Thursday, April 23, 2015

திருப்பெருந்துறை.


திருப்பெருந்துறை என்றும் ஆவுடையார் கோயில் என்றும் வழங்கப்பெறும் இத்திருத்தலம் எண்ணற்ற அருஞ்சிறப்புகள் பல அணி செய்யும் அருங்கலைக் கூடமாகவும், கலைப்பெட்டகமாகவும், திருவருள் நிறைந்து ஆராத இன்பத்தை அள்ளிப் பருகிட செய்யும் அருட்தலமாகவும் போற்றி துதிக்கப் படுகிறது.

திருப்பெருந்துறை கோயிலின் தனிச்சிறப்புகள்:
       சிவபெருமான் திருக்கோயில்களில் இராஜகோபுரத்தை அடுத்து முதலில் பலிபீடம், ந ந்தி, கொடிமரம் ஆகியவை காணப்படும். இவை இத்திருக்கோயிலில் இல்லை. 
      கருப்பகிரகத்தில் ஆவுடையார் என்ற பீடம் மட்டுமே உள்ளது. அதற்கு மேலே குவளை சாத்தி அலங்காரம் செய்யப்படுகிறது.
       சுவாமிக்கு நைவேத்தியம் செய்யும் போது நைவேத்தியத்தை மூடிய பாத்திரத்தில் கொண்டு வந்து சுவாமி திருமுன் வைத்து வெளியில் நிற்பவர்கள் பார்க்க முடியாத படி இடையில் மறைப்பு பரிவட்டமும் தொங்கவிட்டு மறைவாக நைவேத்தியம் செய்வார்கள். மற்றைய கோயில்களில் மறைப்பு பரிவட்டத்தை நீக்கி தீபாரதனைகள் நடைபெறும். ஆனால் திருப்பெருந்துறையில் ஆத்மநாதசுவாமி திருமுன்னுள்ள பெரிய படைக்கல்லில் கருவறை முழுவதும் ஆவி பரவிச் சூழும் படியாக நைவேத்திய அன்னத்தை மலை போல குவித்து தேங்குழல், அதிரசம், அப்பம் முதலிய பட்சண வகைகளை அதனைச் சூழ வைத்து வில்வ தழைகளைத் தூவி, அன்னமுள்ள படைகல்லுக்கு வெளியிலிருந்து தீபாரதனை செய்வது போலிருக்கும். 
         கோயில்களில் நடைபெறும் நாள், பூசை,விழாக்கள் ஆகியவைகளின் போது நாதசுரம், மேளம், பேரிகை, சுத்த மத்தளம் முதலிய வாத்தியங்கள் முழங்கப்படும். இத்தகைய வாத்திய ஒலிகளை இங்கு கேட்க முடியாது. திருச்சின்னம், சங்கு, மணி முதலிய ஒலிகளே கேட்கப்படும்.
 
       தாம் பெற்ற சிவானுபவங்களை தேனினும் இனிய அமுதமாக செந்தமிழ்ப் பாடல்களாக மாணிக்கவாசகர் திருவாய் மலர்ந்தருளிய திருவாசகம் என்னும் அருள் நூல் மலர்ந்த பெருமைக்கு உரியதும் இத்தலமே.
    
   இக்கோயில் முன் மண்டபங்களில் எழில் பெற விளங்கும் சிற்பங்கள். அச்சிற்பங்பளில் காணப்படும் நுண்ணிய வேலைப்பாடுகள், அவை தம் உடலமைப்பாலும், முகபாவத்தாலும் வெளிப்படுத்தும் செய்திகள் யாவும் காண்பவர் கண்களை வியப்பில் விரியச் செய்யும். அவற்றை சொல்லில் வடித்துக் கொட்டவும் ஒண்ணாது.
 
      இங்குள்ள கொடுங்கை ( கொடுங்கை - மேல்கூரை) வேலைப்பாடுகள் உலகப் பிரசித்தமானவை. அந்தக் காலத்தில் சிறப்புகளை கூப்பிட்டு," நாங்கள் கட்டும் கோயிலுக்கு சிற்பம் செய்ய வேண்டும். அதற்கு ஒப்பந்த ஓலை எழுதிக் கொடுங்கள்" என்று சொன்னால் அந்த சிற்பிகள் ஒப்பந்த ஓலை எழுதும் போது ,' தாரமங்கலம் தூணும், திருவலஞ்சுழிப்  பலகணியும், ஆவுடையார் கோயில் கொடுங்கையும் தவிர மற்ற எல்லாவிதமான சிற்ப வேலைகளையும் செய்து கொடுக்கிறோம்' என்று எழுதித் தருவார்கள் என்று கர்ண பரம்பரைச் செய்தி வழங்கி வருகிறது. இந்த செய்தியால் ஆவுடையார் கோயிலில் உள்ள கொடுங்கையின் மேன்மை நன்றாகத் தெரிகிறது .

தியாக ராச மண்டபம் கொடுங்கை சிறப்பு:
         இந்த மண்டபத்தில் மாணிக்க வாசகரின் மந்திரி கோலச் சிற்பமும், துறவுக்கோலச் சிற்பமும் உள்ளன. அந்த மண்டபத்தின் கொடுங்கையின் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. கருங்கல்லைத் தகடாக்கி அதிலே பல வளைவுகளை உருவாக்கிக் கூரை போட்டது போல அமைந்திருக்கும் திறம் பெரும்பாலும் வியப்பை உண்டாக்குகிறது. மர வேலையில் உள்ள நுட்பங்கள் எல்லாம் இங்கே கருங்கல்லில் காண முடிகிறது. மரச்சட்டங்களில் குமிழ் ஆணி அடித்தாற்போன்ற தோற்றங்களில் கல்லிலும் காட்டிய சிற்பியின் கைத்திறத்தை எப்படித்தான் புகழ்வது?


இங்குள்ள அபூர்வ சிற்பங்கள் வேறு சில:
1. டுண்டி விநாயகர் சிற்ப உருவம்.
2. உடும்பும் குரங்கும்.
3. கற்சங்கிலிகள்- சங்கிலியின் நுனியில்       பாம்பு ஒன்று பின்னிக் கொண்டு   தலையினைக் காட்டுவது.
4. இரண்டே தூண்களில் ஓராயிரம் கால்கள்.
5. 1008 சிவாலயங்களில் உள்ள இறைவன் இறைவியர் திருவுருவங்கள்.
6. பல நாட்டு குதிரைச்சிற்பங்கள்.
7. 27 நட்சத்திர உருவச் சிற்பங்கள்.
8. நடனக் கலை முத்திர பேதங்கள்.
9. சப்தஸ்வர கற்தூண்கள்.
19. கூடல் வாய் நிழல் விழும் பகுதி பசுமாட்டின் கழுத்து போன று காணப்படுதல்.





ஒரு நிமிடக் கதை

         ஆனந்த் சரியான கோபக்காரன். இன்ஜினியரிங் முடித்து விட்டான். தற்போது வேலை தேடிக் கொண்டிருக்கிறான். அவனைக் கண்டால் அனைவருக்கும் பயம். தாய் தமயந்தி என்ன கேட்டாலும் அவளுக்கு திட்டு விழும். தகப்பன் ராகவனோ எதற்கு வம்பு என்று அவன் விஷயத்தில் ஒதுங்கி விடுவான். தமயந்தி தான் அவ்வப்போது புலம்புவாள். அவள் புலம்ப ஆரம்பித்தவுடன் ஆனந்த் கையில் கிடைத்ததை விசிறி அடித்து விருட்டென்று எழுந்து வேகமாக சென்று விடுவான்.
         கணவனும் மனைவியும் தனிமையில் இருக்கும் போது பேசிக் கொள்வார்கள். "இவனை நினைச்சா தாங்க எனக்கு பயம்மா இருக்கு. இவ்வளவு கோபம் ஆகுமா? என்ன பண்ணப் போறானோ?" என்று ராகவனிடம் கவலைப் படுவாள் தமயந்தி. " விடு, விடு..தோளுக்கு மேல வளர்ந்துட்டான். இனிமே நாம அவனை திட்டி அவன் நம்மளை எதிர்த்து பேசினால் நமக்கு தான் அசிங்கம். ஒரு வேலை கிடைச்சு கல்யாணம் பண்ணி வைச்சா எல்லாம் சரியாயிடும்" என்றான் ராகவன். "என்னவோ போங்க . இவனை நினைச்சாலே எனக்கு பயம்மா இருக்கு" என்று புலம்புவாள்.
          ஆனந்தின் கோபம் அந்த அபார்மெண்ட்ஸ் முழுக்க பிரசித்தம். யாரும் அவனிடம் பேசமாட்டார்கள். ஒரு நாள் மூன்றாவது வீட்டு கோகிலாவுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. அவள் கணவன் ஆடிட்டிங்கிற்காக வெளியூர் சென்றிருந்தான். "ஆண்ட்டி .." என்று வலியுடன் தமயந்தியை தேடி வந்தாள். தமயந்திக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அவள் வலியில் துடிப்பதைப் பார்த்து தயங்கி தயங்கி ஆனந்த்திடம்,"தம்பி கொஞ்சம் காரை எடுப்பா..கோகிலா அக்காவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் வந்துரலாம்."என்றாள். ஏனோ மறுபேச்சு பேசாமல் காரை எடுத்து விட்டான்.
           வழியெங்கும் கோகிலா கடுமையான வலியில் துடித்தாள். ஹாஸ்பிடலில் உடனே சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்தார்கள். அழகான ஆண்குழந்தை. கோகிலாவின் கணவனுக்கு தகவல் சொல்லியாயிற்று.
          தமயந்தி வெளியில் காத்துக்கொண்டிருந்த மகனிடம்  வந்தாள். மெதுவாக," நல்ல வேளை தம்பி. நீ நல்ல நேரத்தில் காரை எடுத்தாய். இல்லையென்றால்.." என்று அவனை நிமிர்ந்து பார்த்தவள் திடுக்கிட்டாள். ஆனந்த்தின் கண்களில் கண்ணீர். ஆனந்த் அவள் கைகளை பற்றிக் கொண்டு," அம்மா.. நீயும் என்னைப் பெற்றெடுக்க இவ்வளவு கஷ்டப் பட்டாயா? இது தெரியாமல் நான் எத்தனை முறை திட்டினேன். உதாசீனப்படுத்தியுள்ளேன். என்னை மன்னித்து விடும்மா."என்று தழுதழுத்தான். தமயந்திக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
               ஒரு புறம் மகன் கலங்குன்றானே என்ற கலக்கம். மறுபுறம் தாயின் அருமையை புரிந்து கொண்டானே என்ற சந்தோஷம். அவன் கண்களை துடைத்து விட்டுக்கொண்டே,"அழக்கூடாது..சந்தோஷப்பட வேண்டிய நேரமிது" என்றாள். ஆனந்த்தும் மகிழ்ச்சியுடன் தாயை அணைத்துக் கொண்டு சிரித்தான்.

Monday, April 13, 2015

தேசிங்கு ராஜா

என்ன ஆச்சர்யம்? அன்று கோயிலில் கூட்டமே இல்லை. சீக்கிரமே சாமி பார்த்து விட்டாள் மாலா. மணி ஐந்தரை தான் ஆகி இருந்தது. அவள் என்ன செய்யலாம் என்று யோசித்தாள். டக்கென்று அவள் நினைவுக்கு வந்தது ஆனந்தி தான். ஆனந்தி வீடு பக்கத்தில் தானே! நடந்தால் ஐந்து நிமிட தூரம்தான். உடனே நடையைக் கட்டினாள் ஆனந்தி வீட்டுக்கு. 
         ஆனந்தி மாலாவின் நீண்ட நாள் பள்ளித்தோழி. அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள். தொலைபேசியிலும் பேசிக் கொள்வார்கள். ஆனால் கொஞ்ச நாட்களாக இருவரும் பேசவேஇல்லை. சரி, அவளைப் போய் பார்த்து விட்டு வரலாம். அவளையும் பார்த்த மாதிரி ஆயிற்று , பொழுதும் போய்விடும் என்று எண்ணினாள்.
            காலிங் பெல்லை அழுத்தி விட்டு காத்திருந்தாள். கதவைத் திறந்த ஆனந்தி வாயெல்லாம் பல்லாக ," வா.. வா என்ன திடீர் சர்ப்ரைஸ் விசிட்?" , என்று கையைப்பிடித்து இழுக்காத குறையாக உள்ளே அழைத்துச் சென்றாள்.வெகு நேரம் பேசிக்கொண்டே இருந்தார்கள். நேரம் போனதே தெரியவில்லை. இருவரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். மணி எட்டரை ஆகிவிட்டது. இனி பஸ், ஆட்டோ கிடைப்பது கொஞ்சம் சிரம்ம் என்று உணர்ந்தாள் மாலா. " ஆனந்தி, உன் மகன் இருக்கானா? அவனை கொஞ்சம் என்னை டிராப் பண்ணச் சொல்லேன்." என்றாள் மாலா. ஆனந்தி திகைத்தாள், பின் சிரித்துக் கொண்டே " சரி, போ..போ.. தலைவிதி யாரை விட்டது?" என்றாள். " ஏன் என்ன ஆச்சு?" என்றாள் மாலா. " ஒண்ணுமில்லை. நீயே புரிஞ்சுக்குவே.. தம்பி...ராஜா..இங்கே வாடா." என்று மகனை அழைக்க சென்று விட்டாள். என்னவாய் இருக்கும் யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்தாள். " இதோ வர்ரேன்மா .. கத்தாதே .." என்று கத்தி ஒரு குரல் கேட்டது. சுமார் ஐந்து நிமிடங்கள் கழித்து மாடிப்படிகளில் ராஜா இறங்கி வந்தான். " என்னம்மா ?" என்று ஆனந்தியிடம் வினவினான்.
                 ஆனந்தி," தம்பி ராஜா .. ஆண்ட்டியைக் கொண்டு போய் அவங்க வீட்டில் டிராப் பண்ணிருப்பா. அவங்க வீடு சிக்னல் பக்கத்தில தான் . ஆண்ட்டியே உனக்கு வழி சொல்லிருவாங்க." என்றாள். " ம்.. எனக்கு கூட அந்தப் பக்கம் வேலை இருக்கு.. ஹாய் ஆண்ட்டி., போலாமா?" என்றான். சரியென்று தலையை ஆட்டியவாறே எழுந்த மாலாவின் கையில் ஒரு கவரில் முறுக்கு , சீடை என்று பலகாரத்தை திணித்தாள் ஆனந்தி. 
             வாங்கிக் கொண்டு வெளியே வந்தாள் மாலா. ராஜா பந்தாவாக பைக்கில் அமர்ந்திருந்தான். பைக்கைப் பார்த்த மாலா தான் அதிர்ந்து விட்டாள். திரும்பி ஆனந்தியைப் பார்த்து, " என்னது இது? என்னை பத்திரமாய் வீடு கொண்டு போய் சேர்த்திடுவானா?" என்று கேட்டாள். ஆனந்தி சிரித்துக் கொண்டே," அந்தக் கதையை ஏன் கேட்கிறே? இந்த பைக் தான் வேணும்னு அடம் பிடிச்சு வாங்கியிருக்கான். அதான் நீ கேட்டவுடன் நான் யோசிச்சேன். சரி , அப்புறம் நீயே பாத்துக்குவேன்னு விட்டுட்டேன். இவன் கூட பைக் ல போறப்ப எல்லாம் தினமும் ஒரு தினுசா இருக்கும். ஒரு தடவை போயிட்டு வந்தா உனக்கே புரியும்." என்றாள் நகைப்பினூடே. " அம்மா...பேசாம இரு., நீங்க வாங்க ஆண்ட்டி, நான் கூட்டிட்டு போறேன். இவங்களுக்கு வேற வேலை இல்லை."என்று மாலாவை அழைத்தான். 
        மாலா திகைத்தவாறு அருகில் போனாள்.அங்கே உக்காருவதற்கு எங்கே இடமிருக்கு என்று எண்ணியவாறு பைக்கில் ஏறினாள். ஏறினாள் என்பதை விட ஏற முயற்சித்தாள் என்றே கூறலாம். அவ்வளவு உயரத்திலிருந்தது . ராஜா வேறு ஹெல்மெட் போட்டு அவளை பயமுறுத்திக் கொண்டிருந்தான். நல்ல வேளை இன்று சுடிதார் அணிந்து வந்திருக்கிறோம். சேலை அணிந்திருந்தால் அதோ கதி தான் என்று எண்ணிக் கொண்டாள். ஆனந்தி தான் வந்து உதவினாள். அவள் கைகளைப் பிடித்து மெல்ல ஏறி அமர்ந்தாள்.
              அவளுக்கு ஏதோ ஏணியில் ஏறிஅமர்ந்தது போல இருந்தது. எதையாவது பிடித்துக் கொள்ளலாம் என்றால் ஏதுவாக ஒன்றும் இல்லை. ஆனந்தி " பெஸ்ட் ஆஃப் லக்" என்று கண்களை சிமிட்டினாள். உயிரை கையில் பிடித்தவாறு அவளிடமிருந்து விடைபெற்றாள். ராஜா," போலாமா ஆண்ட்டி?" என்று கேட்டவாறே பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்தான்.
                   வண்டி சர்ரென்று கிளம்பியது. எடுத்த எடுப்பிலேயே வேகமாகப் பறந்தான். கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள். எதிரே வண்டிகள் வேக வேகமாக வருவதைப் பார்க்க பயமாக இருந்தது. கண்கள் வேறு எதிரே வரும் வாகனங்களின் ஹெட்லாம்ப் வெளிச்சம் பட்டு கூசியது. இன்னும் கொஞ்ச நேரம் தான் என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டாள். அவளுக்கு ஏனோ சம்பந்தம் இல்லாமல் ரோலர் கோஸ்டர் ஞாபகம் வந்தது. படக்கென்று ஒரு இடத்தில் நிப்பாட்டினான் ராஜா. சிக்னல் போல. அப்போது தான் கவனித்தாள் முன்னால் ஏதோ பிய்ந்து தொங்கியது. அவன் வண்டியை வலப்புறமாய் திருப்பினால் இது இடப்புறமாய் திரும்பியது. " ஐயோ.. என்ன ராஜா இது?" என்று கேட்டாள். " அது ஒண்ணுமில்லை ஆண்ட்டி , போன வாரம் பைக்ல இடிச்சிட்டேன். அதான் வண்டி left ஆவே போகுது. வண்டியை சர்வீஸ் விடணும். நீங்க பயப்படாதீங்க ஆண்ட்டி" என்றான் . இது வேறயா என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டாள்.
              மின்னல் வேகம் மின்னல் வேகம் என்று கேள்விப் பட்டுள்ளாள். அன்று தான் அதை உணர்ந்தாள். இஷ்ட தெய்வங்கள் அனைத்தையும் வேண்டிக் கொண்டாள். ஒரு வழியாய் வீடு வந்தது. இறங்கிக் கொண்டாள்." தேங்க்ஸ் ராஜா," என்றாள். " வர்றேன் ஆண்ட்டி ", என்று அவன் கிளம்பி விட்டான். வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஆனந்திக்கு போன் செய்தாள். ஆனந்தி சிரித்துக்கொண்டே, " நீ போன் பண்ணுவன்னு எனக்கு நல்லாத் தெரியும்" என்றாள். 
            இது நடந்து முடிந்து மூன்று மாதங்கள் இருக்கலாம். ஆனந்தியை மீண்டுமொரு முறை சந்திக்கப் போனேன். அவளுடன் பேசிக் கொண்டிருக்கும் போது ராஜா வந்தான். " ஹாய் ஆண்ட்டி .. டிராப் பண்ணணுமா?" என்று சிரித்துக்கொண்டே கேட்டான். மாலாவும் சிரித்துக்கொண்டே, " உன் பைக் குதிரை மாதிரி. அதில் ராஜாவாகிய நீ மட்டும் தான் போக முடியும் ..நம்மளால முடியாது." என்றாள். அவன் சிரித்துக் கொண்டே சென்று விட்டான். 
அன்று மாலா பஸ் ஏறி தான் வீட்டிற்கு வந்தாள் என்பதை சொல்லவும் வேண்டுமோ?




Saturday, April 11, 2015

புதியன கற்போம்.

       இப்பதிவில் நான் கூறப் போகும் கருத்துகள் யாவும் என்னுடைய தனிப்பட்ட கருத்துகளாகும். மாறுபட்ட கருத்துடையவர்கள் அதனை தயங்காமல் இங்கு தெரிவிக்கலாம். எவர் மனதையாவது புண்படுத்தும் கருத்துகளை நான் ஏதாவது கூறி இருந்தால் , அது நான் அறியாமல் செய்த பிழை என்று கருதி மன்னிக்கவும்.
          அரசு அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வியை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சமச்சீர் கல்வி என்று கொண்டு வந்துள்ளது. இதில் பல பெற்றோர்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை நான் அறிவேன். அவர்களது கவலை எல்லாம் மிகச் சுலபமான பாடத்திட்டத்தைப் பயின்றால் பின்னாளில் தங்கள் குழந்தைகள் மருத்துவம், பொறியியல் படிக்கும் போது சிரம ப்படுவார்களே என்பது தான். நான் இந்தக் கருத்தில் பெரும்பான்மையானவரிடம் இருந்து மாறுபடுகிறேன். கிராம ப்புற மாணவர்கள், நகர்ப்புற மாணவர்கள் என்று எந்த பாகுபாடும் இன்றி அனைவருக்கும் ஒரே கல்வி என்ற உயர்ந்த உள்ளத்தோடு தான் இத்திட்டம் ( சமச்சீர் ) அமலுக்கு கொண்டு வரப்பட்டது. உண்மைதானே?! ஒரு தாய்க்கு தான் பெற்ற பிள்ளைகள் அனைவரும் சம மாய்த் திகழ வேண்டும் என்ற ஆதங்கம் எழுவது நியாயம்தானே. ஆனால் மெட்ரிகுலேசன், ஆங்கிலோஇந்தியன் போன்ற பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு பாடங்கள் இத்தனை சுளுவானதில் பெற்றோருக்கு வருத்தமே. (மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் தரமான கல்வியைத் தருகிறேன் என்ற பெயரில் அடித்த கொள்ளையைப் பற்றி இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். கல்வி தான் நம் நாட்டில் மிகப் பெரிய வணிகம். அதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நாள்தோறும் நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் வரும் கல்வி நிறுவனங்களின் விளம்பரங்களே கல்வி எவ்வளவு பெரிய வியாபாரம் என்பதை பறைசாற்றுகின்றன.)
          இன்றைய மாணவனின் மதிப்பெண் சார்ந்த கல்வியறிவு அவனுள் பந்தயக்குதிரை மனப்பான்மையை ஏற்படுத்துகின்றதே தவிர, அறிவு தாகத்தை ஏற்படுத்துவதில்லை. இதற்கு முதல் காரணம் பெற்றோர்கள். தங்கள் பிள்ளைகள் அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற அவர்களின் ஆர்வம், ஆவல் புரிந்து கொள்ளத்தக்கதே என்றாலும், அனைவரும் ஒன்றை வசதியாக மறந்து விடுகின்றனர்.ஃபர்ஸ்ட் ரேங்க் என்பது ஒன்று மட்டுமே உண்டு. எல்லோருக்கும் கிடைத்தால் அதற்கு மதிப்பு இல்லை. மற்றும் ஒன்று என்பது ஒரு நம்பர். அவ்வளவே. முதல் ரேங்க் மோகம் என்று தணியுமோ அன்றுதான் பெற்றோர் தலையீடு குறையும். மதிப்பெண் தாண்டிய சிந்தனை மாணவனுக்கு வர ஆசிரியர்களும் , பெற்றோர்களும் முயல வேண்டும். திறன் சார்ந்த கல்விக்கு அவர்கள் முன்னுரிமை வழங்க வேண்டும்.
           இன்றைய மாணவனுக்கு கற்பனைத்திறன், அறிவுத்திறன், அறிவியல் ஆர்வம், தொழில்நுட்பங்களை உள்வாங்கும் மற்றும் கையாளும் திறன் போன்றவை அதிகமாக காணப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. கணினி, கைபேசி ஆப்கள், இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள்- இவை அனைத்தையும் சிரம மின்றி அவர்கள் கையாளும் முறையே அதனை நன்றாக பறைசாற்றுகிறது. ஆனால் இத்தனை திறமைகளையும் அவர்கள் உபயோகமான முறையில் பயன்படுத்துகின்றனரா என்று கேட்டால் 99% இல்லை என்றே கூறலாம்.
            போதிய புரிதல் இல்லாத பதின்பருவத்திலேயே இவர்களுக்கு இத்தனை வாய்ப்புகள் வழங்கப்படுவதால் தவறான வழியையே பல நேரம் தேர்ந்தெடுக்கின்றனர். சமச்சீர் கல்வி படிப்பதால், பாடம் சுலபமாக இருப்பதாக கூறும் பெற்றோர்கள், பாடம் படித்தது போக மீதமுள்ள நேரத்தை அவர்கள் ஆக்கபூர்வமாய் உபயோகமானவற்றை கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள ஆர்வம் காட்டலாம். பிற மொழிகளைப் பயின்று மொழிப்புலமையை வளர்த்துக் கொள்ளலாம். பாடத்திட்டதில் வரும் பாடங்களை எழுத்துருவில் மட்டும் பார்க்காமல் அறிவியல் மனப்பான்மையுடன் பயில லாம். சோதனைகூடங்களில் கற்பிக்கப்படும் ஆராய்ச்சிகள் பயன்பாட்டுக்கு கொண்டு அவர்கள முயல லாம். 
         வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நாம் இணையத்தில் செலவிடும் நேரத்தில் உபயோகமான தகவல்கள் தெரிந்துகொள்ள ஊக்குவிக்கலாம். இணையத்தில் ஏராளமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றனவே. ஆழ்கடலில் கிளிஞ்சல்களுக்கு நடுவே கிடைக்கும் முத்துக்களைப் போல மாணவர்கள் சிறந்தவற்றை தேடி எடுத்து பயில வேண்டும். எனக்குத் தெரிந்த இரண்டு websites தகவல்களஞ்சியங்களாய் திகழ்கின்றன. எப்பேற்ப்பட்ட சந்தேகங்களையும் தீர்க்க வல்லவை இவை.
                 வகுப்பறைக்குள்ளே மட்டும் தான் முறையான கல்வியைக் கற்க முடியும், மதிப்பெண் மட்டுமே வளமான வாழ்க்கையை நிர்ணயிக்கும் போன்ற எண்ணங்களைத் தகர்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது. புதியன கற்போம் .சீர்மிகு இந்தியாவை உருவாக்குவோம்.



Thursday, April 9, 2015

BAND-AID

         அன்று கீதாவுக்கு கடைசி நாள் காலேஜ். ஹாஸ்டலிருந்து அன்று மாலையே ஊருக்கு கிளம்ப திட்டமிட்டாள். நினைத்துப் பார்க்கவே ஆச்சர்யமாய் இருந்தது. எப்படித்தான் இந்த நான்கு வருடங்கள் ஓடியதோ அவளுக்கே தெரியவில்லை. தான் கல்லூரியில் சேர்ந்த முதல் நாளை எண்ணிப் பார்த்தாள். கண்களில் மிரட்சியுடன் அவள் நுழைந்ததை அவளால் இன்றும் மறக்க முடியவில்லை.அவளுடைய அம்மா தான் அவளுக்கு தைரியமூட்டினாள். " முதல் இரண்டு நாட்கள் அப்படித்தான். பெற்றோரைப் பிரிந்தால் பயமாகத்தான் இருக்கும். ஆனால் பழகிவிடும். பின் எப்போது மனிதர்களைப் பற்றி தெரிந்து கொள்ளப்போகிறாய்?"
            கீதா புன்னகைத்தாள். நம்முடைய அம்மா மிகச் சரியாக சொல்லியிருக்கிறார்களே என்று எண்ணினாள். கீதாவை ஹாஸ்டலில் கொண்டு வந்துவிட அவளுடைய அம்மா பார்த்து பார்த்து ஷாப்பிங் செய்ததை நினைத்துப் பார்த்தாள். ஸ்டேஷனரி, மெத்தை, தலையணை என அனைத்தையும் நோட்டம் விட்டாள். இவை அனைத்தையும் ஊருக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டே பேக் செய்ய ஆரம்பித்தாள்.
          அம்மா தந்த முதலுதவி பெட்டி கண்ணில் பட்டது. திறந்து பார்த்தாள்..சில மாத்திரைகள், ஆயிண்மெண்ட், நான்கு பேண்ட் எய்ட் இருந்தது. 'அட, இந்த பேண்ட் எய்ட் அம்மா முதல் முதலில் வாங்கித் தந்தது அல்லா?! நாம் இதை உபயோகிக்கவே இல்லையா?' என்று புன்னகையுடன் பெட்டியை மூடினாள். மூடி சரக்கென்று விரலைக் கீறி இரத்தம் கொட்டியது. அய்யோ என்று பதறியவாறே ஒரு பேண்ட் எய்ட் எடுத்துப் போட்டாள்.
             அன்றைய தினம் கடைசி தினம் அல்லவா வகுப்புகள் இனித்தன. பழைய நினைவுகளில் அனைவரும் மூழ்கினர். முகவரிகள் பரிமாறிக் கொண்டனர். கட்டாயம் வருடமொரு முறை சந்திக்க வேண்டுமென உறுதி எடுத்தனர். ' சரி, எல்லாரும் மெஸ்ஸில் இன்று கடைசி நாளாக ஒன்றாக சாப்பிடுவோம்.' என்று திட்டமிட்டவாறே மெஸ்ஸிற்கு புறப்பட்டனர். தோழிகள் முதலிலேயே சென்று விட்டனர். கீதாவும் அவசரமாக கதவை சாத்திவிட்டு கிளம்ப எத்தனித்தாள்.
              என்ன நேரமோ  என்னவோ, கதவிடுக்கு சுண்டு விரலில் பட்டு இரத்தம் வர ஆரம்பித்து விட்டது. பதட்டத்துடன் இன்னொரு பேண்ட் எய்ட் எடுத்து போட்டுவிட்டு வேகமாக படியிறங்கினாள். பட்ட காலிலேயே படும் என்றாற் போல் படிகளில் வழுக்கி விழுந்து முழங்கையில் இளைத்து விட்டது. இன்னொரு பேண்ட் எய்ட்.
           'இனிமேல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்' என்ற எச்சரிக்கையுடன் மெதுவாக சென்றாள்.மெஸ்ஸில் தோழிகள் இவள் வருகைக்காக காத்திருந்தார்கள். இவள் நுழைவதைப் பார்த்தவுடன் உற்ற தோழி மீனா சிரித்து விட்டாள். " என்ன கீதா,பேண்ட் எய்ட் வேஸ்ட்டா போயிடும்னு எல்லாத்தையும் எடுத்து ஒட்டிக்கிட்டாயா? என்ன திடீர் னு இத்தனை பேண்ட் எய்ட்?" தோழிகள் அனைவரும் சிரித்தனர். கீதாவும் சிரித்துக் கொண்டாள்.,' அட, ஆமாம்ல, காலையில் தான் நாலு பேண்ட் எய்ட்  நாலு வருசமாய் பத்திரமாக வைச்சிருக்கோம் ன்னு நினைச்சோம். மதியத்திற்குள் நான்கையும் காலி செய்து விட்டோமே! ஊருக்குப் போய் அம்மாவிடம் இந்த கதையை சொல்ல வேண்டும்.' என்று எண்ணினாள்.
           சிரித்துக்கொண்டே தோழிகளின் அரட்டையில் கலந்து கொண்டு மெதுவாக சாப்பிட ஆரம்பித்தாள்.

Tuesday, April 7, 2015

சொர்க்கமே என்றாலும்..நம்மூரைப் போல வருமா??


         பொதுவாகவே இந்தியர்களாகிய நாம் சுத்தத்தை மிகவும் விரும்புவர்கள்...சிரிக்காதீர்கள்.,நான் உண்மையைத் தான் சொல்கிறேன். 
          தெருவில் நடந்து செல்லும் போது, எதேச்சையாக பாக்கெட்டில் பழைய ரசீதோ, டிக்கெட்டோ தென்பட்டால், அதை அடுத்த கணமே எடுத்து தெருவில் போட்டுவிட்டு சுத்தமாக வைத்துக் கொள்வோம். ஆட்டோவிலோ, காரிலோ அல்லது பஸ்ஸிலோ பயணிக்கும் போது ஏதாவது சாப்பிட்டோமானால் அதன் தோலை நாம் அமர்ந்திருக்கும் இடம் சுத்தமாக இருக்கும் பொருட்டு சாலையில் வீசி விடுவோம். ஆனால் ப பிள் கம் விஷயத்தில் தெருவில் வீச மாட்டோம். சாலையில் துப்பினால் யார் காலிலாவது ஒட்டிக்கொள்ளாதா? அதனால் பக்கத்தில் இருக்கும் காரிலோ அல்லது சுவற்றிலோ பத்திரமாக ஒட்டிவிட்டுதான் மறுவேலை பார்ப்போம். தெருவோரங்களில் இருக்கும் டீக்கடைகளில் ஊர்வம்பளந்து கொண்டே குடிக்கும் டீ கப்களை கர்மசிரத்தையாய் நிரம்பி வழியும் குப்பைத்தொட்டியின் அருகே வீசிவிட்டு பேச்சைத் தொடர்வோம். வெற்றிலை, புகையிலை போட்டு மென்று, அதன்பின் அதை வாயிலேயே வைத்திருந்தால் வாய் வலிக்கும் அல்லவா? அதனால் கோலம் போடுவது போல பஸ்ஸின் பக்கவாட்டிலோ அல்லது மாடிப்படிசுவற்றிலோ புளிச் புளிச் எனத்துப்பி அந்த இடத்தையே வண்ணமயமாக்குவோம். உங்களுக்கெல்லாம் ஒன்று தெரியுமா? சிறுநீரை வெகுநேரம் அடக்கி வைத்திருந்தால் உடல் நலத்திற்கு கேடு. அதனால்தான் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டவுடனே சுவர் , மரம் என்று மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ வெளியேற்றி விடுவோம்.
          " என்ன கேலியா?" என்று உங்கள் மனதில் சிந்தனை எழக்கூடும். ஆனால் நான் உண்மையைத்தான் கூறுகிறேன் என்று நீங்கள் அறிவீர்கள். நமது பெரும்பான்மையான மக்களுக்கு சுத்த உணர்வு என்பது இந்த அளவில் தான் உள்ளது.வீட்டைப் பராமரிப்பதில் இத்தனை ஆர்வம் காட்டும் மக்கள் நாட்டையும், ரோட்டையும் சுத்தமாக வைத்திருக்க துளி கூட பிரயத்னப் படுவதில்லை. பொதுச்சொத்து என்றால் அப்படி ஒரு எள்ளல் நம்மவர்களுக்கு. 
            பரபரப்பான சூழலில் 'ஓடிக்கொண்டே' இருக்கும் நாம் அனைவரும் கொஞ்சம் முயற்சி செய்தால், நம்முடைய நாட்டை சுத்தமானதாக்கலாம். இந்த எண்ணம் என் மனதில் எப்போதும் ஓடும். பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி "தூய்மை இந்தியா" என்ற திட்டத்தை அறிவித்தவுடன் மிகவும் மகிழ்ந்தேன். அப்பாடா இப்போதாவது சுத்தத்தைப் பற்றி ஒரு தலைவர் பேசுகிறாரே என்று எண்ணினேன் . ஆனால் அந்த இயக்கம் celebrities ஒரு நாள் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் வழக்கமாக மாறியது. பையில் துடப்பம், கிளவுஸ், கண்களில் கூலிங் கிளாஸ் , கால்களில் ரீபோக் ஷூஸ் சகிதம், மற்றும் துணைக்கு பத்து ஆட்களுடன் அவர்கள் தெருக்களைப் பெருக்கும் பல விதமான புகைப்படங்கள் நாளிதழ்களிலும், தொலைக்காட்சியிலும் வந்த வண்ணம் இருந்தன. திடீரென ஒரு நாள் சுத்தம் முளைத்து வர வாய்ப்பே இல்லை. மாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படும். சுத்தம் என்பது இயல்பிலேயே வர ஏது செய்ய வேண்டும்.
                 நம்முடைய இந்த நிலைக்கு யார் காரணம்? கொள்கை முடிவுகளை எடுக்கும் அரசியல்வாதிகளா? திட்டங்களை செயல்படுத்தும் அரசாங்க அதிகாரிகளை? அல்லது பொறுப்பற்றதனத்துடன் திகழும் பொது மக்களா? மாற்றங்கள் நம்மிடமிருந்து தொடங்கினால் மட்டுமே நாம் விரும்பும் வண்ணம் நம் தாய்திருநாட்டை மாற்ற முடியும். சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் கூட வீதிகளில் இவ்வளவு குப்பையை நான் காணவில்லை. அப்பொழுதெல்லாம் பெருவீதிகள் தார்சாலைகளாகவும், சிறிய வீதிகள் மண் மற்றும் சிமெண்ட் சாலைகளாகவும் இருந்தன. கழிவு நீர் ஓடி வருவது  மற்றும் தேங்கிக் கிடப்பது மட்டுமே அப்போது நான் கண்ட சுகாதார நலக்கேட்டை உருவாக்கிய விஷயங்கள்.ஆனால் இப்போதோ நீரில் மாசு, காற்றில் மாசு, தெருவெங்கும் குப்பை என்று தோற்றமளிக்கும் நமது நகரங்களைப் பார்த்தால் நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்ற ஐயம் எழுகிறது.
        பீச்சிற்கு காற்று வாங்க  சென்றால் மணல்வெளியெங்கும் சாப்பிட்டு போட்ட குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள். இது தவிர கழிவு நீர் கலந்து கடல் நீர் நிறமே கருத்து காணப்படுகிறது. ஒரு சினிமா பார்க்க தியேட்டருக்கு சென்றால் , திரைப்படம் முடிந்து வெளியே வரும் போது அனைத்து இருக்கைகள் அருகேயும் சிந்திய பாப்கார்ன், குளிர்பான் கேன்கள் மற்றும் ஐஸ்கிரீம் குச்சிகள்,கப்கள். கோயிலுக்கு சென்றாலும் அதே கதி தான். பார்க்கிற்கு சென்றாலும் அதே கதி தான். இரயில் நிலையம், பேருந்து நிலையம் என்று அனைத்துமே என்னை கொஞ்சம் சுத்தமாய் வைத்திருங்களேன் என்று கெஞ்சுவதைப் போல பார்க்கின்றன. ஆனால் நம் மக்களுக்கு அதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலை இல்லை . எங்கேயோ அவசரம் அவசரமாக சென்று கொண்டே இருக்கிறார்கள்.
        வெளிநாடுகள் சென்று வந்தவர்கள் அந்த நாடுகள் பற்றி பெருமை பொங்க பேசுவார்கள். அங்கே இருக்கும் சுத்தத்தைப் பற்றியும் பேசுவார்கள். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் குப்பையை கண்ட இடத்தில் வீசினால் கடும் அபராதம் விதிக்கப்படும். ஆனால் நம் நாட்டில் அது தவறும் கிடையாது, அபராதமும் கிடையாது. ஆனால் நாம்தான் அதை மனதளவில் உணர்ந்து அதை செய்யாமலிருக்க வேண்டும்.
         மிகப்பெரிய திட்டங்கள் தீட்டி நம் தேசத்தை தூய்மையானதாக்க அரசு தான் ஆவன செய்ய வேண்டும். என்றாலும் நம்மால் முடிந்த முயற்சியாக அனைவரும் ஒன்றிணைந்து அவரவது தெருக்களையும் அல்லது பிளாட்களையோ சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சிக்கலாம். சுகாதார கேட்டை விளைவிக்கும் அடிப்படையான குப்பைகளை அனைத்தையும் இணைத்து கொட்டாமல் , முடிந்த அளவு அவற்றை மறுசுழற்சி( recycle) செய்ய வேண்டும். பழைய பேப்பர் , பிளாஸ்டிக் பாட்டில் , பால் கவர் போன்றவற்றை போன்றவற்றை பிரித்து எடுத்து விட வேண்டும். மொத்தமாக நாம் தட்டுவதால் அவை அனைத்தும் மொத்தமாக எரிக்கப் படுகிறது. இது காற்றிற்கு மாசு தானே. முடிந்தால் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்துப் போடலாம். நான் பொதுவாக வீட்டில் சேரும் குப்பைகள் பற்றி சொன்னேன். அலுவலகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் சேரும் குப்பைகள் பற்றி அந்தந்த துறையினர் ஆய்வு செய்து அப்புறப் படுத்த வேண்டும்.
          தேசத்தை சுத்தமாக வைத்திருப்பது என்பது மிகப் பெரிய முயற்சி. அரசாங்கம் என்னதான் நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் மக்களும் தங்களால் இயன்ற அளவிலான பங்களிப்பை அளித்தால் மட்டுமே சுற்றுப்புற சுகாதாரத்தை பேண முடியும். இந்தக் கட்டுரையில் என் எளிய அறிவிற்கு எட்டிய வரை பகிர்ந்துள்ளேன். நிறைய பேசிக்கொண்டே போகலாம். ஆனால் அடிப்படையில் மக்கள் மாற வேண்டும் என்று என் மனதில் தோன்றியது. அதனையே இதில் முன் மொழிந்துள்ளேன்.