Saturday, January 30, 2016

பந்தா

ஆடம்பர சொகுசுக் காரில் வந்திறங்கினார் முதலாளி.
தொழிலாளர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்." நமக்கெல்லாம் மூணு மாசமாக சம்பள பாக்கி. நாலு வருசமா இன்கிரிமெண்ட் போடவே இல்லை! ஒரு அவசரத்துக்கு கடன் கேட்டால் கூட ' கஜானா காலி'னு கேஷியர் விரிக்கிறாரு. இன்னிக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டியே தீரணும். வாங்கப்பா...அவர்ட்ட பேசிட்டு வரலாம்," என்று மொத்தமாக அவரின் அறைக்குள் நுழைய முற்பட்டனர்.
ஆடிட்டரும் அவரும் பேசிக் கொண்டிருந்தனர். அவர் பேசி முடித்த பின் உள்ளே போகலாம் என்று வெளியே காத்திருந்தனர். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தது அனைவருக்கும் தெளிவாக்க் கேட்டது.
" என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் சப்ளை பண்ற கம்பெனியின் ஷிப்மெண்ட் லாஸ் ஆகிவிட்டது. அதனால் அவர்கள் எனக்கு பேமெண்ட் தராமல் இழுத்தடிக்கிறார்கள். அதற்காக என் தொழிலாளர்களை நான் வஞ்சிக்கலாமா? அவர்களுக்கு நேரத்திற்கு சம்பளத்தை அளிக்காத து என் மனதை வருத்துகிறது. அவர்களுக்கும் ஆயிரம் ஜோலி இருக்குமே!! பேசாமல் ஒரு வாரம் லீவ் விட்ரலாமா என்று யோசிக்கிறேன்," என்றார் மிகவும் வருத்தத்துடன்.
காத்திருந்த அனைவரும் அதிர்ந்தனர். 'இவ்வளவு பிரியமா நம் மீது!! நம்முடைய கஷ்டத்தை நினைத்துப் பார்க்கும் அவரின் கஷ்டத்தை நாம் நினைத்துப் பார்க்கவில்லையே! ' என்று எண்ணியவாறே திரும்பினர். 
அதில் ஒருவன் ' வேலையைப் பாருங்கப்பா ...நல்லது நடக்கும்." என்றான்.
உள்ளே ஆடிட்டர் ," அப்படியெல்லாம் செய்ய வேண்டாம். நான் அந்தக் கம்பெனியில் பேசுகிறேன். உங்க தொழிலாளர்களிடம் நீங்கள் பேசுங்கள்..பார்க்கலாம்."என்றார்.
அனைவரும் நம்பிக்கையுடன் திரும்பினர்.

No comments:

Post a Comment