1984ம் வருடம். நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் புதிதாய் வீடு கட்டி புகுந்திருந்தோம். சட்டசபைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. பதின்பருவத்திலிருந்த எனக்கு கட்சிகளும், கொடிகளும், நாளிதழ்களில் பக்கம் பக்கமாய எழுதப்பட்டிருந்த கட்டுரைகளும் அரசியல் மீது ஆர்வத்தை தூண்டுவதாய் அமைந்தன. சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு கட்சிகளின் வேட்பாளர்கள் எப்போதும் சிவகாசியைச் சுற்றியுள்ள ஏதேனும் ஒரு கிராமத்தை சார்ந்தவர்களாகவே இருப்பர். நம் சொந்த ஊர்க்கார்ர் வேட்பாளராய்த் திகழ் வேண்டும் என்று அனைவருக்கும் ஒரு ஏக்கம் எப்போதும் இருந்தது.
அந்த வருடம் சிவகாசியைச் சேர்ந்த திரு. கிரகதுரை அவர்கள் மீன் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டார். சிவகாசியின் பிரபல தொழிலதிபர் அவர். உடனே ஊரெங்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. தேர்தல் பிரச்சாரம் களை கட்டியது. தெருவுக்கு தெரு, விதிக்கும் வீதி மீன் சின்ன போஸ்டர்களும், கொடிக்கம்பங்களும், தோரணங்களும் ஊரே அல்லகோலப்பட்டது. ஆட்டோ, மோட்டார் சைக்கிள் என்று ஒலிபெருக்கி மூலம் மீன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்துக் கொண்டே இருந்தனர். ஊரில் இரண்டு பேர் கூடிப் பேசினால் அது கிரகதுரை அண்ணாச்சி தேர்தலில் போட்டியிடுவது பற்றியும் அவருடைய வெற்றி வாய்ப்பு எவ்வளவு என்பது பற்றியும் தான் இருந்தது ஊருக்குள் அனைவருக்கும் அவர் வெல்ல வேண்டும் என்ற பேரவா இருந்தது. நம் ஊர்க்கார்ர் நம் சார்பாக சட்டசபையில் இருந்தால் ஊருக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் என்று அனைவருக்கும் எதிர்ப்பார்ப்பு.
தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கடைசி கட்ட பிரச்சாரம் ஜரூராய் நடைப்பெற்றுக் கொண்டு இருந்தது. எங்கள் தெருவில் உள்ளவர்கள் ஏதோ அவர்கள் வீட்டு விஷேசம் போல் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தனர். உற்சாக மிகுதியில் பக்கத்து வீட்டுக்கார்ர் எங்கள் வீட்டின் சுவர் முழுக்க மீன் சின்ன போஸ்டர் ஒட்டி மீன் சின்ன முத்திரை பதித்து விட்டார். அப்போது தான் கட்டிய புதிய வீடு என்று சொன்னேன் அல்லவா? என் அன்னைக்கு அதைப்பார்த்தவுடன் கோபம் வந்துவிட்டது. பொதுவாக அமைதியாக இருக்கும் அவர்கள் பக்கத்து வீட்டுக்கார்ரிடம் சண்டைக்குசென்று விட்டார். என் தந்தையோ ஊரில் இல்லை. பிள்ளைகள் நாங்கள் நால்வரும் பயந்து போய் வீட்டில் அமர்ந்திருந்தோம். அம்மா திட்டியதால் சண்டை பெரியதாகி விடுமோ என்று எங்களுக்கு உள்ளூர பயம். ஆனால் அவர்கள் மன்னிப்பு கேட்டு வந்து போஸ்டரை கிழித்து விட்டனர். இன்றும் இந்த மீன் சின்ன களேபரங்கள் என் நினைவிலாடுகின்றன.
தேர்தல் நாளன்று சைக்கிள் ரிக்ஷாவில் வாக்குச் சாவடிக்கு அனைவரையும் அழைத்துச் சென்றனர். வெற்றி நிச்சயம் போன்ற ஒரு மாயத் தோற்றம் நிலவியது. ஆனாலும் அந்த தேர்தலில் அவர் வெல்லவில்லை. சிவகாசியிலுள்ள வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குப் பெட்டிகள் அனைத்திலும் மீன் சின்னத்திற்கு வாக்குகள் விழுந்திருந்தனவாம். ஆனால் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்திலும் இரட்டை இலைக்கு வாக்கு பதிவாகி இருந்ததாம். அந்தத் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த திரு V.பாலகிருஷ்ணன் அவர்கள் வெற்றி பெற்றார்.
-
arumai pa
ReplyDelete