சொல்லும் போதே மனசுக்குள் மழை பொழிய வைக்கும் சொல் வீடு. நம் ரசனையின் வெளிப்பாடாகத் திகழும் வீட்டை அலங்கரிக்க அனைவரும் கொஞ்சமாவது பிரயத்னப்படுவோம். அலங்கார விளக்குகள், அழகழகான பொம்மைகள், கண்கவர் மரச்சாமான்கள் என்று விதவிதமான பொருட்களைக் கொண்டு வீட்டை அலங்கரித்தாலும் செடிகளைக் கொண்டுவீட்டை அலங்கரித்தால் அதன் குளுமையான பசுமையே கூடுதல் அழகு தரும். நகர்புறங்களில் வாழ்பவர்களுக்கு, அடுக்குமாடி வீடுகளில் வாழ்பவர்களுக்கு வீட்டை சுற்றி பெரிய தோட்டம் அமைத்துக் கொள்ள வாய்ப்பில்லை. வீட்டினுள்ளேயே செடிகளை வைத்து அழகு படுத்தவே அவர்கள் விரும்புகின்றனர். அவர்களுக்காகவே கண்டுபிடித்தாற்ப் போல இப்போது புதிதாக டெர்ரரியம் என்ற புதுமையான தோட்டக்ககலை வந்துள்ளது. இது வீட்டினுள்ளே அலங்காரமாக கண்ணாடி பேழை அல்லது குடுவையில் செடிகள் வளர்ப்பது ஆகும். இதற்கு அழகிய கண்ணாடி குடுவைகள், வாயகன்ற பாட்டில்கள் அல்லது சிறிய மீன் தொட்டிகளைக் கூட பயன்படுத்தலாம். தொங்க விட இயலும் கண்ணாடி குடுவைகளையும் பயன்படுத்தலாம். மிகச்சிறிய கள்ளிச்செடிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல கற்பனை வளத்துடன் தோட்டம் போன்ற அமைப்பை கண்ணாடி குடுவையினுள் அமைக்க வேண்டும். உங்கள் கற்பனைக்கு வானமே எல்லை. இணையத்தில் தேடினால் எண்ணிலடங்கா ஐடியாக்கள் கொட்டிக் கிடக்கின்றன. மனதைக் கொள்ளை கொள்ளும் இவ்வகைத் தோட்டங்களை நம் வரவேற்பறையில் ஒயிலாக இடம் பெறச் செய்யலாம்.
கண்ணாடிக் குடுவையில் முதலில் அழகிய கூழாங்கற்களை அடுக்க வேண்டும் . இதனை மிகவும் பொறுமையாக நீண்ட கரண்டியின் உதவியுடன் செய்யலாம். கூழாங்கற்களுக்குப் பதில் மொசைக் சிப்ஸ்களையும் இடலாம்.அதன் மீது தேவையான அளவு மண் கலவை இட வேண்டும்.அமைத்த தன் மீது வகை வகையான செடிகளை நடலாம்.சிறிய செடிகளே இவ்வகை தோட்டத்திற்கு தோதானவை. அலங்கார முட்செடிகள் இதனுள் அமைத்தால் கம்பீரம் பெறுகிறது. மெதுவாக வளரும் செடிகளே நல்லது. விரைவில் வளரும் செடிகளை வைத்தால் விரைவில் குடுவையுள் இடப் பற்றாக்குறை ஏற்படும். புஃனல் மூலம் மிக ஜாக்கிரதையாக தண்ணீர் ஊற்ற வேண்டும். கவனமாகவும் திட்டமாகவும் தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் அதிகமாக ஊற்றிவிட்டால் அதனை வெளியேற்றுவது கடினமாகி செடிகளுக்கு நோய் வர வாய்ப்புள்ளது.மினியேச்சர் நாற்காலி, பறவைகள், பீங்கான் பொருட்கள் என்று ஏதேனும் அலங்காரம் செய்யலாம். அழகுறத் திகழும் இதனை வரவேற்பறையில் மேடையிட்டு அமைக்கலாம் . சாப்பாட்டு அறையில், வெராண்டாவில், பால்கனியில் என்று எங்கு அமைந்தாலும் கண்ணைக் கவரும்.சவாலான காரியமாய் திகழ்ந்தாலும் அதன் எழில் உங்கள் வீட்டிற்கு வருபவர்களை அசர வைக்கும்.இதே போல அகலமான பீங்கான் தட்டுகளிலும் சிறிய தோட்டங்கள் அமைத்து வீட்டை அலங்கரிக்கலாம்.
மீன் தொட்டிகளிலும் இது போன்று தோட்டம் அமைக்கலாம். முதலில் கூழாங்கற்களை இட்டு பின மண்கலவையை இட வேண்டும். உயரமான செடிகளை முதலிலும் குட்டையான செடிகளை பிறகும் அமைக்க வேண்டும். மிக அகலமான தொட்டிகள் எனில் நீர் தாவரங்களையும் வளர்க்கலாம். அழகான நீர் வாழ் தாவரங்களில் சில முழுவதுமாய் தண்ணீரில் அமிழ்ந்திருக்கும், சில நீரின் மேல் மிதந்து கொண்டிருக்கும். அழகிய பீங்கான் பாத்திரங்களை கலைநயத்துடன் தொட்டியினுள் அமைத்து விட்டால் காணக் கண் கோடி வேண்டும். தண்ணீரின் அசைவினால் இச்செடிகள் இங்கும் அங்கும் இடம் மாறிக்கொண்டே இருப்பது தனி அழகு தான். விருப்பமென்றால் தண்ணீரினுள் மீன்களை விடலாம். ஆனால் மீன் வளர்த்தால் அதற்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்கிறதா என கவனிக்க வேண்டும். அதற்கு மின் இயந்திரம் மாட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீட்டின் உட்புறத்தை அழகு படுத்துவதைப் போல வெளித் தோற்றத்தையும் செடிகளால் அழகு படுத்தலாம். தனி வீடு எனில் தோட்டம் அமைப்பது முதல், வெளிப்பூச்சு, முகப்புத்தோற்றம் வரை வித்தியாசமாய் வடிவமைத்து நம் வீட்டை தனித்துக் காட்டலாம். ஆனால் அடுக்கு மாடி குடியிருப்புக்கள் எனில் அது சாத்தியமில்லை. ஆனால் நம் வீட்டை எப்படி தனித்த அழகுடன் காட்டுவது? அதற்கு ஒரு வழி இருக்கிறது. சன்னல் தோட்டம் என்பதே அது. சன்னல்கள் அதிக ஒளியும் காற்றோட்டத்துடனும் திகழ்வதால் தோட்டம் அமைக்க ஏதுவானதாகும். சன்னல் மேடை எவ்வளவு அகலம் உள்ளது என்பதைப்பொருத்து உள்பக்கத்தில் அல்லது வெளிப் பக்கத்தில் செடிகள் வைக்கலாம்.மேடை சிறியதாக இருந்தால் அதற்கேற்ற சிறு தொட்டிகளும், அவற்றைக் கையாளும் போது எளிதில் விழுந்து விடாமல் இருக்க சிறிய சட்டம் ஒன்றை சன்னல் நீளத்திற்கு பொருத்திவிட வேண்டும். சன்னலின் உட்புறத்தில் செடிகளை வைக்கும் போது செடிகளையும், தொட்டிகளையும் தேர்ந்து எடுப்பதில் அதிக கவனம் வேண்டும். தொட்டிகள் அல்லது பெட்டிகள் மிகவும் அழகானதாகவும், அறையில் உள்ள மற்ற சாதனங்களோடு பொருந்துவதாகவும் இருக்க வேண்டும். அவற்றின் வண்ணமும் அமைப்பும் அறையில் உள்ள அலமாரிகள் சோபா ஆகியவற்றோடு இணைவதாகவும் இருக்க வேண்டும். சன்னலின் உட்புறம் வைக்கும் செடிகளின் பெட்டிக்குள் கீழ் உள்ள இடத்தை அலமாரி போல் உபயோகப்படுத்தலாம். சன்னலின் வெளிப்பக்கம் செடிகளை வைக்க வேண்டுமெனில் இரும்பு ஸ்டாண்டுகளில் பெட்டியை வைத்து சன்னல் கம்பிகளில் மாட்டி விடலாம்.
சன்னலின் பக்கம் அதிக சூரிய ஒளி படும் எனில் பூக்கும் செடிகளையும், குறைவாக ஒளி படும் எனில் குரோட்டன்ஸ் செடிகளை வைக்கலாம். பூக்களின் அழகு எங்கிருந்து பார்த்தாலும் நம் வீட்டை அழகுற காட்டும். எத்தனாவது மாடி என்றாலும் உங்கள் வீடு தனித்துத் தெரியும். அதன் அழகிற்காக நீங்கள் கட்டாயம் பாராட்டப் படுவீர்கள்.
மேல் நாடுகளில் ஒவ்வொரு வீட்டிலும் அலங்கார செடிகளை வளர்த்து வீட்டை அழகுபடுத்தும் வழக்கம் உள்ளது. நம் நாட்டில் செடிகள் வளர்ப்பதற்கு ஏற்ற சூழலும் ஆர்வமும் குறைவாக உள்ளது. மனம் தளராமல் மாறி வரும் நகர சூழ்நிலைக்கு ஏற்றவாறு இயன்றவரை அழகிய தோட்டங்களை நாமும் வீட்டில் அமைக்கலாமே!. பூக்கள் பூத்து குலுங்கும் வகையில் தோட்டம் அமைத்தால் பூக்களின் வாசம் வீட்டிற்கு வருபவர்களை ஈர்க்கும் விதமாக இருக்கும். மனதிற்கு புத்துணர்ச்சியை அளிப்பதில் செடிகளை விட சிறந்த மருத்துவர்கள் கிடையாது. இது போல் அழகிய தோட்டங்களை வீட்டினுள்ளேயே அமைத்தால் மனதில் மத்தாப்பூவாய் மகிழ்ச்சி பொங்கும்.
- முருகேஸ்வரி ரவி,
சென்னை-13.்்
முரு ...உன் வீட்டின் அழகே அதை நிரூபணம் செய்கிறது.அற்புதமான டிப்ஸ்.புதுசா வீடு கட்டி ...சீக்கிரமா இதையெல்லாம் செய்யனும்...
ReplyDelete