Monday, January 9, 2017

கனவல்லவே!!!

தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தான் வேணு. கூரையில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தான். இவற்றை எண்ணுவதை விட மொட்டை மாடியில் போய் நிஜத்தில் நட்சத்திரங்களை ரசிக்கலாமே என்று தோன்றியது. கட்டிலை விட்டு எழுந்து மொட்டை மாடிக்குச் சென்றான்.
     அழகிய நிலா ஒளி வீசிக் கொண்டிருந்தது. நட்சத்திரங்கள் நூற்றுக்கணக்கில் மின்னிக் கொண்டிருந்தன. எங்கும் நிசப்தம். அங்கே ஒரு விநோதமான அமைதி நிலவுவது போல் அவனுக்குத் தோன்றியது. சிறிது அச்சமாக இருந்தது. அதையும் மீறி ஒரு அனுமாஷ்ய அமைதியை அவனால் உணர முடிந்தது. 
       சாய்ந்தவாறு ரசித்துக் கொண்டிருந்த போது திடீரென்று  மின்னல் வேகத்தில் சிறிய உருவம் கண் முன்னே மின்னிச் சென்றது. ஆர்வத்துடன் அதனையே கவனித்துக் கொண்டிருந்தான். அது சரேலென இறங்கி அவன் வீட்டின் அருகிலிருந்த காலி பிளாட்டில் போய் விழுந்தது. போதிய வெளிச்சம் இல்லாததால் அதற்கு என்றாயிற்று என்று அங்கிருந்து தெரியவில்லை. 
      அது என்ன என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் உந்தித்தள்ள வீட்டிற்குள் சென்று ஒரு டார்ச்சை எடுத்துக் கொண்டு அதைத் தேடிச் சென்றான். தூரத்தில் எறிந்து கொண்டிருந்த தெரு விளக்கின் ஒளி போதுமானதாக இருந்தாலும் டார்ச்சின் துணையுடன் நன்றாகப் பார்க்கலாம் என்று எண்ணிய படியே செடிகளை விலக்கியவாறே நடந்தான். 
        ஒரு புதரின் அருகில் மினுக் மினுக் என்று எரிந்து கொண்டிருந்த விளக்குகளுடன் சிறிய கூம்பலான கூடை போன்ற வடிவத்தில் ஒரு விநோதப் பொருள் கிடந்தது. அதன் அருகே மிகச்சிறிய உருவம் ஒன்று அடிபட்டுக் கிடந்தது.
         இறகுகள் கொண்ட அந்த உருவம் பறவை போலில்லை. தலையின் மீது இரு ஆண்ட்டெனாக்கள் இருந்தன. கைகள் மற்றும் கால்கள் உடைய புது வகையான விலங்கு போலிருந்தது. அதன் கண்கள் உருண்டையாகவும் காதுகள் நீண்டும் இருந்தன. அதன் முகத்தின் பாவனையிலிருந்து அது ஏதோ துன்பத்தில் இருப்பது போலிருந்தது. 
         வேணு மெல்ல அதன் அருகில் சென்றான். அதன் இறகுகளில் ஒன்று சிறிய விரிசலுடன் காயம் பட்டாற் போலிருந்தது. அதனைக் கைகளில் தூக்கினான். வலியில் ஏதோ முனகியது. பிய்ந்த இறகுகளை சரி செய்தால் அதற்கு உதவியாய் இருக்கும் என்று நினைத்தான்.
          பள்ளியில் எப்பவோ படித்த முதலுதவியும், தன் வீட்டில் முதலுதவிப் பெட்டி இருப்பதும் நினைவிற்கு வந்தது. வீட்டிற்கு ஓடிச்சென்று அதனை எடுத்து வந்தான். எதற்கும் உதவுமே என்றுஒரு தீப்பெட்டி, மெழுகுவர்த்தி எடுத்துக் கொண்டான். அம்மா காயம் அனைத்திற்கும் மஞ்சளை அரைத்துக் கட்டுவது நினைவிற்கு வந்தது. அடுக்களையில் நுழைந்து அஞ்சறைப்பெட்டியில் இருந்த மஞ்சள் தூளையும் பழைய துணியையும் எடுத்துக் கொண்டு ஓடினான்.
          முதலில் கவிழ்ந்து கிடந்த அந்தப் பறக்கும் தட்டை நிமிர்த்தி வைத்தான். பின் அந்த விநோத உயிரை மடியில் வைத்து முதலுதவி செய்தான். பிய்ந்திருந்த இறகுகள் சூடு படுத்தப்பட்ட மெழுகினால் ஒட்ட ஒட்டிக் கொண்டது. என்ன ஆச்சர்யம் .. அது உடனே கண் விழித்துப் பார்த்தது. அதனிடம் துளியும் பயம் இல்லை. வேணுவிற்கும் அதனைத் தொட்டுத் தடவி மருத்துவம் செய்ய சிறிதும் தயக்கம் ஏற்படவில்லை. அவனைப் பாரத்தப் பார்வையில் அவனுக்கு அதனிடம் ஒரு இனம் புரியாத அன்பு ஏற்பட்டது. எல்லாம் ஒரு நிமிட நேரம் தான். கூடையில் ஏறி அமரந்து கதவுகளை மூடி பறந்து சென்று விட்டது.
         வேணு கண்மூடி முழிப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டதை உணர்ந்தான். அதன் வேகம் பிரமிப்பூட்டுவதாக இருந்தது. வானில் பறந்து மறைந்து விட்டது. சிறிது நேரம் அப்படியே நின்று கொண்டிருந்த வேணு நினைவிற்கு வந்தவனாய் வீடு திரும்பினான்.
          மனம் எதை எதையோ யோசித்துக் கொண்டிருந்த போது தொலைக்காட்சியை போட்டான். செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது. பெண்மணி ஒருவர் செய்திகள் வாசித்துக் கொண்டிருந்தார்." பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் ' வேற்றுக் கிரக வாசிகள் பூமிக்கு வருவதற்கு சாத்தியக் கூறுகள் அதிகம் என்று தான் 2010 இல் எழுப்பிய சந்தேகம் இன்னும் நீடிக்கின்றது' என்று கூறினார்."
          வேணு தொலைக்காட்சியை அணைத்து விட்டு தூங்கப்போனான். நாளை பள்ளியில் போய் தன் நண்பர்களிடம் சொன்னால் அவனுடைய நண்பர்கள் யாரும் நம்ப மாட்டார்கள் என்று அவனுக்குத் தெரியும். ஆனால் அறிவியல் ஆசிரியர் நம்பக் கூடும் என்று நினைத்துக் கொண்டான். ஆனாலும்  அவன் கண்டது உண்மைதானே! கனவல்லவே! என்று புன்னகைத்த படியே தூங்கிப் போனான்.

            

3 comments:

  1. நிஜமா அல்லது கறபனையா? எப்படி இருந்தாலும் நன்று.

    ReplyDelete
  2. aliens பற்றி கேள்விப்பட்டு இருந்தாலும்...உண்மைதான் போலும்!நானும் அறிவியல் டீச்ச்ர்கிட்ட இத பத்தி கேட்கனும் :)

    ReplyDelete