Monday, January 11, 2016

நோட்டம்

தெருக்கோடியில் நின்று டீ குடித்தவாறு நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர் காசியும், கபாலியும். அந்த தெருவில் எதிரும் புதிருமாக மொத்தம் இருபது வீடுகள். சைக்கிளில் இரு முறை சுற்றி வந்தனர்.
          இருபது வீடுகளில் ஆறு வீடுகளில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்கின்றனர். குழந்தைக் இல்லை. இருந்தாலும் பள்ளிக்கு சென்று விடுகின்றனர். இவர்களது வீடுகள் பகலில் பூட்டியே இருக்கும். மாலையில் ஆறு மணிக்கு மேல் வீடு திரும்புகின்றனர்.
           நான்கு வீடுகளில் மிகப் பெரிய குடும்பங்கள் வசிக்கின்றன. கூட்டுக்குடும்பம். வீடு ஜே..ஜே என்று இருக்கும்.எப்போதும் திறந்தே கிடக்கும் இந்த வீடுகளில் ஆட்கள் வருவதும் போவதுமாக இருக்கும். உள்ளே நுழைந்து விடலாம்., ஆனால் யார் கண்ணிலாவது பட்டு விடும் அபாயம் உள்ளது.
           இரண்டு வீடுகளில் வயதான பெரியவர்கள் கணவன் மனைவி மட்டும் தனியாக வாழ்கின்றனர். அவர்களின் வீட்டில் எந்நேரமும் டிவி அலறும். காலிங் பெல் அடித்தால் கூட கேட்காது. அப்படியே கேட்டாலும் கால் மணி நேரம் கழித்து தான் வந்து கதவைத் திறப்பார்கள். 
            ஒரு வீட்டில் காலேஜ் ஸ்டூடெண்ட்ஸ் ஐந்தாறு பேர் சேர்ந்து தங்கியுள்ளனர். இரவெல்லாம் லைட் எரியும். பேச்சும் கும்மாளமுமாய் இருக்கும். சிரிப்புச் சத்தம் எந்நேரமும் கேட்கும். 
            இப்படி ஒவ்வொரு வீடாக நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர் கபாலியும், காசியும். யாருக்கும் அவர்கள் மீது சந்தேகம் வரவில்லை. இரவில் மாரி அண்ணனிடம் சொல்லி காரியத்தை முடித்து விட்டு காசு வாங்கிக் கொள்ளலாம் என்று பேசியவாறு அங்கிருந்து அகன்றனர்.
            ஏழு மணி இருக்கும். மாரி வீட்டு வாசலில் போய் இருவரும் நின்றனர்." அண்ணே... அந்தத் தெருவில் மொத்தம் முப்பது ஓட்டு இருக்குண்ணே.. எல்லோருக்கும் ரூபா கொடுத்து மடக்கிறலாம். ஆனா அந்த தாத்தா பாட்டி இருக்கிற வீடு மட்டும் வேண்டாம்..அவர் கம்பெயிண்ட் எழுதிப் போட்ருவாரு..." என்றபடியே தலையை சொறிந்தனர்.
         கவுன்சிலர் மாரி நான்கு நூறு ரூபாய்களை நீட்டி," சரி.. சரி.. நாளைக்கு இன்னும் இரண்டு தெருக்களை நோட்டம் விடுங்கடா.." என்றான்.
     " சரிண்ணே..." என்றபடியே 'டாஸ்மாக்' நோக்கி சிட்டாகப் பறந்தனர் இருவரும்.

No comments:

Post a Comment