Tuesday, September 15, 2015

மனம் விரும்புதே...


வீடு என்பது கல்லும், மண்ணும், செங்கலும் அல்ல. அன்பு, அழகு, தூய்மை என்பன போன்ற இடுபொருட்களால் நிறைந்தது. சில வருடங்களுக்கு முன்பு வரை சிவகாசியில் சொந்த வீட்டில் வாழ்ந்து வந்தோம். என் கணவரின் தொழில் நிமித்தமாக சென்னைக்கு மாற்றலாகி வந்த போது, அபார்ட்மெண்டில் வாழ வேண்டிய கட்டாயமும், சூழலும் ஏற்பட்டது. 
     மிகப்பெரிய வீட்டில் காலாற நடந்து பழகிய எங்களுக்கு, திரும்பியவுடன் கிச்சன், திரும்பியவுடன் பெட்ரூம் என்று அனைத்தும்  அருகருகே இருந்தது ஆச்சர்யமான விஷயம். குழந்தைகள் பள்ளிக்குச் சென்றவுடன் ஓடி ஓடி வீட்டை ஒதுக்கும் வழக்கம் உள்ள எனக்கு, அந்த வேலை மிகச்சுலபமாய் முடிவதை உணர முடிந்தது. 
    அபாண்டமெண்ட் வந்ததால், வீட்டிற்கு சாமான்களை வாங்கிவிட்டு பின் உபயோகமில்லாதவற்றை பரண் மீது தூக்கிவைக்கும் வழக்கம் நின்று போனது. எந்தப் பொருளை வாங்குவதானாலும் , 'இது தேவைதானா? இடத்தை அடைக்காதா?' என்று ஒரு முறைக்கு இரு முறை யோசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் வீட்டில் தேவையற்ற பொருட்கள் குவிவது குறைந்தது. வேலையும் சுளுவாயிற்று. குறைந்தபட்ச தேவைகளுடன் நிறைவான வாழ்க்கை வாழ்வது எப்படி என்று புரிந்தது.
     சில வீடுகள் இறுக்கமாயிருக்கும். போதிய வெளிச்சம் இருக்காது. பகல் நேரங்களிலும் லைட் போட்டே இருக்க வேண்டியதிருக்கும். போதுமான ஜன்னல்கள் இல்லாத தால் காற்று வராது. ஆனால் எங்கள் அபார்ட்மெண்டில் ஒவ்வொரு பெட்ரூமிற்கு அருகிலும் ஒரு பால்கனி உண்டு. அதனால் கதவைத்திறந்தால் பளீரென்ற வெளிச்சமும், திமுதிமுவென்று காற்றும் வரும்.
    வீடு கடற்கரைக்கு அருகே இருப்பதால் காற்று வாங்க என்று எங்கேயும் செல்ல வேண்டியதில்லை. பால்கனியில் நின்றால் போதும் தென்றல் வந்து வருடும். நகரங்கள் பொதுவாய் கான்கிரீட் காடுகளாய்த் திகழ்கின்றன என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால் எங்கள் பால்கனியில் அமர்ந்தால் சோலைவனம் போல நாலாபுறமும் மரங்கள் தெரிகின்றன. பக்கத்து வீட்டில் மிகப்பெரிய மாமரம் ஒன்று உள்ளது. அதனை நான் ரசித்துக்கொண்டே இருப்பேன். பூத்து, பின் காய்த்து, பின் தளிர்பச்சையில் புது இலைகளுடன் என்று அதன் வளர்ச்சியை வருடந்தோறும் உணர்வு பூர்வமாய் கண்டு கழிப்பேன். வெள்ளிக்கிழமைதோறும் பக்கத்து வீட்டு பெரியம்மா மாலையில் கோலமிட்டு துளசிமாடத்தில் விளக்கேற்றி வழிபடுவார்கள். அதனையும் மேலேயிருந்தே கண்டு ரசிப்பேன் .
    மாலை மணி நான்கு ஆனவுடன் பள்ளி விட்டு வரும் குழந்தைகள் கீழே விளையாட ஆரம்பித்து விடுவார்கள். நான் பால்கனியில் ஒரு சேர் போட்டு அமர்ந்து கொண்டு அவர்களை வேடிக்கை பார்ப்பேன். அவர்கள் சைக்கிள் ஓட்டுவதும் ஓடிப்பிடித்து விளையாடுவது, கண்ணாமூச்சி, கிரிக்கெட் என வித விதமாய் விளையாடுவார்கள். சமயங்களில் பெரியவர்கள் இறகுப்பந்து விளையாடுவதும் உண்டு.
        பச்சைக்கிளிகள் அதிகம் இருக்கும். அதன் கீச் கீச் ஒலியைக்கேட்டவுடன் ஓடிச்சென்று பார்ப்பேன் . அவை பறந்த வண்ணம் இருக்கும் நம் வீட்டிற்கு அவை வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அவற்றிற்கு தினமும் அரிசியும் தண்ணீரும் பால்கனியில் வைக்கிறேன். என்றாலும்  கிளிகளின் கடைக்கண் பார்வை எங்கள் வீட்டின் மீது படவில்லை. செடி கொடி இருந்தால் அவை வரும் என்று ஒருவர் சொன்னார் . இப்போது சில பூந்தொட்டிகள் வைத்து செடிகள் வளர்க்கின்றேன். காகங்கள் தான் வருகின்றன. அவை உரிமையாய் வந்து கத்தி என்னைக்கூப்பிடும். என் கணவரோ என்னைக் கேலி செய்வார்,'உன் ஃபிரண்டஸ் உன்னைக் கூப்பிடுகிறார்கள் .. பார்' என்று. என்றேனும் ஒருநாள் கிளிகள் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். புறாக்களுக்கும் பஞ்சமில்லை. அருகிலுள்ள மருத்துவமனையில் ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த கூரையில் அவை த த்தி த த்தி நடந்து பேரணி நடத்தும். பைனாக்குலர் வைத்துக்கொண்டு அவற்றைப்பார்த்து ரசிப்பேன்.என் இளைய மகள், " அம்மா உன் அலப்பறைக்கு்ஒரு அளவே இல்லையா?" என்று கிண்டல் அடிப்பாள்.
     அம்மா மடியில் சாய்ந்து கொண்டு கதைகள் கேட்பது போன்ற இன்பத்தை இந்த பால்கனி எனக்கு அளிக்கின்றது. மொட்டை மாடியில் வைத்து சாதம் ஊட்டும் அம்மாவிடம் கதைகள் கேட்ட காலம் ஒன்று உண்டு. இளமைக்கால நினைவுகளை திகட்ட திகட்ட நினைத்துப் பார்த்து மகிழும் வழக்கம் எனக்கு உண்டு. அம்மா நினைவு வந்து அவ்வப்போது தனிமை வாட்டும் போது பால்கனியில் அமர்ந்து நிலவையே பார்த்துக் கொண்டிருப்பேன். நிலவு 'வருத்தப்படாதே நான் அருகில் வருகிறேன்' என்று கூறியவாறு அருகில் வருவது போல் தோன்றும். 
இப்படி என் வீட்டின் பால்கனி என் உள்ளத்தைக்கவர்ந்து ராஜாங்கம் நடத்துகின்றது.வீட்டிற்கு விருந்தினர் யார் வந்தாலும் அவர்களிடம் பால்கனி புராணம் பாடாமல் விடுவதில்லை.இப்போது 
பால்கனி தான் என் கண்ணிற்கும், மனதிற்கும் இதமளிக்கும் சோலை.





Thursday, September 10, 2015

விசுவாசத்துக்கேத்த வீக்கம் .



ராமு ராகேஷ் சாரிடம் டிரைவராக இருபது வருடங்களாக இருக்கிறான். அவர் அவனுக்கு ஒரு குறையும் வைத்ததில்லை. உண்மையைச் சொல்வது என்றால் அவன் முகம் கொஞ்சம் சோர்வாக இருந்தால் கூட கவனித்து அவனுக்கு என்ன பிரச்னை என்று அறிந்து உதவுவார். ராமுவும் கால நேரம் பார்க்காமல் அவர் குடும்பத்துக்கு உழைத்துள்ளான். 
       டிரைவர்தான் என்றாலும் ராமு சிறுக சிறுக சேமித்த பணத்தைக் கொண்டு சொந்த வீடு ஒன்று கட்டி விட்டான். பிள்ளைகள் இருவருமே படிக்கிறார்கள். கடவுள் புண்ணியத்தில் இருவருமே நன்றாகப் படிப்பதால் அவனுக்கு எந்தக் கவலையுமில்லை. ஆனால் இப்போது கொஞ்ச நாட்களாக மனைவி லட்சுமி தான் மகனை எப்படியாவது இன்ஜினியரிங் படிக்க வைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறாள். நம் வசதிக்கு அது தோதுப்படாது என்று சொன்னால் அவளுக்குப் புரியவில்லை. பையனுடைய எதிர்காலம் நல்லா இருக்கும்.. எப்படியாவது பணம் புரட்டிக் கொடுய்யா என்று நச்சரித்துக் கொண்டிருக்கிறாள்.
            அதெல்லாம் வேண்டாம் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டான். விரலுக்கு தகுந்த வீக்கம் போதும். அவன் ஆர்ட்ஸ் காலேஜில் பி.எஸ்ஸி படிக்கட்டும். போதும் என்றான். மகனும் ஒத்துக் கொண்டான். மனைவியும் அமைதியாகி விட்டாள். இந்த மனுசனை ஒண்ணும் பண்ணமுடியாது, பிழைக்கத் தெரியாதவன் என்று முடிவு கட்டி விட்டாள் போலும் .
              ரிசல்ட் வந்தது. ராமுவின் மகன் 1110 மார்க் வாங்கியிருந்தான். சந்தோசத்தில் ராமுவிற்கு தலைகால் புரியவில்லை. முதலில் ராகேஷ் சாருக்கு தான் சொல்ல வேண்டும் என்று மகனை கூட்டிக்கொண்டு ஸ்வீட் வாங்கிக் கொண்டு அவரைப் பார்க்க ஓடினான்.
            " ஐயா.. என் பையன் நல்ல மார்க் வாங்கி பாசாயிட்டான். முதல்ல உங்ககிட்ட தான் சொல்லணும்னு கூட்டி வந்தேன். தம்பி ஆசிர்வாதம்  வாங்கிக்கோ. உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கின பிறகு தான் சார் நாங்க கோயிலுக்கே போகப்போறோம்," என்று சந்தோசமாக்க் கூறினான்.
            ராகேஷ் அவனை தூக்கி நிறுத்தியவாறே," நானும் உனக்கு ஒரு பரிசு வைத்திருக்கிறேன்" என்று ஒரு கவரை நீட்டினார். அது.. நகரில் உள்ள தலைசிறந்த இன்ஜினியரிங் காலேஜில் அவனை சேர்ப்பதற்கான அட்மிஷன் கடிதம். அதுவும் அவன் விரும்பும் பிரிவை எடுத்துக் கொள்ளலாம் என்ற சலுகை வேறு அளிக்கப்பட்டிருந்தது. 
           ராமு விக்கித்துப்போய் நின்று விட்டான் . அவன் கண்களில் நீர் திரண்டது. பேச நா எழவில்லை. ராகேஷ் " நீ சொல்லவில்லை என்றால் எனக்குத் தெரியாதா?!" என்று புன்னகைத்தார்.

Tuesday, September 8, 2015

ஒரு பக்க கதை

" உங்கம்மா சீரியல் பாக்கும் போது இடியே விழுந்தாலும் அவங்களுக்குத் தெரியாது..கோவுச்சுக்காதீங்க..உள்ளதைச்சொன்னேன்."
" உங்க தம்பி தேவைன்னா மட்டும் தான் இந்தப் பக்கம் தலை காட்டுவார். இல்லைன்னா நம்ம இருக்கிற திசை பக்கம் திரும்ப கூட மாட்டார்."
" நீங்க எப்பவுமே இப்படித்தான். அவசரப்படுவீங்க. அவசரப்பட்டா ஜோலி ஆகாதுன்னு உங்களுக்குப் புரியாது. தப்புன்னா மன்னிச்சுக்கோங்க."
"உங்க குடும்பத்துல எல்லோருக்கும் இதே பழக்கம் தான். பணத்தை வாரி இறைக்கிறது.. அப்புறம் உக்காந்து வருத்தப்படறது...ஆனா இதெல்லாம் சொல்றதுக்கு நான் யாரு? நானாட்டம் என் வேலை உண்டு நான் உண்டுன்னு இருக்கிறேன்."
இவையெல்லாம் ராஜேஷுடைய சகதர்மினி  
சுதாவின் வார்த்தைகள். சுதா சும்மா இருக்க மாட்டாள். வார்த்தை குத்தீட்டிகளால் காயப்படுத்துவாள். அப்புறம் எனக்கு எதுக்கு பொல்லாப்பு என ஒதுங்கிக் கொள்வாள். இதை சொல்லாமலேயே இருக்கலாம். ராஜேஷின் மனம் புண்படுவதாவது குறையும் என்று அவனுக்குத் தோன்றும்.
             இதைப்பற்றி ஜாடை மாடையாக  குறை சொல்லாதே என்று சொல்லிப்பார்ததான் ராஜேஷ். ஆனால் சுதாவிற்கு மண்டையில் ஏறுகிற மாதிரி தெரியவில்லை. அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று யோசிக்கலானான்.
             ஒரு ஞாயிற்றுக்கிழமையில் காலையிலேயே ஆரம்பித்தான்..." காபியில் சூடு கம்மி..ஆனால் நான் ஏன் சொல்லணும். சொன்னா உனக்கு கோபம் வரும்" என்றபடி அந்தப்பக்கம் திரும்பிக் கொண்டான். சுதாவிற்கு சுருக் என்றிருந்தது. காபி சூடாகத்தான் இருந்தது. அவன் வேண்டுமென்றே சொல்கிறான் என்று அவளுக்குப் புரிந்தது.
               காலை டிபனின் போது," இதே தானா தினமும்...போர்" என்றான்." இதை நான் சொன்னா தப்பாயிடும். எனவே நான் கப்சிப்..." என பொய்யாக வாயை மூடிக்கொண்டான். சுதா கஷ்டப்பட்டு கோபத்தை அடக்கிக் கொண்டாள். 
               மதியம் சாப்பிடும் போதும் ஏதாவது ஆரம்பிப்பான் என்று சுதா எதிர்பார்த்தாள் . ஆனால் அவன் அமைதியாய் சாப்பிட்டான். அவளுக்கு நிம்மதியாக இருந்தது. ஆனால் அவன் வேறு வித்த்தில் ஆரம்பித்தான். " சிலர் வீட்டை எப்படி சுத்தமா வைச்சிருக்காங்க..ம்ம்ம்..அய்யோ எனக்கு ஏன் இந்த பொல்லாப்பு."
           அவ்வளவு தான் இதற்கு மேல் சுதாவிற்கு பொறுத்துக் கொள்ள முடியவில்லை. " நீங்கள் எதை மனதில் வைத்துக் கொண்டு இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? சொல்வதை நேரடியாக சொல்வது தானே???இதென்ன இரட்டை வேடம்? " என்று பிலுபிலுவென பிடித்துக்கொண்டாள்.
             ராஜேஷ் அவளையே பாரத்துக் கொண்டிருந்தான். பின் மெல்ல ஆரம்பித்தான்" நீ இப்படித்தான் செய்கிறாய். யாரையாவது குறை சொல்கிறாய். பின் உனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாத து போல பேசுகிறாயே. நீ நடந்து கொள்ளும் வித்த்தைக் உனக்கு உணர்த்தவே இப்படி நடந்து கொண்டேன். மற்றபடி உன் மீது எனக்கு வருத்தமே கிடையாது . இனி புரிந்து நடந்து கொள்வாய் என நம்புகிறேன்.." என்றவாறே அவளை அணைத்துக் கொண்டாள். தவறை உணர்ந்தவளாய் சுதா அவனது அணைப்பில் மகிழ்ந்தாள்.