Tuesday, July 28, 2015

மகிழ்ச்சி பரவட்டும்

கத்தரிக்காயை இன்னொரு முறை அமுக்கிப் பார்த்தாலே சிடுசிடுக்கும் காய்கறிப்பெண், ஆட்டோவில் ஏறும் போதே இத்தனை லக்கேஜா என முணுமுணுக்கும் ஆட்டோக்கார ர்,  தினமும் சாம்பார்தானா என்று கோப ப்படும் குழந்தைகள் என்று திரும்பிய பக்கமெல்லாம் எள்ளலும் ஏச்சுகளும் சோர்வடைய செய்கின்றன.பழைய நினைவுகள் அடிக்கடி வந்து சோர்வை அதிகப்படுத்துகிறது. எங்கே தொலைத்தேன் எனது உற்சாகத்தை? துள்ளலும் துடிப்புமாய்த் திகழ்ந்த அந்த பழைய முருகேஸ்வரி எங்கே போனாள்? எனக்கே எனக்கென்று செலவிட சில மணித்துளிகள் கூட என்னிடம் இல்லையே.என் நேரம் அனைவராலும்
 பயன்படுத்தப்படுகிறதே. வீட்டில் சும்மா தானே இருக்கிறாய் என்று பாரங்கள் திணிக்கப்படுகின்றதே. இது போன்ற எண்ணங்கள் அடிக்கடி வந்து ஆயாசப் படுத்துகின்றன. 
              என்றாலும் தினந்தோறும் நான் சந்திக்கும் சில சுவாரசிய நபர்கள் தம்மைச் சுற்றி மகிழ்ச்சியைப் பரப்பி என்னுள்ளும் மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்துகின்றனர். சிரித்த முகம், செய்யும் வேலையை ஈடுபாட்டுடன் செய்தல், உற்சாகமூட்டும் பேச்சு என்று வலம்வரும் இவர்களை சந்தித்தால் மனதில் உற்சாகம் தானாகவே தொற்றிக்கொள்ளும். இப்படிப் பட்டவர்களை நாம் தேடிப்போகத்தேவையில்லை. தானாகவே நம்மிடம் வந்து பேசி நம்மை உற்சாகப்படுத்திவிடுவர்.
              ஒரு முறை கால் டாக்சி ஒன்றில் ஏறினேன். கால் டாக்சி டிரைவர்கள் பற்றி பலரும் பல விதமாக பேசிக் கொண்டிருக்க பயம் என்னைத் தொற்றிக்கொண்டது. பேசா மடந்தையாய் அமர்ந்திருந்தேன். ஆனால் அந்த டிரைவருக்கு அமைதியாய் இருப்பது பிடிக்கவில்லை. டூரிஸ்ட்கைடாக செயல்பட ஆரம்பித்தார். போரூரிலிருந்து ராயபுரம் வரும் வரை ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் சொல்லிக் கொண்டே வந்தார். எனக்கும் இப்போது ஆர்வம் பிறந்து விட்டது. ம் கொட்டிக்கொண்டே, கதை கேட்டுக்கொண்டே வந்தேன். DLFA பில்டிங், சிவாஜி கணேசன் வீடு, கல்யாண் ஜூவல்லர்ஸ், ஜெமினி ஃபிளை ஓவர், அமெரிக்கன் எம்பஸி என்று வழியில் வருவனவற்றையெல்லாம் சுவைபட விவரித்துக் கொண்டே வந்தார். இவற்றில் சில ஏற்கனவே நான் அறிந்தவை, சில எனக்குத்தெரியாதவை. தெரிந்தவற்றை ஏற்கனவே தெரியும் என்று கூறி அவருடைய flowவை நிறுத்த நான் விரும்பவில்லை. என் கணவரும் அவருடைய கதைகளை விரும்பிக் கேட்ட வண்ணம் வந்தார். எனினும் அவர் அமெரிக்கன் எம்பஸியைக் காட்டிய போது என்னவர் ரகசியத்தை உடைத்து விட்டார். " தெரியுங்க.. நாங்களும் இந்த ஊரு தான்.." என்று. அந்த டிரைவர் ஆச்சரியத்துடன்," உங்கப் பேச்சைப் பாத்து திருநெல்வேலி என்று நினைத்து விட்டேன் சார். ஊருக்கு புதுசு என்று நினைத்து தான் விபரம் சொன்னேன் சார்" என்றார். அனைவரும் சிரித்துக்கொண்டோம் . அதன் பின் அவர் மௌனமாகவே இருந்தார். இப்போது நாங்கள் அவரிடம் பேசிக்கொண்டே வந்தோம். சொந்த ஊர், மனைவி, குழந்தைகள் என்று கதை சுழன்றது. அந்த ஒரு மணி நேரத்தில் ஒரு நெருங்கிய நண்பருடன் உரையாடியதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. வீடு வந்து விட்டது. நாங்கள் இறங்கிக் கொண்டோம். என்றாலும் அவரிடம் இருந்த உற்சாகம் ஏற்கனவே என்னில் தொற்றியிருந்தது. 
                  மளிகைக்கடை அண்ணாச்சியும் அப்படித்தான். பேச்சுக் கொடுத்தால் பழைய கதை, நடப்பு வாழ்க்கை என்று அனைத்தையும் அலசுவார். சமயத்தில் சிந்துபாத் கதையின்    
 போக்கைப் பற்றி கூட அலசுவார் என்றால்  பார்த்துக் கொள்ளுங்களேன். தக்காளிப்பழம் மலிவாய் இருக்கிறது என்றால் அதிகமாய் ஒரு கிலோ போடுவார். ' அண்ணாச்சி .. தேவையில்லை. பிரிட்ஜில் இடமில்லை' என்றால் விடமாட்டார். ' அவ்ளோ பெரிய பங்களாவில் இந்த ஒரு கிலோ தக்காளிக்கு இடமில்லையாம்மா?' என்று உரிமையுடன் வாதிடுவார். தான் கடை போட்ட புதிதில் இந்த வீதியில் தன் கடையும் ' பாய்' கடை ஒன்றும் என இரண்டே இரண்டு கடைகள் மட்டும் இருந்ததாகவும், இப்போது வீதி முழுக்க கடைகள் இருப்பதைப் பற்றியும்
பேசுவார். குலத்தொழிலுக்கு முன் வராத பிள்ளைகள் மீது கோபமும், படித்துவிட்டு வேலை கிடைக்க வில்லை என்று பெற்றோருக்கு பாரமாய்த்திரியும் இளைஞர்கள் மீது வருத்தமும் அவர் பேச்சில் தெறிக்கும். ஜிலுஜிலுப்பு, மினுமினுப்பு ஆகியவற்றிற்கே இப்போது மவுசு என்பதை அண்ணாச்சி நன்கு அறிவார். சூப்பர் மார்க்கெட்டில் என்ன ரேட் வைத்தாலும் சத்தமில்லாமல் வாங்கிப் போகும் மக்கள் தன் கடையில் ' அண்ணாச்சி இவ்ளோ ரேட் ஆ?' என்று குறைபடுவதை வருத்தத்துடன் வெளியிடுவார். அண்ணாச்சியுடன் அளவளாவுதற்காகவே அவரது கடைக்கு செல்லும் நான்,' அதெப்படி நீங்கள் சூப்பர் மார்க்கெட்டை குறை சொல்லலாம்? அங்கு அது இருக்கு, இது இருக்கு, உங்களிடம் இதெல்லாம் இல்லை' என்று வம்பிழுப்பேன்.' நான் தனி ஆளும்மா..அங்கே எத்தனை பேர் வேலை பாக்கிறாங்க!! ஏசியில ஜிலு ஜிலுன்னு உக்காந்திருக்காங்க. இங்கே நான் தான் மானேஜர், பர்ச்சேஸ் மானேஜர், சேல்ஸ் மானேஜர் எல்லாம்.. இது ஒன் மேன் ஷோம்மா' என்று ஜோக்கடிப்பார். தன் கடையை விட்டுக்கொடுக்காமல்,' உனக்கு என்ன வேணும்னு சொல்லு, நான் வாங்கிக்கொண்டு வந்து தருகிறேன்' என்பார்.
               மோதலில் தொடங்கி சுவாரசியமாய் முடியும் சம்பவங்களும் உள்ளன. அப்படித்தான் அதிரடியாயப்பேசி வெறுப்பை சம்பாதித்து அறிமுகமானார் பூக்கடை வைத்திருக்கும் கனகாம்மா. அவரது கடையில் முதல் முறை நான் மல்லிகைப்பூவைத் தொட்டவுடன் அவருக்கு கோபம் வந்து விட்டது. ' வாங்கப் போறின்னா மட்டும் தொடு.. இல்லைன்னா தொடாதே' என்றார். எனக்கு சுருக்கென்றிருந்தது. பூவை வைத்து விட்டு கடையை விட்டு நகர யத்தனித்தேன். ஏற்கனவே அதிக சளியால் அவஸ்தைபட்டுக் கொண்டிருந்த கனகாம்மா இரும ஆரம்பித்தார். எனக்கு மனசு கேட்கவில்லை., கைப்பையிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்து,' உடம்பிற்கு முடியாத நேரம் கடை போடாதீங்க. பூ வாசமே இளைப்பை( wheezing) அதிகரிக்கும்' என்றேன். என்னுடைய இந்த செய்கையால் மனம் இளகி விட்டார். ' என்னை மன்னிச்சுக்கோம்மா. வீட்டில் யாராவது பாத்துகிட்டா நான் ஏன் இந்த வயசுல இந்த வேலை பாக்குறேன்? நான் ஏதோ முடியாத கோபத்துல பேசிட்டேன். உனக்கு என்ன பூ வேணுமோ எடுத்துக்கோ.' என்று கனிவுடன் பேசினார். அதன்பின் பூ வாங்கப் போகும்போதெல்லாம் தனி அக்கறையுடன்  பேசுவார். நான் வேண்டாம் வேண்டாம் என்றாலும் உரிமையாய் திரும்பு என்று கூறி  தலையில் பூ வைத்து விடுவார்.
               இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அன்பு உலகெங்கும் நீக்கமற கொட்டிக் கிடக்கின்றது. நாம் தான் அதனை அள்ளும் போது சில சமயம் காயமடைகிறோம். அவற்றை மனதில் ஏற்றாமல் நல்லனவற்றை மட்டுமே நினைத்து வாழ்வை இனிக்கச் செய்வோம். ஆக்கபூர்வமான சிந்தனைகளையும் நல்ல நினைவுகளை மட்டுமே மனதில் நிரப்பி வாழ்வில் ஒளி பெறுவோம்.