Tuesday, November 14, 2017

Trekking

நைனிடால் சென்ற போது படகு சவாரி வேண்டாம், அருகிலுள்ள பறவைகள் சரணாலயத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று tour organizers இடம் கேட்டிருந்தோம். ஆனால் இங்கு அங்கு என மாறி, மாறி பயணித்து சுமார் இரண்டு மணி நேரம் ஒன்றையும் காணாமல் வீணாக பொழுதைக் கழித்து விட்டோம். இதனால் மனம் வருந்திய எங்களிடம் மறுநாள் காலையில் சஃபாரிக்குப் பின் ' Bird Watching and Trekking on the banks of Kosi River' உண்டு என்று tour organizer கூறினார். நொந்த மனதிற்கு மருந்திடுவது போல என எண்ணிக்கொண்டு அந்த ட்ரெக்கிங் அனுபவத்திற்காக ஆவலுடன் காத்திருந்தேன்.
         நதிக்கரையில் என்றவுடன் நம்மூர்களில் ஓடும் நதிகள் ( எங்கே ஓடுகிறது என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான்) படித்துறையில் இறங்கியவுடன் வந்து விடுவது போல் இங்கும் இருக்கும் என்று எண்ணிக் கொண்டது என் தவறு தான். நதியை அடைய சுமார் 100 அடி உயர கரடுமுரடான செங்குத்தான பாதையைக் காட்டி, இதில் இறங்க வேண்டும் என்றார்கள். எங்களுக்கு வழிகாட்ட கைடு போன்ற ஒருவர் இருந்தார். அவர் இருப்பதிலேயே சுலபமான வழி இது தான். நான் தினமும் இதில் நான்கைந்து முறை ஏறி இறங்குகிறேன் என்றார். நாங்கள் அனைவரும்  அவரை ஆச்சர்யத்துடன் பார்த்தோம். பின்னே... நாமெல்லாம் தெருமுனையில் இருக்கும் கடைக்குக் கூட ஸ்கூட்டரில் பறக்கும் ஆட்களல்லவா?! ' நம்பி வாருங்கள்..' என்று புன்னகையுடன் கூறி திரும்பிப் பார்க்காமல் சர சர வென இறங்கலானார். நாங்களும் நம்பிக்கை பெற்று இறங்கலானோம். ஆனால் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று பத்து அடி தூரம் இறங்கியவுடன் புரிந்தது. பிடித்துக் கொள்ள ஏதுவாக ஒன்றும் இல்லை. இருந்ததோ புற்களும் செடிகளும் தான். அவற்றை ஒரு கிரிப் புற்காக பிடித்தால் அவை கையோடு பெயர்ந்து வந்தன. வழியெங்கும் பாறைகள் மட்டுமே. சமயங்களில் பாறைகள் அசைந்தன. இவ்வளவு steep ஆனது எனத் தெரிந்திருந்தால் இறங்கியிருக்கவே மாட்டேன் என்று ரவி சொல்லிக் கொண்டே வந்தார். இளைஞர்கள் அனைவரும் கைகொடுத்து பெண்களையும், மற்றவர்களையும் இறக்கிவிட்டனர். அவர்களே மிகுந்த சிரமத்துடன் தான் இறங்கினர். இதில் காமெடி என்னவென்றால் அவர்களே மிகுந்த சிரமத்துடன் தான் இறங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் வாய் சவடாலாக,' அங்கிள், ஆண்ட்டி பாவம்... எப்படி இறங்குவார்கள்!' என உச் கொட்டிக் கொண்டே வந்தார்கள். அட்டா... நம்மை ஏதோ சீனியர் சிட்டிசன் ரேஞ்சுக்கு ஆக்குகிறார்களே என எனக்குத் தோன்றியது.
 ' We are FIT pa.. regular ஆக வாக்கிங் சென்று வருகிறோம்.'
        Breathtaking view என்று கூறுவார்களே.. அது என்ன என்று அன்று தான் உணர்ந்தேன். அழகிய பசுமையான தோற்றம். சுமார் நூறு அடி உயரமெங்கும். இத்தனை தூரம் நாம் இறங்கி வந்து விட்டோமா என்று எனக்கே மிக ஆச்சர்யமாக இருந்தது. நதியில் தண்ணீர் அங்கும் இங்குமாகத் தேங்கி இருந்தது. சிறிதும் பெரிதுமான கற்கள். மலையிலிருந்து ஆற்று நீரால் அடித்து வரப்பட்ட கற்கள். கைடு, காலை வேளையில் அடர்ந்த மரங்களிலிருந்து பறவைகள் வந்த வண்ணம் இருக்கும். இப்போது இல்லை, இனி மாலையில் திரும்ப வரும் என்றார்.பைனாகுலர் மற்றும் காமிராக்கள் மூலம் இலைகளின் ஊடே நாங்கள் தேடினோம் ஒன்றும் புலப்படவில்லை. ஆற்று நீரில் ,தெளிந்த நீரோடையில் மீன்கள் நீந்திய வண்ணம் இருந்தன. சிறுமி ஒருத்தி எங்களுடன் பயணித்தாள். அவள் ஆவலுடன் மீன்களை ரசித்துக் கொண்டிருந்தாள்.இளைஞர் ஒருவர் கைக்குட்டையைப் பயன்படுத்தி மீன்களைப் பிடிக்க முயன்றார். பெண்களின் கும்பலோ செல்ஃபி எடுப்பதில் மூழ்கியது. அகண்ட பரப்பில் அனைவரும் ஒரே மாதிரி நீல வண்ண டி சர்ட் அணிந்து இங்கும் அங்குமாக உலவிக் கொண்டிருந்தோம். பார்ப்பதற்கு அழகாக இருந்தது. 
          Trekking இந்தப் பக்கம் சிறிது தூரம் செல்லலாம் அல்லது அந்தப்பக்கம் சிறிது தூரம் செல்லலாம் என்று கைடு அழைத்துக் கொண்டே இருந்தார். ஆனால் யார் காதிலும் விழவே இல்லை. அன்று திங்கட்கிழமை. ஆதலால் பணிநிமித்தம் ஆண்கள் பலருக்கும் ஃபோன் கால்கள் வந்து கொண்டே இருந்தன. Designer ஆகப் பணிபுரியும் பெண் ஒருவரும் எங்களில் இருந்தார். அவர் தன் client களிடம், ' நான் சில நாட்களுக்கு இருக்க மாட்டேன். அதற்குப் பதில் என்னுடைய உதவியாளர் இருப்பார். உங்கள் தேவையை நீங்கள் அவரிடம் கூறலாம். அவருக்கு கன்னடம் மட்டுமே தெரியும். ஆனால் ஒன்று கூறிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் என்னிடம் எதிர்பார்க்கும் அதே சேவையை அவனிடம் எதிர்பார்க்க முடியாது' என்று கூறிக் கொண்டிருந்தார். பெரும்பாலும் அனைவரும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தனர். எனக்கு இந்தி புரியும் என்பதால் சில சமயங்களில் என்ன சொல்கிறார்கள் என்று ரவி கேட்கும் போது நான் மொழி பெயர்த்துக் கூறுவேன். 
           இப்படியே அரை மணி நேரம் கழிந்தது. திரும்ப கிளம்ப வேண்டிய நேரம் வந்தது. வந்த வழியே தான் செல்ல வேண்டுமா, வேறு வழி எதுவும் உள்ளதா என்று அனைவரும் ஏக்கமாக கைட் ஐ வினவினர். ' இருப்பதிலேயே சுலபமான வழி இது தான். இறங்குவதை விட ஏறுவது சுலபம். இறங்கும் போது பள்ளம் இருந்தால் பாரத்துப் பார்த்து காலை வைத்து இறங்க வேண்டும். இப்போது ஒரே மூச்சாக ஏறிவிடுங்கள்.' என்றார். நான் திரும்பி ரவியிடம் விளக்க முற்பட்ட போது,' புரிந்து விட்டது. வந்த பாதையிலேயே தான் திரும்ப ஏற வேண்டும். அப்படித்தானே?' என்றார். கைட் புன்னகையுடன்,'ஜி..சாப்..' என்றார். ' உங்கள் காமிராவை வேண்டுமென்றால் நான் தூக்கிக் கொள்கிறேன்' என்றார். சந்தோசமாக அவரிடம் ஒப்படைத்து விட்டு ஏற ஆரம்பித்தோம். 
       படபடவென நெஞ்சு அடித்தது. எகிடுதகிடாக heartbeat ஏறியது. இரண்டு இடங்களில் உட்கார்ந்து ஏறினோம். கால்கள் நடுங்கின. என்றாலும் மனம் தளராமல் ஏறினோம். வெகு தூரம் கடந்து வந்தாற் போல உணர்வு. ஏக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தால் பாதி தூரமே கடந்திருந்தோம். ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் ஏறினோம். ஏசா ஐலசா என்று பாடாத து ஒன்று தான் பாக்கி.கடைசியில் அனைவரும் ஏறி விட்டோம். ஐயோ.. அம்மா என்று புலம்பியவாறு வண்டிக்கு நடந்தோம்.உஸ்...உஸ்..உஸ்.. என்ற பெரு மூச்சு அனைவர் வாய்களிலும். 
            இந்த அனுபவத்தின் போது எடுத்த புகைப்படங்களை tour guide சொன்னது போல் bird watching and trekking on the banks of River Kosi என்ற தலைப்பிட்டு whatsappஇல் என் நண்பர்கள் மத்தியில் share செய்தேன். அவர்களுக்கு உற்சாகம் கரை புரண்டு விட்டது. ' sounds interesting.. please share your experiences ' என்று வேண்டிக் கேட்டனர். எனக்கோ ஒரே ஆச்சர்யம் ' என்ன experience இருந்தது ? share பண்ண்ணுவதற்கு! ' என்று. சரி , கேட்டதைச் செய்வோம் என்று துணிந்து எழுதிவிட்டேன்...ஆனால் மனதிற்குள் ஒரு சிறு சந்தேகம்.. இனி இது போல் துணிந்து கேட்பார்களா? share பண்ணச் சொல்வார்களா?!... ஆனால் நம்பிக்கை தானே வாழ்க்கை! நம்பிக்கை கொள் மனமே!
- முருகேஸ்வரி ரவி.
    



ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட், நைனிடால் போன்ற ஊர்களின் பெயர்களை சிறு வயதில் புவியியல் பாடப்புத்தகங்களில் படித்த ஞாபகம். அவற்றைப் பற்றி வேறு ஒன்றும் தெரியாது. சில நாட்களுக்கு முன் பெங்களூரு சென்றிருந்த போது நண்பன் அசோக் குமார் மூலம் விஷ்ருத் எனும் இளைஞரின் தொடர்பு கிடைத்தது. அவரும் புகைப்படக்கலை மற்றும் wild life இல் ஆர்வம் உள்ளவர். அக்டோபர் மாதத்தில் ஜிம் கார்பெட் பயணம் செய்கிறோம், நீங்களும் வாருங்கள் என அழைத்தார். உற்சாகத்துடன் ஒத்துக் கொண்டேன். முதல் ஆளாய் எனக்கும் முருகேஸ்வரிக்கும் பணத்தைக் கட்டினேன். அந்தப் பயண அனுபவத்தை உங்களுடன் இப்போது பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
       அதற்கு முன் ஜிம் கார்பெட் பற்றி...இந்தியாவின் மிகப் பழமையான சரணாலயங்களில் ஒன்று. உத்தர்காண்ட் மாநிலத்தின் நைனிடால் மாகாணத்தில் அமைந்த இந்தப்பூங்கா wild life tourist களின் விருப்பத் தேர்வாகும். அதன் அடர் வனப்பகுதியும், பல தரப்பட்ட தாவரங்களும், விலங்குகளும் இயற்கை விரும்பிகளுக்குப் பெரும் தீனி ஆகும். இதன் பரப்பளவு கிட்டத்தட்ட 200 சதுர மைல்கள் ஆகும். அழிந்து கொண்டிருந்த விலங்குகளையும், காட்டையும் பெரு முயற்சி செய்து காப்பாற்றிய எழுத்தாளரும், இயற்கை ஆர்வலருமான ஜிம் கார்பெட் நினைவாக இப்பெயர் 1955இல் சூட்டப்பட்டது.
          சரி.. இனி பயணம் பற்றி. பயணத்திற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே என் எண்ணம், சிந்தனை, செயல் ஆகிய அனைத்திலும் ஜிம் கார்பெட்டே வியாபித்திருந்தது. என் காமிராவிற்கு லென்ஸ் கோட் என்னும் உறை, காமிராவிற்கு பீன் பேக் என அமர்க்களப்படுத்தினேன். போய் இறங்கும் போதே இருவரும் ஒரே மாதிரி உடை அணிய வேண்டும் என்று முடிவு செய்தோம் ஜீன்ஸ் பேண்ட், கருப்பு டி சர்ட் என முடிவு செய்து வாங்கினோம். அக்டோபர் 27ம் வந்தது. வாட்ஸ் அப், ஃபேஸ் புக் என்று அனைத்திலும் ஸ்டேட்டஸ் தட்டி விட்டேன். காமெண்ட்கள் எகிறின. ஏதோ ரஜினி, விஜய் படம் ரிலீஸ் ஆவது போல் ஏகப்பட்ட ஹைப்...அத்தனையும் கடந்து டில்லி சென்றடைந்தோம். அங்கிருந்து ஒரு வேன் மூலம் ஜிம் கார்பெட் செல்வதாக பிளான்.
      நாங்கள் காலை ஒன்பது மணிக்கு டில்லி சென்றடைந்து விட்டோம். பெங்களூரிலிருந்து சிலர் எட்டு மணிக்கெல்லாம் வந்து விட்டனர். இன்னும் சிலர் சென்னையிலிருந்து  வர வேண்டும் என்பதால் அவர்களுக்காக விமான நிலையத்தில் காத்திருந்தோம். காத்திருக்கும் வேளையில் எங்களுடன் பயணித்த குழுவைப் பற்றி சிறு அறிமுகம். அனைவரும் முப்பதுகளில் உள்ள இளைஞர்கள். பெண்கள் இருவர். கணவன் மனைவியாக இளம் தம்பதி இருவர்.குடும்ப சகிதம் சிறு குழந்தையடன் ஒருவர்.( மூன்றாம் வகுப்பு படிக்கும் அந்தப் பெண் குழந்தையின் பெயர் சுப்பு லஷிமி. அவளின் தாயின் பெயர் நைனா. நான் வெகு நேரம்வரை குழந்தையின் பெயர் நைனா, தாய் சுப்பு லஷிமி என நினைத்துக் கொண்டிருந்தேன்.) குழுவிலேயே நாங்கள் தான் வயதில் மூத்தவர்கள். ஆண்ட்டி, அங்கிள் என அனைவரும் பவ்யமாக மிகவும் மரியாதையுடன்  நடத்தினர். இந்நேரம்., நாங்கள் கிளம்பும் முன் ஃபேஸ் புக் மற்றும் வாட்ஸ் அப் இல் பகிர்ந்த புகைப்படங்களுக்கு நண்பர்கள் அனைவரும் இட்ட காமெண்ட்கள் நினைவுக்கு வந்தன.. newlyweds, honeymoon couples, ஜோடிப் புறாக்கள்,etc., ... எங்கள் நண்பர்கள் ஒரு extremeக்குப் போய் இப்படி கமெண்ட்ஸ் அளித்திருந்தனர். இங்கே இவர்கள் நாங்கள் ஏதோ முதியவர்கள் போல ட்ரீட் செய்தனர். What an irony! We are not that young!! At the same time, We are not that old ! 
             சில மணி நேர காத்திருப்பிற்குப் பின் வேன் வந்தது. அதற்குள் மதியம் ஆகிவிட்டபடியால் கர்நாடக பவன் சென்று மதிய உணவை முடித்துக்கொள்ள கொண்டு ஒரு வழியாக ஜிம் கார்பெட் நோக்கி புறப்பட்டோம். பயணமெங்கும் பாட்டுகள் பாடிக்கொண்டோ, வொர்ட் கேம் விளையாடிக்கொண்டோ அல்லது புதுமையான மாஃபியா கேம் ஒன்று விளையாடிக் கொண்டோ வந்தனர். அவ்வப்போது வித விதமான நொறுக்குத் தீனிகள் வலம் வரும். நாங்கள் இப்போது டில்லியைத் தாண்டி உத்தரப்பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். இந்தியாவின் மிகப் பெரிய மாநிலம், ஐந்து பிரதமர்களைத் தந்த மாநிலத்தின் கதி பரிதாபமாக இருந்தது. சீரான சாலைகள் இல்லை, சாலை விளக்குகள் இல்லை. மொரடாபாத் என்னும் ஊருக்கு அருகில் பீக்கானர்வாலா என்னும் மிகப்பெரிய ,அழகிய உணவகத்தில் டீ அருந்துவற்காக நிறுத்தினோம். அங்கு விதவிதமான பலகாரங்கள் இருந்தன. பொதுவாக வடக்கிந்திய பலகாரங்களைப் பெரிதும் விரும்பாத நான் முருகேஸ்வரியிடம் வேண்டியதை வாங்கிக் கொள்ளும் படி கூறினேன். ஆனால் அவளோ வரும் நாட்களில் அளவில்லாமல் சாப்பிடப் போவதால் ஒன்றும் வேண்டாம் என்று கூறிவிட்டாள். அன்று தான் முதல் முதலாக பானி பூரியை சுவைத்தேன். அதன் இனிப்பும் புளிப்புமான சுவை எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. நமக்கெல்லாம் சமோசா தான் சரிப்பட்டு வரும்.
       இரவு தான் ஜிம் கார்பெட் போய் சேர்ந்தோம். எங்களுக்காக உணவு எடுத்து வைத்திருந்தார்கள். நாங்கள் தங்கிய ஹோட்டலின் பெயர் கஜராஜ் trails. ராம்நகர்(இங்கிருந்து தான் அனைத்து சஃபாரிகளும் கிளம்பும்) என்னும் ஊரிலிருந்து சுமார் அரை மணி நேர பயண தூரத்தில் இந்த ஹோட்டல் இருந்தது. இங்கு ஸ்விம்மிங் பூல், ஜிம், டேபிள் டென்னிஸ் என்று சகல வசதிகளும் இருந்தன. உணவும் சிறப்பாக இருந்தது. மூன்று வேளையும் சுவையான, சுகாதாரமான உணவு உண்டோம். அனைவரும் காலையில் ஐந்தரை மணிக்கே தயாராக வேண்டும் என்பதால், மற்றும் மிகவும் டயர்டாக இருந்ததால் ஓய்வெடுக்கத் தயாரானோம். மறு நாள் சஃபாரி  செல்வதால், இன்று சிறிது ஹோம் வொர்க் செய்யலாம் என கூகுள் துணையை நாடினேன்.(காட்டுக்குள்ளே இண்டர்நெட் ஆ? என்ற உங்களின் கேள்வி எனக்குக் கேட்கின்றது. ஜியோ (Jio) இருக்க பயமேன்? ) ஜிம் கார்பெட் எனபது இமயமலையின் சிவாலிக் ரேஞ்ச் ( ஏழாம் வகுப்பு புவியியல் பாடம் ஞாபகத்திற்கு வருகிறதா?) என்னும் மலையடிவாரத்தில் குமாயுன்( kumaon) காடுகளில் அமைந்துள்ளது. இதன் வனப்பகுதியை Dhikala zone, Bijrani zone, Jhirna zone, Durgadevi zone என பிரித்து வைத்துள்ளார்கள். ஜீப் சஃபாரி, யானை சஃபாரி, canter safari( இது குறிப்பிட்ட சில காலத்துக்கு மட்டுமே கிடைக்கும, நாங்கள் சென்ற போது இல்லை.) 
           அதிகாலையில் ஜீப் எங்கள் ஹோட்டலுக்கே வந்து விட்டது. மூன்று ஜீப்களில் , ஒவ்வொன்றிலும் ஆறு பேர் சகிதம் எங்கள் சஃபாரியைத் துவங்கினோம். நாங்கள் முதலில் சென்றது jhirna zone. நான் முதலில் கண்டு வியந்தது இந்தக் காடுகளைக் கண்டு தான். கபினி.. கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ளது. அதன் காடுகளை என் மனம் இந்தக்காடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து அசந்து தான் போனது. அடர் வனம் என்பது இது தான். நெடிதுயரந்த மரங்கள். இடைவெளி இல்லாமல் நெருக்கமான விதவிதமான மரங்கள். சூரிய ஒளி உள்ளே ஊடுருவ முடியாத வண்ணம் இரு புறமும் ஓங்குதாங்கான மரங்கள், அவற்றின் இடையில் ஜீப் செல்வதற்கான மண் பாதை. இந்தப் பாதையில்பல இடங்களில் புலியின் காலடித்தடங்களைக் கண்டோம். சில நீரோடைகள் வழிகளில் இருந்தன. எனக்கு அவற்றின் பெயர்கள் தெரியவில்லை. விலங்குகள் அங்கு தண்ணீர் பருக வரும் வேளையில் காணலாம் என ஜீப் டிரைவர் கூறினார். புல்வெளிகளும் இருந்தன. புற்களின் உயரம் சுமாராக ஆறடி இருக்கும். அவற்றின் இடையில் விலங்குகளை ஊடுருவிக் காண்பது என்பது சற்று கடினமான காரியம் தான். ஆனால் விலங்குகளை இவ்வாறு வனச்சூழலில் காண்பது தானே திரில். அவற்றை கிட்டே நின்று ரசிக்க வேண்டும் என்றால் நாம் ஜூ (zoo)விற்கு அல்லவா செல்ல வேண்டும். பறவைகளின் சொர்க்கம் என்று இந்த zone ஐக் கூறலாம். நான் அறிந்த பறவைகள் தவிர புதிதாக பல பறவைகளையும் பார்த்தேன். அதன் பட்டியல் இதோ....Scarlet Minivet, Black hooded Oriole, White throated Kingfisher, Black Winged Kite, Scaly Breasted Munia, Red Vented Bulbul, Oriental Magpie Robin, White Browed Wagtail, House Sparrow, Blue Whistling Thrush, Asian Pied Starling, Himalayan Bulbul,Baya Weaver, River  Lapwing, Siberian Stonechat, Plum Headed Parakeet, Crested Goshawk. எந்த பறவையைக் கண்டாலும் ஜீப்பை நிறுத்தி புகைப்படம் எடுத்தேன். வாகனத்தில் இருந்த அனைவரும் இன்முகத்துடன் புகைப்படத்தைப் பார்த்து பறவைகளைப் பற்றிய விபரத்தை கேட்டு அறிந்து கொண்டனர். ஜீப்பில் வந்த naturalist தன்னுடைய செல் போனில் உடனுக்குடன் பறவையைப் பற்றி விவரத்தையும் பெயரையும் கூறினார். என்னுடைய பறவை மீதான ஆர்வத்தைப் பாரத்து, சார் நீங்கள் இரண்டு பேர் மட்டும் தனியாக வந்தால் இன்னும் அதிக பறவைகளைப் பொறுமையாகப் பார்க்கலாம் என்றார். குரங்குகள் பலவற்றைப் பார்த்தாலும் புது வகை ஒன்றை இங்கு தான் கண்டேன். Pigtail macaque... இதன் பின் புறம் பிங்க் நிறத்தில் இருந்தது. வால் குட்டையாக இருந்தது. நடந்து சென்ற இதன் பின்புறத்தை மட்டுமே என்னால் புகைப்படம் எடுக்க முடிந்தது. பொதுவாக குரங்குகள் பெர்ரி மரங்களின் மீதே அதிகம் காணப்பட்டன. அவற்றின் பழங்களை உண்டு அவை வாழ்கின்றன என அந்த naturalist கூறினார். மணி ஒன்பது ஆனதும் காட்டை விட்டு வெளியேறினோம். காலை உணவுக்குப் பின் ஓய்வு. இனி அடுத்த சஃபாரி மதியம் இரண்டு மணிக்கு. இம்முறை bijrani zone இல். மிக அடர்ந்த காட்டுப் பகுதியான இதில் புலிகளின் நடமாட்டம் அதிகமாம். புலிகளைப் பார்ப்போமா? எங்களுக்கு அந்த அதிர்ஷ்டம் கிட்டுமா? அனைவரும் மதிய சஃபாரிக்காக காத்திருந்தோம்..
               மதிய உணவை முடித்துக் கொண்டு ராம்நகர் சென்றோம். அங்கிருந்து bhijrani செல்ல வேண்டும். ஆளுக்கொரு பைனாக்குலர் கொண்டு காடுகளை ஊடுருவிப் பாரத்துக் கொண்டே வந்தோம். மான்களும், குரங்குகளும் மட்டுமே எங்களுக்கு காட்சி அளித்துக் கொண்டிருந்தன. புலிகளைக் காண முடியாது போலும் என மனம் சலித்த வேளையில், டிரைவர் படக்கென வண்டியை நிறுத்தி, ' அதோ பாருங்கள்..புலி' என்று கை காட்டினார். அனைவரும் ஆவலுடன் பாரத்தோம். சிறிது தொலைவில் ஆற்றங்கரையிலிருந்து புலி ஒன்று சரேலென காடுகளில் சென்று மறைந்தது. தகதக்க்கும் மஞ்சள் வண்ண மேனியுடன் அது ஒய்யாரமாக நடந்து அடர்ந்த புதர்களுக்குள் சென்றது. எனது காமிராவில் continuous shot போட்டு விடாமல் சுட்டுத் தள்ளினேன். அது இருந்ததோ சுமார் இருநூறு மீட்டர் தூரத்தில். அவ்வளவு தூரத்தை ஆறு கிலோ எடை கொண்ட காமிராவில் நொடியில் ஃபோகஸ் செய்து படம் பிடிப்பது ஒன்றும் எளிதான காரியம் அல்ல. ஆனாலும் புலியைக் கண்டு விட்ட சந்தோசத்தில் அது மிகவும் இலகுவாக வந்தது. மீண்டும் புலி கண்ணில் படுமா என்று சுற்றி சுற்றி வந்தோம். ஆனால் நாங்கள் மீண்டும் அதனைப் பார்க்கவில்லை. மாலை ஆறு மணிக்குள் வனத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் என்பதால் வெளியேறினோம். டீ குடிப்பதற்கு அங்கிருந்த 'ஷில்பா ரெஸ்டாரண்ட்' இல் அமரந்து கொண்டு மூன்று ஜீப்களில் பயணம் செய்த அனைவரும் அவரவர் அனுபவங்களை, புகைப்படங்களை ஒருவருக்கொருவர் காட்டி அளவளாவிக் கொண்டிருந்தோம். ரெஸ்டாரண்ட் இன் டேபிள் காமிரா, பைனகுலர் மற்றும் பிஸ்கட் களினால் நிறைந்து வழிந்தது. மனமும் புலியைக் கண்ட சந்தோசத்தினால் நிரம்பி வழிந்தது. அறைக்குத் திரும்பினோம். கேம்ப் ஃபயர் போட்டு அனைவரும் புல்வெளியில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். மறு நாள் ஞாயிற்றுக்கிழமை ஆதலால் நைனிடால் செல்வது என முடிவு செய்தோம்.
                    நைனிடால் எனும் மலைவாசஸ்தலம் ...நகர இயந்திர வாழ்க்கையினால் பாதிக்கப்படாமல் இன்னும் இயற்கை அழகு பாதுகாக்கப்படுகின்றது. நகருக்கு மூன்று கிலோ மீட்டர் தொலைவிலேயே பஸ், வேன் போன்ற பெரு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. ஊருக்குள் செல்ல சிறிய வாடகை உந்துகள்( taxi) கிடைக்கின்றன. குன்றுகளுக்கே உரித்தான மேடும், பள்ளமுமான குறுகிய சாலைகள், ஆர்ப்பாட்டமான மேற்கத்திய பாணியிலான உணவு விடுதிகள் இன்றி தெருவோர, மற்றும் சுதேசி உணவு தயாரிக்கும் சின்னஞ்சிறு உணவு விடுதிகள், கேள்வி கேட்டால் கள்ளமில்லாமல் பதிலளிக்கும் உள்ளூர் வாசிகள், ஏமாற்றாமல் உள்ளபடியே சரியான விலையைப் பகரும் தெருவோர வியாபாரிகள் என நைனிடால் என்னை மிகவும் கவர்ந்தது. ஊரின் பிரதான attraction ஏரி தான். அதனைச் சுற்றி சுற்றுலாப்பயணிகளுக்கென குதிரை சவாரி, உணவு வண்டிகள், பலூன் சூட்டிங், பாஸ்கட் பால் கோர்ட் என கவனத்தைக் கவரும் பல இருந்தன. சுற்றிலும் பசுமை போர்த்திய மலைகள், நடுவே பளிங்கு போன்ற நீருடன் ஏரி. விசைப்படகுகள் இல்லாமல் துடுப்பு படகுகள் மட்டுமே இருந்தன. ஏரியில் weed எனும் புல்லுருவி எதுவும் இல்லை. நாங்கள் அதன் அழகில் சொக்கித்தான் போனோம். Rock climbing, parasailing, rope car போன்ற இளைஞர்கள் விரும்பும் adventure sports பல இருந்தன. ஆனால் நேரமின்மை காரணமாக எங்கள் குழு இவற்றிற்குச் செல்லவில்லை. இங்கு ஹிந்தி தான் பேச்சு மொழி என்பதால் எனக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியில் பலரிடமும் கேள்வி கேட்ட வண்ணம் இருந்தேன்.( படகுக்காரர், உணவு விடுதி உரிமையாளர், குல்லா விற்பவர், maggi விற்பவர்) இது போன்ற எளிய மக்களிடம் பேசினால் மனம் நிறைவடைகிறது. மாலை நான்கு மணியளவில் நைனிடாலுக்கு பை..பை சொல்லி விட்டு கஜராஜுக்கு கிளம்பினோம். இன்னும் ஒரு நாள்சஃபாரி இருக்கின்றது.
              கடைசி நாள் இரண்டு சஃபாரிகளுமே bijrani zone இல் தான் என்றார்கள். இது தவிர trekking by Kosi riverside என்றார்கள்.( அந்த அனுபவத்தை தனியாகப்பார்க்கலாம்). அதிகாலையில் புற்களின் மீது பனித்துளிகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாய் இருந்தது. மான்கள், குரங்குகள், என்று இன்றும் தொடர்ந்தது. சாலையில் கிங் கோப்ரா எனும் மிகப்பெரிய மலைப்பாம்பு ஊர்ந்து புதர்களில் மறைவதைக் கண்டோம் என்னால் அதன் வாலை மட்டுமே புகைப்படம் எடுக்க முடிந்தது. மாலையில் யானைக் கூட்டம் ஒன்றைக் கண்டோம். குட்டியானை இரண்டு , பெரிய யானைகள் ஐந்து என அவை கூட்டமாக ஆற்றில் நடந்து, தண்ணீரில் விளையாடிய வண்ணம் கடந்து கொண்டிருந்தன. நாங்கள் ஜீப்பை ஆஃப் செய்து விட்டு வெகு நேரம் அவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். உற்சாக மிகுதியால் கத்தினவா அல்லது சண்டையிட்டுக் கொண்டிருந்தனவா எனத் தெரியவில்லை. ஆனால் பிளிறிக் கொண்டே இருந்தன. சூரியன் மெல்ல மறைந்து கொண்டிருந்தது. நாங்கள் திரும்ப வேண்டிய நேரமும் வந்தது. யானைகளைக் கண்ட சந்தோசத்துடன் அனைவரும் ஷில்பா ரெஸ்டாரண்ட்க்குத் திரும்பினோம். சிறிது அளவளாவி பின் மறு நாள் காலை உணவுக்குப் பின் டில்லிக்கு கிளம்புவது என முடிவு செய்தோம். 
          ஜிம் கார்பெட் அனுபவம் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது என்றவுடன் மனம் கலங்கியது. நான்கு நாட்களாக சென்று வந்த அதே பாதை, உண்டு வந்த அதே உணவகம், உறவினர் போல் அன்பு பாராட்டிய புதிய நண்பர்கள், சீராக வேனை செலுத்திய டிரைவர் போன்றவற்றிற்காக மனம் ஏங்கியது. ஆனால் கடமை அழைப்பது நினைவுக்கு வர மனம் சமாதானம் அடைந்தது. டில்லி நோக்கி பயணிக்கலானோம். உத்தர்காண்ட் சிறிய மாநிலமென்றாலும் அழகாக இருந்தது, சாலைகள் பழுதின்றி அமைந்திருந்தன. விவசாயம் சிறந்த மாநிலமாக இருந்தது. நதிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. பல தொழிற்சாலைகள் அங்கு அமைந்திருந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டேன். அதனைத் தாண்டி உத்தரப்பிரதேசத்தை அடைந்தவுடன் வித்தியாசத்தைக் கண்கூடாக்க் கண்டேன். அங்கு எதிலும் செழிப்பில்லை. முன்னேற்றம் என்ற சொல் வெகு தொலைவில் இருந்தது. காற்று மிகவும் மாசு பட்டு இருந்தத்தால் எங்கும் புகை மூட்டமாக இருந்தது. பஸ், கார் போன்றவற்றில் பயணிப்பதை விட இங்குள்ளவர்களுக்கு டிராக்டரில் நின்று கொண்டே பயணிப்பது தான் மிகவும் பிடிக்கும் போலிருக்கிறது. பலர் கூட்டம் கூட்டமாய் இப்படி பயணம் செய்து கொண்டிருந்தனர். வழி நெடுக ரோட்டோரங்களில் பிரம்பினால் செய்த நாற்காலி மற்றும், கூடைகள் விற்பனை செய்யும் கடைகள். ஜன்னலோரத்தில் அமர்ந்து இப்படி வேடிக்கை பாரத்துக் கொண்டே வந்தேன். மாலையில் பெரும் டிராபிக்கில் நீந்தி டில்லி விமான நிலையம் வந்தடைந்தோம். ஒன்பது மணிக்கு ஃபிளைட்... அருணா மெசேஜ் அனுப்பி இருந்தாள்,' Daddy..it's raining heavily here' என்று. மனம் புலி, யானை, மான், சஃபாரி என்பனவற்றிலிருந்து மீண்டு நிகழ் உலகுக்குத் திரும்பியது. பறக்க ஆரம்பித்தோம்...
       - அ. ரவி.

இந்த அனுபவத்தில் என்னால் இரு சம்பவங்களை நினைத்தால் சிரிக்காமல் இருக்க முடியாது. நான் புதிய காமிரா வாங்கிய உடன் என்னுடைய பழைய காமிரா வேலையின்றி சும்மா தான் இருந்தது. ஊருக்குப் புறப்படும் முருகேஸ்வரியிடம் அதனை பயன்படுத்துமாறு கூறினேன். அவளும் சிரமேற்கொண்டு அனைத்து சஃபாரிகளுக்கு அதை எடுத்துக்கொண்டு வருவாள். ஆனால் ஒரு முறை கூட அதைப் பயன்படுத்தி நான் பார்க்க வில்லை. ஒரு முறை மான்கள் நின்று கொண்டிருப்பதை நான் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தேன். அவளிடம் மான்கள் நின்று கொண்டு தான் இருக்கின்றன. அவற்றை புகைப்படம் எடுக்கலாமே என்றேன். அவளும் ம் கொட்டியவாறு ஸ்லோ மோஷனில் காமிராவை வெளியே எடுத்து ஃபோகஸ் செய்ய ஆரம்பித்தாள். அதற்குள் மான்கள் ஓடிவிட்டன. அடுத்த முறை எடுக்கிறேன் என்று கூறி காமிராவை திரும்பி உள்ளே வைத்து விட்டாள். நீ தயாராகும் வரை மான்கள் உனக்கு pose கொடுத்துக் கொண்டு நிற்குமா? என நான் கிண்டல் செய்தேன்.
மற்றொன்று....என் அருகிலிருந்த யூசுப் என்ற இளைஞன் சஃபாரி செல்லும் வேளையில் பாதி நேரம் தூங்கிக் கொண்டிருந்தான். நாங்கள் அனைவரும் விலங்குகளைத் தேடிக் கொண்டிருக்கும் வேளையில் அவன் உறங்கிக் கொண்டிருப்பான். நாங்கள் ஏதாவது ஒன்றைப் பார்த்து உற்சாக மிகுதியில் கத்தும் போது விழிப்பான். அவன் பாரப்பதற்குள் அது ஓடி ஒளிந்து விடும். ஆனால் அதற்கெல்லாம் அசரவில்லை. விட்ட தூக்கத்தைத் தொடர்ந்தான். ஆனால் நல்ல பையன். உதவும் குணம் மிக்கவன், நானோ முருகேஸ்வரியோ ஏதாவது தூக்கிக் கொண்டு வந்தால், உடனே வந்து வாங்கிக்கொண்டு உதவினான். அவன் மனைவி அலிஃபியாவும் enthusiastic பெண். டூரிலேயே மிகவும் கலகலப்பானவள் அவள் தான். Very nice couple.