அம்மா அதிகாலையிலேயே எழுந்து வாசலில் அழகாக கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். வாசுவும் வழக்கம் போலவே அதிகாலையிலேயே எழுந்து விட்டான். அன்று விடுமுறை தினம். பள்ளிக்கு செல்ல வேண்டியதில்லை. ஆதலால் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான். அருகில் பூங்கா ஒன்று இருக்கிறதே, அங்கு சென்று மரஞ்செடி கொடி வகைகளைப் பார்த்து ரசிக்கலாம் என்று எண்ணமிட்டவாறே பூங்காவிற்கு நடையைக் கட்டினான். அம்மாவின் எங்கே என்ற கேள்விப்பார்வைக்கு "பூங்காவிற்கு செல்கிறேன் அம்மா" என்று பதிலளித்துவிட்டு புன்னகைத்தான். அம்மா தலையசைத்து சம்மதித்தாள்.
பூங்காவில் அப்போதே ஒரு சிலர் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். வரிசையாய் அழகாய் நட்டு வைத்திருந்த செடிகளையும் அவற்றில் பூத்திருந்தப் பூக்களையும் ரசித்தவாறே பூங்காவின் நடுவில் பெரிதாய் வியாபித்திருந்த மரத்தின் நிழலுக்குச் சென்றான். வாகாய் உட்காருவதற்கு அ
தன் அடியில் சேர் போடப்பட்டிருந்தது. அதில் சாய்ந்தவாறு அமர்ந்து பறக்கும் பட்டாம் பூச்சிகளையும் ஓடி விளையாடும் அணில்களையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். கீச்மூச் என்று கத்தும் கிளிக்கூட்டம், ஜோடிகளாய்ப் பறந்த சிட்டுக்குருவிகள், தொடர்ந்து கரைந்து கொண்டிருந்த காகம், த த்தித் த த்தி ஒய்யாரமாய் நடை பயின்ற வெண்புறாக்கள் என அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தான். நேரம் செல்ல செல்ல பறவைகளின் ஒலி அதிகரித்துக்கொண்டே சென்றது.
பறவைகள் பேசிக் கொள்கின்றனவா அல்லது சண்டையிட்டுக் கொள்கின்றனவா என அவனுக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. இந்தப் பறவைகள் பேசினால் எப்படி இருக்கும்? என்ன பேசிக் கொள்ளும்? அவனுடைய கற்பனை விரிந்தது.
கிளி தான் முதலில் பேசியது. டாண் என்று மணியடித்தாற் போல கணீரென்ற குரலில் உரத்துப் பேசியது,' பறவைகளிலேயே நான் தான் அழகியவள்.என் பச்சை வண்ணமும், சிகப்பு மூக்கும், அழகிய குரலும் எவரையும் மயக்கும். பச்சை வண்ணம் தான் அழகு' என்றது. புறா செருமிக் கொண்டே உள்ளே நுழைந்தது,' வெண்மை தான் அழகு. வெண்ணிறப் புறாக்களை விரும்பாதவர்கள் எவரும் உளரோ? என் அழகில் மயங்கித்தானே ஆலிவ் இலை அளித்து என்னை சமாதானத் தூதுவர் ஆக்கியுள்ளனர்' என்றது. மயில் கம்பீரமாக உள்ளே நுழைந்தது. ' உங்கள் அனைவரையும் விட என்னுடைய நீலம் தான் அழகு. என்னுடைய அழகைக் கருத்தில் கொண்டுதானே என்னை நம் நாட்டின் தேசியப்பறவை ஆக்கியுள்ளனர்.' என்றது.
காகம் மெல்ல கனைத்துக் கொண்டு வாக்குவாத த்திற்குள் நுழைந்தது.' கருமை தான் அழகு. அதனால் தான் உணவை முதலில் எனக்குப் படைக்கின்றனர்' என்றது. மற்ற பறவைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து,' சீச்சீ... கருமை அழகா? இல்லவே இல்லை. உன்னை விரட்டி அல்லவா அடிக்கிறார்கள். உன் குரலும் கர்ண கொடூரமாக உள்ளது' என்றன. காகத்தின் முகம் வாடிவிட்டது. குருவி, மரங்கொத்தி, மீன்கொத்தி போன்ற ஏனைய பறவைகளைத் தனக்கு சாதகமாகப் பேசுவர் என்று நம்பிக்கையுடன் பாரத்தது. ஆனால் அவை முகத்தைத்திருப்பிக்கொண்டுவிட்டன. ' ஆனால், என்னிடம் பல நல்ல குணங்கள் உள்ளனவே. பகிர்ந்துண்ணும் பழக்கம் உள்ளதே. புற அழகை விட அக அழகே சிறந்தது என்று உங்களுக்குத்தெரியாதா? மனம் தூய்மையாய் இருக்குமிடத்தில் தான் அழகு உள்ளது. தோற்றத்தில் அல்ல' என்றது. மயில்,' நீ இத்தனை நீளமாய், சாதுர்யமாயப் பேசினால் உனது வண்ணம் அழகானது என்று ஆகிவிடுமா? இதை ஒத்துக் கொள்ள முடியாது' என்றது. பிற பறவைகளும் இணைந்து கொண்டன,' ஆம்... ஆம்.. கருமை அழகு அல்ல..' காகம் கவலையுடன் நின்று கொண்டிருந்தது.
வாசு திடுக்கிட்டு எழுந்தான். பறவைகள் இது போன்று சண்டையிட்டுக் கொள்ளவில்லை. அவை த த்தம் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தன. நல்ல வேளை அனைத்தும் கற்பனேயே. ஆனால் இப்போது அவனுக்கு அந்த சந்தேகம் வந்துவிட்டது. வண்ணங்களில் எது சிறந்தது? யாரிடம் கேட்டு தன் ஐயத்தைத் தீர்த்துக்கொள்ளலாம் என யோசிக்கலானான்.
பூங்காவில் ஓவியர் ஒருவர் சித்திரம் தீட்டிக் கொண்டிருப்பதைக் வாசு கண்டான். தன் சந்தேகத்தைத் தீர்க்க அவர் தான் சரியான நபர் என்று அவரின் அருகில் சென்றான். ' ஐயா..' என்றழைத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். தனக்கு ஏற்ப்பட்ட விநோதமான கற்பனையையும் அதனைத்தொடர்ந்து எழுந்த சந்தேகத்தையும் கூறினான். பறவைகளின் வாக்குவாத்த்தைக் கேட்ட அவர் மனம் விட்டு சிரித்தார்.' உனக்கு நல்ல கற்பனை வளம் இருக்கு தம்பி' என்றவாறு அவன் தோள்களில் கை வைத்துப் பேசலானார்.
புன்னகையுடன்,' தம்பி... வண்ணங்களுடனேயே வாழும் என்னிடம் வண்ணங்களைப் பற்றிக் கேட்டது பற்றி மிக்க மகிழ்ச்சி. ஒரு ஓவியராக எனக்கு அனைத்து வண்ணங்களையும் பிடிக்கும். இது உயர்வு, இது தாழ்வு என எதுவும் கிடையாது. மண்ணில் படைக்கப்பட்ட அனைத்துமே அழகு தான். கடவுள் படைப்பில் அனைத்துமே இன்றியமையாதவை தான். சிகப்பு, பச்சை, நீலம், வெள்ளை, கருப்பு என அனைத்து வண்ணங்களுமே உயிர் ஊட்டுவன தான். ஓவியத்திற்குத் தக்கவாறு வண்ணங்களை நான் கூட்டி மற்றும் குறைத்தும் பயன்படுத்துவேன்' என்றார்.
மேலும் தொடர்ந்தார்,' உன் கற்பனையில் கூறிய படி கருப்பு ஒன்றும் வெறுக்கத் தக்க வண்ணம் அல்ல. வெண் மேகங்கள் கருமை அடைந்தவுடன் தானே மழை பொழிகின்றது! உன் கண்ணின் கருவிழிகள் எத்தனை முக்கியமானது என்று நீ அறிவாய் தானே? அவ்வளவு ஏன்? நாள் தோறும் உன் பள்ளியில் உன் ஆசிரியர் கரும் பலகையில் எழுதித் தானே உனக்குப் பாடங்களைக் கற்றுத்தருகிறார்? எனது ஓவியங்களிலும் கருமை முக்கிய பங்காற்றுகிறது...அவுட்லைன் என்ற வித த்தில்...'
சந்தேகம் தெளிந்தவனாக எந்த வண்ணமும் நல்ல வண்ணம் தான் என்ற முடிவுக்கு வந்தவனாக ஓவியருக்கு நன்றி கூறிவிட்டு நடையைக் கட்டினான் வீட்டுக்கு. அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். அழகிய வானவில் தோன்றியிருந்தது. வண்ணங்கள் நாங்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்று அவனிடம் கூறுவது போலிருந்தது. வாசு சிரித்துக்கொண்டான்.
நல்ல கற்பனை ஆசிரியைக்கு...தொடரட்டும் உங்கள் பணி
ReplyDeleteவண்ணக்கலவையின் எண்ணக்கோர்வை!!!
ReplyDeleteAs a protagonist of the story u, as an artist, drive home the idea of the integration of people. It generates good feelings among the readers.
வண்ணக்கலவையின் எண்ணக்கோர்வை!!!
ReplyDeleteAs a protagonist of the story u, as an artist, drive home the idea of the integration of people. It generates good feelings among the readers.