சென்னையில் நுழைந்தவுடன் நம்மைத் திகைக்க வைப்பது அதன் ஜனநெரிசல் தான். எங்கு பார்த்தாலும் கொத்துக்கொத்தாய் மனிதர்கள். ஒலிப்பான்களை அழுத்திக் கொண்டே மிக வேகமாக எதையோ சாதிக்கப் போகிறாற் போல பறக்கும் வாகனங்கள். அவை கக்கும் நச்சுப் புகை. இவற்றைத் தாண்டி சென்னை நகருக்குள் நுழைந்தால் நாம் சந்திக்கும் கேள்விகள் எத்தனை எத்தனை? புதிதாய் சென்னை வரும் அப்பாவிகளிடம் ஆட்டோக்கார ர்கள் வந்து மிரட்டலாய் கேள்வி கேட்கும் போது அவர்கள் சற்றே திகிலடைந்து விடுவர். ஊரிலிருந்து எச்சரித்து அனுப்பப்பட்ட அந்த நபர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தான் போக வேண்டிய இடத்தைக் கூறினால், எட்டாத ஒரு கட்டணத்தைக் கூறி அடுத்த மிரட்டலைத் தொடுப்பார். ஒரு விஷயத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சென்னைவாசிகளிடம் அவர்கள் எவ்வளவு தைரியமாகப் பேசுகிறார்களோ அதே தைரியத்துடன் நாமும் பேச வேண்டும் . இல்லையென்றால் கதை கந்தலாகிவிடும். இங்கு வாழ ஆரம்பித்தவுடன் இன்னொரு விஷயமும் நமக்குப் புலப்படும். சென்னை என்பது ஓரே மாதிரியான மக்களைக் கொண்டது அல்ல. மாம்பலம், மயிலாப்பூர் , தாம்பரம், சாந்தோம் என்று பல்வேறு விதமான பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித த்தில் தனித்தன்மை வாய்ந்தது.
ஆட்டோவில் ஏறி அமர்ந்து பயணம் செய்து இடத்தை அடையும் போது ஏதோ சாதனை செய்து விட்டாற் போல கட்டாயம் எண்ணத்தோன்றும். ஐந்து நிமிடங்கள், பத்து நிமிடங்களில் பயணம் செய்த நபர்களுக்கு அரை மணி நேரம், ஒரு மணி நேர பயணம் இங்கு சர்வசாதாரணம் என்ற உண்மையை ஜீரணிக்க சில காலம் ஆகும்.
சென்னை வாழ் மக்களுக்கென்றே சில பிரத்யேக குணங்கள் உண்டு. பொதுவாக இங்குள்ள மக்கள் உதவும் குணம் மிக்கவர்கள். ஒரு அட்ரஸ் கேட்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், இருக்கும் வேலையெல்லாம் விட்டு விட்டு கர்ம சிரத்தையாய் வந்து வழி சொல்வார்கள். சமயங்களில் அது தவறாக கூட இருக்கலாம். தமக்கு தெரியவில்லை என்றால் கூட வழி சொல்வதில் வல்லவர்கள். சுத்தம் சுகாதாரம் பேணுவதில் அவர்களுக்கு இணை வேறு எவரும் இல்லை. பேப்பர் கப்பில் காபி குடிப்பவர் என்றால் ஜாக்கிரதையாக கப்பை நசுக்கி விட்டு குப்பைத்தொட்டியின் அருகே கீழே வீசி எறிவார்கள். (கவனிக்க..குப்பைத்தொட்டியின் உள்ளே அல்ல). அதென்னவோ குப்பைக் கவர் எடுத்து வரும் அனைவருக்கும் தான் பெரிய கபில் தேவ் என்ற எண்ணம் ஏற்பட்டு விடுகிறது. பௌலிங் போடுவது போல் குப்பைத்தொட்டியை குறி வைத்து வீசுகிறார்கள். ஆனால் அது மிகச்சரியாக வெளியே விழுந்து பல்லைக் காட்டும். ஆனால் இதைப் பற்றியெல்லாம் சென்னை வாழ் மக்கள் கண்டு கொள்ளவே மாட்டர்கள். அவ்வப்போது அவர்களுக்கு குப்பையைப் பற்றி திடீர் ஞானோதயம் ஏற்படும் . ஷார்ட்ஸ், தொப்பி,கான்வாஸ் ஷூஸ் சகிதம் வாக்கிங் செல்லும் மகானுபாவர்கள் இதைப் பற்றி பேசிக்கொண்டே செல்வார்கள். எக்ஸ்நோரா போன்ற அமைப்புகளின் மூலம் குப்பைத்தொட்டிகள் வாங்கிக் கொடுத்து கடைக்கார ர்களை வாடிக்கையாளர்களிடம் அதில் போடச்சொல்லி வற்புறுத்துவார்கள். கடைக்கார ர்கள் பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டுவார்கள். ஆனால் எல்லாம் பத்து நாட்களுக்குத்தான். அதன் பின் பழையபடி குப்பைகள் வீதியை அலங்கரிக்கும்.
மழை பெய்தால் சென்னை நகரம் அடையும் திண்டாட்டத்தை சொல்லி மாளாது. ஒரு சின்ன தூறலுக்கே டிராபிக்கால் சென்னை ஸ்தம்பித்து விடும். வீதிகளில் நீர் வழிந்தோடும். காய்ச்சல் , வாந்தி, பேதி என்று நோய்கள் சரமாரியாகத் தாக்கும். இத்தனையையும் தாண்டி தங்கள் சகஜ வாழ்க்கையைத் தொடர அனைவரும் பாடுபடுவர். இதனை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். ஆனால் இப்பொழுதெல்லாம் சென்னை வறண்ட பூமியாகி ஆகிவிட்டது. மழையைப் பார்ப்பதே அபூர்வமாகிவிட்டது.
சென்னை மக்கள் சுறுசுறுப்பானவர்கள். அதிகாலை ஆறு மணிக்கே கையில் சப்பாட்டுடன் இரண்டு பஸ் மாறி பணியிடங்களுக்கு செல்பவர்களை கண்டிருக்கிறேன். சிறு நகரங்களில் ஒன்பது மணிக்கு பணிக்கு செல்ல வேண்டிய நபர் காலை எட்டரை மணிக்கு பாட்டு கேட்டுக்கொண்டே அடி பம்ப் இல் தண்ணி அடித்துக் கொண்டிருப்பார். அவரால் அரைமணி நேரத்தில் குளித்து சாப்பிட்டு அலுவலகத்தை அடைய முடியும். ஆனால் இங்கு அதுவல்ல கதை. நாள்தோறும் இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய சூழல் அநேகம் பேருக்கு உள்ளது.
ரசனையுடன் ஆடை அணிவதில் இவர்களுக்கு நிகர் எவரும் இல்லை. பஞ்சு மிட்டாய் கலர், ஆரஞ்சு மிட்டாய் கலர் என்று எள்ளி நகையாடப்படும் வண்ணங்களில் ஆடைகளை விரும்பி அணிவர். ஹேர் கலரிங் செய்து பெண்களுக்கு இணையாக ஆண்களும் நீண்ட கூந்தல் வளர்ப்பர். ஒரு மாலை வேளை மெரினாவிற்கு சென்றால் எத்தனை விதமானவர்களைப் பார்க்கலாம். தலையில் கலர்ப்பூ, காலில் கொலுசு, நெற்றியில்குங்குமத்துடன் சிலர். குதிகால் செருப்பு, அலைபாயும் கூந்தல், குட்டைப் பாவாடை, நுனிநாக்கு ஆங்கிலம் என்று சிலர். காதில் ஹெட்போன், நைந்த ஜீன்ஸ்,பந்தாவாக ஒரு பைக், மற்றும் நண்பர் கூட்டம் என்று சிலர். பஞ்சென நரைத்த தலை, பழைய கால அருமைபெருமைப் பேச்சு, இசையில் அதீத ஈடுபாடு என்று சிலர். இப்படி கலவையான மக்கள் கூட்டம் காண எங்கும் கிடைக்காது.
சென்னை மக்கள் உணவுப்பரியர்கள். பாரம்பரிய உணவு விடுதிகள், தெருவோரங்களில் இருக்கும் கையேந்தி பவன்கள், மேலை நாட்டு துரித உணவகங்கள், வடக்கத்திய சாட் உணவகங்கள் , சைனீஸ் உணவகங்கள் என்று உணவு வகைகளுக்கு பஞ்சமே கிடையாது. அனைத்திலும் ஜேஜே என்று கூட்டம் மொய்க்கும். சென்னையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பல உண்டு. வழிப்பாட்டுத்தலங்களும் அனைத்து மத த்தினருக்கும் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும். சென்னை மக்களின் பேச்சுத்திறமையை குறைத்து எடை போடக்கூடாது. தன்னம்பிக்கையை மிளிர பேசும் அவர்கள் சென்னையை ஒரு போதும் விட்டுத் தர மாட்டார்கள். இப்படி சென்னையைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம் . முழுமையாக ஒரு கட்டுரையில் கூறுவது என்பது மெரினாவை ஒரு கண்ணாடிக் குடுவைக்குள் அடைப்பது போல இயலாத காரியம்.