Sunday, March 27, 2016

பச்சைப்பாம்பும் நானும்.

அது என்னவோ தெரியலீங்க... இந்தப் பெண்களுக்கு சமைக்கிறதுன்னா எங்கேயிருந்து தான் இவ்வளவு உற்சாகம் வருதோ!? இரண்டு பெண்கள் சந்தித்தால் உடனே சமையலைப் பற்றியும், சேலை பற்றியும், பிள்ளைகளின் படிப்பையும் பற்றியே பேசுகின்றனர். தான் காலையில் என்ன சமைத்தேன், எப்படி சமைத்தேன், எப்படி எல்லோரும் விரும்பி சாப்பிட்டனர் என்று விலாவரியாக பேசுகின்றனர். ஏனோ எனக்கு இந்த கலை கைவர மாட்டேன் என்கிறது.
        காலையில் என்ன சமைத்தோம் என்பது பற்றி மாலையில் பேச அது என்ன அவ்வளவு முக்கியமான விஷயமா? சமைப்பதையும் தாண்டி உலகில் முக்கியமான விஷயங்கள் எவ்வளவோ இருக்கே! உடனே உலகப் பொருளாதாரம் பற்றியா பேச்ச்சொல்கிறாய்? அவர்களுக்கு விருப்பமானதை அவர்கள் பேசுகிறார்கள், உனக்கென்ன? என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. நான் சொல்ல வருவது என்னவென்றால்... சமையலறையையும் தாண்டி பெண்கள் விஷய ஞானம் உள்ளவர்களாய்த் திகழ வேண்டும் என்பது தான். பெண்கள் தங்களையே சமையலறைகளில் தொலைத்து விடுகின்றனர். ஆனால் நம் பெண்களுக்கு தங்களைத்தேடும் பிரக்ஞை இருப்பதாகத் தெரியவில்லை. வாழ்வின் பெரும் பகுதியை குடும்ப உறுப்பினர்களுக்காக அடுக்களையில் தொலைத்து விட்டு தனக்கென ஒரு தனித்துவம் இல்லாமல் போய்விடுகின்றனர். சரி, அவர்கள் செய்யும் சேவைக்கு ஒரு அங்கிகாரமாவது கிடைக்கிறதா? அதுவும் இல்லை. கணவரும், குழந்தைகளும் தரும் பட்டம்," அவளுக்கு ஒண்ணும் தெரியாது" என்பது தான்.
      ஆனால் அவர்களைச்சொல்லியும் குற்றமில்லை. பெண்களில் எத்தனை பேர் நாளிதழ்களைப் படித்து பொது அறிவை வளர்த்துக் கொள்கின்றனர்? பொது அறிவு என்பது பக்கத்து வீட்டில் என்ன நடந்தது? மூணாவது தெரு பெண் யாரைக் காதலிக்கிறாள் போன்ற அதிமுக்கியமான நிகழ்வுகள் அல்ல. எத்தனை பேருக்கு வங்கிக்கணக்கு பார்க்கத் தெரியும்? சீட்டுப் போட்டு தவணையில் பொருட்கள் வாங்கும் கணக்கு கணக்கு அல்ல. 'ஸ்மார்ட்' ஃபோன் வைத்திருந்தாலும் அதனை இயக்கத்தெரியாமல் விழிப்பதும், மாலை வேளைகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கி கிடைப்பதும் வாடிக்கையான ஒன்று தானே!
        பொதுவாக, எனக்கு ஒரு அபிப்ராயம் உண்டு. நமது சமையல் முறைகள் அவ்வளவு எளியவனாக இல்லை என்று. காலையில் நாம் சமைக்க எடுத்துக் கொள்ளும் நேரம் சுமார் ஒன்றுஅல்லது ஒன்றரை மணி நேரம். இதில் முந்தைய நாள் முஸ்தீபுகளின் நேரத்தை நான் கணக்கில் சேர்க்கவில்லை. முந்தைய நாள் முஸ்தீபுகள் என்று நான் சொன்னது இட்லி, தோசை, ஆப்பம் போன்ற டிபன் வகைகளுக்கு மாவாட்டுவதைத்தான். மதியம் சமைப்பதற்கு சுமார் இரண்டு மணி நேரம் எடுத்துக் கொள்கிறோம். அதற்கு முன்பு காய்கறி வாங்குவதற்கு எனத் தனியே அரை மணி நேரம். இரவில் சமைக்க ஒரு மணி நேரம். இடையிடையே டீ, காபி, பால் என்று நேரம் பறந்தோடுகிறது. ஆனால் வெளிநாடுகளில் சமைப்பதற்கு இவ்வளவு நேரம் செலவளிப்பதில்லை. அவர்களுடைய மெனுவில் இத்தனை ஐட்டங்கள் கிடையாது. வீட்டில் உள்ளோர்கள அனைவருமே பணிக்கு செல்வதால் சமையலை எளிமையாகசெய்கின்றனர். ஆண் பெண் பாகுபாடின்றி வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்கின்றனர். பதின் பருவத்தினர் கூட கட்டாயம் பெற்றோருக்கு உதவ வேண்டும். ஆனால் நம் நாட்டில் எல்லாமே தலை கீழ்.
          நேரம் அதிகமானாலும் , சாப்பாட்டிற்கு சுவை ஊட்டுகிறேன் பேர்வழி என்று நெய்யையும், முந்திரியையும் அனைத்திலும் வாரி இறைத்து சர்க்கரை வியாதியையும், கொலஸ்ட்ராலையும் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்போர் அதிகம்.சுவையை விட ஆரோக்யமே பிரதானம் என்று சமைக்க வேண்டும். சமையலை எளிதாக்குங்கள். உங்கள் பொன்னான நேரத்தை உங்களுக்கான நேரமாக்கி உங்களுக்காக செலவிடுங்கள்.சரி, நான் ஏதோ சொல்கிறேன் என்றாலும் எனக்கு என் சமையலின் மீது கொஞ்சம் அவநம்பிக்கை உண்டு. என் கணவரும், குழந்தைகளும் நான் நன்றாக சமைக்கிறேன் என்று எனக்கு சான்றிதழ் அளித்தாலும், நான் நம்பிக்கை இன்றி," நிஜமாகவே நன்றாக இருக்கிறதா?" என்ற கேட்டுக்கொண்டே இருப்பேன்.
           இப்படித்தான் முன்பொரு நாள், என்னுடைய இளவயதில், என் வீட்டில் பணிபுரியும் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தேன். நன்றாக சமைக்க என்ன செய்ய வேண்டும் என நான் அவளிடம் கேட்டேன். கவனமாக, பொறுமையாக, ஈடுபாட்டோடு ..இது போன்ற ஒரு பதிலை நான் எதிர் பார்த்தேன். ஆனால் நான் அதிரும் வகையில் ஒரு பதிலைக் கூறினாள் அவள். "அம்மா...பச்சைப்பாம்பை ஒரு தடவை தொட்டிங்கன்னா, உங்களுக்கு கைமணம் தானாகவே வரும். அப்புறம் உங்க கைப்பக்குவம் யாருக்கும் வராது." என்றாள்.முதலில் நான் அதிர்ந்து போனேன். பிறகு சிரித்துக்கொண்டே," நடக்கிற காரியமாகப் பேசு. பச்சைப்பாம்புக்கு நான் எங்கே போக?" என்றேன். நல்லவேளை நான் பிடித்துக்கொண்டு வருகிறேன் என்று அவள் கிளம்பவில்லை. 
         இது நடந்து முடிந்து இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது என் மகளே நன்றாக சமைப்பாள். ஒரு மாலை வேளையில் குடும்பமாக உரையாடிக் கொண்டிருந்த போது இந்த பழைய சம்பவத்தை நினைவுபடுத்தி கேலியும் கிண்டலுமாய் பேசிக் கொண்டிருந்தேன். உடனே என்மூத்த மகள்," அம்மா.. நான் பச்சைப் பாம்பை தொட்டிருக்கேன் மா. நம் பெரியம்மா வீட்டில் ஒரு முறை தோட்டக்கார ர் பச்சைப்பாம்பை தோட்டத்தில் அடித்து விட்டு பெரியம்மாவிடம் அதைத் தொடச் சொன்னார். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த என்னையும் தொடச் சொன்னார்கள்" என்றாள் புன்னகையுடன். 
       உடனே என் இளைய மகள்," அம்மா ..பாத்தீங்களா..அது உண்மை தான் போலிருக்கு. நீங்களும் பச்சைப்பாம்பை தொட்டிருக்கலாம்" என்றாள் சிரித்துக்கொண்டே. "இப்ப என்ன சொல்ல வர்ற? என் சமையல் சரியில்லை என்றா?" என நான் சிரித்துக்கொண்டே கேட்டேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் என்னை வாருவதையே தொழிலாகக்கொண்ட என் கணவர் இப்போது உள்ளே நுழைந்தார், " அதை நாங்க எங்க வாயால சொல்ல மாட்டோம்." நான் அடிக்க கையை ஓங்கியவுடன் மூவரும் ஓடி விட்டனர். " எங்கே போறிங்க?" என்ற எனது கேள்விக்கு அவர்கள் தந்த பதில் "உங்களுக்கு பச்சைப்பாம்பு பிடிக்க...."

போடுங்கம்மா வோட்டு மீன் சின்னத்த பாத்து...

1984ம் வருடம். நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் புதிதாய் வீடு கட்டி புகுந்திருந்தோம். சட்டசபைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. பதின்பருவத்திலிருந்த எனக்கு கட்சிகளும், கொடிகளும், நாளிதழ்களில் பக்கம் பக்கமாய எழுதப்பட்டிருந்த கட்டுரைகளும் அரசியல் மீது ஆர்வத்தை தூண்டுவதாய் அமைந்தன. சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு கட்சிகளின் வேட்பாளர்கள் எப்போதும் சிவகாசியைச் சுற்றியுள்ள ஏதேனும் ஒரு கிராமத்தை சார்ந்தவர்களாகவே இருப்பர். நம் சொந்த ஊர்க்கார்ர் வேட்பாளராய்த் திகழ் வேண்டும் என்று அனைவருக்கும் ஒரு ஏக்கம் எப்போதும் இருந்தது. 
         அந்த வருடம் சிவகாசியைச் சேர்ந்த திரு. கிரகதுரை அவர்கள் மீன் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டார். சிவகாசியின் பிரபல தொழிலதிபர் அவர். உடனே ஊரெங்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. தேர்தல் பிரச்சாரம் களை கட்டியது. தெருவுக்கு தெரு, விதிக்கும் வீதி மீன் சின்ன போஸ்டர்களும், கொடிக்கம்பங்களும், தோரணங்களும் ஊரே அல்லகோலப்பட்டது. ஆட்டோ, மோட்டார் சைக்கிள்  என்று ஒலிபெருக்கி மூலம் மீன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்துக் கொண்டே இருந்தனர். ஊரில் இரண்டு பேர் கூடிப் பேசினால் அது கிரகதுரை அண்ணாச்சி தேர்தலில் போட்டியிடுவது பற்றியும் அவருடைய வெற்றி வாய்ப்பு எவ்வளவு என்பது பற்றியும் தான் இருந்தது ஊருக்குள் அனைவருக்கும் அவர் வெல்ல வேண்டும் என்ற பேரவா இருந்தது. நம் ஊர்க்கார்ர் நம் சார்பாக சட்டசபையில் இருந்தால் ஊருக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் என்று அனைவருக்கும் எதிர்ப்பார்ப்பு.
          தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கடைசி கட்ட பிரச்சாரம் ஜரூராய் நடைப்பெற்றுக் கொண்டு இருந்தது. எங்கள் தெருவில் உள்ளவர்கள் ஏதோ அவர்கள் வீட்டு விஷேசம் போல் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தனர். உற்சாக மிகுதியில் பக்கத்து வீட்டுக்கார்ர் எங்கள் வீட்டின் சுவர் முழுக்க மீன் சின்ன போஸ்டர் ஒட்டி மீன் சின்ன முத்திரை பதித்து விட்டார். அப்போது தான் கட்டிய புதிய வீடு என்று சொன்னேன் அல்லவா? என் அன்னைக்கு அதைப்பார்த்தவுடன் கோபம் வந்துவிட்டது. பொதுவாக அமைதியாக இருக்கும் அவர்கள் பக்கத்து வீட்டுக்கார்ரிடம் சண்டைக்குசென்று விட்டார். என் தந்தையோ ஊரில் இல்லை. பிள்ளைகள் நாங்கள் நால்வரும் பயந்து போய் வீட்டில் அமர்ந்திருந்தோம். அம்மா திட்டியதால் சண்டை பெரியதாகி விடுமோ என்று எங்களுக்கு உள்ளூர பயம். ஆனால் அவர்கள் மன்னிப்பு கேட்டு வந்து போஸ்டரை கிழித்து விட்டனர். இன்றும் இந்த மீன் சின்ன களேபரங்கள் என் நினைவிலாடுகின்றன.
            தேர்தல் நாளன்று சைக்கிள் ரிக்ஷாவில் வாக்குச் சாவடிக்கு அனைவரையும் அழைத்துச் சென்றனர். வெற்றி நிச்சயம் போன்ற ஒரு மாயத் தோற்றம் நிலவியது. ஆனாலும் அந்த தேர்தலில் அவர் வெல்லவில்லை. சிவகாசியிலுள்ள வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குப் பெட்டிகள் அனைத்திலும் மீன் சின்னத்திற்கு வாக்குகள் விழுந்திருந்தனவாம். ஆனால் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்திலும் இரட்டை இலைக்கு வாக்கு பதிவாகி இருந்ததாம். அந்தத் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த திரு V.பாலகிருஷ்ணன் அவர்கள் வெற்றி பெற்றார்.
-
            

Saturday, March 26, 2016

Terrarium

                  சொல்லும் போதே மனசுக்குள் மழை பொழிய வைக்கும் சொல் வீடு. நம் ரசனையின் வெளிப்பாடாகத் திகழும் வீட்டை அலங்கரிக்க அனைவரும் கொஞ்சமாவது பிரயத்னப்படுவோம். அலங்கார விளக்குகள், அழகழகான பொம்மைகள், கண்கவர் மரச்சாமான்கள் என்று விதவிதமான பொருட்களைக் கொண்டு வீட்டை அலங்கரித்தாலும் செடிகளைக் கொண்டுவீட்டை அலங்கரித்தால் அதன் குளுமையான பசுமையே கூடுதல் அழகு தரும். நகர்புறங்களில் வாழ்பவர்களுக்கு, அடுக்குமாடி வீடுகளில் வாழ்பவர்களுக்கு வீட்டை சுற்றி பெரிய தோட்டம் அமைத்துக் கொள்ள வாய்ப்பில்லை. வீட்டினுள்ளேயே செடிகளை வைத்து அழகு படுத்தவே அவர்கள் விரும்புகின்றனர். அவர்களுக்காகவே கண்டுபிடித்தாற்ப் போல இப்போது புதிதாக டெர்ரரியம் என்ற புதுமையான தோட்டக்ககலை வந்துள்ளது. இது வீட்டினுள்ளே அலங்காரமாக கண்ணாடி பேழை அல்லது குடுவையில் செடிகள் வளர்ப்பது ஆகும்.  இதற்கு அழகிய கண்ணாடி குடுவைகள், வாயகன்ற  பாட்டில்கள் அல்லது சிறிய மீன் தொட்டிகளைக் கூட பயன்படுத்தலாம். தொங்க விட இயலும் கண்ணாடி குடுவைகளையும் பயன்படுத்தலாம். மிகச்சிறிய கள்ளிச்செடிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல கற்பனை வளத்துடன் தோட்டம் போன்ற அமைப்பை கண்ணாடி குடுவையினுள் அமைக்க வேண்டும். உங்கள் கற்பனைக்கு வானமே எல்லை. இணையத்தில் தேடினால் எண்ணிலடங்கா ஐடியாக்கள் கொட்டிக் கிடக்கின்றன. மனதைக் கொள்ளை கொள்ளும் இவ்வகைத் தோட்டங்களை நம் வரவேற்பறையில் ஒயிலாக இடம் பெறச் செய்யலாம்.
              கண்ணாடிக் குடுவையில் முதலில் அழகிய கூழாங்கற்களை அடுக்க வேண்டும் . இதனை மிகவும் பொறுமையாக நீண்ட கரண்டியின் உதவியுடன் செய்யலாம். கூழாங்கற்களுக்குப் பதில் மொசைக் சிப்ஸ்களையும் இடலாம்.அதன் மீது தேவையான அளவு மண் கலவை இட வேண்டும்.அமைத்த தன் மீது வகை வகையான செடிகளை நடலாம்.சிறிய செடிகளே இவ்வகை தோட்டத்திற்கு தோதானவை. அலங்கார முட்செடிகள் இதனுள் அமைத்தால் கம்பீரம் பெறுகிறது. மெதுவாக வளரும் செடிகளே நல்லது. விரைவில் வளரும் செடிகளை வைத்தால் விரைவில் குடுவையுள் இடப் பற்றாக்குறை ஏற்படும். புஃனல் மூலம் மிக ஜாக்கிரதையாக தண்ணீர் ஊற்ற வேண்டும். கவனமாகவும் திட்டமாகவும் தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் அதிகமாக ஊற்றிவிட்டால் அதனை வெளியேற்றுவது கடினமாகி செடிகளுக்கு நோய் வர வாய்ப்புள்ளது.மினியேச்சர் நாற்காலி, பறவைகள், பீங்கான் பொருட்கள் என்று ஏதேனும் அலங்காரம் செய்யலாம். அழகுறத் திகழும் இதனை வரவேற்பறையில் மேடையிட்டு அமைக்கலாம் . சாப்பாட்டு அறையில், வெராண்டாவில், பால்கனியில் என்று எங்கு அமைந்தாலும் கண்ணைக் கவரும்.சவாலான காரியமாய் திகழ்ந்தாலும் அதன் எழில் உங்கள் வீட்டிற்கு வருபவர்களை அசர வைக்கும்.இதே போல அகலமான பீங்கான் தட்டுகளிலும் சிறிய தோட்டங்கள் அமைத்து வீட்டை அலங்கரிக்கலாம். 
           மீன் தொட்டிகளிலும் இது போன்று தோட்டம் அமைக்கலாம். முதலில் கூழாங்கற்களை இட்டு பின மண்கலவையை இட வேண்டும். உயரமான செடிகளை முதலிலும் குட்டையான செடிகளை பிறகும் அமைக்க வேண்டும். மிக அகலமான தொட்டிகள் எனில் நீர் தாவரங்களையும் வளர்க்கலாம். அழகான நீர் வாழ் தாவரங்களில் சில முழுவதுமாய் தண்ணீரில் அமிழ்ந்திருக்கும், சில நீரின் மேல் மிதந்து கொண்டிருக்கும். அழகிய பீங்கான் பாத்திரங்களை கலைநயத்துடன் தொட்டியினுள் அமைத்து விட்டால் காணக் கண் கோடி வேண்டும். தண்ணீரின் அசைவினால் இச்செடிகள் இங்கும் அங்கும் இடம் மாறிக்கொண்டே இருப்பது தனி அழகு தான். விருப்பமென்றால் தண்ணீரினுள் மீன்களை விடலாம். ஆனால் மீன் வளர்த்தால் அதற்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்கிறதா என கவனிக்க வேண்டும். அதற்கு மின் இயந்திரம் மாட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                வீட்டின் உட்புறத்தை அழகு படுத்துவதைப் போல வெளித் தோற்றத்தையும் செடிகளால் அழகு படுத்தலாம். தனி வீடு எனில் தோட்டம் அமைப்பது முதல், வெளிப்பூச்சு, முகப்புத்தோற்றம் வரை வித்தியாசமாய் வடிவமைத்து நம் வீட்டை தனித்துக் காட்டலாம். ஆனால் அடுக்கு மாடி குடியிருப்புக்கள் எனில் அது சாத்தியமில்லை. ஆனால் நம் வீட்டை எப்படி தனித்த அழகுடன் காட்டுவது? அதற்கு ஒரு வழி இருக்கிறது. சன்னல் தோட்டம் என்பதே அது. சன்னல்கள் அதிக ஒளியும் காற்றோட்டத்துடனும் திகழ்வதால் தோட்டம் அமைக்க ஏதுவானதாகும். சன்னல் மேடை எவ்வளவு அகலம் உள்ளது என்பதைப்பொருத்து உள்பக்கத்தில் அல்லது வெளிப் பக்கத்தில் செடிகள் வைக்கலாம்.மேடை சிறியதாக இருந்தால் அதற்கேற்ற சிறு தொட்டிகளும், அவற்றைக் கையாளும் போது எளிதில் விழுந்து விடாமல் இருக்க சிறிய சட்டம் ஒன்றை சன்னல் நீளத்திற்கு பொருத்திவிட வேண்டும். சன்னலின் உட்புறத்தில் செடிகளை வைக்கும் போது செடிகளையும், தொட்டிகளையும் தேர்ந்து எடுப்பதில் அதிக கவனம் வேண்டும். தொட்டிகள் அல்லது பெட்டிகள் மிகவும் அழகானதாகவும், அறையில் உள்ள மற்ற சாதனங்களோடு பொருந்துவதாகவும் இருக்க வேண்டும். அவற்றின் வண்ணமும் அமைப்பும் அறையில் உள்ள அலமாரிகள் சோபா ஆகியவற்றோடு இணைவதாகவும் இருக்க வேண்டும். சன்னலின் உட்புறம் வைக்கும் செடிகளின் பெட்டிக்குள் கீழ் உள்ள இடத்தை அலமாரி போல் உபயோகப்படுத்தலாம். சன்னலின் வெளிப்பக்கம் செடிகளை வைக்க வேண்டுமெனில் இரும்பு ஸ்டாண்டுகளில் பெட்டியை வைத்து சன்னல் கம்பிகளில் மாட்டி விடலாம்.
        சன்னலின் பக்கம் அதிக சூரிய ஒளி படும் எனில் பூக்கும் செடிகளையும், குறைவாக ஒளி படும் எனில் குரோட்டன்ஸ் செடிகளை வைக்கலாம். பூக்களின் அழகு எங்கிருந்து பார்த்தாலும் நம் வீட்டை அழகுற காட்டும். எத்தனாவது மாடி என்றாலும் உங்கள் வீடு தனித்துத் தெரியும். அதன் அழகிற்காக நீங்கள் கட்டாயம் பாராட்டப் படுவீர்கள்.
      மேல் நாடுகளில் ஒவ்வொரு வீட்டிலும் அலங்கார செடிகளை வளர்த்து வீட்டை அழகுபடுத்தும் வழக்கம் உள்ளது. நம் நாட்டில் செடிகள் வளர்ப்பதற்கு ஏற்ற சூழலும் ஆர்வமும் குறைவாக உள்ளது. மனம் தளராமல் மாறி வரும் நகர சூழ்நிலைக்கு ஏற்றவாறு இயன்றவரை அழகிய தோட்டங்களை நாமும் வீட்டில் அமைக்கலாமே!. பூக்கள் பூத்து குலுங்கும் வகையில் தோட்டம் அமைத்தால் பூக்களின் வாசம் வீட்டிற்கு வருபவர்களை ஈர்க்கும் விதமாக இருக்கும். மனதிற்கு புத்துணர்ச்சியை அளிப்பதில் செடிகளை விட சிறந்த மருத்துவர்கள் கிடையாது. இது போல் அழகிய தோட்டங்களை வீட்டினுள்ளேயே அமைத்தால் மனதில் மத்தாப்பூவாய் மகிழ்ச்சி பொங்கும்.
- முருகேஸ்வரி ரவி,
சென்னை-13.்்


Tuesday, March 15, 2016

தேர்தல் நினைவுகள்.


   அப்போதையக் குழந்தைகளின் உலகத்தை தொலைக்காட்சியும், இணையதளமும் வியாபித்திருக்கவில்லை. தெருக்கோடியில் நண்பர்களுடன் விளையாடிய நேரம் போக மீதி எந்நேரமும் பேச்சு, பேச்சு,பேச்சு தான். செவி வழிச்செய்திகளே அனைவரது வாழ்விலும் முக்கிய பங்காற்றின. தகவல்கள் அப்பொழுதெல்லாம் கொட்டிக் கிடக்கவில்லை. பெரியவர்கள் மற்றும் நண்பர்கள் கூறும் அனுபவத்துளிகளில் இருந்து வாழ்க்கைப்பாடம் கற்று வந்தோம். என்னுள் எப்படி இந்த அதீத அரசியல் ஆர்வம் வந்தது என்று சிந்தித்துப் பார்க்கையில் என் தந்தையின் பேச்சால் ஈர்க்கப்பட்டு சிறு வயது முதலே அரசியலை ஆர்வத்துடன் கவனித்து வந்தது நினைவுக்கு  வருகிறது. 
    என் தந்தைக்கு அபார அரசியல் ஞானம். துக்ளக், தினமணி படித்துவிட்டு அதன் கருத்துக்களையும் தனது எண்ண ஓட்டங்களையும் கண்டிப்பாக எதிர்படுபவர்களிடம் விவாதிப்பார். வியாபார நிமித்தம் சிவகாசியிலிருந்து அடிக்கடி மதுரைக்கு வாடகை சிற்றுந்தில் செல்வார். பள்ளி விடுமுறை எனில் குடும்பத்தினரும் அதில் பயணிப்போம். அதன் ஓட்டுநர் காங்கிரஸ் அனுதாபி. என் தந்தையோ கலைஞர் கருணாநிதியின் தீவிர பக்தர். வாக்குவாதம் கலந்த உரையாடலுக்கு பஞ்சமா வரும்!? வழியெங்கும் சுவாரசிய தகவல்கள் இறைக்கப்படும்,விவாதங்கள் நடைபெறும். அன்னை இந்திராவும், முன்னாள் தமிழக முதல்வர் திரு. எம்.ஜி.்ஆர் அவர்களும் என் தந்தையின் எள்ளலுக்கு ஆளானார்கள். ஓட்டுநர் தீனஸ்வரமாய் திருமதி இந்திரா காந்தி அவர்களை ஆதரித்து பேசுவார். சுமார் பன்னிரண்டு வயது என்றாலும் நான் அவற்றை மிகவும் உன்னிப்பாக ஆவலுடன் கவனித்து வருவேன். வீட்டிற்கு வந்தவுடன் அவர்கள் விவாதித்த பொருளைப் பற்றி துக்ளக் ஐ எடுத்து வாசித்து அறிந்து கொள்வேன். காங்கிரஸ் இரட்டைக் காளை சின்னத்திலிருந்து பசுவும் கன்றும் சின்னத்திற்கு மாறியதும் , அதன் பின் கை சின்னத்திற்கு மாறியதும் இந்தக் காலக்கட்டத்தில் தான். ஜனதாக் கட்சியின் ஏர் உழவன் சின்னமும் இன்னமும் என் நினைவில் நிற்கிறது. மற்றொரு சம்பவம். சிவகாசி அப்போது பாராளுமன்ற தொகுதி.( இப்போது இல்லை) அதன் பாராளுமன்ற உறுப்பினராக பிரபல கல்வியாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி அமர ர் எஸ்.ஆர். நாயுடு அவர்களின் புதல்வி திருமதி வி. ஜெயலெஷிமி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அந்நாளில் சிவகாசி காங்கிரஸின் கோட்டையாக்க் கருதப்பட்டது. இரு முறை எம்.பியாகத் திகழ்ந்த அவரைப் பற்றி ஒரு கூடுதல் தகவல் , இது போன்ற ஒரு பயணத்தில்,தெரிந்து கொண்டேன். முன்னாள் மத்திய அமைச்சர் திரு மோகன் குமாரமங்கலம் அவர்கள் பயணித்த விமானம்  1976இல் விபத்துக்கு உள்ளாதனல்லவா! அதில் உயிர் பிழைத்த மிகச்சிலருள் இவரும் ஒருவர்.
          இவ்வாறு அரசியல் பேச்சுக்களால் கவரப்பட்ட எனக்கு வாக்களிக்கும் ஆசை பள்ளிப்பருவத்திலே வந்தது. வாக்கு இயந்திரம் , வாக்காளர் அடையாள அட்டை போன்ற நவீன தொழில்நுட்பங்கள் இல்லாத்தினாலோ என்னவோ என்னால் அந்த உள்ளாட்சித் தேர்தலில் பக்கத்து விட்டு தமக்கையின் வாக்கை அளிக்க முடிந்தது. அந்தத் தேர்தலில் பெரும் கட்சிகளுக்கு இணையாக இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள்( அவர்களின் பெயர் நினைவில் இல்லை, ஆனால் சின்னம் நினைவில் நிற்கிறது....மீன் மற்றும் பானை.) ஆரவாரமாக போட்டியிட்டனர். தெருவெங்கும் தோரணங்களும், போஸ்டர்களும் களை கட்டி இருந்தன. மாலை நான்கு வரை வீட்டு வீடாகச்சென்று வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு சைக்கிள் ரிக்ஷாவில் அழைத்து சென்றனர். மறு நாள் சென்று என் தேர்தல் அனுபவங்களை என் தோழிகளிடம் பகிர்ந்து கொண்டேன்.
            என்னுடைய நேரடி அனுபவம் உள்ளாட்சித்தேர்தலில் தான் என்றாலும் சட்டமன்ற தேர்தலகளையும், பாராளுமன்ற தேர்தலையும் நான் கவனிக்கத் தவறவில்லை.1975 ம் வருடம் நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப் பட்டது. தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.திரு மொரார்ஜி தேசாயிடம் கைது செய்யும் வேளையில் பத்திரிக்கையாளர்கள் கருத்து கேட்கிறார்கள்.அதற்கு மொரார்ஜி சொன்ன இரண்டே வார்த்தைகள் –. “விநாச காலே – விபரீத புத்தி”. இது என் தந்தை சிலாகித்து கூறிய சம்பவம். அந்த வேளையில் பத்திரிக்கையாளர்களின் குரல்வளையை அரசு நெறித்த வேளையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் துணிந்து தன் கடமையை ஆற்றியதாக்க் கூறுவார். பின்னர் நெருக்கடி நிலை காரணமாக காங்கிரஸ் வீழ்ச்சியை சந்தித்த காலம் அது. ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர் கொண்டனர். கதம்பக் கூட்டணியாய் திகழ்ந்த ஜனதாக் கட்சி வென்றது. அதன் வெற்றியை தன் வெற்றியாகவே பாவித்த என் தந்தையின் சந்தோசம் பல நாள் நீடிக்கவில்லை. தேசத்தின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் சர்வரோக நிவாரணியாக்க் கருதப்பட்ட முன்னாள் பிரதமர், காந்தியவாதி திரு. மொரார்ஜி தேசாய் அவர்களின் அரசு குறுகிய காலமே நீடித்தது. அக்காலத்தில் அந்த அரசு சாமான்ய மக்களுக்காக கொண்டு வந்த 'ஜனதா சாப்பாடு' மிகவும் பிரபலமாயிருந்தது. அடிக்கடி வெளியூர்களுக்கு பயணப்படும் என் தந்தை மற்றும் அவரின் ஊழியர்கள் குறைந்த விலையில் கிடைத்த ஜனதா சாப்பாட்டை புகழ்ந்து சொன்னது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது.
                இதன் பின் எத்தனையோ தேர்தல்கள், கூட்டணிகள், ஆட்சிமாற்றங்களை சந்தித்து விட்டோம். கால சுழற்சி பழையனவற்றை மறக்கச்சொல்கிறது. புதிது புதிதாய் நடந்தேறும் சம்பவங்கள் பழைய நிகழ்வுகளின் கடுமையை குறைத்து விடுகின்றன. நம் நாட்டை ப் பொறுத்தவரை அதிகாரம் கைமாறும், ஆட்சி மாறும், பணமும் செல்வமும் வந்து போகும். ஆனால் ஊழல் மட்டுமே நீடித்து நிற்கும். காலம் கற்று தந்திருக்கும் பாடம் இது தான்.