக்கு இடமில்லையாம்மா?' என்று உரிமையுடன் வாதிடுவார். தான் கடை போட்ட புதிதில் இந்த வீதியில் தன் கடையும் ' பாய்' கடை ஒன்றும் என இரண்டே இரண்டு கடைகள் மட்டும் இருந்ததாகவும், இப்போது வீதி முழுக்க கடைகள் இருப்பதைப் பற்றியும்
பேசுவார். குலத்தொழிலுக்கு முன் வராத பிள்ளைகள் மீது கோபமும், படித்துவிட்டு வேலை கிடைக்க வில்லை என்று பெற்றோருக்கு பாரமாய்த்திரியும் இளைஞர்கள் மீது வருத்தமும் அவர் பேச்சில் தெறிக்கும். ஜிலுஜிலுப்பு, மினுமினுப்பு ஆகியவற்றிற்கே இப்போது மவுசு என்பதை அண்ணாச்சி நன்கு அறிவார். சூப்பர் மார்க்கெட்டில் என்ன ரேட் வைத்தாலும் சத்தமில்லாமல் வாங்கிப் போகும் மக்கள் தன் கடையில் ' அண்ணாச்சி இவ்ளோ ரேட் ஆ?' என்று குறைபடுவதை வருத்தத்துடன் வெளியிடுவார். அண்ணாச்சியுடன் அளவளாவுதற்காகவே அவரது கடைக்கு செல்லும் நான்,' அதெப்படி நீங்கள் சூப்பர் மார்க்கெட்டை குறை சொல்லலாம்? அங்கு அது இருக்கு, இது இருக்கு, உங்களிடம் இதெல்லாம் இல்லை' என்று வம்பிழுப்பேன்.' நான் தனி ஆளும்மா..அங்கே எத்தனை பேர் வேலை பாக்கிறாங்க!! ஏசியில ஜிலு ஜிலுன்னு உக்காந்திருக்காங்க. இங்கே நான் தான் மானேஜர், பர்ச்சேஸ் மானேஜர், சேல்ஸ் மானேஜர் எல்லாம்.. இது ஒன் மேன் ஷோம்மா' என்று ஜோக்கடிப்பார். தன் கடையை விட்டுக்கொடுக்காமல்,' உனக்கு என்ன வேணும்னு சொல்லு, நான் வாங்கிக்கொண்டு வந்து தருகிறேன்' என்பார்.
               மோதலில் தொடங்கி சுவாரசியமாய் முடியும் சம்பவங்களும் உள்ளன. அப்படித்தான் அதிரடியாயப்பேசி வெறுப்பை சம்பாதித்து அறிமுகமானார் பூக்கடை வைத்திருக்கும் கனகாம்மா. அவரது கடையில் முதல் முறை நான் மல்லிகைப்பூவைத் தொட்டவுடன் அவருக்கு கோபம் வந்து விட்டது. ' வாங்கப் போறின்னா மட்டும் தொடு.. இல்லைன்னா தொடாதே' என்றார். எனக்கு சுருக்கென்றிருந்தது. பூவை வைத்து விட்டு கடையை விட்டு நகர யத்தனித்தேன். ஏற்கனவே அதிக சளியால் அவஸ்தைபட்டுக் கொண்டிருந்த கனகாம்மா இரும ஆரம்பித்தார். எனக்கு மனசு கேட்கவில்லை., கைப்பையிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்து,' உடம்பிற்கு முடியாத நேரம் கடை போடாதீங்க. பூ வாசமே இளைப்பை( wheezing) அதிகரிக்கும்' என்றேன். என்னுடைய இந்த செய்கையால் மனம் இளகி விட்டார். ' என்னை மன்னிச்சுக்கோம்மா. வீட்டில் யாராவது பாத்துகிட்டா நான் ஏன் இந்த வயசுல இந்த வேலை பாக்குறேன்? நான் ஏதோ முடியாத கோபத்துல பேசிட்டேன். உனக்கு என்ன பூ வேணுமோ எடுத்துக்கோ.' என்று கனிவுடன் பேசினார். அதன்பின் பூ வாங்கப் போகும்போதெல்லாம் தனி அக்கறையுடன்  பேசுவார். நான் வேண்டாம் வேண்டாம் என்றாலும் உரிமையாய் திரும்பு என்று கூறி  தலையில் பூ வைத்து விடுவார்.
               இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அன்பு உலகெங்கும் நீக்கமற கொட்டிக் கிடக்கின்றது. நாம் தான் அதனை அள்ளும் போது சில சமயம் காயமடைகிறோம். அவற்றை மனதில் ஏற்றாமல் நல்லனவற்றை மட்டுமே நினைத்து வாழ்வை இனிக்கச் செய்வோம். ஆக்கபூர்வமான சிந்தனைகளையும் நல்ல நினைவுகளை மட்டுமே மனதில் நிரப்பி வாழ்வில் ஒளி பெறுவோம். 
 

Sunday, June 14, 2015

Edge of glory

     

      Gone are the days when 'Girl friends getaway' confined up images of a group of women pampering  themselves with spa treatments or movies or shopping. 
     Now young women  are opting for high octane excursions like trekking, hiking, or cycling. Adventure travel has become the new fashion word in the girly girl world. Relaxing in a beach chair, applying sunscreen and listening to music , such scenes have been replaced by challenging journeys with close friends. 
     Four girls from Chennai , thrill seekers, went on memorable trip to kodai  this April. The pictures speak for their adrenaline rush. Not sure of what was in store for them to view, they innocently began their trekking to an exotic location in Kodai, still not pampered by tourists, ended up watching elegant and serene beauty. Struck with awe, disbelief, excitement and fear they realised it was a memory that could be cherished for a lifetime. Now here comes their breathtaking experience by Esha Sivakumar, who was one among those travel enthusiast

EDGE OF GLORY!!
It was one of those days when you are talking to your friends and realise that u need to get away and go on a trip. The conversation always ends with us planning an exotic trip that we never go on. So one of my friends suggested that we plan a simple, fussfree trip to KODAI. 
        We have all been to kodai before, but it was scorching hot as it was the infamous indian summer and the reprieve from the heat was reason enough, but who doesn't want to go on a road trip with friends? And so Kodai it was and we set off after much planning and anxiously waiting for ticket confirmations. 
     The first couple of days was spent  doing touristy” things, reminiscing about old days, and jabbering away non stop about what is happening in our lives. When we couldn't amuse ourselves we would just float around the lake and bask in the idyllic and serene surrounding. 
     On the third day  we chanced upon a small  kitschy sandwich place that sold some delicious sandwiches, we struck up a conversation with the owner and asked him what locals do in kodai and if he knew some place that is worth our time.He gave us rough directions to this place that was supposed to have some amazing views. He also warned us that it was a good 5km hike downhill. What was alluring about the prospect of this trek was the fact that he said that not many tourists know of this place. By then we were weary of loud tourists littering around eco spots, middle aged men giving us the looks and noisy kids.

      So the next day we were more than happy to go on this hike, after innumerous stops  for directions and getting lost we finally arrived at this narrow road on a hill that had a couple of tea shops and some bare foot hippies enjoying hot tea. We really had no idea what we were in for, a narrow lane led us to a flight of rough stone steps entwined with thick roots from the trees that lined the sides of the pathway. A few miles hike down the hill we came across small streams with ice cold water. 
      The entire pathway had small trails leading into thick forests. We took a short detour into one of these trails to explore the forest filled with shrubs, pear trees and large wild ferns, we sat down on a small clearing in the forest  and listened to the crickets and song birds. We never wanted to get up and leave but we had this view we came all the way to see. After about twenty odd minutes of climbing we came upon a rough ridge that had a sharp fall, all we could see were pine trees towering above us. It was so misty that we couldn't see anything beyond the trees. Then the skies cleared up, the sun shone and we could see what the sandwich guy meant when he said the view is worth the trek.
     I was asked to write about my experience for this blog post. But before I write about what I felt, here is what my friends had to say about the place:
 Neeraja Ravi, Scared to death”.
 Nihila Suren, “ It was an endless space before me. Heaven like and mysterious because nothing much was seenAnd I felt minuscule”.
Aishwarya Suresh, “ A step less to meet heaven”.
 A friend who saw all our pictures said this, Edge of glory”.
         What did I think about standing on the edge of this narrow piece of rock and looking into the wilderness that stretched before me? I have read and heard the phrase words cannot describe, but I was one of those people who believed that I can explain and express anything with words. For the first time i felt like words were not enough to express what I felt. I was literally rendered speechless. I felt small and insignificant and nature has its way of making you feel trivial. It was magical standing there and taking in all that my mortal eyes could see. Again words fail me, so I am going to insert pictures here so you can see what all the fuss is about!! 


     I am going to try and explain the emotions I had while sitting on that ledge. I felt blank and stripped of emotions, like a blank canvas. The place inspired me in ways I never dreamt of. It gave me a moment to take a step back and marvel  at what is around me. In this rat race of a life we always fail to appreciate the small things around us. We fail to see that there is more to life. As I glanced back at the mist covered expanse I made a promise to stop and appreciate  everything around me.


       P.S. This place we visited has name, but my friend made me promise that I would never divulge it. Her explanation was, ‘ i do not want this to become another touristy place for people to litter and hundreds of tea stalls. She wanted the place to remain how it was, clean, serene and breathtaking. It is sad that people do not appreciate nature and respect the environment enough to keep it clean.
                      - Esha.
    I remembered the ad in which Anuska Sharma was saying ' why should boys have all the fun ?' , on seeing these girls' challenging journey with no boundaries.
-                   -Murugeswari Ravi.