Wednesday, October 26, 2016

உதவி!

" மாணவர்களே! திருக்குறள் பொழிப்புரை எத்தனை பேர் எழுதி வந்தீர்கள்?" அனைவரும் கைகளை உயர்த்தினர். அனைவரும் எழுதியிருந்தனர். அது தான் தமிழாசிரியர் முத்துவின் திறமை. அவர் என்ன கூறினாலும் மாணவ கண்மணிகள் உடனே அதை செய்து முடிப்பர். அந்த அளவு அவர் மாணவர்கள் அவர் மீது பிரியமாய் இருப்பார்கள். அவரும் அத்தனை மாணவர்கள் மீதும் பாசத்தைப் பொழிவார். இதுவரை ஒருவர் மீது கூட அவர் கடுஞ்சொல் கூறியது கிடையாது.
        கண்ணன் எழுந்து," ஐயா! நான் பொழிப்புரை எழுதியிருந்தாலும் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன ஐயா" என்றான். அவரும்," என்ன அது? கேள் சொல்கிறேன்" என்றார். 

"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
இது குறள். இதன் பொருளாவது,' பயனைக் கருதவும் செய்த உதவியின் நன்மையை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலையும் விட அளவினால் மிகப் பெரியதாகும்' என்பதாம். இந்தக்குறளில் பயன் கருதி செய்த உதவி என்று வருகிறது., உதவி செய்பவர் யாராக இருந்தாலும் அதற்குரிய பயனை எதிர்பார்ப்பார்களே ஐயா?"
" அல்ல கண்ணா! பரிசுத்தமான உள்ளம் பிரதிபலனை எதிர்ப்பார்க்காது. அதைத்தான் வள்ளுவர் அங்ஙனம் கூறுகிறார்." மாணவர்களிடம் திரும்பி," மாணவர்களே! இதோ கண்ணன் நம் அனைவரிடமும் ஒரு சந்தேகத்தைஎழுப்பியுள்ளான். இதனை உங்கள் செயல்களின் மூலமே விளக்குகின்றேன். நாளை உங்கள் அனைவருக்கும் ஒரு கடமை. இன்று மாலை பள்ளியை விட்டைச் சென்றடைந்ததும் யாருக்காவது உதவி செய்யுங்கள். அதனை நாளை காலை வந்து வகுப்பறையில் பகிருங்கள். என்ன? சரிதானா?" என்றார். மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் " சரி ஐயா" என்று உரத்துக் கூறினர். உடனேயே சளசளவென்று அருகில் பேச ஆரம்பித்தனர். ' என்ன செயவது' என்ற விவாதம் போலும். தமிழாசிரியர், " போதும்..போதும் இனி பாடத்தை கவனிக்கவும்" என்று பாடத்தை நடத்த ஆரம்பித்தார்.
          மறுநாள் தமிழ் வகுப்பு காலையில் இரண்டாவதாக வந்தது. ஆசிரியர் உள்ளே வந்ததும் கலகலத்துக் கொண்டிருந்த வகுப்பறை அமைதியானது. மாணவர்கள் முகங்கள் அனைத்தும் பிரகாசித்தன. முத்து புன்னகைத்துக் கொண்டார். முதலில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து விட்டு பின் மாணவர்களிடம்," மாணவர்களே! நான் நேற்று சொன்னதைச் செய்தீர்களா?" "ஓ..." அனைவரும் ஒருமித்த குரலில் கூறினார்கள். "ம்..ம்.. எங்கே ஒவ்வொருவராக அவரவது அனுபவங்களைக் கூறுங்கள்" என்றபடி தன் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
       கண்ணன்," ஐயா.. என் பாட்டிக்கு மூன்று குடம் தண்ணீர் அடித்துக் கொடுத்தேன்" என்றான். லதா எழுந்து," என் தங்கை வீட்டுப் பாடம் எழுத உதவினேன்" என்றாள். ரமேஷ்," நான் என் நண்பர்களுடன் பக்கத்து வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென்று மினசாரம் நின்று போனது. உடனே அனைவரும் பயந்து விட்டனர். நான் என் வீட்டிற்கு ஓடிச் சென்று மெழுகுவர்த்தி எடுத்து வந்து ஏற்றினேன்" என்றான். முத்து," ம்..ம். நல்லது.. வேறு..வேறு" என்றார்.
      அகிலன்," ஐயா! என் வீட்டின் அருகில் ஒரு பூங்கா உள்ளது. அங்கு மாலையில் அனைவரும் நடைப் பயிற்சி செய்வர். குழந்தைகள் விளையாடுவர். பலரும் கூடுவது வழக்கம். நான் என் தந்தையிடம் கேட்டு ஒரு கரும்பலகை வாங்கினேன். அதை அந்தப் பூங்காவில் நிறுவி, நீங்கள் கற்றுக்கொடுத்த குறளையும் அதன் கருத்தையும் எழுதினேன். பலரும் அதனை நின்று வாசித்து விட்டு சென்றனர். இனி அதை நாள்தோறும் செய்வது என் திட்டம்" என்றான்.ஆசிரியர்," பலே!" என்றார். யாழினி மெதுவாக பேச ஆரம்பித்தாள். " ஐயா! என் வீட்டில் என் தாய் தந்தையர் எனக்கு நிறைய புத்தகங்கள் வாங்கித் தந்துள்ளனர். அவற்றில் நான் படித்து முடித்துவிட்ட சிலவற்றை எடுத்து என் வீட்டின் வெளியே உள்ள சன்னலில் ஒரு பெட்டி வைத்து அதில் அடுக்கி வைத்துள்ளேன். அதன் அருகே' உங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளலாம். அதே போல் அந்தப் பெட்டியில் உங்களுக்கு தேவைப்படாத புத்தகங்களை கொண்டு வந்து வைக்கலாம்' என்று எழுதி வைத்துள்ளேன். நேற்றே எங்கள் குடியிருப்பில் உள்ள சிறுவர்கள் சிலர் என் புத்தகங்களை எடுத்துக் கொண்டு போய் தங்கள் புத்தகங்களை கொண்டு வந்து வைத்துள்ளனர். இப்போது அது ஒரு லெண்டிங் லைப்ரரியாக மாறிவிட்டது" என்றாள். "அருமை..அருமை ..உட்கார் யாழினி!"என்றபடி தமிழாசிரியர் எழுந்தார்.
     " மாணவர்களே! கவனித்தீர்களா...உதவி என்றவுடன் உங்கள் தாத்தா, பாட்டி , அம்மா, அப்பா, உறவினர் என்று பலரும் உதவி செய்தீர்கள். அதை நான் பாராட்டுகிறேன். என்றாலும் அகிலன் மற்றும் யாழினி செய்த உதவிகளில் பரந்த நோக்கும் பொது நலமும் கலந்திருப்பதைப் பார்த்தார்களா? அது போல் உதவ வேண்டும். தன்னலம் இல்லாத செயல்கள் தான் எப்போதும் பெரிதும் பாராட்டப்படும். கண்ணன்... நேற்று நீ கேட்ட கேள்விக்கு உனக்கு விடை புரிந்திருக்கும் என நினைக்கின்றேன்." கண்ணன்," நன்றாகப் புரிந்து கொண்டேன் ஐயா!" என்றான். ஆசிரியர் மேலும்,"அனைவரையும் உங்கள் செயல்களுக்காக நான் பாராட்டுகிறேன். என்றாலும், நீங்கள் அனைவரும் அகிலன் மற்றும் யாழினிக்கு கை தட்டி பாராட்ட வேண்டும்" என்றார். அனைவரும் மகிழச்சியடன் கை தட்டி தங்கள் பாராட்டைத் தெரிவித்தனர். அகிலன் மற்றும் யாழினி போல தாங்களும் தன்னலமில்லா உதவி புரிய வேண்டும் என்று உறுதி பூண்டனர்.

Sunday, October 16, 2016

குழந்தைப்பாடல்..

காட்டில் உள்ள சிறுத்தை
நாட்டில் புகுந்து சேதம்!
செய்தி கேட்டு மனம்
மெய்யோ என வருந்தியது.

யானைக் கூட்டம் சிலவும் இரயில்
பாதையை கடக்க முற்பட்டு
மாண்டே விட்டனர்  என்றறிந்தவுடன்
கல்லாய் மனம் கனத்தது.

காட்டு விலங்கு யாவும்
நாட்டினுள் புகுந்து நாசம்!
நித்தம் மக்கள் புகார் என்றும்
சத்தமாக உலகம் வம்பளக்கின்றது.

ஒன்றை மறந்துவிட்டாய் மனிதா
கானகத்தின் உள்ளே நீ சென்று
அவற்றை உறைவிடத்தை நீ சிதைத்தாய்!
இப்போது அவை அழிக்கின்றன ஊரகத்தை.

பூமி உருண்டை மொத்தமும் உனக்கல்ல!
புவியில் வாழ அனைத்திற்கும்
சமமான உரிமை இங்குண்டு!
சடுதியில் உணர்ந்திடு மனிதகுலமே!
 
விலங்கு இனமும் மனித இனமும்
இணைந்தே பூவுலகில் வாழவேண்டும்.
இயற்கையை அழித்து ஆதிக்கம் செலுத்தினால்
இன்னல்கள் ஆயிரம் உண்டு, உணர்ந்திடு !




சாலை விதிகளை மதித்திடுவோம்..

சாலை விதிகளை மதித்திடுவோம்
காலை மாலை இரு வேளையும்!
எல்லையில்லாக் குழப்பம் இந்நாளில்
இல்லையென்று சீராக நடந்திடுவோம்!

நடந்து நீ சென்றால்
நடைமேடை மட்டும் பயன்படுத்து!
இருசக்கர வாகனத்தில் நீ சென்றால்
இணக்கமாய் ஹெல்மெட் பயன்படுத்து!

சிக்னலில் சிகப்பு வந்தால்
சிறிது நேரம் நின்றிடுவோம்!
இண்டிகேட்டர் சரியாய் பயன்படுத்தி
இந்த உலகை உன்னதமென்று உணர்ந்திடுவோம்!

மது அருந்தி பயணம் செய்தால்
அது தவறென்று அவருக்கு உணர்த்திவிடு!
உரிமம் பெறாமல் வாகனம் ஓட்டினால் 
உலகின் மிகப்பெரும் தவறென்று உணர்த்திவிடு!

நான்கு சக்கர வாகனமெனில்
நாளும் சீட்பெல்ட் அணிந்திடுவோம்!
சாலை சந்திப்புகளில் அடையாளக்குறியீடுகள்
வாகன பதிவெண் விதிகள் செவ்வனே அறிந்திடுவோம்!

அதிக வேகம் ஆபத்து என்றுன்னை
கதியே என்றிருக்கும் குடும்பம் உணர்த்தும்!
போக்குவரத்துக்கு இடையூறு ஆகாதென்று
போலீஸ் நாளும் உலகிற்கு உணர்த்தும்!
 
  

Friday, September 2, 2016

இனி தாமதியேன்.

         "இந்த ராமுவுக்கு எத்தனை முறை சொன்னாலும் புரிவதில்லை.. நானும் எத்தனையோ முறை சொல்லிவிட்டேன். அன்பாக சொன்னேன். கடுமையாகத்திட்டினேன். தண்டனைகள் கூட கொடுத்துப் பாத்துட்டேன். ஆனால் அவன் திருந்துகிற பாடாகத் தெரியவில்லை. தினமும் காலையில் தாமதமாகத்தான் வருகிறான்" சக ஆசிரியரிடம் ஆசிரியை சீதா பேசிக் கொண்டிருந்தார். அப்போது உள்ளே வந்த ஆங்கில ஆசிரியரும் அவருடன் இணைந்து கொண்டார். " நான் அவனுக்கு ஐந்தாம் வகுப்பு ஆசிரியர். அப்போதும் இப்படித்தான். நாள்தோறும் வகுப்பிற்கு தாமதமாகத்தான் வந்தான். அவன் திருந்தவே இல்லை. ஹெட் மாஸ்டரிடம் கூட அழைத்துச் சென்றேன்.  அவன் மாறவில்லை.என்ன... பையன் புத்திசாலி. படிப்பில் வெகு சுட்டி. பெற்றோர் தவறி விட்டனர். உறவினர் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறான். அதனால் அதிகமாக கண்டிக்க மனம் வரவில்லை."
     தமிழாசிரியர் முத்து இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு ராமுவைத் தெரியும். பையன் புத்திசாலி, ஆனால் சோம்பேறி. ஒரு முறை கேட்டால் போதும் 'டக்' எனப் புரிந்து கொள்வான். கற்பூர புத்தி என்பார்களே அதைப் போல. ஆனால் மகா கும்பகர்ணன். அவனுக்கு அவனுடைய தூக்கமே முதல் எதிரி. காலையில் எழுந்து சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வருவது என்பது அவனுக்கு அத்தனை கடினமான காரியம். எத்தனையோ முறை சொல்லியும் பல ஆசிரியர்கள் தண்டனை விதித்தும் அவன் கேட்கிறாற் போல இல்லை. தமிழாசிரியர் முத்து தான் ஒரு முறை முயற்சி செய்யலாம் என முடிவெடுத்தார்.
      வகுப்பு ஆசிரியை சீதாவிடம்," இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு ஆறாம் வகுப்பினர் முதல் வகுப்பை எனக்கு விட டுக் கொடுங்கள். என்னுடைய வகுப்புகளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வாரத்திற்குப்பிறகு உங்கள் வகுப்பை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார். ஆசிரியை சுமதியும் சம்மதித்தார். இதனை வகுப்பறையிலும் அறிவித்து விட்டார். 
       அடுத்த நாள் அறிவித்த படியே தமிழ் வகுப்பு முதல் வகுப்பாயிற்று. வகுப்பறையில் நுழைந்தவுடன் ஆசிரியர் முத்து அனைவரையும் பாடப்புத்தகத்தை மூடி வைக்கச் சொல்லிவிட்டார். பின்னர் மஹாபாரதம் கதை ஒன்றைக் கூற ஆரம்பித்தார். வகுப்பே ஆர்வமுடன் ஆசிரியர் கதை கூறும் பாங்கினை ரசித்துக் கேட்டது. வழக்கம் போல இருபது நிமிடங்கள் தாமதமாக வகுப்பறைக்குள் நுழைந்தான் ராமு. தமிழாசிரியர் கதை கூறிக்கொண்டிருப்பதையும், வகுப்பு எந்த அரவமுமின்றி ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருப்பதையும் கண்டான். தன் இடத்தில் போய் அமர்ந்து கொண்டு பக்கத்திலிருந்த ராஜாவிடம்,' என்னடா இது?' என்று கேட்டான். ராஜா கதை கேட்கும் ஆர்வத்தில் இவன் கேள்விக்கு பதிலளிக்கவில்லை. ராமு அமைதியாக கதை கேட்க ஆரம்பித்தான். முதலில் இருந்து கவனிக்காத தால் அவனுக்கு புரியவில்லை. ஆசிரியரிடம் கேட்க பயம். நண்பர்கள் அனைவரும் கதையில் ஒன்றிப் போயிருந்தனர்.ஒன்றும் புரியாமலேயே அன்றைய வகுப்பு கடந்தது அவனுக்கு. வகுப்பு முடிந்த பின் நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றால் அவர்களுக்கு நேரம் இல்லை. சரி போகட்டும் என்று ராமு விட்டுவிட்டான்.
      மறு நாளும் வழக்கம் போலவே தாமதமாக வந்தான். அவன் நுழையும் போது வகுப்பு அல்லோகல்ப்பட்டுக் கொண்டிருந்தது.' சார்.. சார்.. நான் பதில் சொல்றேன் சார்..,' என்று அனைவரும் கைகளை உயர்த்தி உற்சாகமாக கூவிக் கொண்டிருந்தனர்.தமிழாசிரியர் புதிர்கள் கேட்டுக் கொண்டிருந்தார். ராமு,' ஐயோ..புதிர்கள் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்குமே! மிஸ் பண்ணி விட்டேனே! ' என வருந்தினான். ' சரி, மீதி நேரம் கேட்பாரல்லவா? அதில் ஜமாய்த்து விடலாம்' என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கும் போதே தமிழாசிரியர் நிறுத்தி விட்டு பாடத்தை எடுக்க ஆரம்பித்து விட்டார். ராமுவுக்கு 'சப்' பென்று ஆகிவிட்டது. ராஜா வேறு வகுப்பு என்னென்ன புதிர்கள் கேட்கப்பட்டன தான் எப்படியெல்லாம் புத்திசாலித்தனமாக பதில் கூறினான் என்று விலாவரியாக வருணித்துக் கொண்டே இருந்தான். ராமுவுக்கு கடுப்பாயிருந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாய் இருந்தான்.
          மறு நாள் இன்று என்ன நடக்கின்றதோ என்று ஆவலுடன் வகுப்பறைக்குள் நுழைந்தான். ஆனால் இன்றும் அவன் தாமதமாகத்தான் வந்திருந்தான். அனைவரும் பாடல் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தனர். வரிகள் தெரியாத தால் அவனால் அவர்களுடன் இணைந்து பாட முடியவில்லை. அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. 
            மறு நாள் ராமு பள்ளிக்கு நேரத்திற்கு வந்துவிட்டான். சொல்லப்போனால் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே வந்து வகுப்பறையில் காத்திருந்தான். இன்று வகுப்பில் என்ன நடக்கும் என்ற ஆவல் அவன் கண்களில் தெரிந்தது. மனம் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. நண்பர்கள் அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இன்று மழை வரும் என்று அவனைக் கிண்டல் செய்தனர். தமிழாசிரியர் உள்ளே நுழைந்தார். ராமு வகுப்பிற்கு சரியான நேரத்திற்கு வந்திருந்ததைக் கவனித்தார். ஆனால் ஒன்றும் கூறவில்லை. அன்று விடுகதைகள் கேட்க ஆரம்பித்தார். ராமு மற்ற மாணவர்களுடன் இணைந்து உற்சாகமுடன் பதிலளிப்பதைக் கண்டார். முடிவில்," நாளை முதல் முதல் பத்து நிமிடங்கள் மட்டுமே இது போன்று புதிர் போட்டிகள் நடத்துவேன்" என்று அறிவித்து விட்டு கிளம்பிவிட்டார்.
            மறு நாள் முதல் ராமு வகுப்பறைக்கு தாமதமில்லாமல் வந்தான் என்று சொல்லவும் வேண்டுமோ

Thursday, September 1, 2016

வண்ணமெல்லாம் நல்லதம்மா...

அம்மா அதிகாலையிலேயே எழுந்து வாசலில் அழகாக கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். வாசுவும் வழக்கம் போலவே அதிகாலையிலேயே எழுந்து விட்டான். அன்று விடுமுறை தினம். பள்ளிக்கு செல்ல வேண்டியதில்லை. ஆதலால் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான். அருகில் பூங்கா ஒன்று இருக்கிறதே, அங்கு சென்று மரஞ்செடி கொடி வகைகளைப் பார்த்து ரசிக்கலாம் என்று எண்ணமிட்டவாறே பூங்காவிற்கு நடையைக் கட்டினான். அம்மாவின் எங்கே என்ற கேள்விப்பார்வைக்கு "பூங்காவிற்கு செல்கிறேன் அம்மா" என்று பதிலளித்துவிட்டு புன்னகைத்தான். அம்மா தலையசைத்து சம்மதித்தாள்.
    பூங்காவில் அப்போதே ஒரு சிலர் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். வரிசையாய் அழகாய் நட்டு வைத்திருந்த செடிகளையும் அவற்றில் பூத்திருந்தப் பூக்களையும் ரசித்தவாறே பூங்காவின் நடுவில் பெரிதாய் வியாபித்திருந்த மரத்தின் நிழலுக்குச் சென்றான். வாகாய் உட்காருவதற்கு அ
தன் அடியில் சேர் போடப்பட்டிருந்தது. அதில் சாய்ந்தவாறு அமர்ந்து பறக்கும் பட்டாம் பூச்சிகளையும் ஓடி விளையாடும் அணில்களையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். கீச்மூச் என்று கத்தும் கிளிக்கூட்டம், ஜோடிகளாய்ப் பறந்த சிட்டுக்குருவிகள், தொடர்ந்து கரைந்து கொண்டிருந்த காகம், த த்தித் த த்தி ஒய்யாரமாய் நடை பயின்ற வெண்புறாக்கள் என அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தான். நேரம் செல்ல செல்ல பறவைகளின் ஒலி அதிகரித்துக்கொண்டே சென்றது.
     பறவைகள் பேசிக் கொள்கின்றனவா அல்லது சண்டையிட்டுக் கொள்கின்றனவா என அவனுக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. இந்தப் பறவைகள் பேசினால் எப்படி இருக்கும்? என்ன பேசிக் கொள்ளும்? அவனுடைய கற்பனை விரிந்தது.
       கிளி தான் முதலில் பேசியது. டாண் என்று மணியடித்தாற் போல கணீரென்ற குரலில் உரத்துப் பேசியது,' பறவைகளிலேயே நான் தான் அழகியவள்.என் பச்சை வண்ணமும், சிகப்பு மூக்கும், அழகிய குரலும் எவரையும் மயக்கும். பச்சை வண்ணம் தான் அழகு' என்றது. புறா செருமிக் கொண்டே உள்ளே நுழைந்தது,' வெண்மை தான் அழகு. வெண்ணிறப் புறாக்களை விரும்பாதவர்கள் எவரும் உளரோ? என் அழகில் மயங்கித்தானே ஆலிவ் இலை அளித்து என்னை சமாதானத் தூதுவர் ஆக்கியுள்ளனர்' என்றது. மயில் கம்பீரமாக உள்ளே நுழைந்தது. ' உங்கள் அனைவரையும் விட என்னுடைய நீலம் தான் அழகு. என்னுடைய அழகைக் கருத்தில் கொண்டுதானே என்னை நம் நாட்டின் தேசியப்பறவை ஆக்கியுள்ளனர்.' என்றது.
       காகம் மெல்ல கனைத்துக் கொண்டு வாக்குவாத த்திற்குள் நுழைந்தது.' கருமை தான் அழகு. அதனால் தான் உணவை முதலில் எனக்குப் படைக்கின்றனர்' என்றது. மற்ற பறவைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து,' சீச்சீ... கருமை அழகா?  இல்லவே இல்லை. உன்னை விரட்டி அல்லவா அடிக்கிறார்கள். உன் குரலும் கர்ண கொடூரமாக உள்ளது' என்றன. காகத்தின் முகம் வாடிவிட்டது. குருவி, மரங்கொத்தி, மீன்கொத்தி போன்ற ஏனைய பறவைகளைத் தனக்கு சாதகமாகப் பேசுவர் என்று நம்பிக்கையுடன் பாரத்தது. ஆனால் அவை முகத்தைத்திருப்பிக்கொண்டுவிட்டன. ' ஆனால், என்னிடம் பல நல்ல குணங்கள் உள்ளனவே. பகிர்ந்துண்ணும் பழக்கம் உள்ளதே. புற அழகை விட அக அழகே சிறந்தது என்று உங்களுக்குத்தெரியாதா? மனம் தூய்மையாய் இருக்குமிடத்தில் தான் அழகு உள்ளது. தோற்றத்தில் அல்ல' என்றது. மயில்,' நீ இத்தனை நீளமாய், சாதுர்யமாயப் பேசினால் உனது வண்ணம் அழகானது என்று ஆகிவிடுமா? இதை ஒத்துக் கொள்ள முடியாது' என்றது. பிற பறவைகளும் இணைந்து கொண்டன,' ஆம்... ஆம்.. கருமை அழகு அல்ல..' காகம் கவலையுடன் நின்று கொண்டிருந்தது.
        வாசு திடுக்கிட்டு எழுந்தான். பறவைகள் இது போன்று சண்டையிட்டுக் கொள்ளவில்லை. அவை த த்தம் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தன. நல்ல வேளை அனைத்தும் கற்பனேயே. ஆனால் இப்போது அவனுக்கு அந்த சந்தேகம் வந்துவிட்டது. வண்ணங்களில் எது சிறந்தது? யாரிடம் கேட்டு தன் ஐயத்தைத் தீர்த்துக்கொள்ளலாம் என யோசிக்கலானான்.
        பூங்காவில் ஓவியர் ஒருவர் சித்திரம் தீட்டிக் கொண்டிருப்பதைக் வாசு கண்டான். தன் சந்தேகத்தைத் தீர்க்க அவர் தான் சரியான நபர் என்று அவரின் அருகில் சென்றான். ' ஐயா..' என்றழைத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். தனக்கு ஏற்ப்பட்ட விநோதமான கற்பனையையும் அதனைத்தொடர்ந்து எழுந்த சந்தேகத்தையும் கூறினான். பறவைகளின் வாக்குவாத்த்தைக் கேட்ட அவர் மனம் விட்டு சிரித்தார்.' உனக்கு நல்ல கற்பனை வளம் இருக்கு தம்பி' என்றவாறு அவன் தோள்களில் கை வைத்துப் பேசலானார்.
          புன்னகையுடன்,' தம்பி... வண்ணங்களுடனேயே வாழும் என்னிடம் வண்ணங்களைப் பற்றிக் கேட்டது பற்றி மிக்க மகிழ்ச்சி. ஒரு ஓவியராக எனக்கு அனைத்து வண்ணங்களையும் பிடிக்கும். இது உயர்வு, இது தாழ்வு என எதுவும் கிடையாது. மண்ணில் படைக்கப்பட்ட அனைத்துமே அழகு தான். கடவுள் படைப்பில் அனைத்துமே இன்றியமையாதவை தான். சிகப்பு, பச்சை, நீலம், வெள்ளை, கருப்பு என அனைத்து வண்ணங்களுமே உயிர் ஊட்டுவன தான். ஓவியத்திற்குத் தக்கவாறு வண்ணங்களை நான் கூட்டி மற்றும் குறைத்தும் பயன்படுத்துவேன்' என்றார்.
          மேலும் தொடர்ந்தார்,' உன் கற்பனையில் கூறிய படி கருப்பு ஒன்றும் வெறுக்கத் தக்க வண்ணம் அல்ல. வெண் மேகங்கள் கருமை அடைந்தவுடன் தானே மழை பொழிகின்றது! உன் கண்ணின் கருவிழிகள் எத்தனை முக்கியமானது என்று நீ அறிவாய் தானே? அவ்வளவு ஏன்? நாள் தோறும் உன் பள்ளியில் உன் ஆசிரியர் கரும் பலகையில் எழுதித் தானே உனக்குப் பாடங்களைக் கற்றுத்தருகிறார்?  எனது ஓவியங்களிலும் கருமை முக்கிய பங்காற்றுகிறது...அவுட்லைன் என்ற வித த்தில்...'
           சந்தேகம் தெளிந்தவனாக எந்த வண்ணமும் நல்ல வண்ணம் தான் என்ற முடிவுக்கு வந்தவனாக ஓவியருக்கு நன்றி கூறிவிட்டு நடையைக் கட்டினான் வீட்டுக்கு. அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். அழகிய வானவில் தோன்றியிருந்தது. வண்ணங்கள் நாங்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்று அவனிடம் கூறுவது போலிருந்தது. வாசு சிரித்துக்கொண்டான்.

Wednesday, August 24, 2016

நட்பென்னும் சரணாலயம்.

' இந்த மீன்களையும், காய்ஞ்சு போன மரங்களையும் பாத்துப் பாத்து போரடிக்குதே.. எப்போ தான் இந்தப் பறவைக்கூட்டமெல்லாம் வரப்போகுதோ? அவை வந்தால் தான் இந்த இடமே களை கட்டும்.' என்று மனதிற்குள் எண்ணியவாறே மெல்ல நடை போட்டது அந்த குட்டி ஆமை. 
       அந்த ஆமை இருப்பது ஒரு பறவைகள் சரணாலயத்தின் சிறிய குளத்தில். அமைதியாக இருக்கும் மீன்களைக் கண்டால் ஆமைக்குப் பிடிக்காது. சத்தம் எழுப்பியவாறே வரும் பறவைகளையும், அவற்றின் படபடவன பறக்கும் ஓசையும், அவை பறந்து செல்லும் அழகையும் பார்க்க அதற்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் அவை எப்போதும் அங்கிருப்பதில்லையே! வருடத்திற்கு ஆறு மாதங்கள் மட்டுமே அங்கிருந்து விட்டு மற்ற மாதங்கள் தன் சொந்த நாட்டிற்குச் சென்றுவிடுமே! 
       ஆமை அந்தப் பறவைகளின் வருகையை விரும்ப மற்றொரு காரணமும் உள்ளது. அந்தப் பறவைகளைப் பார்க்க ஊர் மக்கள் திரளாக திரண்டு வருவர். இது தவிர வெளியூர்களிலிருந்தும் கார்களிலும், பைக் க்களிலும் மக்கள் வந்து குவிவர். காமிரா, பைனாக்குலர் சகிதம் வரும் அவர்கள் கூடவே குழந்தைகளையும் அழைத்து வருவதுண்டு. கைகளில் ஐஸ்க்ரீம் அல்லது கொரிப்பான்களை மென்று கொண்டே அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பெற்றோர் மிகப் பொறுமையாக பதிலளிப்பதை ஆமை ரசித்துப் பார்க்கும்.
        குட்டி ஆமைக்குப் வீடு அதன் முதுகிலேயே உள்ளது. வீட்டின் உள்ளேயே இருந்து போரடித்துப் போயிருக்கும் அதற்கு இப்படி திருவிழா போல அந்த சரணாலயம் திகழ்வது ரொம்பப் பிடிக்கும். பாறையின் மீதமர்ந்து தலையை நீட்டி எல்லோரையும் வேடிக்கை பார்க்கும். ஆனால் யாராவது அருகில் வருகிறார்கள் என்றால் அதற்கு வெட்கம் வந்துவிடும். உடனே தலையை உள்ளே இழுத்துக்கொள்ளும்.
          இப்படித்தான் பறவைகள் வந்த பிறகு ஆமை உற்சாகமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது ஒரு நாள் நாரை ஒன்று அதன் அருகில் வந்து," நண்பா!" என்று அழைத்தது. திடுக்கிட்ட ஆமை வெட்கத்தால் வீட்டினுள் ஒளிந்து கொண்டது. சிறுது நேரம் கழித்து நாரை போய் விட்டதா என்று மெல்ல எட்டிப் பார்த்தது. ' ஐயோ! என்ன இது? இன்னும் நின்று கொண்டிருக்கிறதே! இந்த நாரை போனால் தான் நான் வீட்டை விட்டு வெளியே வருவேன்!' என்று எண்ணியபடியே காத்திருந்தது. ' பேசாமல் தண்ணீரில் குத்தித்து விடலாமா? ஆனால் அது அங்கேயும் பின் தொடருமே!' என்று அங்கலாய்த்துக் கொண்டே யோசனையில் ஆழ்ந்தது.
         கொஞ்ச நேரம் கழித்து தைரியத்தை வரவைத்துக் கொண்டு மெதுவாக எட்டிப் பார்த்தது. இன்னும் அந்த நாரை நின்று கொண்டிருந்தது. " ஹலோ நண்பா.." என்றபடியே கை நீட்டியது. ஆமையும் தயங்கி தயங்கி கைகுலுக்கி மெல்லிய குரலில்" ஹலோ!" என்றது. நாரை கம்பீரமாக," என்ன! என்னைப் பார்த்து பயமா? நான் உன் நண்பன். உன்னை ஒன்றும் செய்து விட மாட்டேன். நான் புதிதாக இங்கு வந்துள்ளேன்" என்றது புன்னகையுடன்.
          ஆமையும் ," ஓ.. அப்படியா? நீ எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டது. நாரை, " நான் சைபீரியாவிலுருந்து வருகிறேன். அங்கு இப்போது பனி அதிகம். எனவே நானும் எனது நண்பர்கள் சிலரும் இந்த இடத்தைத் தேர்வு செய்து வந்துள்ளோம்." என்றது. " ஓ..நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்கு தான்" என்றது. " நல்லதாயப் போயிற்று. உங்கள் ஊர், மற்றும் உங்கள் நாட்டைப் பற்றிக் கூற உன்னை விட சிறந்தவர் யாருமில்லை. அதனாலேயே உன்னுடன் சிநேகமாய் இருக்க வந்துள்ளேன்" என்றது. ஆமைக்கு அதன் பேச்சில் ஆர்வம் வந்தது. லாகவமாகப் பேசும் நாரையைப் பார்த்து சிநேகமாக புன்னகைத்து," ஓ! அதுக்கென்ன! சொல்லிவிட்டால் போச்சு. அதற்கு முன் நீ கடந்து வந்த நாடுகளைப் பற்றியும், கண்ட காட்சிகளைப் பற்றியும் கூறு " என்றது. நாரையும் கூறலாயிற்று. பல தரப்பட்ட பறவைகள் கூட்டம் கூட்டமாய் வந்தாலும் தங்களுக்கு அந்த இடம் சௌகர்யமாய் இருந்தால் மட்டுமே அங்கு தங்குமாம். தோதுப்படவில்லை என்றால் வேறு இடம் தேடி செல்லுமாம். முட்டையிட்டு குஞ்சு பொரித்து, பின் குஞ்சுகளுக்கு பறக்கத் தெரிந்தவுடன் தன்னுடன் அழைத்துச்செல்லுமாம். உணவுக்காக அருகில் உள்ள ஊர்களில் உள்ள ஏரிகளுக்குச் செல்லுமாம். ஆமை ஆர்வமாய் கேட்டுக் கொண்டது. பொழுது போனதே தெரியாமல் கதை பேசிக் கொண்டிருந்ததில் மாலை நெருங்கியதை இருவரும் கவனிக்கத் தவறி விட்டனர். பின்னர் சுதாரித்து மறு நாள் சந்திக்க உறுதி பூண்டனர்.

          பொழுது புலர்ந்தது. ஆமை நாரையின் வருகைக்காக காத்திருந்தது. வந்தவுடன்," நீ உன் நாட்டைப் பற்றி கூறினாயல்லவா!  நான் எங்கள் நாட்டின் அழகை உனக்குக் காட்டுகிறேன்." என்று கானகத்துள்ளே அழைத்துச்சென்றது. மழை மேகமாய் இருந்தபடியால் அங்கு மயில் ஒன்று தோகையை விரித்து நடனமாடிக் கொண்டிருந்தது. ' இத்தனை அழகான பறவையா!' என்று நாரை அதனை வைத்த கண் வாங்காமல் பார்த்தது. ஆமை," இது தான் எங்கள் தேசியப்பறவை.. அதோ அந்தக் குளத்தில் அழகழகாய்ப் பூத்திருக்கிறதே.. அது தான் எங்கள் தேசிய மலரான தாமரை." என்றது. இவை இரண்டின் அழகில் அப்படியே சொக்கிப் போய் நின்றது நாரை. தேசிய விலங்கான புலியின் கம்பீரத்தைப் பற்றியும், வீரத்தைப் பற்றியும் கூறியது. ஆமை மேலும் தொடர்ந்தது," இந்த நாட்டின் மக்களும் அன்பானவர்கள். அருகில் சரணாலயம் இருப்பதால் இந்த ஊர் மக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடு கின்றனர். பறவைகள் பயப்படக் கூடாது என்ற காரணத்திற்காக. அவற்றை இடையூறு செய்யக்கூடாது என்று தொலைநோக்கிக் கருவி மூலமே பறவைகளைக் கண்டு களிக்கின்றனர். விலங்குகள், பறவைகள் மீது அவர்களுக்கு எப்போதும் மாறாக் காதல் உண்டு."  நாரை வியந்து கேட்டுக் கொண்டிருந்தது.  " நண்பா! வந்து தங்கப்போகும் இடத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாய் இருந்தேன். இப்போது பெருமையாக இருக்கிறது." என்றது." நீ பறந்து வரும் வழியில் அழகிய கோயில்கள், சர்ச்கள், மசூதிகள் பலவற்றைக் கண்டிருக்கலாம். அவை யாவும் இந்த நாட்டு மக்கள் ஒற்றுமையாய் வாழ்வதற்கான ஆதாரம்" என்றது ஆமை. 

       அதன்பின் நாள்தோறும் இருவரும் சந்தித்து பல கதைகள் பேசி மகிழ்ந்தனர். தன் நட்பின் அடையாளமாய் ஆமை மிக அழகிய கூழாங்கல் ஒன்றை நாரைக்குப் பரிசளித்தது. நாட்கள் பறந்து சென்றன. நாரை தன் நாட்டிற்கு திரும்ப வேண்டிய நேரம் வந்தது. ஆமைக்கு நண்பனை விட்டுப் பிரிய மனமில்லை. நாரை தான் விரைவில் மீண்டும் சந்திக்கலாம் என்று தைரியம் கூறி தன்நண்பர்களுடன் கிளம்பத் தயாரானது. ஆமையும் அதன் வருகைக்காக காத்திருப்பதாக உறுதியளித்து விட்டு பிரியாவிடை அளித்தது.

   இப்போது தன் நண்பன் எப்போது வருவான், அவனோடு எப்போது கதைகள் பேசி மகிழலாம் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறது. ஏதோ சிறிய விமானம் தரை இறங்குவது போல ஒயிலாக இறக்கையை விரித்து தரை இறங்கித் தன்னைத் தேடி வரும் காட்சியைக் காண காத்துக் கொண்டிருக்கிறது.

          

Thursday, July 28, 2016

மந்திரக்குரலால் வசியம் செய்யும் மயக்கும் ' டோரி'.

குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படத்தை நீங்கள் காணச் செல்கிறீர்கள். அங்கு குழந்தைகளின் எண்ணிக்கையை விட பெரியவர்களின் எண்ணிக்கை அதிகமாய் இருப்பது, சிறுவர்களின் ஆரவாரத்தை விட பெரியவர்களின் கைதட்டலும், விசிலும் அதிகமிருப்பதை நீங்கள் கண்டிருக்கிறீர்களா? சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் ஃபைண்டிங் டோரி(Finding Dory) திரைப்படத்திற்குச் சென்றால் இதைக் காணலாம். பொதுவாக ஒரு படம் வெற்றியடைந்தால் அதன் இரண்டாம், மூன்றாம் பாகம் என எடுத்துத் தள்ளுவது ஹாலிவுட் சினிமாக் கார ர்களின் வழக்கம். ஆனால் ஃபைண்டிங் நீமோ அசகாய வெற்றி பெற்றும் பிக்ஸார்(Pixar) நிறுவனம் அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை. 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஃபைண்டிங் நீமோ சூப்பர் டூப்பர் ஹிட். அதன் அன்றைய ரசிகர்கள் இன்று நடுவயதை எட்டி விட்டனர். தாங்கள் இளமையில் ரசித்த அந்தத் திரைப்படம் இன்றும் அவர்கள் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. ஆதலால் தான் திரையரங்குகளில் இத்தனை அமர்க்களம். தாங்கள் இளவயதில் பார்த்து ரசித்த அனைத்துப் பாத்திரங்களும் மீண்டும் வலம் வருவதைக் கண்டு அத்தனை ஆனந்தம்.
        வெளிவந்த பத்தே நாட்களில் பதிமூன்று கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது ஃபைண்டிங் டோரி. படத்தின் இயக்குநர் அண்ட்ரூ ஸ்டன்டன்( Andrew Stanton) கூறுகிறார்," ஃபைண்டிங் டோரி எடுக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியதே ஃபைண்டிங் நீமோவை முப்பரிமாணத்தில்(3D) மீண்டும் பார்த்த போது தான். டோரியிடம் எத்தனையோ கேள்விக்குரிய பதில்கள் விடையளிக்கப் படாமல் உள்ளன என்பதை மீண்டுமொரு முறை பார்த்த போது உணர்ந்தேன். டோரியால் எப்படி திமிங்கலங்களின் பாஷையைப் புரிந்து கொள்ள முடிந்தது? எப்படி வாசிக்க முடிந்தது? ஒவ்வொரு முப்பது விநாடிக்குள்ளும் நண்பர்களையே மறந்து விடும் டோரியை தனிமை சூழாதா? என்ற கேள்விகள் என்னுள் தோன்றின." அவர் கூறியது போலவே இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் ஃபைண்டிங் டோரியில் விடை கிடைத்து விடும். மேலும் கூறுகிறார்," தொடர் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தவுடன் அதில் சுய ஏற்பு(self- acceptance) ஐயும் தொட வேண்டும் என முடிவெடுத்து விட்டேன். நீங்கள் யார் என்று நீங்களே ஒப்புக்கொண்டால் ஒழிய உங்களுக்கு நிம்மதி இராது என்றக் கருத்தை வலியுறுத்த வேண்டும் என்று அனுமானித்தேன்" என்று கூறுகிறார். அவர் கூறுவது போலவே திரைப்படம் அதன் ரசிகர்களுக்கு சொல்லும் சேதி என்னவென்றால்,' நம்முடைய குற்றம் குறைகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். அவை நம்மை வரையறுக்க அனுமதிக்க க்கூடாது ' என்பது தான்.
                 ஃபைண்டிங் டோரி யின் கதை மிக எளிமையானது தான். ' ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ்' (short term memory loss) இந்த நோயைப் பற்றி ஏற்கனவே ' கஜினி' படத்தின் சஞ்சய் ராமசாமியின் தயவால் தமிழ் ரசிகர்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள். ஃபைண்டிங் நீமோ எனும் முதல் பாகத்தில் நீமோ எனும் குட்டி மீனைத் தொலைத்த அதன் தந்தை மார்லின் ( மெமரி லாஸ்ஸில் தவிக்கும்) டோரியின் துணை கொண்டு கண்டுபிடிக்கின்றது. அப்போதே, துணைக் கதாபாத்திரத்தில் வந்தாலும், டோரி அனைவர் உள்ளங்களையும் கவர்ந்தது. இம்முறை டோரி தன் பெற்றோரைத் தேடி கலிபோர்னியாவுக்குச் செல்கிறது. 
                    தாய் தந்தையைத் தேடி கலிபோர்னியாவுக்குச் செல்லும் டோரி அங்குள்ள மீன் பண்ணையில் மாட்டிக் கொள்கிறது. அங்கு பல நிறத்தில் மாறக் கூடிய ஆக்டோபஸுடன் நட்பாகிறது. அங்கிருந்து திமிங்கல சுறா, பெலுகா திமிங்கலம், கடல் சிங்கங்கள் என்று செல்லுமிடமெல்லாம் தோழர்களை பெற்றுக் கொண்டே செல்கிறது டோரி. இறுதியில் தன் பெற்றோருடன் இணையும் காட்சிகளை எமோசனலாவும் காமெடியாகவும் சொல்லி இருக்கிறது படம். படம் முழுக்க," ஆமா.. நான் ஏன் இங்க இருக்கேன்? எங்கிட்ட ஏன் இது இருக்கு? உனக்கு நான் ஏன் ஐடி கார்டு தரணும்? எங்கிட்ட எதுவும் இல்ல... இந்த ஐடி கார்ட வைச்சுக்கிறியா?" என்று படம் முழுக்க டோரி கலக்கியிருக்கிறது. ' ஜஸ்ட் கீப் ஸ்விம்மிங்..ஸ்விம்மிங்.. ஸ்விம்மிங்..' என்று அது பாடுவது மிகப் பிரபலமாகி விட்டது.
                  டோரி இத்தனை பிரபலமாவதற்கு அதற்குக் குரல் கொடுத்த வித்தகர் எல்லன் டி ஜெனரஸ் (Ellen De Generes)தான் காரணம். அந்த மந்திரக்குரலுக்கு சொந்தக்கார்ரான அவர் டோரி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். எல்லனைப் பற்றி ஒரு வார்த்தையில் கூறுவதென்றால் அவர் ' உலகிற்குக் கிடைத்த உற்சாக்க் குவியல்'. தன்னுடைய டாக் ஷோ மூலமாக நடனமாடிக் கொண்டே நம் மனதிற்குள் நுழைந்த அவர் இப்போது டோரிக்குக் குரல் கொடுத்ததன் மூலம் அனைவர் மனதிலும் சம்மணமிட்டு உட்கார்ந்து விட்டார்.
                    ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன் வாழ்க்கையைத் துவங்கிய அவரின் வாழ்க்கையே டோரியின் கதையை விட நம்பிக்கை ஊட்டுவதாய் இருக்கும். வெற்றி பெற்ற மனிதர்கள் தங்களுடைய தோற்றத்தை, ஆளுமையை பிறருக்காக மாற்றிக் கொள்வதில்லை என்று உறுதிபட கூறுகிறார். உலகெங்கும் பரவி இருக்கும் எதிர்மறை எண்ணங்களைப் புறந்தள்ளி விட்டு இன்பம் மற்றும் மகிழ்ச்சிகரமான மனநிலைக்கு மாறுங்கள் என்று கூறுகிறார்.தோல்வி தாக்க முற்படும் போது துணிந்த மனநிலையுடனும், உற்சாகமான நடவடிக்கையுடனும் அதனை எதிர்கொள்ளுங்கள் என்கிறார்.விமரிசனங்களைத்தாங்கும் மனப்பக்குவமும், வாழ்வின் சின்னச்சின்ன இன்பங்களை அனுபவிப்பதில் உள்ள ஆர்வமுமே தன் வெற்றிக்குத் தூண்டுகோலாய் இருந்தன என்கிறார்.
                     2014 ஆம் ஆண்டு அகாடெமி (ஆஸ்கர்) விருது வழங்கும் விழாவை அவர் தொகுத்து அளித்த விதம் அனைவரையும் கவர்ந்தது. பிரபலங்கள் அனைவருடனும் செல்ஃபி எடுத்துக் கொண்டதும், விழாவிற்கு வருகை புரிந்த பிரபலங்களுக்கு பிஸ்ஸா ஆர்டர் செய்து இன்ப அதிர்ச்சி ஊட்டியதும் மிகவும் பிரபலமானது. அப்போது அவர் எடுத்த செல்ஃபி அடுத்த சில மணி நேரத்தில் டிவிட்டரில் அதிக முறை ரீடுவீட் செய்யப் பட்டது. மற்றுமொரு சுவாரசியத் தகவல். ஃபைண்டிங் நீமோ வெற்றி பெற்றாலும் 'பிக்ஸார்' ஏனோ இரண்டாம் பாகம் எடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அதன் ஒரு பகுதியாகத் திகழ்ந்த எல்லனுக்கு அதன் மீது ஆர்வம் அதிகம். தன்னுடைய டாக் ஷோவில் ஏன் ஃபைண்டிங் நீமோவிற்கு தொடர்ச்சி( sequel)   
எடுக்கவில்லை என நகைச்சுவையாக குறிப்பிட்டுக் கொண்டே இருந்தார். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அதைப் பற்றி குறிப்பிட அவர் தயங்கவில்லை. வயது ஏறும் போது தன் குரலில் மாற்றம் வந்து விடுமோ என்று அச்சப்பட்டார். அதையும் வெளியிட அவர் தயங்கவில்லை. முடிவில் 2013ஆம் ஆண்டு ஃபைண்டிங் டோரி திரைப்படம் எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதையும் தனது டாக் ஷோ மூலமே முதலில் அறிவித்தார். 
              இன்று படம் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் குழந்தைகள் பெட் ஷாப் (pet shop) இல் போய் டோரி வேண்டும் என்று கேட்பதாய் செய்திகள் வருகின்றன. சென்ற முறை ஃபைண்டிங் நீமோ வந்த போது க்லௌன்( clown fish) ஃபிஷ் ஆல் ஈர்க்கப்பட்டு அனைவரும் அதனை வளர்க்க விரும்பி அது அதற்கு பேராபத்தாய் முடிந்தது. கடலில் அதிக அளவில் அவை பிடிக்கப்பட்டன. மிருக ஆர்வலர்கள் புகுந்து அவற்றை அழிவிலிருந்து காப்பாற்றினர். இப்போது முன்னெச்சரிக்கையாக தயாரிப்பு நிறுவனமே மக்களிடம் டோரியின் மீன் இனமான நீல டாங்( blue tang) அக்வேரியம் மற்றும் தேர்ந்த வல்லுநர்களால் மட்டுமே வளர்க்க முடியும். எனவே மக்கள் அதனை தொந்தரவு செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். சமூக அக்கறையுள்ள, மற்றும் மிருக ஆர்வலரான எல்லனும் இதே கோரிக்கையை தன்னுடைய டாக் ஷோவில் விடுத்துள்ளார்.
           ஃபைண்டிங் டோரி குழந்தைகள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளதைப் போலவே எல்லனும் நம் அனைவர் மனதிலும் நிறைந்துள்ளார். திரையரங்கை விட்டு வெளியே வந்த பின்னும் தன் மயக்கும் குரலால் நம் காதுகளில் டோரியாய் ரீங்காரமிட்டு நம்மை வசீகரித்துள்ளார் எல்லன்.

Saturday, June 18, 2016

கண்ணன் கற்றுக் கொண்ட பாடம்.

      அன்று பள்ளியிலிருந்து வந்ததிலிருந்தே கண்ணனுக்கு மிகவும் அயர்ச்சியாக இருந்தது. அம்மாவிடம் சொல்லிவிட்டு சீக்கிரமே சாப்பிட்டு விட்டு படுக்க சென்று விட்டான். படுக்கையில் படுத்து விட்டானே தவிர தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். சென்ற வாரம் புத்தக்க்காட்சிக்கு சென்ற போது வாங்கிய புத்தகங்கள் நினைவுக்கு வந்தன. உடனே அதை எடுத்தான். 
        புத்தகத்தைத் திறந்தவுடன் மிகப் பிரகாசமாய் அறையெங்கும் ஒரு ஒளி பரவியது. புத்தகமே ஒரு பெரிய ஜன்னலைப் போல் விரிந்தது. உள்ளேயிருந்து இரு அழகிய கரங்கள் அவனை இழுத்தன.
        அந்தக் கைகளுக்கு உரியவன் அவன் வயதை ஒத்த ஒரு சிறுவன். அவன் சற்று விநோதமாய் இருந்தான். அவனுடைய கண்களும் காதுகளும் சற்றே பெரிதாய் இருந்தன. அவன் சற்று குள்ளமாய் இருந்தான். அவன் புனகைத்த போது போது நட்சத்திரம் போல் மின் வெட்டியது. வேற்றுலக வாசியோ என கண்ணன் சந்தேகப்பட்டான்.
        " என் பெயர் ஹேப்பி " என அறிமுகப்படுத்திக் கொண்டான். அரக்கப்பறக்க விழித்த கண்ணனைப் பார்த்து," பயப்படாதே.. நான் உன் தோழன். உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்," என்று கை குலுக்கினான். கண்ணனும் நம்பிக்கை பெற்றவனாய்," ஹலோ ஹேப்பி...நைஸ் டு மீட் யு." என்றான். ஹேப்பி புன்னகையுடன்," நாம் இருவரும் தோழர்கள் அல்லவா. சேர்ந்து ஊர் சுற்றலாம்." என்றபடி வா என்கிறாற்போல கையசைத்தான். உடனே ஒரு கம்பளம் பறந்து வந்தது.
          கண்ணனும் ஹேப்பியும் அதில் ஏறி அமரந்தவுடன் அது மீண்டும் பறக்கத் தொடங்கியது. எங்கே நம்மைக் கூட்டி செல்கிறான் என்று கண்ணன் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான். கடற்கரையோரம் சென்றது. இருவரும் இறங்கிக் கொண்டனர்.
           அங்கே அவன் கண்ட காட்சி விந்தையாய் இருந்தது. மீன்கள் அனைத்தும் கடற்கரை மணலில் நடைபயின்று கொண்டிருந்தன. மீன்களுக்கு கால்கள் இருந்தன. கண்ணனால் அவன் கண்களை நம்ப முடியவில்லை. அருகில் சென்றான். மீன் ஒன்று," நீ மனிதன் அல்லவா? இங்கு எதற்காக வந்தாய்?" என்று கோபமாக க் கேட்டு விட்டு ஓடி விட்டது. கண்ணன் அதிர்ச்சியிலிருந்து மீளுமுன் மற்றொரு மீன் வந்து கண்ணன் முன் வந்து நின்றது. கண்ணன்," மீன்கள் ஏன் தரையில் இருக்கிறீர்கள்?" என மெல்லக் கேட்டான். " மனிதர்களாகிய உங்களால் தான் நாங்கள் இப்படி மாறிவிட்டோம். நீங்கள் கடலை மிகவும் மாசு படுத்திவிட்டீர்கள். கடலில் இப்போது எங்களால் மூச்சு விட முடியவில்லை. அவ்வளவு குப்பை, அழுக்கு. ஆகவே சுத்தமான காற்றை சுவாசிப்பதற்காக அவ்வப்போது நாங்கள் வெளியே வந்து நடக்கின்றோம். பின் கடலுக்குள் சென்று விடுவோம். பரிணாம வளர்ச்சியாக எங்களுக்கு கால்கள் தோன்றியுள்ளன. என்றைக்கு நீங்கள் திருந்துகிறீர்களோ அன்றறைக்குத்தான் எங்களுக்கு விடிவு காலம்." என்றபடி தண்ணீருக்குள் சென்றது அம்மீன். பதில் பேசுவது அறியாது நின்றான் கண்ணன்.
         ஹேப்பி கண்ணனைப் பார்த்து புன்னகைத்தவாறு வா போகலாம் என்றான். இருவரும் மீண்டும் கம்பளத்தின் மீதேறி பறந்தார்கள்.
          இம்முறை சாலை ஒன்றில் இறங்கினர். இங்கும் அவன் விநோதமான காட்சிகளைக் கண்டான். யானை ஒன்று ஸ்ட்ரா போட்டு கரும்புச்சாறு உறிஞ்சிக் கொண்டிருந்தது. முயல் மொளகா பஜ்ஜியும் நரி பானிபூரியையும் மொக்கிக் கொண்டிருந்தன. சிங்க ராஜா தோரணையாய் அமர்ந்து சிக்கன் 65 சாப்பிட்டுக் கொண்டிருந்தார். கண்ணன் திறந்த வாயை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தான். இம்முறை சிங்கமே ஆரம்பித்தது. " என்ன.. ஆச்சர்யமா இருக்கா? காட்டில் வாழ வேண்டிய நாங்கள் இப்படி ரோட்டில் நடமாடுகிறோமே என்று பார்க்கிறாயா? இப்போது காடு என்ற ஒன்று எங்கே இருக்கிறது? மனிதர்களாகிய நீங்கள் உங்கள் தேவைகளுக்கு அனைத்தையும் அழித்து விட்டீர்களே! ஆதலால் நாங்கள் உங்களுடைய ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்திற்கு மாறி விட்டோம்." கண்ணன் வாயடைத்து போய் நின்றான். சுற்றிலும் பார்த்தான். அனைத்து விலங்குகளும் மனிதர்களைப் போல சர்வ சாதாரணமாய் திரிந்து கொண்டிந்தன.
             கண்ணன் அப்போது தான் ஒன்றை கவனித்தான். சுற்றிலும் இருந்த மரங்கள் யாவும் சோபை இழந்து குள்ளமாய் சூம்பி காட்சி அளித்தன. அருகில் சென்றான். மரம் பேசவில்லை. ஆனால் கண்ணீர் விடுவது போல அவனுக்குத் தோன்றியது. உங்கள் வாகனங்களின் நச்சுப் புகை எங்களை எங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கி உள்ளது என்று குற்றம் சாட்டுவது போலிருந்தது அந்தப் பார்வை. அதனை கட்டித் தழுவி முத்தமிட்டான். அவன் கண்களில் கண்ணீர் பெருகியது. பதறிப்போன ஹேப்பி ," நண்பா.. என்ன இது?" என்றபடி அழைத்து வந்தான். மனமெங்கும் வருத்தத்துடன் இருந்த கண்ணனிடம்," இப்போதும் ஒன்றும் கைமீறவில்ல. இப்போதும் உன் நண்பர்கள்,உறவினர்கள் அனைவரிடமும் எடுத்துரை. தூய்மை பேணுதல், உலக வெப்பமயமாதல், காற்று மாசுபடுதல், காடுகளை அழித்தல் ஆகியவற்றைப் பற்றி விழிப்புணர்வு கொள்ளுங்கள். பூமியை காப்பாற்றுங்கள்." என்றான். கண்ணன் தலையசைத்தான். பேசிக் கொண்டிருந்த ஹேப்பி கம்பளத்திலிருந்து நழுவி கீழே விழுந்தான்." ஐயோ.. நண்பாஆஆ.." என்ற அலறியபடியே எழுந்தான் கண்ணன்.
                 அவன் அவனது கட்டிலில் இருந்து கீழே விழுந்திருந்தான். கண்டதெல்லாம் கனவு என்பது புரிந்தது. கண்டது கனவு என்றாலும் கற்ற பாடத்தை மறக்கவில்லை. நாளை முதல் அவனுடைய பணி என்ன என்று அவனுக்குப் புரிந்தது.
 





Friday, June 17, 2016

சமையலறை வசீகரமாய் இருக்க வேண்டுமெனில்....

ஒரு வீட்டில் சமையலறை என்பது மிகவும் இன்றியமையாத து. இல்லத்தின் பெண்கள் அதிக நேரம் புழங்கும் இடம் என்பதாலும், குடும்பத்தினரின் பசியைத் தீர்த்து அவர்களின் ஆரோக்கியத்தைப் பேணும் இடம் என்பதாலும் சமையலறை வீட்டில் முக்கிய இடம் வகிக்கின்றது. சமையலறை இத்தனை முக்கியத்துவம் பெறுகின்றது என்றால் காதலன் காதலியிடம் ," உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா?" என்று காதல் ரசம் சொட்ட பாடுவதாகவும் பாடல்கள் வந்துள்ளன. 
              பெண்கள் தங்களுடைய அதிகமான நேரத்தை சமையலறைகளில் செலவழிக்கின்றனர். சமையலறை வடிவமைப்பை அவர்கள் சமைப்பதற்கு ஏதுவாக அமைப்பதால் அவர்களுக்கு நேரம் சேமிக்கப்படும். நேர்த்தியாக வடிவமைத்தால் இடமும் சேமிக்கப்பட்டு கூடுதல் இடத்தை வீட்டின் பிற பகுதிகளில் சேர்த்துக் கொள்ளலாம். சமையலறை பழமையானதாக இருந்தாலும் கையாளுவதில் எளிமை இருந்தால் அனைவரும் விரும்புவர். 
           சமையலறை வடிவமைப்பின் போது மூன்று முக்கிய பொருள்களைக் கருத்தில் கொண்டு வடிவமைப்பர். சிங்க், அடுப்பு, மற்றும் குளிர் சாதன பெட்டி மூன்றும் சமையல் புரிவதற்கு முக்கிய பங்காற்றும். இதனை work triangle என்று கூறுவர்.இவை மூன்றையும் நேர்த்தியாக இலகுவாக கையாளும் வண்ணம் சமையலறை அமைப்பது அவசியம். இவ்விடம் சிறிய சமையலறை என்றால் 4 அடி முதல் 9 அடி வரை இருக்கலாம், அறை பெரியதாயின் 12 அடி முதல் 26 அடி வரை இருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இவை அமைவதைப் பொருத்து சமையலறையை ஐந்து வகையாகப் பிரிக்கின்றனர்.  
U வடிவ சமையலறை, 
L வடிவ சமையலறை, 
G வடிவ சமையலறை, 
ஒற்றைச் சுவர் சமையலறை(single wall kitchen), 
தாழ்வான சமையலறை( galley kitchen) மற்றும் 
தீவு அம்சம்( island feature) என்பனவாகும். ஒவ்வொன்றுமே அதனதன் சௌகர்யங்களின் படி தனித்தன்மை வாய்ந்தது. எல்லா வகையான சமையலறையிலும் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டு இருக்கும். உங்கள் சமையலறை தனித்துவமாய் தெரிய வேண்டுமெனில் அதை நீங்கள் பாங்குடன் அலங்கரித்தல் மற்றும் கையாளுவதில் தான் இருக்கிறது.
              வொர்க் டிரைஆங்கிள் ( work triangle) என்று அழைக்கப்படும் மூன்றையும் நேர்த்தியாக இலகுவாக கையாளும் வண்ணம் சமையலறை அமைப்பது அவசியம். அருகருகே அமைத்து ஒழுங்கற்ற தோற்றம் கொடுக்காமல் போதுமான தொலைவில் அமைத்து நடப்பதற்கு தோதான இடம் அளிக்க வேண்டும். சிங்க் வலதுகை பக்கத்தில் அமைத்தல் நலம், மேலும் அறையின் மூலையிலும் அமையா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். குளிர் சாதனப்பெட்டி திறந்து மூட தோதான வகையில் வைப்பதற்கு இடையூறு இல்லாத இடத்தில் அமைக்க வேண்டும். இன்றைய கால கட்டத்தில் மைக்ரோவேவ் ஓவன் மற்றும் டிஷ் வாஷர் போன்ற உபகரணங்களும் அதிக புழக்கத்துக்கு வந்துள்ள படியால் அவற்றிற்கும் தோதான இடம் அமைத்து சமையலறையை வடிவமைக்க வேண்டும். மின் சாதனங்கள் புழங்குகின்றபடியால் அதற்கேற்றபடி படி முதலிலேயே மின் இணைப்பு மற்றும் மின்விசைகளை அமைக்க வேண்டும்.
                  குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்கு அச்சாரம் இடும் இடம் என்பதால் சமையலறையில் நல்ல காற்றோட்டம் இருப்பது அவசியம். புகை மற்றும் தூசி வெளியேறும் வண்ணம் வெளியேற்றும் விசிறி( exhaust fan) அமைக்க வேண்டும். பழங்காலங்களில் விறக்கடுப்பைப் பயன்படுத்திய போது புகைபோக்கி என்பது கட்டாயமான ஒன்றாகத் திகழ்ந்தது. இன்றைய நவநாகரீகமான உலகில் எலெக்ட்ரிக் சிம்னி வந்து விட்டது. இதன் மூலம் புகையற்ற ஆவியற்ற சமையலறையைப் பெறலாம். அதே போல கிருமிகளைக் கொல்லும் திறன் சூரிய ஒளிக்கு உண்டு என்பதால் இயற்கை நமக்கு அளித்துள்ள கிருமிநாசினியான சூரிய ஒளி நன்றாக விழும்படி சமையலறையை அமைக்க வேண்டும்.
                  சமைப்பது என்பது நான்கு முக்கிய செயல்களைக் கொண்டது. அந்த நான்கையும் திறம்பட எவ்வித இடையூறும் இல்லாமல் போதிய இடைவெளியோடு செய்ய வேண்டியது அவசியம். சமையல் செய்வதற்கு முன் காய்கறி அரிவது போன்ற முஸ்தீபுகள், அடுப்பில் சமையல் செய்வது, சாப்பிடத் தோதான வகையில் சமைத்த பொருளை அடுக்குவது, பின் பாத்திரங்களை சிங்க் இல் சுத்தம் செய்வது. இதற்கேற்ப சமையலறை மேடையை நேர்த்தியாக அமைக்க வேண்டும். பொதுவாக இதன் உயரம் 32 "அகலம் 24 "என்று அமைப்பர். நீளம் நாம் எந்த வகையான சமையலறையைத் தேரந்தெடுக்கின்றோமோ அதைப் பொறுத்து அமையும். சமையலறை மேடை கிரானைட் ,கடப்பா, மார்பிள், டைல்கள் மரம்,ஸடீல் என்று எவற்றினாலும் நமது பட்ஜெட்டிற்கேற்ப அமைக்கலாம் என்றாலும் பயன்படுத்த எளிது மற்றும் நீண்ட கால உழைப்பு போன்றவற்றை மனதில் கொண்டு சிறந்ததைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சமைப்பதற்கு ஏராளமான மூலப் பொருட்களும் , இயந்திரங்களும் இன்றைய காலகட்டத்தில் தேவை. இவை தவிர பரிமாறப் பயன்படும் பொருட்கள் வேறு உண்டு. இவை அனைத்தையும் தன்னுள்ளே சேமித்துக் கொள்ள சமையலறையில் கேபினட் மற்றும் ஷெல்ப்கள் அவசியம். இவற்றை மேடையின் கீழும் அமைக்கலாம் , அருகிலும் அமைக்கலாம்.  அடுப்பின் பின் உள்ள சுவரில் அழகிய டைல்கள் அமைத்து சமையலறைக்கு இனிய கவர்ச்சிகரமான தோற்றத்தை அளிக்கலாம். மேலும் சமையல் செய்யும்போது போது பாழாவதைச் சுத்தப்படுத்துவதும் எளிது என்பதால் கட்டாயம் டைல்ஸ் பதிக்கின்றனர்.
            இன்றைய நவ நாகரீக உலகில் மாடுலர் கிச்சன் எனப்படும் நவீன சமையலறை முண்ணனியில் உள்ளது. சந்தையில் உங்கள் வீட்டின் சமையலறையின் அளவிற்கேற்ப நீள அகலங்களில் மாடுலர் கிச்சன் கிடைக்கின்றது. இதனை அமைத்து விட்டால் அழகிய தோற்றமும் கிடைத்து விடும், பல்வேறு விதமான பொருட்களை பாங்குடன் அடுக்கி வைப்பதற்கு தோதான இடமும் கிடைத்து விடும். பழங்காலங்களில் அமைக்கப்பட்ட சமையலறைகளில் உள்ள குறைகளைக் களைந்து நவீனமாக்கப்பட்டு இன்றைய  நாகரீக யுவதிகளுக்கு ஏற்றவாறு இவை அமைக்கப்படுகின்றன. பளீரென்ற வண்ணங்களிலும் இவை கிடைக்கின்றன. இயற்கையான வெளிர் நிறங்களிலும் இவை கிடைக்கின்றன. வீட்டின் பிற பகுதிகளை நாம் வடிவமைத்திருக்கிறோமோ அதை மனதில் கொண்டு இதன் வண்ணத்தை நாம் தேர்வு செய்ய வேண்டும். வீட்டின் பிற பகுதிகளுடன் இணைந்து சமையலறை தெரிய வேண்டும் என்பதில் கவனம் தேவை. அதே போல சமையலறையில் அமைக்கப்படும் தரைத்தளம் மற்றும் பூசப்படும் வண்ணம் ஆகியவற்றையும் வீட்டின் பிற பகுதிகளின் வடிவமைப்பிற்கேற்ப தேர்வு செய்ய வேண்டும்.சமீப காலங்களில் சமையலறையையும் சாப்பாட்டு அறையையும் இணைத்து பெரியதாக அமைக்கிறார்கள். அறையின் ஒரு பகுதியில் சாப்பாட்டு மேஜை அமைத்து அங்கேயே உணவு உண்ணும் வகையில் அறையின் நீள அகலத்தை அதிகப்படுத்துகின்றனர்.
            ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும், குடும்பம் நிறைய குழந்தைகள் மற்றும் பெரியவர்களை உள்ளடக்கியது, மற்றும் நீண்ட  நேரம் தொடர்ந்து சமையலறையில் இருக்க வேண்டிய சூழ்நிலை அமையும் எனில் அதற்கேற்றவாறு பெரியதாக அனைத்து வசதிகளுடன் அமைக்க வேண்டும். மிகச் சிறிய குடும்பம் என்றால் அதற்கேற்றாற் போல சிறியதாக அமைக்கலாம். என்றுமே எளிமை நலம். பார்த்துப் பார்த்து மாளிகை போன்ற ஒரு வீட்டை வடிவமைத்தாலும் சமையலறையில் குற்றம் குறை இருப்பின் பெண்கள் மனம் நிறைவடையாது. ஆதலால் சமையலறையை அவர்கள் மனம் விரும்பும்படி அமைக்க வேண்டும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அது போல உங்கள் வீட்டின் அழகு உங்கள் அடுப்பறையில் தெரியும்.
 




சாலைப் போக்குவரத்து விதிகள்..

ஆண்டுதோறும்  சம்பிரதாயச் சடங்காக வந்து செல்லும் " சாலை பாதுகாப்பு வாரம்" இந்த ஆண்டும் வந்து சென்றது. வழக்கம் போலவே ஆயிரக்கணக்கில் வாகனங்கள் சிட்டாய்யப் பறக்கின்றன. விதிமுறகள் மீறப்படுகின்றன.. நாளிதழ்களை விரித்தால் விபத்துச்செய்திகள் நம்மை பயமுறுத்தும் வண்ணம் வந்து கொண்டே இருக்கின்றன. சாலைபாதுகாப்பு என்பது பல காரணிகளை உள்ளடக்கியது. சீரிய சாலைகள், அளவான வாகனங்கள், போக்குவரத்து விதிகள் தெரிந்த ஓட்டுநர்கள், குறைந்த அளவு மாசு உண்டாக்கும் வாகனங்கள் என இன்னும் பட்டியல் நீளும். ஆனால் இங்கு எல்லாமே தலைகீழ். குண்டுகுழியுமான சாலைகள், பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இல்லாத சப்வேகள், அவசரகதியில் இயங்கும் ஓட்டுநர்கள், அதிகமான, எதிர்பாராத இடத்தில் வேகத்தடைகள், சாலை சந்திப்புகளில் போதிய அடையாள குறியிட்டுப்பலகைகள் இல்லாமை என்று அனைத்தும் அச்சுறுத்துகின்றன. எனினும் ஒரு சிறு முயற்சியாக சாலை விதிகளை நாம் அனைவரும் தெளிவுற தெரிந்து கொள்வது நலம்.

சாலை விதிகள் குறித்த முக்கிய தகவல்கள் 

1.இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல் மெட்டல் அணிவது அவசியம்.
2.சாலையில் நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால்,போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வாகனங்களை சாலையில் ஓரமாக நிறுத்த வேண்டும்.
3.நடந்து செல்பவர்கள் நடைமேடையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
4.வாகன ஓட்டிகள் சிக்னல்களை மதித்து செயல்பட வேண்டும்.
5.மதுபானம் அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது.
6.உரிம்ம் பெறாதவர்கள் வண்டி ஓட்டக்கூடது.
7.அதிக வெளிச்சம் தரக்கூடிய பல்புகளை எரிய விடுவதால் ,எதிரே வரும் வாகன ஓட்டங்களுக்கு கண்கள் கூசி, விபத்துக்கு வழிவகுக்கின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டு முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்.
8.பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம். 
சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும். 
சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது. 
ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள். 
9.ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத வேண்டும். 
10.ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது. 
11.கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும். 
12.நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும். 
வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும். 
13.கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும். 
14.நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்கள் வெளியிடும் கரிமிலாவாயுவான கார்பன் டை ஆக்சைடை அதிகம் உறிஞ்சிக் கொள்கிறது. அத்தோடு விலங்குகளும் இவற்றை உண்பதில்லை. 
15.நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு'இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். 

மனதை மயக்கும் தரைகள்...

வீட்டிற்கு அழகு சேர்க்கும் விஷயங்களில் முக்கியமானது தரைகள். பளிச்சென்று மிளிரும் தரைகள் அறையின் அழகியலை அதிகரிக்கச் செய்கின்றன. சில வருடங்களுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த சிமெண்ட் தரை, ரெட் ஆக்ஸைடு தரை, பூக்கல், மொசைக் தரை போன்றவை யாவும் இப்போது காணாமல் போய்விட்டன. வீட்டிற்கு ஆடம்பரத் தோற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் இயற்கையான கற்களான மார்பிள் அல்லது கிரானைட் கொண்டு தளம் அமைக்கின்றனர். இவை விலை உயர்ந்தவை என்றாலும் அதற்கென உரிய இரசிகர்கள் அதனையே பயன்படுத்துகின்றனர். என்றாலும் சந்தையில் கண்கள் மற்றும் மனதை கொள்வதோ, செலவு, மற்றும் சிக்கன அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும், டைல்ஸ்கள் தான்.
              கட்டுமானத்துறையில் கிரானைட் நுழைந்ததென்னவோ வழுவழுப்பான தரை என்ற நியதியில் தான், அதன் பிறகு பெரிய, பெரிய கட்டிடங்களின் வெளிப்புறத்து அலங்காரத்துக்கு கம்பீரமாய் துணை நின்றன. சுத்தம் செய்ய எளிதாய் இருப்பதாலும், ஆளுமைத் தோற்றத்தை தருவதாலும் இன்றளவும் பன்னாட்டு விமான நிலையங்கள் கிரானைட் கற்களையே உபயோகிக்கின்றன. வீடுகளில் கிரானைட் பதிக்கும் போது அதன் 'பளிச்' தோற்றம் காண்போரை கவர்ந்திழுக்கும். வீடு முழுக்க என்றில்லா விட்டாலும் சமையலறை மேடையை பெரும்பாலும் கிரானைட் கொண்டே அமைக்கிறார்கள். குளியலறைகளிலும், ஷவர் சுவர்களிலும் பலர் இதனை உபயோகப்படுத்துகின்றனர், ஏனெனில் இவை தண்ணீரால் பாழாகாது மற்றும் பாக்டீரியா எதிர்க்கும் தன்மை கொண்டவை. 
               மார்பிள் என்பது பல நூற்றாண்டுகளாக வட மாநிலங்களில் பயன்படுத்தப் படுகின்றது என்றாலும் நம் வீடுகளில் சுமார் இருபது முப்பது வருடங்களாகத்தான் உபயோகிக்கின்றோம். இதன் எழில் தோற்றம் வீட்டின் ரம்மியத்தை அழகுற எடுத்துக் காட்டுகின்றது. தனித்தன்மையுடன் திகழும் மார்பிள் கற்களை பதித்த பின் அதற்கு பாலிஷ் போட்டு மெருகேற்றுவர். பெரிய அளவிலான கற்களை வாங்கி நம் விருப்பம் மற்றும் சௌகர்யத்திற்கேற்ற வகையில் வெட்டி பயன்படுத்துவர். டிசைன்களை உருவாக்குவதில் வானமே எல்லை. இரு வண்ண மார்பிள் கற்களை இணைத்து பதிக்கலாம், வேறுப்பட்ட வண்ண பார்டர் அமைக்கலாம். இதன் குளிர்ச்சியான தன்மை, மற்றும் வழுவழுப்புத்தன்மை பெரிதும் விரும்பப்படுகின்றது.
                 ஆனாலும் சந்தையில் கோலோச்சுவதென்னவோ டைல்ஸ் வகைகள் தான். பல வண்ணங்களில், பல வடிவங்களில், பல பிராண்ட்களில், பல வகைகளில் கிடைப்பதால் அவை தனி ராஜாங்கம் நடத்துகின்றன. பராமரிக்க சுலபம், நீண்டநாள் உழைப்பு, அமைப்பதற்கு நேரம் குறைவு, சிக்கனமானது மற்றும் வசீகரமானது போன்ற காரணங்களால் அனைவராலும் விரும்ப ப்படுவதாகத் திகழ்கின்றது. டைல்ஸ் பல வகைகளில் கிடைக்கின்றன. வணிக வளாகங்களில் பயன்படுத்தப்படும் டைல்ஸ் வேறு ரகமாகவும், வீடுகளில் பயன்படுத்தப்படும் டைல்ஸ் வேறு ரகமாகவும் உள்ளன. வீட்டில் பயன்படுத்தப்படும் டைல்ஸ்களிலேயே வெளிப்புறத் தேவைகளுக்கு ஒருமாதிரியும், வீட்டினுள்ளே வாழும் அறை, குளியலறை, சமையலறை என ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு விதமான டைல்ஸ் பதிக்கப்படுகின்றன.. 
                 பொதுவாக டைல்ஸ் செராமிக், போர்சலின் என்று இரு வகைப்படும். செராமிக் டைல்ஸ் கிளேஸ்டு மற்றும் அன்கிளேஸ்டு என இரு வகைப்படும். கிளேஸ்டு டைல்ஸ் என்பது டைல்களுக்கு நூற்றுக்கணக்கான வண்ணங்களைத் தருவது ஆகும். செராமிக், போர்செலின் என இரண்டு வகை டைல்ஸ்களையும் நாம் வீட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பயன்படுத்தலாம். மொசைக் டைல்ஸ் என்று மிகச்சிறிய டைல்ஸ் உள்ளது. அவற்றை குளியலறை அலங்காரத்திற்கும், சமையலறையில் அடுப்பினை ஒட்டிய சுவர் பகுதிக்கும் (backsplash ) பயன்படுத்தலாம். செவ்வகம், ஐங்கோணம், அறுங்கோணம் என்று பல விதங்களில் கிடைக்கின்றன. க்வாரி டைல்ஸ் என வழங்கப்படும் டைல்ஸ்களில் வழுவழுப்புத் தன்மை இல்லாதபடியால் தோட்டத்தின் நடைபாதைகள்,நீச்சல் குளத்தை ஒட்டிய நடைபாதைகள் , கார் பார்க்கிங், வாசல் படிக்கட்டுகள் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். இவற்றை சிலர் அலுவலங்களுக்கும், குளிர் தாக்குப்பிடிக்கும் என்பதால் குளிர் பிரதேசங்களில் உள்ள வீடுகளிலும் பயன்படுத்துகின்றனர். டைல்களின் அளவு என்பது 10 செ.மீ*10 செ.மீ என்ற அளவில் ஆரம்பித்து 30செ.மீ* 100செ.மீ என்ற அளவு வரை உள்ளது. சதுர அடிக்கு ரூபாய் 45 முதல் ரூபாய் 150 வரை டைல்ஸ் விற்பனையாகின்றது. ஒரு முறை பதித்து விட்டால் சுமார் இருபத்தைந்து வருடங்கள் நீடிக்கும் என விற்பனையாளர்கள் உறுதி அளிக்கின்றனர். 
                   வெறும் டைல்ஸ்களினால் என்ன செய்து விட முடியும் என்று எண்ணி விடாதீர்கள் , இன்றைக்கு சந்தையில் கிடைக்கும் டைல்ஸ் வகைகளைக் கொண்டு எளிய வீட்டிற்கும் மாடமாளிகை போன்ற தோற்றத்தை கொடுக்க இயலும். எனவே தான் தொழிற்சாலை, ஆட்டோமொபைல் ஷோரூம்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், பார்கள், மருத்துவமனைகள், நீச்சல்குளங்கள் என அனைத்து இடங்களிலும் விதவிதமான டைல்கள் வண்ணவண்ணமாய் வியாபித்து நிற்கின்றன. நாமும் வீட்டிற்கு டைல்ஸ் பயன்படுத்தும் போது நமது படைப்பற்றலுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கலாம். கற்பனைத் திறன் மட்டுமிருந்தால் போதும் எதையும் செய்யலாம், ஆனால் தவறாகி விடுமோ என்ற சந்தேகத்தை மட்டும் விட்டொழிக்க வேண்டும்.
                




Thursday, June 16, 2016

இரும்பு சிம்மாசனத்திற்கு ஒரு யுத்தம்...

நெருப்பை உமிழ்ந்தபடி அங்குமிங்கும் பறக்கும் டிராகன்கள், தீ வெப்பத்தினால் தாக்கமுடியாத நாயகி, சூனியக் கிழவிகள் என்று நம்ப முடியாத சூழல்களைத் தன்னகத்தே கொண்ட கதை இது என்றால் நீங்கள் என்ன கூறுவீர்கள்? இது அம்புலிமாமா கதை, குழந்தைகளுக்கானது என்று நகைப்பீர்கள். ஆனால் இத்தகைய ஃபேண்டஸி கதையான ' கேம் ஆஃப் த்ரோன்ஸ்' (Game of Thrones) தான் இன்றைய நம்பர் ஒன் சீரிஸ். HBO வில் ஒளிப்பரப்பாகும் இத்தொடர் உலகெங்கும் உள்ள கோடிக்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. ரசிகர்கள் என்றால் வெறுமனே பார்த்து ரசிப்பவர்கள் அல்ல. அவர்கள் பேச்சு, சிந்தனை, செயல் எங்கும் இத்தொடர் வியாபித்து நிற்பதை அவர்களுடன் பேசினால் அறிந்து கொள்ளலாம்.  இதன் ரசிகர் ஒருவருடன் பேசிப் பாருங்கள் அவர் வாய் ஓயாது அதனைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார். நீங்கள் அதன் கதை அறியாதவர் எனில் அதைப்பற்றி உங்களிடம் விவரிப்பார், அறிந்தவர் எனில் அதைப் பற்றி உங்களிடம் விவாதிப்பார். 
           சுருங்கக் கூறினால் ஏழு பெரும் தேசங்களை உள்ளடக்கிய பெரிய சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி யார் என்று சண்டையிட்டுக் கொள்வதே கதை. யூகிக்கவே முடியாத திருப்பங்களும், நினைத்துப் பார்க்கவே முடியாத கதை நிகழ்வுகளும் கொண்ட பிரம்மாண்டமான அரண்மனைச் சதி தான் கேம் ஆஃப் த்ரோன்ஸ். வெஸ்ட்ரோஸ் அரசின் இரும்பு சிம்மாசனத்தைக் கைப்பற்ற பல சக்திகள் போராடுகின்றன. கதையின் பெரும் பகுதி வெஸ்ட்ரோஸ் (Westeros) இலும் எல் காஸோ(El Caso)இலும் நடக்கிறது. இந்த இரு கண்டங்களிளையும் பிரிப்பது Narrow Sea. ஏழு நிலங்களைத் தன்னகத்தே கொண்ட வெஸ்ட்ரோஸை ஆள்பவர் Kings Landing என்னும் இடத்திலும், இவர்களை அழித்து டிராகன்களின் துணையோடு இழந்த ராஜ்யத்தை கைப்பற்றத் துடிக்கும் ட்நேரியஸ் டார்க்கேரியன்(Daenerys Targaryen)க்கும் இடையே நடக்கும் கதை தான் கேம் ஆஃப் த்ரோன்ஸ். பல்வேறு சதிகளும், தந்திரங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கையில் பிராந்தியத்தின் தடுப்புச்சுவரான 'வொயிட் வால்' க்கு புறத்தே இருக்கும் பனிப் பிரதேசத்திலிருக்கும் வைல்ட்லிங்க்ஸ்(wildlings) மற்றும் வொயிட் வாக்கர்ஸ்(white walkers) எனும் கொடிய சக்திகள் நாட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பிக்கின்றன. இவ்வாறு சுவாரஸ்யமாய் பின்னப்பட்டுள்ள கதையில்ஒவ்வொரு பிரச்சனையும் எவ்வாறு சமாளிக்கப் படுகிறது என்று தொடர் மிகப் பிரமாண்டமாய் விளக்குகின்றது. 
              இதன் மூல நாவலைப் படைத்தவர் ஆர். ஆர் மார்டின். 1996 ஆம் ஆண்டில் மிகப் பிரபலமாய்த் திகழ்ந்த ' A SONG OF FIRE AND ICE' என்ற மிகப் பெரிய புத்தகத்தொடரின் மறு ஆக்கமே ' கேம் ஆஃப் த்ரோன்ஸ்'. வருடத்திற்கு ஒரு சீசன். சீசனுக்கு பத்து எபிஸோட் என்று பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் இத்தொடர் உருவான விதம் குறித்து ஒரு சுவாரஸ்யத் தகவல். தாங்கள் இளம் வயதில் படித்து ரசித்த நாவலுக்கு திரைக்கதை எழுத அனுமதி வாங்க ஆர். ஆர் மார்ட்டினைச் சந்தித்துப் பேச டேவிட் பெனியாஃப்( David Benioff), டி. பி. வைஸ்(D.B. Weiss) இருவரும் சென்றனர். அப்போது ஆர். ஆர். மார்ட்டின் மிகவும் தயங்கினாராம். தன்னுடைய புத்தகத்தில் வரும் கதாபாத்திரங்களும், சம்பவங்களும் இத்தனை நூதனமானவும் சிக்கலானதாகவும் இருப்பதால் அதனை அத்தனை சுலபமாய் தொலைக்காட்சித்தொடராய் ஆக்க இயலாது என்பதில் உறுதியாய் இருந்தார். விடாது வேண்டுகோள் விடுத்த இருவரிடமும் வெகு நேரத்திற்குப் பிறகு நீண்ட யோசனையுடன்,' நான் சில கேள்விகளைக் கேட்கிறேன். நீங்கள் அவற்றிற்கு சரியான விடை அளித்தால் சம்மதிக்கிறேன்' என்றாராம். பின்னர் நுணுக்கமான சில கேள்விகளைக் கேட்டாராம். கதையின் ரசிகர்களான இருவரும் மிகச்சரியானப் பதிலைத் தந்ததும் புன்னகை ஒன்றையே பதிலாய் அளித்தாராம். அவர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. பிறகு சம்மதம் என்ற தகவல் வந்தது. 
           HBO மிகப் பிரம்மாண்டமாய்த் தயாரித்து வழங்கிக் கொண்டிருக்கும் இந்தத் தொடர்தான் உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்டது என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. பிரம்மாண்டமாய் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற பெருமையுடன் செறிவான வசனங்களுக்கும் பேர் போனது இத்தொடர். பல்வேறு முக்கிய கதாபாத்திரங்கள் வரப்போகும் ஆபத்தைப் பற்றிப் பேசிப் பேசியே திகிலை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக குளிர் காலம் வரப்போகிறது என்று பலரும் பேசியே நம்முள் குளிர்காலத்தின் மீதான பயத்தை விதைக்கிறார்கள். முத்திரை வசனம் பலர் பேசினாலும் டிரியன் லேன்னிஸ்டர் (Tyrion Lannister) என்னும் குள்ள பாத்திரம் பேசும் வசனம் பொன்மொழிகளாக அதன் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. ' கடவுள் பாதி மிருகம் பாதி' என்று கூறுவதைப் போல் அனைத்து கதாபாத்திரங்களிலும் சிறந்த குணநலன்களும் உண்டு , நயவஞ்சகமும் உண்டு. எவரும் முழுமையாக நல்லவரும் இல்லை, முழுமையாக கெட்டவரும் இல்லை. ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பைத் தூண்டி பின்னர் அதை சிதைக்கும் வண்ணம் அந்தக் கதாபாத்திரத்தைக் கொல்வது தொடரில் சர்வ சாதாரணம். ' அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா..' என்று ஒரு பிரபல வசனம் உண்டு. அதைப் போல நயவஞ்சகமும், சூழ்ச்சியும் அரசியல் என்று வந்து விட்டால் சர்வ சாதாரணம் என்பது போல் நடந்து கொள்கின்றனர். இதைப் பற்றி ஆர். ஆர். மார்ட்டினிடம் கேட்ட போது அவர் கூறினார்,' சிறு சிறு கதாபாத்திரங்கள் மட்டும் சாவதும், நாயகர்களுக்கு மரணம் இல்லை என்று காட்டுவது நேர்மையற்ற செயல். ஃபேண்டஸி எழுத்தாளர் என்றாலும் உண்மையை உரக்க சொல்ல வேண்டும்' என்றார். 
          எந்த ஒரு கதாபாத்திரமும் எப்போது வேண்டுமாலும் கொல்லப்படலாம் என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே ரசிகர்கள் இதைப் பார்க்கின்றனர். அதீத வன்முறையும் பாலுணர்வுக் காட்சிகளை தன்னகத்தே கொண்டாலும் நேர்த்தியான திரைக்கதை, அழகிய காட்சியமைப்பு, பொருத்தமான நடிகர்களின் தேர்ந்த நடிப்பு, இம்மியளவும் குறையாத விறுவிறுப்பு  போன்றவை தொடரின் வெற்றிக்கு வழிவகுக்கின்றன. இது வரை ஆறு சீசன்களும் எட்டு எபிஸோடுகளும் வெற்றி முழக்கமிடுகின்றன. வயதான படியால் முடிவை( க்ளைமாக்ஸ்) தொடரின் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் ரகசியமாய் பகிர்ந்துள்ளார் ஆர். ஆர் . மார்ட்டின் என்ற வதந்தி இணையமெங்கும் நிலவுகிறது. இணையத்தில் இதன் செல்வாக்கு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. ஒரு முறை தொடரின் தயாரிப்பாளர்கள் எக்ஸ்ட்ரா ரோலுக்கு விண்ணப்பங்கள் வரவேற்ற போது வந்து குவிந்த விண்ணப்பங்களைப் பார்த்து மிரண்டு விட்டனராம். தொடரில் தானும் எவ்வாறாவது இடம் பெற வேண்டும் என்ற நெட்டிசன்களின் பேரவா அலாதியானது. ஒவ்வொரு சீசனிலும் ஒன்பதாவது எபிஸோடு மிகவும் சுவாரஸ்யமாயத் திகழ்ந்துள்ளபடியால் இம்முறையும் அதற்காக அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது கூடுதல் தகவல்.

Friday, April 29, 2016

கப்பல் பயணம் போகலாம்..


இன்று பிரபலமான சுற்றுலா வகைகளுள் ஒன்றாக 'க்ரூஸ்' என்னும் கப்பல் பயணம் மாறிவிட்டது. சிங்கப்பூர் செல்லலாம் என்று முடிவெடுத்தவுடன் க்ரூஸ் என்னும் கப்பல் பயணமும் மேற்கொள்ளலாம் என்று என் கணவர் யோசனை தெரிவித்தார். நாங்கள் அரை மனதுடன் ஒத்துக் கொண்டோம். மூன்று நாட்கள் கப்பல் பயணம் என்பதால் மிகவும் போரடிக்கும் என்று கருதி வாசிப்பதற்கு சில புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டேன். ஆனால் ஆச்சர்யம் என்னவெனில் அவற்றை வாசிக்க எனக்கு நேரமே கிடைக்கவில்லை என்பது தான்.
           நாங்கள் சென்றது "சூப்பர் ஸ்டார் ஜெமினி" என்னும் சொகுசுக் கப்பலில். இதில் மொத்தம் பன்னிரெண்டு அடுக்குகள் இருந்தன. நாங்கள் தங்கியிருந்தது ஏழாவது அடுக்கில். அதன் சிறப்பம்சம் நடைப்பயிற்சி தளம் மற்றும் ரிசப்ஷன் . ரிசப்ஷன் எங்கள் தளத்தில் இருந்ததால் மோஸ்ட் happening place ஆகத் திகழ்ந்தது. கப்பலில் பயணிக்க ஆரம்பித்தவுடன் ஏனோ ஜாக் மற்றும் ரோஸ்..அதாங்க நம் டைட்டானிக் ஹீரோ ஹீரோயின் ., அநியாயத்துக்கு ஞாபகத்துக்கு வந்து தொல்லை பண்ணாங்க..உடனே நாங்களும் அவங்களை மாதிரி ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம்.என்ன சொன்னேன்? ஃபோட்டோ எடுத்தோம்னா? தப்பு..தப்பு எடுக்க முயற்சி செஞ்சோம்.ம்.. என்ன கேக்குறீங்க?அந்த ஃபோட்டோ எங்கன்னா? அந்தப்படம் சென்சார் கத்திரிக்கு தப்பலைங்க..ஆனாலும் அவங்க ரொம்ப ஸ்டிரிக்ட்..ஸ்டிரிக்ட்..ஸ்டிரிக்ட...(எக்கோஎஃபெக்ட் நல்லா இருக்காங்க??). 
           கப்பலின் அனைத்து தளங்களிலும் ஏதாவது ஒரு வகை பொழுதுபோக்கு அம்சம் இருந்தது. தியேட்டர், நீச்சல்குளம், ஸ்பா, ஜிம், மசாஜ், காசினோ, கரோக்கி, கம்ப்யூட்டர் கேம்ஸ் என்று சகல அம்சங்களுடன் கூடிய ஒரு சிறு நகரமாகத் திகழ்ந்தது. பகல் நேரத்தை இவற்றில் பொழுது போயிற்று எனில் மாலையில் வேளையில் மாஜிக் ஷோ, கேம் ஷோ,டிஜே நைட் என பொழுது கழிந்தது. நாள்தோறும் என்னென்ன நிகழ்வுகள் நடக்கப் போகின்றன என்று காலையிலேயே அச்சடித்த நோட்டீஸ் மூலம் தெரிவித்து விடுவார்கள்.நான் ஏதோ பரிட்சைக்குப் படிக்கும் மாணவி போல் அதை உன்னிப்பாக கவனித்து படிப்பேன். பின் என் கணவரிடமும் மகளிடமும் இத்தனாவது தளத்தில் இது நடக்கின்றது என்னு ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிப்பது போல் சொல்லுவேன். ஒவ்வொரு தளமாக்க் தேடிச்சென்று என்ன நடக்கின்றது என்று பார்த்து வருவதில் எனக்கு தீராத ஆர்வம். ஏதோ ட்ரெசர் ஹண்ட் விளையாடுவது போலிருந்தது. மலேசிய நாட்டின் குட்டித் தீவுகளுக்கு சிலர் கப்பலிலுந்து இறங்கி சுற்றுலா சென்று வந்தனர். நாங்கள் புலா ரெடேங் என்னுமிடத்தில் உள்ள ஷாப்பிங் மற்றும் snorkeling சென்று வந்தோம்.  
            இவை தவிர ஆங்காங்கே சிறு சிறு டெமோ.. ஜூம்பா, பிஸ்ஸா செய்வது, மாக்டெயில் செய்வது என்று ஊழியர்கள் கற்றுக் கொடுத்தார்கள். புரிகிறதோ இல்லையோ நான் அத்தனை இடத்திலும் ஆஜராகிவிடுவேன்.அவர்களைப் பற்றி சொல்லியே தீர வேண்டும். இன்முகத்துடன், புன்முறுவலுடன் அந்த மூன்று நாட்களையும் அவர்கள் நகர்த்திய விதமும் சேவை செய்த பாங்கும் , அவர்கள் எங்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று விட்டனர். சிலர் வெளியேறும் போது அவர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்டனர். நான் அந்த அளவிற்கு செல்லவில்லை..என் வீட்டில் அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை மட்டும் மாட்டி வைத்துள்ளேன். 
        நான் மிகப் பெரிய உணவுப்பிரியை அல்ல. எடை கூடி விடுமோ என்ற அச்சத்தினால் எப்போதும், சுவை என்பதை விட ஆரோக்கியம் என்ற எண்ணம் மேலோங்குமாறு தேர்ந்தெடுத்து உண்ணுவேன். என்னுடைய இந்தக்கட்டுபாடுகளையெல்லாம் உடைத்து எரிந்தது இந்தப் பயணம். எத்தனை விதவிதமான உணவுகள், எத்தனை விதமான பழங்கள், எத்தனை விதமான பானங்கள். இந்திய உணவு, சீன உணவு, மெடிட்டெரேனியன் உணவு, மேற்க்த்திய உணவு என்று எத்தனை விதம்...ஸ்வீட், ஸ்டார்ட்டர், மெயின் கோர்ஸ் என எதை எடுத்தாலும் அதன் எண்ணற்ற வகைகள் என்னை திக்கு முக்காடச் செய்தன. அழகாக வடிவமைக்கப்பட்டு நேர்த்தியாக அடுக்கி இருந்த விதம் என்னை வெகுவாக்க் கவர்ந்தது.அனைத்தையும் ருசி பார்த்தே தீர வேண்டும் என்ற கங்கணத்துடன் ஒரு கை பார்த்தேன். என் கணவரும் மகளும் இந்திய உணவகத்திலேயே தங்கள் உணவு நேரத்தை செலவிட்டனர். ஆனால் எதற்கும் துணிந்தவள் போல தைரியமான சீன உணவு, மேற்கத்திய உணவு என அனைத்தையும் ஒரு கை பார்த்தேன். வாயில் நுழையாத பேர்களுடைய பதார்த்தமானாலும கண்ணுக்கு விருந்தாய் விரும்பி அழைத்தன. அந்த அன்பான அழைப்பை ஏற்று வயிற்றுக்கு விருந்தளித்தேன். பழங்கள் இத்தனை சுவையானவை என்பதை அங்கு தான் அறிந்து கொண்டேன். ஒரே அளவாய் வெட்டி அடுக்கப்பட்டிருந்த அவை நிமிடங்களில் காணாமல் போகும். கேக்குகள் கண்ணைப்பறிக்கும் வித்த்தில் இருந்தன. ' என்னையும்தான் ஒரு கை பாரேன் என்று கூவி கூவி அழைத்தன. பாவம் அவை மட்டும் என்ன பாவம் செய்தன என்று அவற்றையும் ஒரு கை பார்த்தேன். இவை அனைத்தும் முடிந்த பின் நீச்சல் குளத்தில் ஆனந்தக் குளியல் இட்டேன். இவை போதாதென்று இரவில் டிஜே நைட்டில் மாக் டெயில் என்று பழரசங்களை வாரி  வழங்கினர். அவற்றையும் ஒரு கை பார்த்தேன். ஓரவஞ்சனை கூடாதல்லவா?
         கடைசி நாளன்று கப்பலில் பணிபுரிந்த அனைவரையும் கப்பலில் பயணித்த எங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி அணிவகுத்து நின்றனர். கேப்டன் தலைமை செஃப் ஐ அறிமுகம் செய்த போது கரகோஷம் விண்ணைப்பிளந்தது.( பயபுள்ளைக.. எல்லோரும் என்னை மாதிரி தான் போலிருக்கு...)
பின்னர் அனைவருக்கும் டின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் உணவருந்திக் கொண்டிருந்த போது திடீரென்று சிப்பந்திகள் அனைவரும் ஒரே மாதிரி நடனமாடிய ஆனந்த அதிர்ச்சி அளித்தனர். பயணிகள் ஸ்பூனையும் ஃபோர்க் ஐயும் கீழே போட்டு ஹேண்டிகேம் ஐயும் காமிராவையும் ஹேண்ட் பேக்கிலிருந்து துழாவி எடுத்து அவசரமாக படமெடுக்க ஆரம்பித்தனர். ஆனால் எனக்கு அந்த சிரம்மெல்லாம் இல்லை. நான் தான் மும்முரமாக உணவு ஐட்டங்களை ஏற்கனவே படம் பிடித்துக் கொண்டிருந்தேனே. நாங்கள்லாம் யாரு..ஐடியா அன்னார்சாமிகளாயிற்றே.. துரிதமாக முழு நடனத்தையும் படம் பிடித்தோம். என்ன..கேமிரா தான்  நான் எப்போது வேண்டுமானாலும் உயிரை விடுவேன்..பேட்டரி லோ..என்று பயமுறுத்திக் கொண்டே இருந்தது. ஆனால் பயந்த வண்ணம் எதுவும் நடக்கவில்லை.
         மூன்று நாட்கள் நொடிப்பொழுதில் ஓடிவிட்டது. பயணத்தின் முடிவில்நிறைய நண்பர்களைப் பெற்றிருந்தோம். நிறைந்த மனதுடன் சிங்கப்பூரை சுற்றிப் பார்க்க கிளம்பினோம். வீடு திரும்பிவுடன் எடை மெஷினில் ஏறி நின்றேன். அதிர்ந்தேன். ம்ம்ம... என்ன சார் கேக்குறீங்க?? எடை கூடி விட்டேனா என்றா??...அது சஸ்பென்ஸ் சார்.


Wednesday, April 27, 2016

இல்லத்தை அலங்கரிக்கும் மாடிப்படிகள்.





           நீங்கள் பல திரைப்படங்களில் பார்த்திருக்கலாம் .. நாயகன் வில்லனிடம் சவால் விடும் காட்சி அல்லது நாயகன் நாயகியின் அழகில் மயங்கி காதலில் விழும் காட்சி..இது போன்ற காட்சிகள் மிகப் பிரம்மாண்டமான படிக்கட்டுகளில் அவர்கள் இறங்கி வரும் போது  நடைபெறும். வீட்டின் விஸ்தீரணத்தை இந்த மாடிப்படிகள் பறைசாற்றுவதைக் காணலாம். வீட்டின் அழகை அதிகமாக்குவதில் மாடிப்படிகள் மிகப் பெரும் பங்காற்றுகின்றன. இரு தளங்களை இணைக்கும் கட்டுமானமாகத் திகழும் மாடிப்படிகள் வீட்டின் தோற்றத்தை நிர்ணயிப்பது கண்கூடு. 
            மாடிப்படிகள் ஒன்று வீட்டின் வெளிப்புறம் அமைக்கப்படும் அல்லது வீட்டின் உள்புறம் அமைக்கப்படும். வெளிப்புற படிக்கட்டுகள் பெரும்பாலும் கான்கிரீட்டினால் அமைக்கப்படுகின்றன. உட்புறத்தில் அமைக்கப்படும் படிக்கட்டுகளில் கான்கிரீட், மரம், கண்ணாடி, கிரானைட் என்று பலவிதமாக நமது இரசனைக்கு ஏற்றவாறு அமைக்கப்படுகின்றன. இன்டீரியருக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைக்கபட்டாலும், வீட்டில் உள்ளோரின் உடல்நிலை, பழக்கவழக்கம் ஆகியனவும் கருத்தில் கொள்ளப் படுகின்றது. வயது முதிர்ந்தோர், குழந்தைகள் வாழும் வீடு எனில் அவர்களது பாதுகாப்பு மற்றும் சௌகர்யத்தைக் கணக்கில் கொண்டு மாடிப்படிகள் அமைக்கப்படுகின்றன். பொதுவாக படிக்கட்டுகளின் சாய்வுதளம் 25 டிகிரி முதல் 40 டிகிரி வரையும், படிக்கட்டுகளின் அகலம் குறைந்த பட்சம் மூன்று அடிகளாவது அமைவது நலம் என்று பொறியாளர்கள் கருதுகின்றனர். 
                படிக்கட்டுகள் வடிவமைப்பில் வளைவுப் படிக்கட்டுகள், நேரான படிக்கட்டுகள், மிதக்கும் படிக்கட்டுகள், சுழல் படிக்கட்டுகள் எனப் பல வகைகள் உள்ளன. நேரான படிக்கட்டுகள் சில சமயலங்களில் L வடிவத்திலும், இரட்டை L வடிவத்திலும், U வடிவத்திலும் அமைக்கப்படும். சுருக்கமான இடம் எனில் U வடிவப்படிக்கட்டுகளே நல்லது. நேரான படிக்கட்டுகளில் திருப்பங்கள் அமைத்தால் அது L வடிவப்படிக்கட்டு ஆகும். திருப்பங்கள் இல்லாமல் ஒரே வீச்சாக படிக்கட்டுகள் இருந்தால் ஏறுவது சிரம ம் தரும். அரைவட்ட திருப்பம், கால் திருப்பம், திறந்தவெளி திருப்பம் ..இவற்றில் நம் வீட்டிற்கு எது பொருத்தமானதோ அதை கட்டிட வல்லுனரின் ஆலோசனையின் படி அமைக்கலாம். சுழல் படிக்கட்டுகள் மற்றும் வளைவுப் படிக்கட்டுகளில் வரவேற்பறையில் பிரதானமாக அமைத்தால் வரவேற்பறையின் அழகு கூடும். மிதக்கும் படிக்கட்டுகள் என்பது அந்தரத்தில் மிதப்பவை அல்ல. ஒருப்பக்கம் சுவற்றில் இணைக்கப்பட்டிருக்கும். படிகள் ஒன்றோடொன்று இணைக்கப்படாமல் தனித்தனியே நிற்கும்.
              படிக்கட்டுகளை கிரானைட் எனும் பளிங்குக் கற்களால் அமைக்கலாம், மரத்தால் அமைக்கலாம். மரத்தால் அமைக்கும் போது தேர்வு செய்யும் பலகையின் உறுதித்தன்மையை கவனத்தில் கொள்ள வேண்டும். பளிங்கு கற்களால் அமைக்கும் படிக்கட்டுகள் ஒரு எடுப்பான தோற்றத்தைத் தரும். கண்ணாடிப்படிக்கட்டுகளை வீடுகளில் அமைப்பதில்லை. பெரும்பாலும் மிகப் பெரிய ஷோரூம்களிலும், மால் என்னும் பல்பொருள் அங்காடிகளிலும் அமையக் காணலாம். உலோகப்படிக்கட்டுகள் உறுதியுடன் திகழும், என்றாலும் துருப்பிடிக்கும் அபாயம் உள்ளதால் இவற்றிற்கு அடிக்கடி வண்ணம் பூசி புதுப்பிக்க வேண்டும். பெரும்பாலும் படிக்கட்டுகளின் ஒரு பக்கம் சுவரும் மற்றொரு பக்கம் கைப்பிடியுடன் கூடிய தடுப்புகள் இருக்கும். சமயங்களில் இரு பக்கமும் தடுப்புகளை அமைப்பதும் உண்டு. மரத்தாலான டிசைன்களில், இரும்புக்கம்பிகளாலான டிசைன்களில், மார்பிள் கற்களால் ஆன டிசைன்களில் என ஏராளமான வகைகள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றில் எது நம் வீட்டிற்கு பொருத்தமானதோ அதை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 
             மாடிப்படிகளின் கீழிருக்கும் வெற்றிடத்தை சிறந்த சேமிப்புக்கான அறையாக மாற்றலாம். புத்தகங்களை அழகாக அடுக்கி வைக்கலாம். குழந்தைகளின் பொம்மைகள் ஆங்காங்கே இறைந்து கிடக்காமல், விளையாடிய நேரம் போக எஞ்சிய நேரம் மாடிப்படிகளின் கீழ் அடுக்கி வைக்கலாம். இடப்பற்றாக்குறையால் இன்னலுறும் போது கொஞ்சம் யோசித்து இவ்விடத்தை பயனுள்ளதாக மாற்றலாம். ஜிம் உபகரணங்கள், வாஷிங்டன் மெஷின், டிஷ் வாஷர் போன்றவற்றை இங்கு அமைத்து விட்டால் இடநெருக்கடி குறையும்.அடிக்கடி உபயோகப்படுத்தாத பொருட்களை கப்போர்ட் அமைத்து இங்கு சேமித்து வைக்கலாம்.
             வளைவான மாடிப்படிகளின் அழகு வேறு எதிலும் இல்லை. அதன் பக்கவாட்டில் ஆர்ச் போன்ற பெரிய ஜன்னல்களை அமைத்தால் மிக எடுப்பான தோற்றம் தரும். மாடிப்படிகளின் ஒரு புறமாக அமைந்த சுவர்களை அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கலாம். நம் வீட்டிற்கான ஆர்ட் கேலரியாக அதனை மாற்றலாம். அழகான ஓவியங்கள் அல்லது புகைப்படங்களை அங்கே மாட்டி வைத்தால் மிக அழகாக இருக்கும். படிகளின் முகப்பில் மிகப் பெரிய ஷோபீஸ் அல்லது பூஞ்ஜாடி கொண்டு அலங்கரிக்கலாம். முகப்பில் வேலைப்படாமைந்த கார்பெட்களை விரித்தால் இன்னும் சிறப்பு. 
            வரவேற்பறையில் அமையும் படிக்கட்டுகளை அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் நம் கற்பனைக்கு ஏற்றவாறு அலங்கரிக்கலாம். பொதுவாக முதல் அபிப்ராயமே சிறந்த அபிப்ராயம் என்பார்கள். அதை மனதில் கொண்டு வீட்டிற்கு வரும் விருந்தினரை ஈர்க்கும் வண்ணம் அலங்கரிக்க வேண்டும் என்பார்கள்.
ஆனால் என் எண்ணம், நாம் வீட்டை விட்டு விட்டு வெளியேறும் போது நம் கண்களை நிறைக்கும் அழகிய தோற்றம் எப்பொழுதுமே மனதிற்கு ஒரு நிறைவைத்தரும். அதை மனதில் கொண்டு வரவேற்பறையின் படிக்கட்டுகளை அலங்கரிக்கலாம்.



Thursday, April 21, 2016

வீட்டுக்கடன்

எலி வளையானாலும் தனி வளையா இருக்கணும் ..என்பது பழைய மொழி. ஆனால் அது இன்றும் நம் அனைவரது மனங்களிலும் கன ன்று கொண்டிருக்கும் நீங்காத ஆசை. ஒரு கிரவுண்ட் கூட வேண்டாம., அரை கிரவுண்டிலோ அல்லது சிங்கிள் பெட்ரூம் பிளாட் கூட போதும்., ஒரு அழகான வீட்டை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பது நம் ஒவ்வொருவரின் கனவு.
    இந்தக் கனவு நிறைவேற முன்பை விட இப்போது அதிக சாத்தியக்கூறுகள் உருவாகி உள்ளன. வங்கிக்கடன், அதுவும் வீட்டுக்கடன் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டுக்கடனுக்கு மிகவும் குறைந்த அளவு வட்டி விகிதம் விதிக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. 10.8 முதல் 10.30 வரை வட்டி விகிதம் நிலவுகின்றது. இது வங்கிக்கு வங்கி மாறுபடலாம். மற்ற கடன்களைக்காட்டிலும் வீட்டுக் கடனுக்கு சில சலுகைகள் உண்டு. அவற்றில் முக்கியமான ஒன்று கடனைத்திருப்பி செலுத்துவதற்குத் தரப்படும் கால அவகாசம். கடனை நாம் ஐந்து ஆண்டுகளிலும் திருப்பி செலுத்தலாம். இருபத்தைந்து ஆண்டுகளிலும் திருப்பி செலுத்தலாம். அது நாம் தேர்ந்தெடுக்கும் கடன் தொகை மற்றும் திட்டத்தைப் பொறுத்தது ஆகும்.
          வங்கிகள் நாம் புதிதாக நிலம் வாங்கி அதில் வீடு கட்டவும், புது வீடு வாங்கவும், புது அடுக்குமாடி குடியிருப்பு வாங்கவும், பழைய வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வாங்கவும், இருக்கும் வீட்டை மேம்படுத்தவும் கடன் வழங்குகின்றன. கடன் பெற தகுதி என்பது பதினெட்டு வயது முதல் ஐம்பது வயது வரை ஆகும் . சில வங்கிகளில் மருத்துவர்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள் அல்லது சட்ட வல்லுநர்கள் எனில் அறுபது வயது வரை அளிக்கின்றனர். வீடு கட்ட கடன் தொகை மூன்று முதல் ஐந்து கோடி வரையும் வீட்டு மேம்பாட்டு கடன் இருபத்தைந்து லட்சம் வரை பெறலாம் என்று வங்கித்துறையினர் கூறுகின்றனர். கடன் பெறும் நபர் பணியில் இருந்தால் ஓய்வு பெறுவதற்குள் EMI முடிந்து விடுமா என்பதை வங்கிகள் சரிபார்க்கின்றன. ஒருவேளை ஓய்வு பெற்ற பின்னும் EMI செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு, அதற்கேற்ற வருமானம் நமக்கு இருக்கும் பட்சத்தில் வங்கிகள் கடன் அளிக்கும். சில சமயங்களில் கடன் பெறுபவர் அறுபது வயதைக் கடந்த பிறகு கடனை அடைப்பதற்கு அவகாசம் கோரினால் அவரது துணைவியோ, வாரிசுதார ரோ எழுத்துப்பூர்வமாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள். அவருக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் வாரிசுதார ர்(co-obligant) அதனை செலுத்த நேரிடும்.
             வங்கிகள் கடன் அளிக்கும் என்றாலும் முதல் இருபது முதல் இருபத்து ஐந்து சதவீத முதலீட்டை நாம் தான் செலவிட வேண்டும். மீதியைத்தான் கடனாகத் தருவார்கள். இதை கட்டுமானம் முடிய முடிய மூன்று நான்கு தடவையாகப் பிரித்து தருவார்கள். வீட்டின் விலை அல்லது தோராயமான மதிப்பீட்டின் எண்பது சதவீதம் கடனாக க் கிடைக்கும் என்றாலும் ஒருவரின் வருமானத்திற்கு ஏற்ப தான் கடன் தொகை நிர்ணயிக்கப்படும். 25- 30 வயதில் வீடு வாங்க நினைத்தால் நம் சம்பளத்தைப் போல எழுபது மடங்கு கிடைக்கும். 45 வயதிற்கு கீழ் என்றால் நம் சம்பளத்தைப் போல ஐம்பது முதல் அறுபது மடங்கு வரை கிடைக்கும். 45 வயதிற்கும் அதிகம் மற்றும் சுயதொழில் செய்பவர் என்றால் நம் ஆண்டு வருமானத்தைப் போல நான்கு அல்லது ஐந்து மடங்கு கிடைக்கும். வங்கிக்கடனைத் திருப்பி செலுத்தும் தகுதி நம்மிடம் இருக்கிறதா என வங்கிகள் பரிசீலிக்கும். பிற EMI போக, வீட்டுக்கடன் போக நம்மிடம் சம்பளத் தொகையில் முப்பத்தைந்து சதவீதமேனும் இருந்தால் மட்டுமே இன்றைய காலகட்டத்தில் வீட்டு செலவுகளை சமாளிக்க முடியும். இதனை கருத்தில் கொண்டே வங்கி தன் கடன் தொகையை நிர்ணயிக்க முன்வரும்.
         பொதுவாக நாம் வங்கிகளில் விண்ணப்பிக்கும் போது நம்முடைய ஆவணங்கள் அனைத்தையும் பரிசீலித்து தயார் நிலையில் வைத்திருப்பது நல்லது. வங்கிகளில் எதிர்ப்பார்க்கும் ஆவணங்கள்... 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம், 
விண்ணப்பதார ரின் புகைப்படம், 
புகைப்படத்துடன் கூடிய அடையாளச்சான்று, 
முகவரிச்சான்று, 
வயதுச்சான்று( பத்தாவது அல்லது பன்னிரெண்டாவது வகுப்பின் மதிப்பெண் பட்டியல்), 
மனைப்பத்திரம்( சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தது),
தாய்ப்த்திரம்,
வில்லங்கச் சான்றிதழ்,
விற்பனைச் பத்திரத்தின் நகல்,
சட்ட வல்லுநரின் கருத்து,
வீட்டிற்கு உண்டான வரைபடம், அங்கிகாரம் நகல்,
வீட்டின் மதிப்பீடு, கட்டுமான செலவு ஆகியவற்றின் பொறியாளர் அறிக்கை,
வருமானச் சான்றிதழ்,
கடந்த ஆறுமாத த்துக்கான வங்கி பாஸ் புக் நகல்,
வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்த படிவத்தின் நகல்,
பான் அட்டையின் நகல்.
           கடன் கொடுப்பதுடன் வங்கியின் கடமை முடிந்து விடாது. வீடு கட்டி முடியும் வரை தனது பொறியாளர்கள் வைத்து திட்டத்திலிருந்து மாறாமல் வீடு கட்டப்பட்டுள்ளதா என்று சரி பார்க்கும். EMI ஒரு மாதமோ இரண்டு மாதமோ கட்டத் தவறினாலும் அதற்கு அபராதம் உண்டு. வீடு கட்டி முடித்த பின் அதன் இன்டீரியர் எனும் உள் அலங்காரம் செய்ய அல்லது வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க வங்கியில் ' டாப் அப் லோன்' எனும் வசதி அளிக்கின்றனர். அதன்படி கடன் தொகையிலிருந்து பதினைந்து சதவிகீதம்  கிடைக்கும். ஆனால் மூன்று வருடங்களுக்கு பிறகு மட்டுமே கிடைக்கும். செயல் முறை கட்டணம் என்று அளிக்கப்படும் கடன் தொகையின் 1 சதவீத த்தை வங்கி எடுத்துக்கொள்ளும். பிற வங்கிகளிலிருந்து கடனை எடுத்துக் கொள்ளும் வசதியும் பல வங்கிகளில் உண்டு. அதாவது பாதி கடன் செலுத்திய நிலையில் நாம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வேறு வங்கியில் மாறிக் கொள்ளலாம்.
               வீடு கட்ட, வீடு வாங்குவதற்கு, வீட்டை விரிவுபடுத்துவதற்கு, வீட்டை மேம்படுத்துவதற்கு என பலவிதமான கடன் வசதிகள் பல விதமான வட்டி விகிதங்கள். வீட்டுக் கடன் என்பது பெர்சனல் லோன் மற்றும் வாகனக் கடன் போன்றது அல்ல. அளவு மிகவும் பெரியது என்பதால் சிறிய அளவு வட்டி விகிதம் கூட பெரிய அளவு மாற்றம் தரும். என்றாலும் எல்லாக்கடனையும் விட வீட்டுக் கடனுக்கு வட்டிவிகிதம் குறைவாக இருக்கும்படி ரிசர்வ் வங்கி வலியுறுத்தி உள்ளது. நம்முடைய ஆவணங்கள் அனைத்தும் துல்லியமாக இருக்கும் பட்சத்தில் வங்கிக்கடன் பதினைந்து நாட்களுக்குள் கிடைத்து விடும் என்கிறார் வங்கி மேலாளர். வங்கிக்கடன் வாங்குவதற்கு முன் அதன் நடைமுறை வழக்கங்களைப் பற்றி இணையத்திலோ அல்லது வங்கி உயரதிகாரிகளிடமோ கேட்டு அறிந்து கொள்வது நல்லது. வங்கிகள் அளிக்கும் விட்டிவிகிதங்களில் சிறு மாற்றங்கள் இருக்கலாம், அவற்றை ஒரு முறை ஒப்பிட்டு ஆராய்ந்து முடிவெடுக்கலாம். கடன் ஒப்பந்தம் முழுவதையும் கவனமாக படிக்க வேண்டும்.

Wednesday, April 20, 2016

பயணங்கள் பலவிதம்.

           எந்த ஊருக்கு சுற்றுலா செல்வதாக இருந்தாலும் அதைப் பற்றி முன்னரே இணையத்தில் தகவல்கள் தேடுவது என் வழக்கம். மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள " லோனாவாலா" செல்வது என்று முடிவானதும் கூகுளிடம் சரண் அடைந்தேன். அதனைப் பற்றிய செய்திகள், கட்டுரைகள், புகைப்படங்கள் யாவும் என் ஆர்வத்தை மேலும் தூண்டுவனவான அமைந்தன. அந்த நாளுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.
            செப்டெம்பர் 28, 2015 லோனாவாலாக்கு என் குடும்பத்தினருடன் பயணமானோம். இன்றைய ட்ரெண்டின் படி ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று அனைத்திலும் பதிவிட்டு விட்டு கிளம்பினோம். ஒன்றரை நாள் இரயில் பயணமாகையால் உற்சாகத்திற்கு குறைவில்லை. தமிழகம் தாண்டியதும் வருண பகவானும் கருணை காட்டி மழை பொழிய வைத்து பயணத்தின் போது அனல் தெரியாமலிருக்க உதவினான். லோனாவாலா புனேவிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவிலிருக்கிறது. இதன் இதமான, மிதமான குளிருடன் கூடிய சீதோஷ்ணநிலை, அழகிய வண்ணப்பூக்களுடன் திகழும் சிறிய மலைக்குன்றுகள், பரந்து விரிந்துப்பட்ட ஏரிகள், அடிக்கடி மழை பெய்து குளிர்ச்சியான சூழல் போன்றவை சுற்றுலா வரத்தூண்டுவனவாய் அமைந்துள்ளன. மும்பை மற்றும் புனேவாசிகளின் வார இறுதி நாட்களின் விருப்பத் தேர்வாக லோனாவாலா மாறியுள்ளது.(weekend getaway).
          நகரமயமாதலின் சாயல் இன்னும் அதிகம் விழாத சிறு நகரான லோனாவாலாவின் எளிமை என்னை வெகுவாகக் கவர்ந்தது. நகரின் மிக அருகில் அமைந்த Tiger point இன் எழில் காண்போரை தன் வசமாக்கிக் கொள்ளும் திறன் கொண்டதாய் வனப்புடன் திகழ்ந்தது. இயற்கை எங்களுக்கு, குறிப்பாக கண்களுக்கு, என்ன விருந்தளிக்கப் போகிறதோ என்று ஆவலுடன் பயணித்தோம். இயற்கை அன்னை எங்களை ஏமாற்றவில்லை. வாரி வழங்கியிருந்தாள். பரந்து விரிந்த மலைப்பிரதேசமெங்கும் பூத்துக் குலுங்கிய சிறு மலர்கள் ...காணக் கண் கோடி வேண்டும்.
          ஒரு மாலை நேரத்தை ஏகாந்தமாக கழிப்பதற்கு உகந்த அழகான, இயற்கைப் பிரதேசங்கள் மற்றும் தாவரக்காடுகளைப் பிண்ணனியாக்க் கொண்டு 'புஷி அணை' அமைந்துள்ளது. இதன் அமைதியான சூழலும், ஸ்படிகம் போன்ற நீரும் மனதிற்கு இன்பம் அளிக்கும் விதமாக இருந்தது. மழைக்காலத்தில் இந்த இடத்தைப்பார்ப்பது சிறந்ததாக இருக்கும். அச்சமயத்தில் அணை நிரம்பி வழிந்து நீர்வீழ்ச்சி போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. மழைக்காலங்களில் வழிந்தோடும் நீரில் படிக்கட்டுகளில்  நனைத்து கொண்டு குழந்தைகளுடன் பெரியவர்களும் குதூகலிப்பதைக் காணலாம்.
            லோனாவாலா இத்தகைய எழில் காட்சிகளைக் கொண்டிருந்தாலும் இதன் சுற்று வட்டாரத்தில் பாரம்பரியம் மிக்க கோட்டைகளையும் புராதனக் குகைகளையும் கொண்டுள்ளது. கார்லா குகைகள் சுமார் 16 கி.மீ தொலைவில் உள்ளது. இரண்டாம் நூற்றாண்டைக் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. ஹீனயானம் எனப்படும் பௌத்த மரபுப்படி அமைக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் புராதன சிற்பக்கலைக்கு எடுத்துக் காட்டாக  கருதப்படுகின்றது கார்லா குகையின் அருகிலேயே ஏக்வீராதேவியின் திருக்கோயில் அமைந்துள்ளது. புகைப்படம் எடுக்க விரும்புவோருக்கு மிகவும் தோதான இடம், பாரம்பரியமும், புராதனமும் அருகருகே அமைந்துள்ளபடியால்.
              கார்லா குகைகயைப் போலவே பாஜாக் குகைகளும் உள்ளன. பள்ளி ஒன்று சுற்றுலா வந்திருந்தபடியால் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். சூரிய ஒளி மாலை வேளையில் நேரடியாக குகைக்குள் விழுவதால் அதன் நுட்பமான வேலைப்பாடுகள் நன்கு தெரிகின்றன. மிகப் பெரிய சைதன்யம், எளிமையான எண்கோண தூண்கள், அவற்றின் மீது அமைந்த அரை நீள் வட்ட கூரை, மர வளைவுகள், வெளிப்புற சாளரங்கள், நுட்பமான சிற்பங்கள் என இவற்றின் அழகியலை வருணித்துக் கொண்டே போகலாம். துறவிகள் தண்ணீர் குடிக்க என இருக்கும் அமைப்புகள், தங்குவதற்கான சிறிய அறைகள் என அதிஅற்புதமான மடாலயங்களாகத் திகழ்கின்றன. கல்லிலான நுட்பமான சிற்பங்களைப் பற்றி கூறியே ஆக வேண்டும். வணிகர், துணைகளுடன் வரும் தலைவன், யானை மீதமர்ந்த கந்தர்வன், தபேலா வாசிக்கும் பெண்,நடனமாடும் பெண் என பல தரப்பட்டன. மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், சாஞ்சி போன்று இல்லாமல் இங்கு ஒரே இடத்தில் அமைந்திருக்கும் கல்லிலான பதினான்கு ஸ்தூபிகள்.ஒரு சிறு குகைக்குள் ஒன்பதும், குகைக்கு வெளியே ஐந்துமாய் நெருக்கமாய் உள்ளன.இவற்றைக் கண்டவுடன் நம் முன்னோர்கள் மீது மரியாதையும், நாம் வாழும் தேசம் குறித்து பெருமிதமும் ஏற்படுவது திண்ணம்.
                 சுமார் 52 கி.மீ தொலைவில் உள்ள இரும்புக்கோட்டை என்று அழைக்கப்படும் லோஹ்ஹார் கோட்டைப் பயணமானோம். சிகரம் வைத்தாற் போல பாங்குடன் திகழ்ந்த இந்தக் கோட்டையை அடைய சிறிது சிரமாயிருந்தது. கீழே வந்து கொண்டிருந்த ஒருவரிடம் கேட்ட போது பட்ட கஷ்டம் மேலே உள்ள காட்சி(view)யைக் கண்டவுடன் மறந்துவிடும் என்றார். உண்மை தான். என்னை அறியாமல் 'வாவ்' என்றேன் நான். குரு கோவிந்த் சிங்கினால் கட்டப்பட்ட இக்கோட்டை அதிக வருடங்கள் மராட்டிய அரசுகளின் வசமே இருந்தது. ஐந்து வருடங்கள் முகலாயர்கள் வசம் இருந்ததாகவும் பின் மாவீரன் சிவாஜி அதை மீட்டு தன்னுடைய கருவூலமாகப் பயன்படுத்தினான் என வரலாறு கூறுகிறது. 
                   மஹாராஷ்டிர உணவான வடாபாவ், போஹா, மிசெல் போன்றவை, அம்மாநிலப் பெண்களின் 
சேலை கட்டும் பாங்கு, ஆண்கள் பலர் காந்தி குல்லாய் அணிந்து வெண்ணிற உடைகளில் வலம் வந்தது என ஒவ்வொன்றையும் ரசித்தேன். தங்கியிருந்த ஹோட்டலில் அருகிலுள்ள வனப்பகுதிக்கு ஒரு நாள் காலையில் ட்ரெக்கிங்(trekking) அழைத்து சென்றார்கள். அப்போது மும்பையைச் சேர்ந்த என் வயதை ஒத்த இரு பெண்கள் தோழிகள் ஆகிவிட்டனர். நம் ஊரின் பில்டர் காபியின் சுவையையும் மணத்தையும் வானளாவப் புகழந்தனர். அவர்கள் கூறிய ஆச்சர்யமூட்டும் தகவல் ஒன்று. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு மும்பையிலிருந்து லோனாவாலாக்கு, அவர்களுடைய மாமா வீட்டுக்கு வரும் போது , இன்ஜின் டிரைவரிடம் சொல்லி மாமா வீட்டின் எதிரிலேயே இறங்கிக் கொள்வார்களாம்( அவர்களுடைய மாமா வீடு இரயில் நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் இருந்தது). ஆச்சர்யத்துடன் அதிர்ந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்த என்னிடம் ., ஆனால் திரும்பி மும்பை செல்ல இரயில் நிலையம் தான் செல்ல வேண்டும் என்றார்கள் சிரிப்பினூடே.
                லோனாவாலாவும் அதனைச் சுற்றி அமைந்த இடங்களும் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட இடங்கள் என்றே கூற வேண்டும். மழைக்காலங்களில் அதன் அறியப்படாத பேரழகு பன்மடங்காகின்றது. கட்டாயம் பார்த்து மகிழ் வேண்டிய இடங்களில் ஒன்று.