ஒவ்வொரு மனிதனுக்கும் மகிழ்ச்சி என்பது அவனுடைய வீட்டின் மையத்திலிருந்தே ஆரம்பிக்கின்றது. எங்கு சென்றாலும் வீடு திரும்பும் போது ஏற்படும் உற்சாகம் அளவில்லாத து. மகிழ்ச்சியோ கோபமோ விருப்பமோ நாம் எந்த மனநிலையில் இருந்தாலும் ,வீடு நம்மை உள்ளபடியே ஏற்றுக்கொள்ளும். அத்தகைய வீடு சொந்தமோ அல்லது வாடகையோ நமது மனதிற்குப் பிடித்த வித த்தில் அமைய வேண்டும் என்று அனைவரும் எதிர்ப்பார்ப்பது இயல்பு. பெரும்பாலோர் கட்டுமானத்தின் தரத்தை மனதில் கொண்டு கட்டிடம் வளரும் நிலையில் அதிகம் தலையிடுவதில்லை என்றாலும் வண்ணம் பூச வேண்டிய நிலை வந்தவுடன் தங்களின் ரசனைக்கேற்ப வண்ணம் பூச வேண்டும் என்பதில் தெளிவாய் உள்ளனர்.
வீடு தரமானதாகவும், உறுதியானதாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் அதன் உட்புறம் மற்றும் வெளிப்புறம் அழகிய வண்ணங்களால் நமது மனதைக் கொள்ளை கொள்வதாகவும் திகழ வேண்டும். பச்சை, மஞ்சள், நீலம், ஆரஞ்சு, சிவப்பு என்று பல நூறு வண்ணங்கள் இருந்தாலும் வீடுகளை அழகுபடுத்தும் வண்ணங்கள் காலத்திற்கேற்ப ரசனைக்கேற்ப மாறி வருகிறது. கட்டி முடித்த வீட்டில் வண்ணம் பூசவது என்பது ஒரு முறையிலும், பழைய வீட்டில் வண்ணம் பூசுவது என்பது மற்றொரு முறையிலும் இருக்கும். கட்டுமான செலவில் ஒரு குறிப்பிட்ட தொகை, அதாவது 8 முதல் 12 சதவீதம் வரை வண்ணம் பூசுவதற்கு ஆகும் என்பது நிபுணர்களின் கருத்து.
உரிய முறையில் வண்ணம் பூசாவிடில் வீட்டின் அழகு கெடுவதுடன் நமது பணமும் வீணாகும். சில சமயங்களில் வீட்டின் கட்டுமானத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்திவிடும். எனவே வண்ணம் பூசவதில் கவனம் தேவை. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையேனும் வீடுகளுக்கு வண்ணம் பூசுவது நல்லது. மேற்பாகத்தில் சிறுசிறு விரிசல்கள் ஏற்பட்டாலும், அவற்றில் காற்று புகாமல் தடுத்து, விரிசல் அதிகரித்து வீடுகளுக்கு சேதம் ஏற்படுவதை தடுக்கும் தன்மை 'பெயிண்ட்' களுக்கு உண்டு.
வண்ணம் அடித்தல் என்பது.. வீட்டின் சுற்றுச்சுவர்கள், வெளிப்புற சுவர்கள், உட்புற சுவர்கள், சீலிங் என்னும் கூரை, கதவுகள், ஜன்னல்கள் மற்றும் ஜன்னல் கம்பிகள், மர சாமான்கள் மற்றும் தோட்டம் அமைந்தால் அதன் அலங்கார விளக்குகள் மற்றும் நாற்காலிகள் ..என்று இவை அனைத்திற்கும் தேவையாகும்.
சுற்றுச்சுவர் என்பது மிகவும் இன்றியமையாத து. வீட்டின் அழகை எடுத்தியம்பும் சுற்றுச்சுவர்களுக்கு வண்ணம் பூசுவதில் கவனம் கொள்ள வேண்டும். நீண்ட காலம் மழையிலும் வெயிலிலும் நீடித்திருக்கும் வண்ணங்களைப் பூச வேண்டும். அதே போல வீட்டின் வெளிப்புற சுவர்களும் காற்று, மழை, வெயில், கடல் காற்று என அனைத்தையும் தாங்கி நீண்ட நாள் நிலைத்திருக்கும் வண்ணம் அமைய வேண்டும் . அவ்வாறான பிரத்யேகத் தயாரிப்புகள் அனைத்து இடங்களிலும் கிடைக்கின்றன. இப்போதெல்லாம் பளிச்சென்ற வண்ணங்களிலே பல வீடுகள் பளபளக்கின்றன. மிகவும் மென்மையான வண்ணத்தை பூசும் போது அவை எளிதில் நிறமிழந்து விடும். அதனாலேயே பளீர் வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் அந்த வண்ணத்தின் வெப்பத்தை கிரகித்து வெளியிடும் தன்மையையும் மனதில் கொண்டு வண்ணத்தை தேர்ந்தெடுப்பது நல்லது. அடர்த்தி வண்ணம் அதிகமான வெப்பத்தை உள்வாங்கி வைத்துக் கொள்ளும் பட்சத்தில் சிறுது மென்மையான வண்ணத்தைப் பூசலாம்.
வீட்டினுள்ளே வண்ணம் பூசும் போது அது வரவேற்பறையா, சமையலறையா, படுக்கையறையா அல்லது பூஜையறையா என்பதை கவனத்தில் கொண்டு வண்ணத்தைத் தீர்மானிக்கலாம். மேலும் அறையின் நீள அகலத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். சிறிய ஜன்னல்கள், தாழ்வான கூரை போன்றவை அறைகளை சிறியதாக காட்டக்கூடும். இதனைப் போக்கும் விதமாக வெளிர் நீலம், சாம்பல் நிறம் போன்றவற்றை பூசலாம். பளிச்சென்ற தோற்றம் வேண்டுமெனில் மஞ்சள் நிறம் பூசலாம். நீண்ட சுவர்களுக்கு வெளிர் நிறங்களும், அதனை ஒட்டி வரும் சிறிய சுவர்களுக்கு முரண்பாடான வண்ணங்களைப் பூசினால் அறை பெரிதாகத்தெரியும். சமயங்களில் தொனி திட்ட (tonal scheme)அடிப்படையில் அறைகளுக்கு ஒத்த வண்ணங்களை மேலே பாதியும் கீழே பாதியும் அடிக்கலாம். அதன் பின் கவனமாக திரைச்சீலைகளையும் ' பர்னிச்சர்' என்னும் மரசாமான்களை அதே நிறங்களை ஒட்டி தேர்வு செய்தால் அறைகள் அழகுறும்.
வண்ணம் பூசவது என்பது வெளிர் நிறங்கள், அடர்நிறங்கள், முரண்பாடான நிறங்கள் என்ற நிலையிலிருந்து மாறி தற்போது ' டெக்ஸசர்(textured)' மற்றும் ' வால் பட்டர்ன்(wall pattern)' என்று சந்தையில் வண்ணங்கள் கிடைக்கின்றன். இதனைக் கம்பெனிகளைச் சார்ந்த பயிற்சி பெற்ற வல்லுனர்கள் பூசுவர். இதற்கான உபகரணங்களை அவர்களே கொண்டு வருகின்றனர். ஒரு பக்க சுவருக்கு அல்லது அறையெங்கும் இது போன்ற டிசைன்களில் வண்ணம் பூசிகின்றனர். சிலர் அழுக்குறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பளப்பளப்பான வண்ணங்களைப்(glossy paint) பூசுகின்றனர். இது பூசப்பட்ட சுவர்களை சுத்தப்படுத்துவது எளிது.
குழந்தைகளின் அறைகளுக்கு சிலர் கார்ட்டூன் தீட்டுகின்றனர். இப்போதெல்லாம் பள்ளிகளிலும், மருத்துவமனைகளிலும் இது போன்ற கார்ட்டூன்கள் இடம் பெறுகின்றன. இணையத்தில் இணைந்திருந்தால் புதுமையான யோசனைகள் பல கிட்டும். சமீப காலமாக செயலிகள்(app) மூலமும் வண்ணம் பூசுவதற்கான யோசனைகளைப் பெற முடிகின்றது. கதவுக்களுக்கு மற்றும் மரச்சாமானகளுக்கு பாலிஷ் போட்டாற் போன்ற பெயிண்ட் களும் கிடைக்கின்றன. சமையலறைகளில் அலமாரிகளுக்கு வண்ணமயமான வண்ணங்களைப் பூசலாம். புதுமையாக இருக்க வேண்டுமெனில் அலமாரியின் வெளியே ஒரு வண்ணமும் உள்ளே ஒரு வண்ணமும் பூசலாம். தோட்டம் அமைத்தோமெனில் அங்கு அமைக்கும் நாற்காலிகளுக்கும், அலங்கார விளக்குகளுக்கும் அழகிய வண்ணங்களைப் பூசலாம். குழந்தைகள் உள்ள வீட்டில் ஏதேனும் ஒரு சுவற்றில் கரும்பலகைக்குரிய வண்ணம் பூசலாம். இதனால் குழந்தைகள் சுவற்றில் கிறுக்குவதைத் தவிர்த்து கரும்பலகையில் எழுதி மகிழ்வர். கட்டிடத்தின் கூரையைப் பொறுத்த வரை வெள்ளையையே அனைவரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் சில இடங்களில் பிற வண்ணங்களையும் இப்போது சிலர் பயன்படுத்துகின்றனர்.
வீட்டினை அழகு படுத்தும் வண்ணங்கள் பற்றி தெளிவான பதிவாக இருக்கிறது முரு!அட படங்கள் தேர்வு செய்ததும் அருமை
ReplyDelete