Saturday, January 9, 2016

இலவசம் அல்ல...


"என்னப்பா இன்றைக்கு கீரை என்ன விலை?"
" இன்றைக்கு விலை ஜாஸ்திம்மா...ஏதோ லாரி ஸ்டிரைக்காம்.. கீரைக்கட்டு வர்றதுக்கே இம்மாம் நேரமாயிருச்சு..கொஞ்சமா வேற இருக்கு.. லேட்டாயிடுச்சு..இன்னும் நாலைஞ்சு தெரு போனா தான் முழுசையும் விக்க முடியும்..." என்று அங்கலாய்த்தான் கன்னையன்.
ஆனந்தி அவனிடம் தினமும் கீரை வாங்குவாள். கள்ளமில்லாமல் வெகுளியாய்ப் பேசும் அவனுடைய இயல்பு அவளுக்கு மிகவும் பிடிக்கும். அவனிடம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். எல்லாவற்றிற்கும் அவனிடம் ஒரு விளக்கம் இருக்கும். இது போன்ற எளிய மக்கள் தான் உண்மையான அன்பு காட்டுபவர்கள் என்பது அவளது எண்ணம்.
அன்று அப்படித்தான் ..பேச்சுவாக்கில் சொன்னான்," இப்போ முன்னே மாதிரி இல்லை. ரொம்ப நேரம் நடக்க முடியலை. ஆனா நான் வியாபாரம் பண்ணலைன்னா வீட்டுக்கு பாரமாயிடுவேன்.." என்று வருந்தினான். அவனுடைய பிள்ளைகள் நல்ல வேலையிலிருந்தாலும் தான் சும்மா இருக்கக்கூடாது என்ற திடமான எண்ணத்தில் வேலை செய்து வருகிறான்.
மறுநாள் ஆனந்தி அவனுக்கு ஒரு சைக்கிள் வாங்கி வைத்துக் காத்திருந்தாள். " கன்னையா.. நீ இனி இதில் போகலாம் உனக்கு சுலபமாய் இருக்கும்." 
" இல்லீங்கம்மா.. உங்களுக்கு எதுக்கு வீண் சிரம்ம்! ??ஐயாவுக்கு இது தெரியுமா?? நீங்க இப்படி செலவு செய்தால் உங்களுக்கு கஷ்டமாயிரும்... நான் வாங்கினால் அது தப்பு..." என்று மறுத்தான்.
" கன்னையா ..நீ நினைப்பது போல் இது இலவசம் இல்லை. இந்தப் பணம் பழைய நாளிதழ்களைப் போட்டு நான் சிறுக சிறுக சேமித்த பணம்.. இதை நீ வாங்கிக்கொண்டுஎனக்கு இலவசமாய் காய்கறிகள் கொடுத்து கடனை அடைக்கலாம். எனக்கு இதனால் லாபம் தான். கொஞ்ச நாட்களுக்கு இலவசமாய் காய்கறி கிடைக்குமல்லவா??!!" என்று புன்னகைத்தாள்.
கன்னையனுக்கு கண்களில் நீர் தளும்பிற்று." ஆனா.. நீ பேரம் பேசக்கூடாது.." என்று சிரித்துக்கொண்டே கூறியபடி சைக்கிளைப் பெற்றுக்கொண்டான்.

3 comments: