Sunday, May 3, 2015

ஒரு நிமிஷம்..ப்ளீஸ்

       வித்யா இயல்பாகவே அதிகம் பேச மாட்டாள். அதீத சுத்தம் பார்ப்பாள். அவளுக்கு கோபம் அடிக்கடி வரும். ஏழைபாளைகளைப் பார்த்தால் அவளுக்கு ஒரு இளக்காரம்.
       அவளுடைய கணவன் சதீஷ் , " அது தப்பு வித்யா. அவங்களும் நம்மைப் போல தான். நீ அவங்களை வெறுக்கக்கூடாது" என்று எத்தனையோ முறை எடுத்துக் கூறியுள்ளான். ஆனால் அவள் அதை மறுப்பாள். யார் யாரெல்லாம் அவளை ஏமாற்றினார்கள் , யாரெல்லாம் அவளுடைய நம்பிக்கைக்கு பாத்திரமில்லை என்று விலாவரியாக கதை கதையாக அடுக்குவாள். எதற்கு இந்த வீண் விவாதம் என்று சதீஷ் விட்டு விடுவான். 
       அவளுடைய ஷாப்பிங் எல்லாமே ஏசி சூப்பர் மார்க்கெட்டில் தான்.மற்ற தேவைகளை போனில் கூறுவாள், வீட்டிற்கு வந்து டெலிவரி செய்யப்படும். ஆனால் அன்று ஏதோ அவசரம் போல சதீஷ் மீன் வாங்கித்தராமல் சென்றுவிட்டான். டோர் டெலிவரி செய்யும் பையனும் கையை விரித்து விட்டான். ஆனால் மீன் கட்டாயமாக வாங்க வேண்டியிருந்தது. அவளுடைய அன்பு மகன் சுஜேஷ், ஒன்றாம் வகுப்பு படிக்கின்றான், " அம்மா .. ஃபிஷ் ரோஸ்ட் செஞ்சு வைம்மா " என்று ஆசையாக கேட்டு விட்டு பள்ளிக்கு சென்றிருக்கிறான். 
            மகன் மீது கொள்ளை ஆசை வித்யாவுக்கு. அவன் கேட்டு விட்டானே , எப்படி செய்யாமல் இருப்பது? சரி நாமே மார்க்கெட்டிற்கு போகலாம் என்று முடிவெடுத்தாள். மார்க்கெட்டின் சத்தமும் கசகசப்பும் அவளுக்கு எரிச்சலூட்டியது. ஆனாலும் இத்தனை மனிதர்கள் இத்தனை ஆர்வத்துடன் பேரம் பேசுவதையும், வியாபாரிகள் எத்தனை கூட்டமாய் இருந்தாலும் லாகவமாய் சமாளிப்பதையும் பார்த்து ஆச்சர்யப் பட்டாள். வரிசையாக கடைகளில் அமர்ந்திருந்த பெண்கள்,' வாம்மா.. என்ன வேணும்?' என்று கூவி கூவி அழைத்தனர்.
             முதன் முறையாக மார்க்கெட் வந்ததினால் ஆசையாக சிறிது பழங்கள், மற்றும் காய்கறிகள் வாங்கினாள். பின் மீன் கடைக்கு சென்று சுஜேஷுக்கு பிடித்த மீனை வாங்கினாள். கண்கள் விரிய அனைத்தையும் வேடிக்கை பார்த்தவாறே வீட்டிற்கு வந்தாள்.
             வீட்டிற்கு வந்தவுடன் பழங்கள்,காய்கறிகள் முதலியவற்றை எடுத்து வைத்தாள். மீனை சமைக்கலாம் என்று.... 'ஐயோ! என்ன இது ? மீனைக் காணோம்? எங்கே தொலைத்தேன்? மணி வேறு ஆகிறதே.. சுஜேஷுக்கு சமைக்க வேண்டுமே.. அவனுக்கு பசிக்குமே..' என்று பதறினாள். மீனைக் காணவில்லை. மார்க்கெட்டில் தான் வாங்கிய மீனை யாரோ திருடி விட்டார்கள் என்று முடிவு கட்டினாள். இவர்களை எல்லாம் நம்பவே கூடாது. அவ்வளவு தான். இன்னொரு முறை வாங்க வேண்டியது தான் ' என்று நினைத்துக் கொண்டே மார்க்கெட்டிற்கு சென்றாள்.
             பதட்டத்துடன் மீன் கடையை நோக்கி வேகமாக சென்றாள். போகும் வழியில் காய்கறி விற்கும் பெண்கள்' என்னம்மா? மீனைத் தேடி வந்தியா?' என்றார்கள். பதிலே சொல்லாமல் மீன் கடையை நோக்கி நடந்தாள். கடையை நெருங்கும் போதே மீன் கடைக்கார ர்," அப்பாடா..வந்துட்டியா? நீ பாட்டுக்கு மீனை வாங்கிட்டு வைச்சுட்டு போயிட்ட. எனக்கோ இங்கே நெஞ்சு பக் பக் ங்குது. அந்த அம்மா மீனைத்தேடுவாங்களே! எப்படி ஒப்படைப்பது? வீடு தெரிந்தாலவாவது கொண்டு போய் கொடுத்துரலாம். பணம் வேற வாங்கிட்டோம். நாம ஏமாத்தின மாதிரி ஆயிருமே என்று கவலைப்பட்டுகிட்டுருந்தேன். நல்ல வேளை. திரும்பி வந்து என் வயித்தில பாலை வார்த்த.. உன் பொருளை உன் கிட்ட ஒப்படைச்ச பிறகு தான் சாப்பிடணும்னு உக்கார்ந்திருந்தேன்" என்றவாறே மீனை ஒப்படைத்தார்.
          வித்யா அப்படியே நெகிழ்ந்து போய் விட்டாள். ' ரொம்ப தாங்க்ஸ், ரொம்ப தாங்க்ஸ் ' என்று உளமாற கூறிவிட்டு வந்தாள். வழியெல்லாம்அந்த மீன் கடைக்கார்ரை எண்ணி எண்ணி வியந்தாள். அவர் நினைத்திருந்தால் அவளை ஏமாற்றியிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. வீட்டிற்கு வந்தவுடன் கணவனிடம் சொல்லி சொல்லி மாய்ந்து விட்டாள். தான் இத்தனை நாட்களாக தவறாக க்கொண்டிருந்த அபிப்பிராயத்தை எண்ணி வருந்தினாள். இப்போதெல்லாம் வித்யா ஆன்லைன் ஷாப்பிங் , சூப்பர் மார்க்கெட் ஷாப்பிங் செய்வதில்லை. மார்க்கெட் தான் பிடித்தமான ஷாப்பிங் பிளேஸ். எல்லோருடனும் அளவளாவது தான் பிடித்தமான செயல். குறிப்பாக மார்க்கெட்.:-)