" மாணவர்களே! திருக்குறள் பொழிப்புரை எத்தனை பேர் எழுதி வந்தீர்கள்?" அனைவரும் கைகளை உயர்த்தினர். அனைவரும் எழுதியிருந்தனர். அது தான் தமிழாசிரியர் முத்துவின் திறமை. அவர் என்ன கூறினாலும் மாணவ கண்மணிகள் உடனே அதை செய்து முடிப்பர். அந்த அளவு அவர் மாணவர்கள் அவர் மீது பிரியமாய் இருப்பார்கள். அவரும் அத்தனை மாணவர்கள் மீதும் பாசத்தைப் பொழிவார். இதுவரை ஒருவர் மீது கூட அவர் கடுஞ்சொல் கூறியது கிடையாது.
கண்ணன் எழுந்து," ஐயா! நான் பொழிப்புரை எழுதியிருந்தாலும் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன ஐயா" என்றான். அவரும்," என்ன அது? கேள் சொல்கிறேன்" என்றார்.
"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
இது குறள். இதன் பொருளாவது,' பயனைக் கருதவும் செய்த உதவியின் நன்மையை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலையும் விட அளவினால் மிகப் பெரியதாகும்' என்பதாம். இந்தக்குறளில் பயன் கருதி செய்த உதவி என்று வருகிறது., உதவி செய்பவர் யாராக இருந்தாலும் அதற்குரிய பயனை எதிர்பார்ப்பார்களே ஐயா?"
" அல்ல கண்ணா! பரிசுத்தமான உள்ளம் பிரதிபலனை எதிர்ப்பார்க்காது. அதைத்தான் வள்ளுவர் அங்ஙனம் கூறுகிறார்." மாணவர்களிடம் திரும்பி," மாணவர்களே! இதோ கண்ணன் நம் அனைவரிடமும் ஒரு சந்தேகத்தைஎழுப்பியுள்ளான். இதனை உங்கள் செயல்களின் மூலமே விளக்குகின்றேன். நாளை உங்கள் அனைவருக்கும் ஒரு கடமை. இன்று மாலை பள்ளியை விட்டைச் சென்றடைந்ததும் யாருக்காவது உதவி செய்யுங்கள். அதனை நாளை காலை வந்து வகுப்பறையில் பகிருங்கள். என்ன? சரிதானா?" என்றார். மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் " சரி ஐயா" என்று உரத்துக் கூறினர். உடனேயே சளசளவென்று அருகில் பேச ஆரம்பித்தனர். ' என்ன செயவது' என்ற விவாதம் போலும். தமிழாசிரியர், " போதும்..போதும் இனி பாடத்தை கவனிக்கவும்" என்று பாடத்தை நடத்த ஆரம்பித்தார்.
மறுநாள் தமிழ் வகுப்பு காலையில் இரண்டாவதாக வந்தது. ஆசிரியர் உள்ளே வந்ததும் கலகலத்துக் கொண்டிருந்த வகுப்பறை அமைதியானது. மாணவர்கள் முகங்கள் அனைத்தும் பிரகாசித்தன. முத்து புன்னகைத்துக் கொண்டார். முதலில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து விட்டு பின் மாணவர்களிடம்," மாணவர்களே! நான் நேற்று சொன்னதைச் செய்தீர்களா?" "ஓ..." அனைவரும் ஒருமித்த குரலில் கூறினார்கள். "ம்..ம்.. எங்கே ஒவ்வொருவராக அவரவது அனுபவங்களைக் கூறுங்கள்" என்றபடி தன் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
கண்ணன்," ஐயா.. என் பாட்டிக்கு மூன்று குடம் தண்ணீர் அடித்துக் கொடுத்தேன்" என்றான். லதா எழுந்து," என் தங்கை வீட்டுப் பாடம் எழுத உதவினேன்" என்றாள். ரமேஷ்," நான் என் நண்பர்களுடன் பக்கத்து வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென்று மினசாரம் நின்று போனது. உடனே அனைவரும் பயந்து விட்டனர். நான் என் வீட்டிற்கு ஓடிச் சென்று மெழுகுவர்த்தி எடுத்து வந்து ஏற்றினேன்" என்றான். முத்து," ம்..ம். நல்லது.. வேறு..வேறு" என்றார்.
அகிலன்," ஐயா! என் வீட்டின் அருகில் ஒரு பூங்கா உள்ளது. அங்கு மாலையில் அனைவரும் நடைப் பயிற்சி செய்வர். குழந்தைகள் விளையாடுவர். பலரும் கூடுவது வழக்கம். நான் என் தந்தையிடம் கேட்டு ஒரு கரும்பலகை வாங்கினேன். அதை அந்தப் பூங்காவில் நிறுவி, நீங்கள் கற்றுக்கொடுத்த குறளையும் அதன் கருத்தையும் எழுதினேன். பலரும் அதனை நின்று வாசித்து விட்டு சென்றனர். இனி அதை நாள்தோறும் செய்வது என் திட்டம்" என்றான்.ஆசிரியர்," பலே!" என்றார். யாழினி மெதுவாக பேச ஆரம்பித்தாள். " ஐயா! என் வீட்டில் என் தாய் தந்தையர் எனக்கு நிறைய புத்தகங்கள் வாங்கித் தந்துள்ளனர். அவற்றில் நான் படித்து முடித்துவிட்ட சிலவற்றை எடுத்து என் வீட்டின் வெளியே உள்ள சன்னலில் ஒரு பெட்டி வைத்து அதில் அடுக்கி வைத்துள்ளேன். அதன் அருகே' உங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளலாம். அதே போல் அந்தப் பெட்டியில் உங்களுக்கு தேவைப்படாத புத்தகங்களை கொண்டு வந்து வைக்கலாம்' என்று எழுதி வைத்துள்ளேன். நேற்றே எங்கள் குடியிருப்பில் உள்ள சிறுவர்கள் சிலர் என் புத்தகங்களை எடுத்துக் கொண்டு போய் தங்கள் புத்தகங்களை கொண்டு வந்து வைத்துள்ளனர். இப்போது அது ஒரு லெண்டிங் லைப்ரரியாக மாறிவிட்டது" என்றாள். "அருமை..அருமை ..உட்கார் யாழினி!"என்றபடி தமிழாசிரியர் எழுந்தார்.
" மாணவர்களே! கவனித்தீர்களா...உதவி என்றவுடன் உங்கள் தாத்தா, பாட்டி , அம்மா, அப்பா, உறவினர் என்று பலரும் உதவி செய்தீர்கள். அதை நான் பாராட்டுகிறேன். என்றாலும் அகிலன் மற்றும் யாழினி செய்த உதவிகளில் பரந்த நோக்கும் பொது நலமும் கலந்திருப்பதைப் பார்த்தார்களா? அது போல் உதவ வேண்டும். தன்னலம் இல்லாத செயல்கள் தான் எப்போதும் பெரிதும் பாராட்டப்படும். கண்ணன்... நேற்று நீ கேட்ட கேள்விக்கு உனக்கு விடை புரிந்திருக்கும் என நினைக்கின்றேன்." கண்ணன்," நன்றாகப் புரிந்து கொண்டேன் ஐயா!" என்றான். ஆசிரியர் மேலும்,"அனைவரையும் உங்கள் செயல்களுக்காக நான் பாராட்டுகிறேன். என்றாலும், நீங்கள் அனைவரும் அகிலன் மற்றும் யாழினிக்கு கை தட்டி பாராட்ட வேண்டும்" என்றார். அனைவரும் மகிழச்சியடன் கை தட்டி தங்கள் பாராட்டைத் தெரிவித்தனர். அகிலன் மற்றும் யாழினி போல தாங்களும் தன்னலமில்லா உதவி புரிய வேண்டும் என்று உறுதி பூண்டனர்.
தேர்ந்த எழுதாழினியாகிவிட்டாய் முரு! மாணவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் உரிய கதை...
ReplyDelete