Saturday, January 30, 2016

ராஜாவை சந்திப்போம்.


வீட்டு சாப்பாடு சாப்பிட்டு போரடித்துப் போய்விட்டால் ஒரு நாள் ஹோட்டலில் சாப்பிடுவோம். மிகவும் ருசியாகத் தெரியும். அது போலத்தான், நம் நண்பர்கள், உறவினர்கள் சொல்லும் ஜோக்ஸ், பேசும் பேச்சு எல்லாம் திடீரென்று போரடிக்கும். அப்போது நாம் புதிதாக சந்திக்கும் ஒரு நபர், அதுவும் உற்சாகம் மிக்கவராகவும் இருந்தால், அவரது பேச்சு சுவாரஸ்யமாய்த் தெரியும்.
      என் எதிர் வீட்டில் இருக்கும் ராஜா சிட்டி பேங்க்வில் வேலை செய்கிறார். எம்பிஏ படித்தவர். வேளச்சேரியில் குடியிருக்கிறார். இப்போது காலில் அடிபட்டு அம்மா வீட்டில்(ராயபுரம்) வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.  வயதான அம்மாவைத் தவிர அவருடன் பேசுவதற்கு எவருமில்லை. வாய் ஓயாமல் பேசும் வழக்கம் உள்ள அவருக்கு அது மிகவும் கடினம். பொழுதை எப்படி ஒப்பேத்துவது என்று வாசலையே பார்த்துக் கொண்டிருக்கும் ராஜா, நான் எப்போதாவது வெளியில் தென்பட்டால்," ஆண்ட்டி.."என்று அழைத்து பேச ஆரம்பித்து விடுவார்.
        ராஜாவுக்கு நல்ல நகைச்சுவை உணர்ச்சி உண்டு. காலில் எப்படி அடிபட்டது என்பதை விலாவரியாக விவரிப்பார். அது ஏதோ ஸ்விட்ச் போட்டு ஒப்பிப்பது போலவே இருக்கும். ஏன் இப்படி என்று கேட்டேன். " இல்ல.. ஆண்ட்டி, தப்பு என் பேர்ல இல்ல. எதிர்பாராம ஒருத்தன் வந்து மோதிட்டான். இதை என்னைப்பார்க்க வர்ற ஒவ்வொருத்தர்ட்டயும் சொல்லி சொல்லி மனப்பாடம் ஆயிடுச்சு. அதான் ஸ்கூல்ல திருக்குறள் ஒப்பிக்கிற மாதிரி யாராவது கேட்டா மடமடன்னு கொட்டுது," என்பார். மேலும், "ஆனாலும் ஆண்ட்டி.. என்னைப் பார்க்க வர்றவங்க எனக்கு சாப்பிட ஏதாவது (ஆப்பிள், ஆரஞ்சு, ஹார்லிக்ஸ்) வாங்கிட்டு வர்றாங்களோ இல்லையோ, வண்டி வண்டியா அட்வைஸ் தர்ராங்க," என்பார்.
      " ஹெல்மெட் போட்டுக்கணும். வண்டியை இன்ஸ்யுர் பண்ணிக்கணும். இது போன்ற அட்வைஸ்களை தாங்கிக்குவேன். ஆனால் வெளியே கிளம்பும் போது சகுனம் பார்த்து கிளம்பணும். பிள்ளையார் கோயில்ல தேங்காய் உடைக்கணும். இது போன்ற ஐடியாக்களைத்தான் என்னால் தாங்க முடியலை. கண் திருஷ்டி அதிகமாக இருக்கும். இந்த இருபத்தெட்டு வயது குழந்தையை யார் ஆண்ட்டி கண் வைப்பார்கள்?," என்று முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு கேட்பார்.
          "அதுக்காக ஆளாளுக்கு ஒரு ஐடியா சொன்னார்கள். அதன்படி எங்க வீட்டு பாத்ரூம் சரியில்லையாம். இடிச்சு மாத்தி கட்ட சொல்றாங்க. என் காலில் அடிபட்டதற்கும் என் வீட்டு பாத்ரூமிற்கும் என்ன சம்பந்தம்? வாஸ்து பகவானுக்கே வெளிச்சம்..இன்னொருத்தர் வந்து ' வாஸ்து எல்லாம் வேஸ்ட்பா.. சூப்பர் வாஸ்து பார். அதுதான் பெஸ்ட்' என்றார்."
            அவர்கள் வீட்டு வாசலில் இப்போது புதிது புதிதாக நான்கைந்து கலர் கயிறு கல், பச்சைமிளகாய், எலுமிச்சை என்று தோரணங்கள் தொங்குகின்றன. வீட்டு வாசலில் காலையில் ஐந்து அகல்கள், மாலையில் ஐந்து என்று பெரியம்மா ஏற்றுகிறார்கள். ஏதோ ஐயர் சொன்னாராம். கதவருகில் எரியும் அவற்றைப் பார்த்து எனக்கு தான் பகீரென்று இருக்கும். ராஜாவைப் பார்க்க தினமும் பத்து பேராவது வருகிறார்கள். அவர்களுடன் குழந்தைகளும் வருகிறார்கள். அவர்கள் எங்கே அதை தட்டி விட்டு விடுவார்களோ என்று எனக்குப் பதறும். என் வீட்டு வாசலில் இருந்து அவர்கள் வீட்டு வாயிற்கதவுக்குப் பாதுகாப்பாய் பார்த்துக் கொண்டே இருப்பேன்.
              அதையெல்லாம் விட்டுவிடுவோம். ஒவ்வொருத்தரின் நம்பிக்கை. ராஜா தன்னுடைய வேலையைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். அவர் கலெக்ஷன் டிபார்ட்மெண்ட். லோன் வாங்கி விடுவார்கள். ஆனால் ட்யு கட்டாமல் எப்படியெல்லாம் பொதுமக்கள் டிமிக்கி கொடுப்பார்கள், அவர்களிடம் எப்படியெல்லாம் ஜகஜ்ஜால கில்லாடி வேலை செய்து அதை வசூலிப்பர் என்று விவரித்துக் கொண்டிருந்தார்.
                 தான் இருக்கும் வாடகை வீட்டை( இப்போது தான் fully furnished apartment வாடகைக்கு கிடைக்கிறதே!) தன் சொந்த வீடு என்று காட்டி கடன் வாங்குவார்களாம். இவர்களும் டிவி, ஃபிரிட்ஜ், கட்டில், சோபா என்று கனகச்சிதமாய் இருக்கும் வீட்டைப் பார்த்து நம்பி கடன் கொடுப்பார்களாம். ஆனால் அந்த நபருடைய பொருட்கள் என்னவோ ஒரு சூட்கேஸுக்குள் அடங்குவது தானாம். திடீரென்று ஒரு நாள் காணாமல் போய் விடுவாராம். காலையில் போனாலும் பார்க்க முடியாது. மாலையில் போனாலும் பார்க்க முடியாது. நாங்கள் வருகிறோம் என்று எப்படித் தெரிகிறது என்று தெரியவில்லை. ' இப்போ தான் இங்கே இருந்தார். அதற்குள் எங்கே போயிட்டார்' என்று அண்டை வீட்டில் சொல்வார்களாம்.
                   நாங்கள் வருவதை எப்படித்தான் மோப்பம் பிடிப்பார்களோ தெரியவில்லை என அங்கலாய்த்தார் ராஜா. இப்படித்தான் ஏமாற்றிக் கொண்டிருந்த ஒருவரிடம் சாமர்த்தியமாகப் பேசி அவருடைய பான் கார்ட்ஐ வாங்கி, நம்பரை நோட் செய்து, அவருடைய IT Returns செக் செய்து , அவருடைய வீடு சொந்த வீடு இல்லை என்று கண்டுபிடித்தார்களாம். பெண்களும் இப்படி செய்வதுண்டாம்.லோன் வாங்கிய பின் ஐடி துறையில் பணியாற்றிய பெண் இன்ஸ்டால்மெண்ட் கட்டாமல் யுஎஸ் பறந்து விட்டாளாம். என்ன செய்வது, வரும் வரை காத்திருக்க வேண்டியது தான் என்றார் சோகமாக.
                 இவை அனைத்தையும் விட சுவாரசியமாய் ஒன்றைச் சொன்னார். இவர்கள் இரண்டு பேர் சேர்ந்தது ஒரு டீம். கொஞ்ச நாட்களாய் போய் அவரிடம் வசூலிக்க முடியாமல் திரும்பி வந்து கொண்டே இருந்தனராம். கஸ்டமர் இரண்டு நாட்களில் தருகிறேன் என்று மீண்டும் மீண்டும் உறுதியளித்து ஏமாற்றி வந்தாராம். கால்வலிக்க நடந்தது தான் மிச்சம். ஒரு மாதமாகியும் பணம் வசூலாகவில்லை. ' நான் இறங்குகிறேன்', என்று களத்தில் இறங்கினார் ராஜா. புதியதாய் ஒருவரை  உள்ளே அனுப்பிவிட்டு இவர்கள் இருவரும் வீட்டின் அருகே மறைந்து நின்று கொண்டனராம். புதிதாய் வந்தவரிடம் அந்த நபர் தான் அவரில்லை என்று கூறிவிட்டு அவசரமாக அங்கிருந்து கிளம்பினராம். அதற்குள் அவர் இங்குதான் இருக்கிறார் என்று தொலைபேசி மூலம் இவர்களுக்கு தகவல் அனுப்பிவிட்டாராம். இவர்கள் காத்திருந்து அவர் அவசரமாக வெளியேறும் போது பாய்ந்து பிடித்தார்களாம். திரைப்படங்களில் வருவது போல் திரில்லிங் காக இருந்தது என்றார் ராஜா. கொசுறாக ஒரு தகவல் கூறினார். 'இந்த முறை பணத்தை வசூலிக்கவில்லையென்றால், உன் சம்பளத்தில் பிடிப்பேன்,' என்று மேனேஜர் ராஜாவை எச்சரித்திருந்தாராம். அதனால் தான் இந்தப் பாய்ச்சல்.
            இப்படி ராஜாவிடம் பேசிக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. சரி, இப்போது எனக்கு வேலை இருக்கிறது... இன்னொரு முறை இன்னொரு சுவாரஸ்யமான நபருடன் உங்களை சந்திக்கின்றேன்..பை..பை.

No comments:

Post a Comment