இன்று பிரபலமான சுற்றுலா வகைகளுள் ஒன்றாக 'க்ரூஸ்' என்னும் கப்பல் பயணம் மாறிவிட்டது. சிங்கப்பூர் செல்லலாம் என்று முடிவெடுத்தவுடன் க்ரூஸ் என்னும் கப்பல் பயணமும் மேற்கொள்ளலாம் என்று என் கணவர் யோசனை தெரிவித்தார். நாங்கள் அரை மனதுடன் ஒத்துக் கொண்டோம். மூன்று நாட்கள் கப்பல் பயணம் என்பதால் மிகவும் போரடிக்கும் என்று கருதி வாசிப்பதற்கு சில புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டேன். ஆனால் ஆச்சர்யம் என்னவெனில் அவற்றை வாசிக்க எனக்கு நேரமே கிடைக்கவில்லை என்பது தான்.
நாங்கள் சென்றது "சூப்பர் ஸ்டார் ஜெமினி" என்னும் சொகுசுக் கப்பலில். இதில் மொத்தம் பன்னிரெண்டு அடுக்குகள் இருந்தன. நாங்கள் தங்கியிருந்தது ஏழாவது அடுக்கில். அதன் சிறப்பம்சம் நடைப்பயிற்சி தளம் மற்றும் ரிசப்ஷன் . ரிசப்ஷன் எங்கள் தளத்தில் இருந்ததால் மோஸ்ட் happening place ஆகத் திகழ்ந்தது. கப்பலில் பயணிக்க ஆரம்பித்தவுடன் ஏனோ ஜாக் மற்றும் ரோஸ்..அதாங்க நம் டைட்டானிக் ஹீரோ ஹீரோயின் ., அநியாயத்துக்கு ஞாபகத்துக்கு வந்து தொல்லை பண்ணாங்க..உடனே நாங்களும் அவங்களை மாதிரி ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம்.என்ன சொன்னேன்? ஃபோட்டோ எடுத்தோம்னா? தப்பு..தப்பு எடுக்க முயற்சி செஞ்சோம்.ம்.. என்ன கேக்குறீங்க?அந்த ஃபோட்டோ எங்கன்னா? அந்தப்படம் சென்சார் கத்திரிக்கு தப்பலைங்க..ஆனாலும் அவங்க ரொம்ப ஸ்டிரிக்ட்..ஸ்டிரிக்ட்..ஸ்டிரிக்ட...(எக்கோஎஃபெக்ட் நல்லா இருக்காங்க??).
கப்பலின் அனைத்து தளங்களிலும் ஏதாவது ஒரு வகை பொழுதுபோக்கு அம்சம் இருந்தது. தியேட்டர், நீச்சல்குளம், ஸ்பா, ஜிம், மசாஜ், காசினோ, கரோக்கி, கம்ப்யூட்டர் கேம்ஸ் என்று சகல அம்சங்களுடன் கூடிய ஒரு சிறு நகரமாகத் திகழ்ந்தது. பகல் நேரத்தை இவற்றில் பொழுது போயிற்று எனில் மாலையில் வேளையில் மாஜிக் ஷோ, கேம் ஷோ,டிஜே நைட் என பொழுது கழிந்தது. நாள்தோறும் என்னென்ன நிகழ்வுகள் நடக்கப் போகின்றன என்று காலையிலேயே அச்சடித்த நோட்டீஸ் மூலம் தெரிவித்து விடுவார்கள்.நான் ஏதோ பரிட்சைக்குப் படிக்கும் மாணவி போல் அதை உன்னிப்பாக கவனித்து படிப்பேன். பின் என் கணவரிடமும் மகளிடமும் இத்தனாவது தளத்தில் இது நடக்கின்றது என்னு ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிப்பது போல் சொல்லுவேன். ஒவ்வொரு தளமாக்க் தேடிச்சென்று என்ன நடக்கின்றது என்று பார்த்து வருவதில் எனக்கு தீராத ஆர்வம். ஏதோ ட்ரெசர் ஹண்ட் விளையாடுவது போலிருந்தது. மலேசிய நாட்டின் குட்டித் தீவுகளுக்கு சிலர் கப்பலிலுந்து இறங்கி சுற்றுலா சென்று வந்தனர். நாங்கள் புலா ரெடேங் என்னுமிடத்தில் உள்ள ஷாப்பிங் மற்றும் snorkeling சென்று வந்தோம்.
இவை தவிர ஆங்காங்கே சிறு சிறு டெமோ.. ஜூம்பா, பிஸ்ஸா செய்வது, மாக்டெயில் செய்வது என்று ஊழியர்கள் கற்றுக் கொடுத்தார்கள். புரிகிறதோ இல்லையோ நான் அத்தனை இடத்திலும் ஆஜராகிவிடுவேன்.அவர்களைப் பற்றி சொல்லியே தீர வேண்டும். இன்முகத்துடன், புன்முறுவலுடன் அந்த மூன்று நாட்களையும் அவர்கள் நகர்த்திய விதமும் சேவை செய்த பாங்கும் , அவர்கள் எங்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று விட்டனர். சிலர் வெளியேறும் போது அவர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்டனர். நான் அந்த அளவிற்கு செல்லவில்லை..என் வீட்டில் அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை மட்டும் மாட்டி வைத்துள்ளேன்.
நான் மிகப் பெரிய உணவுப்பிரியை அல்ல. எடை கூடி விடுமோ என்ற அச்சத்தினால் எப்போதும், சுவை என்பதை விட ஆரோக்கியம் என்ற எண்ணம் மேலோங்குமாறு தேர்ந்தெடுத்து உண்ணுவேன். என்னுடைய இந்தக்கட்டுபாடுகளையெல்லாம் உடைத்து எரிந்தது இந்தப் பயணம். எத்தனை விதவிதமான உணவுகள், எத்தனை விதமான பழங்கள், எத்தனை விதமான பானங்கள். இந்திய உணவு, சீன உணவு, மெடிட்டெரேனியன் உணவு, மேற்க்த்திய உணவு என்று எத்தனை விதம்...ஸ்வீட், ஸ்டார்ட்டர், மெயின் கோர்ஸ் என எதை எடுத்தாலும் அதன் எண்ணற்ற வகைகள் என்னை திக்கு முக்காடச் செய்தன. அழகாக வடிவமைக்கப்பட்டு நேர்த்தியாக அடுக்கி இருந்த விதம் என்னை வெகுவாக்க் கவர்ந்தது.அனைத்தையும் ருசி பார்த்தே தீர வேண்டும் என்ற கங்கணத்துடன் ஒரு கை பார்த்தேன். என் கணவரும் மகளும் இந்திய உணவகத்திலேயே தங்கள் உணவு நேரத்தை செலவிட்டனர். ஆனால் எதற்கும் துணிந்தவள் போல தைரியமான சீன உணவு, மேற்கத்திய உணவு என அனைத்தையும் ஒரு கை பார்த்தேன். வாயில் நுழையாத பேர்களுடைய பதார்த்தமானாலும கண்ணுக்கு விருந்தாய் விரும்பி அழைத்தன. அந்த அன்பான அழைப்பை ஏற்று வயிற்றுக்கு விருந்தளித்தேன். பழங்கள் இத்தனை சுவையானவை என்பதை அங்கு தான் அறிந்து கொண்டேன். ஒரே அளவாய் வெட்டி அடுக்கப்பட்டிருந்த அவை நிமிடங்களில் காணாமல் போகும். கேக்குகள் கண்ணைப்பறிக்கும் வித்த்தில் இருந்தன. ' என்னையும்தான் ஒரு கை பாரேன் என்று கூவி கூவி அழைத்தன. பாவம் அவை மட்டும் என்ன பாவம் செய்தன என்று அவற்றையும் ஒரு கை பார்த்தேன். இவை அனைத்தும் முடிந்த பின் நீச்சல் குளத்தில் ஆனந்தக் குளியல் இட்டேன். இவை போதாதென்று இரவில் டிஜே நைட்டில் மாக் டெயில் என்று பழரசங்களை வாரி வழங்கினர். அவற்றையும் ஒரு கை பார்த்தேன். ஓரவஞ்சனை கூடாதல்லவா?
கடைசி நாளன்று கப்பலில் பணிபுரிந்த அனைவரையும் கப்பலில் பயணித்த எங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி அணிவகுத்து நின்றனர். கேப்டன் தலைமை செஃப் ஐ அறிமுகம் செய்த போது கரகோஷம் விண்ணைப்பிளந்தது.( பயபுள்ளைக.. எல்லோரும் என்னை மாதிரி தான் போலிருக்கு...)
பின்னர் அனைவருக்கும் டின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் உணவருந்திக் கொண்டிருந்த போது திடீரென்று சிப்பந்திகள் அனைவரும் ஒரே மாதிரி நடனமாடிய ஆனந்த அதிர்ச்சி அளித்தனர். பயணிகள் ஸ்பூனையும் ஃபோர்க் ஐயும் கீழே போட்டு ஹேண்டிகேம் ஐயும் காமிராவையும் ஹேண்ட் பேக்கிலிருந்து துழாவி எடுத்து அவசரமாக படமெடுக்க ஆரம்பித்தனர். ஆனால் எனக்கு அந்த சிரம்மெல்லாம் இல்லை. நான் தான் மும்முரமாக உணவு ஐட்டங்களை ஏற்கனவே படம் பிடித்துக் கொண்டிருந்தேனே. நாங்கள்லாம் யாரு..ஐடியா அன்னார்சாமிகளாயிற்றே.. துரிதமாக முழு நடனத்தையும் படம் பிடித்தோம். என்ன..கேமிரா தான் நான் எப்போது வேண்டுமானாலும் உயிரை விடுவேன்..பேட்டரி லோ..என்று பயமுறுத்திக் கொண்டே இருந்தது. ஆனால் பயந்த வண்ணம் எதுவும் நடக்கவில்லை.
மூன்று நாட்கள் நொடிப்பொழுதில் ஓடிவிட்டது. பயணத்தின் முடிவில்நிறைய நண்பர்களைப் பெற்றிருந்தோம். நிறைந்த மனதுடன் சிங்கப்பூரை சுற்றிப் பார்க்க கிளம்பினோம். வீடு திரும்பிவுடன் எடை மெஷினில் ஏறி நின்றேன். அதிர்ந்தேன். ம்ம்ம... என்ன சார் கேக்குறீங்க?? எடை கூடி விட்டேனா என்றா??...அது சஸ்பென்ஸ் சார்.