நெருப்பை உமிழ்ந்தபடி அங்குமிங்கும் பறக்கும் டிராகன்கள், தீ வெப்பத்தினால் தாக்கமுடியாத நாயகி, சூனியக் கிழவிகள் என்று நம்ப முடியாத சூழல்களைத் தன்னகத்தே கொண்ட கதை இது என்றால் நீங்கள் என்ன கூறுவீர்கள்? இது அம்புலிமாமா கதை, குழந்தைகளுக்கானது என்று நகைப்பீர்கள். ஆனால் இத்தகைய ஃபேண்டஸி கதையான ' கேம் ஆஃப் த்ரோன்ஸ்' (Game of Thrones) தான் இன்றைய நம்பர் ஒன் சீரிஸ். HBO வில் ஒளிப்பரப்பாகும் இத்தொடர் உலகெங்கும் உள்ள கோடிக்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. ரசிகர்கள் என்றால் வெறுமனே பார்த்து ரசிப்பவர்கள் அல்ல. அவர்கள் பேச்சு, சிந்தனை, செயல் எங்கும் இத்தொடர் வியாபித்து நிற்பதை அவர்களுடன் பேசினால் அறிந்து கொள்ளலாம். இதன் ரசிகர் ஒருவருடன் பேசிப் பாருங்கள் அவர் வாய் ஓயாது அதனைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார். நீங்கள் அதன் கதை அறியாதவர் எனில் அதைப்பற்றி உங்களிடம் விவரிப்பார், அறிந்தவர் எனில் அதைப் பற்றி உங்களிடம் விவாதிப்பார்.
சுருங்கக் கூறினால் ஏழு பெரும் தேசங்களை உள்ளடக்கிய பெரிய சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி யார் என்று சண்டையிட்டுக் கொள்வதே கதை. யூகிக்கவே முடியாத திருப்பங்களும், நினைத்துப் பார்க்கவே முடியாத கதை நிகழ்வுகளும் கொண்ட பிரம்மாண்டமான அரண்மனைச் சதி தான் கேம் ஆஃப் த்ரோன்ஸ். வெஸ்ட்ரோஸ் அரசின் இரும்பு சிம்மாசனத்தைக் கைப்பற்ற பல சக்திகள் போராடுகின்றன. கதையின் பெரும் பகுதி வெஸ்ட்ரோஸ் (Westeros) இலும் எல் காஸோ(El Caso)இலும் நடக்கிறது. இந்த இரு கண்டங்களிளையும் பிரிப்பது Narrow Sea. ஏழு நிலங்களைத் தன்னகத்தே கொண்ட வெஸ்ட்ரோஸை ஆள்பவர் Kings Landing என்னும் இடத்திலும், இவர்களை அழித்து டிராகன்களின் துணையோடு இழந்த ராஜ்யத்தை கைப்பற்றத் துடிக்கும் ட்நேரியஸ் டார்க்கேரியன்(Daenerys Targaryen)க்கும் இடையே நடக்கும் கதை தான் கேம் ஆஃப் த்ரோன்ஸ். பல்வேறு சதிகளும், தந்திரங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கையில் பிராந்தியத்தின் தடுப்புச்சுவரான 'வொயிட் வால்' க்கு புறத்தே இருக்கும் பனிப் பிரதேசத்திலிருக்கும் வைல்ட்லிங்க்ஸ்(wildlings) மற்றும் வொயிட் வாக்கர்ஸ்(white walkers) எனும் கொடிய சக்திகள் நாட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பிக்கின்றன. இவ்வாறு சுவாரஸ்யமாய் பின்னப்பட்டுள்ள கதையில்ஒவ்வொரு பிரச்சனையும் எவ்வாறு சமாளிக்கப் படுகிறது என்று தொடர் மிகப் பிரமாண்டமாய் விளக்குகின்றது.
இதன் மூல நாவலைப் படைத்தவர் ஆர். ஆர் மார்டின். 1996 ஆம் ஆண்டில் மிகப் பிரபலமாய்த் திகழ்ந்த ' A SONG OF FIRE AND ICE' என்ற மிகப் பெரிய புத்தகத்தொடரின் மறு ஆக்கமே ' கேம் ஆஃப் த்ரோன்ஸ்'. வருடத்திற்கு ஒரு சீசன். சீசனுக்கு பத்து எபிஸோட் என்று பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் இத்தொடர் உருவான விதம் குறித்து ஒரு சுவாரஸ்யத் தகவல். தாங்கள் இளம் வயதில் படித்து ரசித்த நாவலுக்கு திரைக்கதை எழுத அனுமதி வாங்க ஆர். ஆர் மார்ட்டினைச் சந்தித்துப் பேச டேவிட் பெனியாஃப்( David Benioff), டி. பி. வைஸ்(D.B. Weiss) இருவரும் சென்றனர். அப்போது ஆர். ஆர். மார்ட்டின் மிகவும் தயங்கினாராம். தன்னுடைய புத்தகத்தில் வரும் கதாபாத்திரங்களும், சம்பவங்களும் இத்தனை நூதனமானவும் சிக்கலானதாகவும் இருப்பதால் அதனை அத்தனை சுலபமாய் தொலைக்காட்சித்தொடராய் ஆக்க இயலாது என்பதில் உறுதியாய் இருந்தார். விடாது வேண்டுகோள் விடுத்த இருவரிடமும் வெகு நேரத்திற்குப் பிறகு நீண்ட யோசனையுடன்,' நான் சில கேள்விகளைக் கேட்கிறேன். நீங்கள் அவற்றிற்கு சரியான விடை அளித்தால் சம்மதிக்கிறேன்' என்றாராம். பின்னர் நுணுக்கமான சில கேள்விகளைக் கேட்டாராம். கதையின் ரசிகர்களான இருவரும் மிகச்சரியானப் பதிலைத் தந்ததும் புன்னகை ஒன்றையே பதிலாய் அளித்தாராம். அவர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. பிறகு சம்மதம் என்ற தகவல் வந்தது.
HBO மிகப் பிரம்மாண்டமாய்த் தயாரித்து வழங்கிக் கொண்டிருக்கும் இந்தத் தொடர்தான் உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்டது என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. பிரம்மாண்டமாய் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற பெருமையுடன் செறிவான வசனங்களுக்கும் பேர் போனது இத்தொடர். பல்வேறு முக்கிய கதாபாத்திரங்கள் வரப்போகும் ஆபத்தைப் பற்றிப் பேசிப் பேசியே திகிலை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக குளிர் காலம் வரப்போகிறது என்று பலரும் பேசியே நம்முள் குளிர்காலத்தின் மீதான பயத்தை விதைக்கிறார்கள். முத்திரை வசனம் பலர் பேசினாலும் டிரியன் லேன்னிஸ்டர் (Tyrion Lannister) என்னும் குள்ள பாத்திரம் பேசும் வசனம் பொன்மொழிகளாக அதன் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. ' கடவுள் பாதி மிருகம் பாதி' என்று கூறுவதைப் போல் அனைத்து கதாபாத்திரங்களிலும் சிறந்த குணநலன்களும் உண்டு , நயவஞ்சகமும் உண்டு. எவரும் முழுமையாக நல்லவரும் இல்லை, முழுமையாக கெட்டவரும் இல்லை. ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பைத் தூண்டி பின்னர் அதை சிதைக்கும் வண்ணம் அந்தக் கதாபாத்திரத்தைக் கொல்வது தொடரில் சர்வ சாதாரணம். ' அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா..' என்று ஒரு பிரபல வசனம் உண்டு. அதைப் போல நயவஞ்சகமும், சூழ்ச்சியும் அரசியல் என்று வந்து விட்டால் சர்வ சாதாரணம் என்பது போல் நடந்து கொள்கின்றனர். இதைப் பற்றி ஆர். ஆர். மார்ட்டினிடம் கேட்ட போது அவர் கூறினார்,' சிறு சிறு கதாபாத்திரங்கள் மட்டும் சாவதும், நாயகர்களுக்கு மரணம் இல்லை என்று காட்டுவது நேர்மையற்ற செயல். ஃபேண்டஸி எழுத்தாளர் என்றாலும் உண்மையை உரக்க சொல்ல வேண்டும்' என்றார்.
எந்த ஒரு கதாபாத்திரமும் எப்போது வேண்டுமாலும் கொல்லப்படலாம் என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே ரசிகர்கள் இதைப் பார்க்கின்றனர். அதீத வன்முறையும் பாலுணர்வுக் காட்சிகளை தன்னகத்தே கொண்டாலும் நேர்த்தியான திரைக்கதை, அழகிய காட்சியமைப்பு, பொருத்தமான நடிகர்களின் தேர்ந்த நடிப்பு, இம்மியளவும் குறையாத விறுவிறுப்பு போன்றவை தொடரின் வெற்றிக்கு வழிவகுக்கின்றன. இது வரை ஆறு சீசன்களும் எட்டு எபிஸோடுகளும் வெற்றி முழக்கமிடுகின்றன. வயதான படியால் முடிவை( க்ளைமாக்ஸ்) தொடரின் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் ரகசியமாய் பகிர்ந்துள்ளார் ஆர். ஆர் . மார்ட்டின் என்ற வதந்தி இணையமெங்கும் நிலவுகிறது. இணையத்தில் இதன் செல்வாக்கு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. ஒரு முறை தொடரின் தயாரிப்பாளர்கள் எக்ஸ்ட்ரா ரோலுக்கு விண்ணப்பங்கள் வரவேற்ற போது வந்து குவிந்த விண்ணப்பங்களைப் பார்த்து மிரண்டு விட்டனராம். தொடரில் தானும் எவ்வாறாவது இடம் பெற வேண்டும் என்ற நெட்டிசன்களின் பேரவா அலாதியானது. ஒவ்வொரு சீசனிலும் ஒன்பதாவது எபிஸோடு மிகவும் சுவாரஸ்யமாயத் திகழ்ந்துள்ளபடியால் இம்முறையும் அதற்காக அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது கூடுதல் தகவல்.
Good Review Muru
ReplyDeleteThank you malli .. Have you watched the series??
DeleteGood Review Muru
ReplyDeleteஉங்களின் சம்மதம் பெறப்பட்டு தான் இந்த பதிவு செய்யபட்டதா
ReplyDeletehttps://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/article8795632.ece