ராஜாவுக்கு பிறந்த நாள் இன்னும் இரண்டு நாட்களில் வந்து விடும். ராஜா எப்பவும் தன் பிறந்த நாளுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருப்பான். அம்மா, அப்பா, அக்கா என்று எல்லோரும் ஏதாவது ஒரு கிப்ட் தருவார்கள். ஆனாலும் அவனுக்கு அவனுடைய தாத்தா ஏகாம்பரம் தரும் கிப்ட் தான் ஸ்பெஷல்.
அவன் அப்படித்தான். சிறு வயதிலிருந்தே அவருடன் ரொம்ப நெருக்கம். காலையில் பள்ளிக்குச் செல்லும் செல்லும் போது பிரியாவிடை கொடுத்து கிளம்புவதிலிருந்து, மாலையில் அவருடன் வாக்கிங் செல்வது வரை எல்லாமே அவனுக்கு பிடித்தமான செயல்கள். அவன் இரவு உணவருந்துவது அவர் கூடத்தான். இரவில் தனக்குத் தெரிந்த இதிகாசக் கதைகள் முதல் தற்போது படித்த நாகரீக கதைகள் அனைத்தையும் அவனுடன் பகிர்ந்து கொள்வார். ராஜாவும் தான் கற்ற நவீன சமாச்சாரங்களை அவருக்கு கற்றுத் தருவான். 'டச்' ஃபோனின் சகல சமாச்சாரங்களும் அவருக்கு அத்துப்படி.
அவனுடைய பத்தாவது பிறந்த நாளுக்கு நாய்க்குட்டி ஒன்றைப் பரிசளித்தார். அவனுடைய பன்னிரெண்டாவது பிறந்த நாளுக்கு மாங்கன்று ஒன்றைப் பரிசளித்தார். அன்றிலிருந்து அவனுக்குத் தோட்டக்கலையின் மீது ஆர்வம் வந்துவிட்டது. இப்போது அவன் வீட்டில் நிறைய பூஞ்செடிகள் பூத்துக் குலுங்கின்றன.
அவனது பிறந்த நாளும் வந்தது.காலையில் தோசை வார்த்துக் கொண்டிருந்த அம்மாவிடம் கேட்டான்," அம்மா, தாத்தா என்ன கிப்ட் தரப் போறார்மா? உனக்கு ஏதாவது தெரியுமா?" என்று ஆர்வமுடன் கேட்டான். " தெரியலையே..ஆனா இது வரைக்கும் ஒண்ணும் வாங்கின மாதிரித் தெரியலை." அம்மாவுக்கு வீட்டிற்குள் நுழையும் ஒரு சிறு எறும்பு கூடத் தெரியும். அவளே தெரியவில்லை என்றால்....ஒரு வேளை தாத்தா ஒண்ணும் வாங்கலையோ?? தாத்தா எதுவுமே நடக்காத்து போல் வீட்டில் சுற்றிக் கொண்டிருந்தார். இன்று பதினெட்டாவது பிறந்த நாள். பெரிய சர்ப்ரைஸ் இருக்கும் என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்.
மணி பன்னிரெண்டடித்தது. தாத்தா,"ராஜா.. உனக்கு லன்ச் ஒரு ஸ்பெஷல் இடத்தில் . வா போகலாம்" என்று சட்டையை மாட்டிக்கொண்டு அழைத்தார். " எங்கே தாத்தா?" என்று ஆர்வமுடன் ராஜா கேட்டான்." காட்றேன்..காட்றேன்" என்றவாறே திரும்பி," அம்மா.. மருமகளே! நாங்க ரெண்டு பேரும் வெளியே சாப்பிட்டுக்கிறோம்" என்றார்.'ஓ! லன்ச் வாங்கித்தரப் போறாராக்கும்..' என்று எண்ணியவாறே," அம்மா..பை.." என்று தாத்தாவைப் பின் தொடர்ந்தான்.
இரண்டு தெருக்கள் வரை நடத்தியே கூட்டிச் சென்றார் தாத்தா. ' எங்கே என்று சொன்னால் பைக்கில் கூட்டிக் கொண்டு போகலாம்' என்று அவன் மனதில் தோன்றியது. அங்கே ஒரு அனாதை ஆசிரம ம் இருந்தது. அங்கு அனைவரும் அவனுக்காக வரிசையாக காத்திருந்தனர். அவன் உள்ளே நுழைந்ததும் " ஹேப்பி பர்த் டே டு யூ..." என்று கோரஸாகப் பாடினார்கள். சிஸ்டர் வந்து, " தம்பி, நீ தான் ராஜாவா? ஹேப்பி பர்த்டே.. என்னோடு வா" என்று உள்ளே அழைத்துச் சென்றார்கள்.
ராஜா நெகிழ்ந்து விட்டான். திரும்பி தாத்தாவைப் பார்த்தான். அவர் புன்னகைத்தார். சிஸ்டர் உள்ளே அழைத்து சென்று," தம்பி ராஜா, இன்று உன் தயவால், உன் பிறந்த நாளை முன்னிட்டு இந்தக் குழந்தைகள் வயிறார சாப்பிடப் போகிறார்கள். உன் தாத்தா இந்த ஏற்பாட்டை செய்துள்ளார். வா.. உன் கைகளால் அவர்களுக்கு இனிப்பு கொடு. " என்றார். அனைவரும் வரிசையாக அமர்ந்நதிருந்தனர். ராஜா ஒவ்வொவருக்காய் இனிப்பு வழங்கினான். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டு," நன்றி அண்ணா" என்று கூறிய போது அவன் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. அவனும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டான். சில குழந்தைகள் அவனிடம் ஓடி வந்து பேசின. சில அவன் பேரைச் சொல்லி புன்னகைத்தன.
சுமார் ஒரு மணி நேரம் கழிந்திருக்கும். தாத்தா," கிளம்பலாமா ராஜா?" என்று கேட்டார். உண்மையில் அவனுக்குக் கிளம்ப மனமில்லை. என்றாலும்,"ம்...ம்.." என்றான். சிஸ்டர், ஆசிரியர்கள், குழந்தைகள் அனைவருக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டு கிளம்பினர். வழியெங்கும் மௌனமாய் வந்தான். வீடு நெருங்கியது. தாத்தாவைப் பார்த்து " தேங்க்ஸ் தாத்தா" என்றான். தாத்தா புன்னகைத்தார். இருவரின் மனமும் நிறைந்திருந்தது.
-முருகேஸ்வரி ரவி,
சென்னை-13.