குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஒன்றை அமல்படுத்த அரசு முடிவு செய்தது. அதன் செயல்திட்டமும் வழிகாட்டுதலும், நடைமுறைப்படுத்தலும் என்ன லட்சணத்தில் உள்ளது என்பதைப் பாருங்கள்.ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையான கோயம்பேட்டில் நாள்தோறும் நூறு டன் வரை காய்கறி, பழங்கள், பூ அகற்றப்படுகின்றன. விழா மற்றும் பண்டிகைக் காலங்களில் இந்த கழிவின் அளவு மூன்றிலிருந்து நான்கு மடங்கு வரை அதிகரிக்கும். அந்த திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்று 2006ஆம் ஆண்டில் சுமார் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் திட்டம் தொடங்கப்பட்டது.
திடக்கழிவுகளை இயந்திரங்களில் இட்டு அதிலிருந்து உருவாகும் மீத்தேன் வாயுவை சுத்திகரித்து ஜெர்மானிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தினமும் 500 முதல் 1200 யுனிட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்ததாம்.
சரி, பாராட்ட வேண்டிய விஷயம் தானே! இதில் கோப ப்பட என்ன இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். இந்த இயந்திரத்தின் மூலம் 2500 யுனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய இயலுமாம். என்றாலும் பழுது ஏற்பட்டுவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு 300 முதல் 500 யுனிட் வரை மின்சார உற்பத்தி செய்து வந்தார்களாம். இது என்ன மாதிரியான ஒரு மனநிலை? ஒரு பொருளின் அதிகபட்ச வெளியீட்டை சீராக நிர்வகித்து அதனால் பயனடைவது தானே புத்திசாலித்தனம். அதை விடுத்து அது பழுதாகிவிடும் என்று அதன் திறனில் கால பங்கு வெளியீட்டைக் கூட பெறாமல் இருப்பதை என்னவென்று கூறுவது?? இதைப் படித்தவுடன் ஒரு சிறிய புள்ளிவிவரம் எனக்கு நினைவுக்கு வந்தது. மக்கள்தொகையின் 3 சதவீத்த்தினரே விவசாயம் செய்யும் அமெரிக்கா ,65 சதவிகித விவசாயிகளைக் கொண்ட நமக்கு உணவுப் பொருளை ஏற்றுமதி செய்கிறது. எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை உதாரணத்திற்கு இழுக்கும் நாம் குறைந்த உள்ளீட்டில் நிறைந்த வெளியீட்டை வெளிக்கொணரும் பாடத்தை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் நாம் செய்வதென்னவோ எதிர்ப்பார்க்கப்படும் வெளியீடுகளை விட கம்மியாக தயாரித்தாலும் அதிலேயே திருப்தி அடைந்து விடுவது தான்.
அதை விடுவோம், அடுத்ததற்கு வருவோம்.. அந்த இயந்திரத்தில் காயகறிக்கழிவுகளை தரம் பிரித்து போட வேண்டுமாம். இல்லையென்றால் மீத்தேன் வாயுவுடன் சேர்ந்த பிற வாயுக்களும் வெளியேறி இயந்திரம் பழுதாகிவிடும் விடுமாம். இவ்வாறு கவனமாக கையாளப்பட வேண்டிய ஒரு செயல் மெத்தனமாக, தரம் பிரித்து கையாளப்படாமல், இயந்திரத்தில் அடிக்கடி பழுது ஏற்படுகிறதாம். என்ன ஒரு அஜாக்கிரதை??
2011 -2014 வரை மின் உற்பத்தி நடைபெறவில்லை. சரி, இதோடு விட்டதா!? 2014 ஆம் ஆண்டு செக் குடியரசு நாட்டிலிருந்து புதிய கருவி வரவழைத்து மீண்டும் தொடங்கப்பட்டது. எல்லாம் சில நாட்களுக்குத்தான் . இய்நதிரம் மீண்டும் பழுதுபட்டது. இப்போது ஏழெட்டு மாதங்களாக இயந்திரம் பழுது பார்க்கப்படவில்லை. ஆகையால் 5கோடியே50லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட திட்டம் இப்போது தூங்குகிறது. கிராம்ப்புறங்களில் இப்படி யாராவது பணத்தை வெட்டியாக செலவழித்தால்,' உங்கப்பன் வீட்டு காசா??? அவனா கொடுப்பான்??' என்று கோப்ப்படுவார்கள்.
சரியான வழிகாட்டுதலும், பராமரிப்பும் இல்லாத தால் தொடர்ச்சியாக மின்சாரம் தயாரிக்க இயலவில்லை என்பது தெளிவு. இப்படித்தான் அரசு தான்தோன்றித்தனமாக, கண்மூடித்தனமாக தன் பணத்தை செலவு செய்கிறது. மக்களின் வரிப்பணத்தை இவ்வாறு சூறையிடுவதை என்னவென்று கூறுவது?
சுற்றுச்சூழல் பேண, நலிந்த மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட, சுகாதார சீர்கேட்டை தவிர்க்க என்று அரசு பல திட்டங்களைத்தீட்டுகிறது. தீட்டி அதற்கான நிதி ஒதுக்குவதில் இருக்கும் தீவிரம் அதை செயல் படுத்தும் போது காணாமல் போய்விடுகிறது. ஏட்டளவில் இருக்கும் திட்டங்களில் எப்படி பலனை எதிர்பார்க்க முடியும் ? அரசு கூறும் புள்ளி விவரங்கள்- எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டது என்ற செவிவழி கருத்துக்களுடன் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்.
சில சமயங்களில் அரசு பொதுமக்களுக்காக வகுக்கும் திட்டங்கள் குறித்து சரியான புரிதல் இல்லை என்பது கண்கூடு. பொது விநியோகத்தின் கீழ் வழங்கப்படும் இலவச அரிசி முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்ற கேட்கப்பட்டால் ,இல்லை என்று நூறு சதவீதம் உறுதிபட கூற முடியும். தெரு வோர சிற்றுண்டிக் கடைகளும் ,சிறிய உணவு விடுதிகளுமே இதனால் லாபம் அடைகின்றன. எதையுமே இலவசமாகப் பெற்றால் அதன் அருமை அவர்களுக்குத் தெரியாது. அதே போல் இலவசமாக்க் கொடுக்கும் பொருள்களின் தரத்தில் கொடுப்பவர் சமரசம் செய்து கொள்வார்.இதை மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
வண்ணத்தொலைக்காட்சிப்பெட்டி, எரிவாயு இணைப்பு அடுப்பு, மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், மடிக்கணினி, சைக்கிள், சேலை, வேட்டி என்று அரசு வழங்கும் இலவசப் பொருட்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இலவசங்களைப் பெற்றுக் கொள்ள கை கூசும், மனம் வெட்கப்படும் என்று சிறிய வயது கதைகள் மற்றும் பாடங்களில் படித்த ஞாபகம். ஆனால் இன்றைய மனநிலை என்ன? " கப்பல்ல பொண்ணு ஓசியில வருதா?? அப்ப.. எனக்கொண்ணு., எங்கப்பனுக்கு ஒண்ணு..." என்ற கதை தான். இது போன்ற இலவசங்கள் எல்லாம் ஆட்சியில் அமர்ந்து மக்களின் வரிப்பணத்தை நாங்கள் வீண்டிப்பதை நீங்கள் கண்டுகொள்ளக்கூடாது என்ற சூசக அறிவிப்புக்கு கொடுக்கப்படும் கையூட்டு போலும்.
இலவசங்கள் வேண்டாம்., ஆட்சியிலிருப்பவர்களும் சரி, அரசு ஊழியர்களும் சரி த த்தமது கடமைகளை செவ்வனே ஆற்றினால் போதும் என்று மக்கள் அறிவிக்கும் காலம் என்று வருமோ அன்று தான் ஏழை எளிய மக்களின் வாழ்வு மேம்பாடு அடையும். அது வரை நாளிதழ்களை வாசித்து பிபி எகிறி ,எதிர்படுபவர்களிடம் நாட்டு நடப்பைப் பற்றி புலம்பி ஆயாசமடைவதைத் தவிர வேறு வழியில்லை.
No comments:
Post a Comment