"இந்த ராமுவுக்கு எத்தனை முறை சொன்னாலும் புரிவதில்லை.. நானும் எத்தனையோ முறை சொல்லிவிட்டேன். அன்பாக சொன்னேன். கடுமையாகத்திட்டினேன். தண்டனைகள் கூட கொடுத்துப் பாத்துட்டேன். ஆனால் அவன் திருந்துகிற பாடாகத் தெரியவில்லை. தினமும் காலையில் தாமதமாகத்தான் வருகிறான்" சக ஆசிரியரிடம் ஆசிரியை சீதா பேசிக் கொண்டிருந்தார். அப்போது உள்ளே வந்த ஆங்கில ஆசிரியரும் அவருடன் இணைந்து கொண்டார். " நான் அவனுக்கு ஐந்தாம் வகுப்பு ஆசிரியர். அப்போதும் இப்படித்தான். நாள்தோறும் வகுப்பிற்கு தாமதமாகத்தான் வந்தான். அவன் திருந்தவே இல்லை. ஹெட் மாஸ்டரிடம் கூட அழைத்துச் சென்றேன். அவன் மாறவில்லை.என்ன... பையன் புத்திசாலி. படிப்பில் வெகு சுட்டி. பெற்றோர் தவறி விட்டனர். உறவினர் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறான். அதனால் அதிகமாக கண்டிக்க மனம் வரவில்லை."
தமிழாசிரியர் முத்து இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு ராமுவைத் தெரியும். பையன் புத்திசாலி, ஆனால் சோம்பேறி. ஒரு முறை கேட்டால் போதும் 'டக்' எனப் புரிந்து கொள்வான். கற்பூர புத்தி என்பார்களே அதைப் போல. ஆனால் மகா கும்பகர்ணன். அவனுக்கு அவனுடைய தூக்கமே முதல் எதிரி. காலையில் எழுந்து சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வருவது என்பது அவனுக்கு அத்தனை கடினமான காரியம். எத்தனையோ முறை சொல்லியும் பல ஆசிரியர்கள் தண்டனை விதித்தும் அவன் கேட்கிறாற் போல இல்லை. தமிழாசிரியர் முத்து தான் ஒரு முறை முயற்சி செய்யலாம் என முடிவெடுத்தார்.
வகுப்பு ஆசிரியை சீதாவிடம்," இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு ஆறாம் வகுப்பினர் முதல் வகுப்பை எனக்கு விட டுக் கொடுங்கள். என்னுடைய வகுப்புகளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வாரத்திற்குப்பிறகு உங்கள் வகுப்பை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார். ஆசிரியை சுமதியும் சம்மதித்தார். இதனை வகுப்பறையிலும் அறிவித்து விட்டார்.
அடுத்த நாள் அறிவித்த படியே தமிழ் வகுப்பு முதல் வகுப்பாயிற்று. வகுப்பறையில் நுழைந்தவுடன் ஆசிரியர் முத்து அனைவரையும் பாடப்புத்தகத்தை மூடி வைக்கச் சொல்லிவிட்டார். பின்னர் மஹாபாரதம் கதை ஒன்றைக் கூற ஆரம்பித்தார். வகுப்பே ஆர்வமுடன் ஆசிரியர் கதை கூறும் பாங்கினை ரசித்துக் கேட்டது. வழக்கம் போல இருபது நிமிடங்கள் தாமதமாக வகுப்பறைக்குள் நுழைந்தான் ராமு. தமிழாசிரியர் கதை கூறிக்கொண்டிருப்பதையும், வகுப்பு எந்த அரவமுமின்றி ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருப்பதையும் கண்டான். தன் இடத்தில் போய் அமர்ந்து கொண்டு பக்கத்திலிருந்த ராஜாவிடம்,' என்னடா இது?' என்று கேட்டான். ராஜா கதை கேட்கும் ஆர்வத்தில் இவன் கேள்விக்கு பதிலளிக்கவில்லை. ராமு அமைதியாக கதை கேட்க ஆரம்பித்தான். முதலில் இருந்து கவனிக்காத தால் அவனுக்கு புரியவில்லை. ஆசிரியரிடம் கேட்க பயம். நண்பர்கள் அனைவரும் கதையில் ஒன்றிப் போயிருந்தனர்.ஒன்றும் புரியாமலேயே அன்றைய வகுப்பு கடந்தது அவனுக்கு. வகுப்பு முடிந்த பின் நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றால் அவர்களுக்கு நேரம் இல்லை. சரி போகட்டும் என்று ராமு விட்டுவிட்டான்.
மறு நாளும் வழக்கம் போலவே தாமதமாக வந்தான். அவன் நுழையும் போது வகுப்பு அல்லோகல்ப்பட்டுக் கொண்டிருந்தது.' சார்.. சார்.. நான் பதில் சொல்றேன் சார்..,' என்று அனைவரும் கைகளை உயர்த்தி உற்சாகமாக கூவிக் கொண்டிருந்தனர்.தமிழாசிரியர் புதிர்கள் கேட்டுக் கொண்டிருந்தார். ராமு,' ஐயோ..புதிர்கள் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்குமே! மிஸ் பண்ணி விட்டேனே! ' என வருந்தினான். ' சரி, மீதி நேரம் கேட்பாரல்லவா? அதில் ஜமாய்த்து விடலாம்' என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கும் போதே தமிழாசிரியர் நிறுத்தி விட்டு பாடத்தை எடுக்க ஆரம்பித்து விட்டார். ராமுவுக்கு 'சப்' பென்று ஆகிவிட்டது. ராஜா வேறு வகுப்பு என்னென்ன புதிர்கள் கேட்கப்பட்டன தான் எப்படியெல்லாம் புத்திசாலித்தனமாக பதில் கூறினான் என்று விலாவரியாக வருணித்துக் கொண்டே இருந்தான். ராமுவுக்கு கடுப்பாயிருந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாய் இருந்தான்.
மறு நாள் இன்று என்ன நடக்கின்றதோ என்று ஆவலுடன் வகுப்பறைக்குள் நுழைந்தான். ஆனால் இன்றும் அவன் தாமதமாகத்தான் வந்திருந்தான். அனைவரும் பாடல் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தனர். வரிகள் தெரியாத தால் அவனால் அவர்களுடன் இணைந்து பாட முடியவில்லை. அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.
மறு நாள் ராமு பள்ளிக்கு நேரத்திற்கு வந்துவிட்டான். சொல்லப்போனால் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே வந்து வகுப்பறையில் காத்திருந்தான். இன்று வகுப்பில் என்ன நடக்கும் என்ற ஆவல் அவன் கண்களில் தெரிந்தது. மனம் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. நண்பர்கள் அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இன்று மழை வரும் என்று அவனைக் கிண்டல் செய்தனர். தமிழாசிரியர் உள்ளே நுழைந்தார். ராமு வகுப்பிற்கு சரியான நேரத்திற்கு வந்திருந்ததைக் கவனித்தார். ஆனால் ஒன்றும் கூறவில்லை. அன்று விடுகதைகள் கேட்க ஆரம்பித்தார். ராமு மற்ற மாணவர்களுடன் இணைந்து உற்சாகமுடன் பதிலளிப்பதைக் கண்டார். முடிவில்," நாளை முதல் முதல் பத்து நிமிடங்கள் மட்டுமே இது போன்று புதிர் போட்டிகள் நடத்துவேன்" என்று அறிவித்து விட்டு கிளம்பிவிட்டார்.
மறு நாள் முதல் ராமு வகுப்பறைக்கு தாமதமில்லாமல் வந்தான் என்று சொல்லவும் வேண்டுமோ
No comments:
Post a Comment