Sunday, November 30, 2014

வீட்டுத்தோட்டம்




சுற்றம்சூழ மிகப் பெரிய வீட்டில் வாழ்ந்து வந்தவள் நான். வீட்டைச் சுற்றி மிகப் பெரிய தோட்டம். எலுமிச்சை, தேங்காய், கறிவேப்பிலை, முருங்கைக்காய் போன்றவற்றை நான் கடையில் வாங்கியதே இல்லை.தேவை என்றால் ஓடிப்போய் பறித்து வந்து சமையல் செய்வேன். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வீட்டை சுற்றி சுற்றி வந்து ரசிப்பேன். அலங்காரமான செடிகள்-குரோட்டன்ஸ், ரோஸ், பூஞ்செடிகள்- மல்லி, கனகாம்பரம், மரங்கள்- வேம்பு, எலுமிச்சை, ஆரஞ்சு, பலா,நெல்லி, தென்னை, மா( இன்னும் காய்க்கவில்லை) என்று பல விதமான செடிகள், மரங்கள் வீட்டைச்சுற்றி வளர்த்து வருகிறேன். இவ்வளவு இருந்தும் என் மனதில் எப்போதும் ஒரு குறை உண்டு, இன்னும் கொஞ்சம் அதிகம் இடம் இருந்தால் இன்னும் அதிகமாக செடிகள் நடலாமே என்று. ஆனால் உள்ளதுக்கே மோசம் என்பது போல தொழில் நிமித்தமாக என் கணவர் சென்னை மாறி வந்தார். அபார்ட்மெண்டில் வாழ வேண்டிய சூழல் வந்தது. விசாலமான இடத்தில் பழகி வந்த எங்களுக்கு அபார்ட்மெண்ட் வாழ்க்கை சற்றே புதிதாய் இருந்தது. அனைத்தையும் பழகிக்கொண்ட என்னால் ஜீரணிக்க முடியாத்து செடிகள் வளர்க்க முடியாத்துதான். கான்க்ரீட் காட்டில் கொண்டு வந்து விட்டதைப் போல் உணர்ந்தேன். 
ரொம்பவும் யோசித்து பால்கனியில் பூஞ்செடிகள் வளர்க்கலாம் என்று என் கணவர் யோசனை கூறினார். உடனடியாக ஆறு மண் தொட்டிகள் வாங்கினேன். வளர்ப்பதற்கு இலகுவாக இருக்கட்டுமே என்று குரோட்டன்ஸ் வாங்கி நட்டேன். என்னுடைய பால்கனி தோட்டம் ரெடி. என்னதான் இருந்தாலும் தாவரப்பச்சை கண்ணுக்கு அளிக்கும் குளுமை இருக்கிறதே- அட டா! ஜன்னல் வழியே நின்று பால்கனி தோட்டத்தை பார்த்துப் பார்த்து ரசிப்பேன். எங்கள் வீட்டிற்கு யாராவது வந்தால் அவர்களிடம் அதைக் காட்டி சிறு குழந்தை போல் குதூகலிப்பேன். 
         இவ்வாறாக நான் குரோட்டன்ஸ்களுடன் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் என் தங்கை என்னை போனில் அழைத்து அவளது உறவினர் ஒருவர் மொட்டை மாடியில் தோட்டமே போட்டிருக்கிறார்கள், போய்ப்பாருங்கள் என்றாள். ஒரு நாள் நானும் சென்றேன், மொட்டை மாடியைப் பார்த்து அசந்து விட்டேன். அவர்களது மாடி என்பது சிறியது தான், இரண்டு அறைகளின் அளவு தான் இருக்கும். ஆனால் அதில் எத்தனை செடிகள்?!?!ஆச்சர்யப்படுத்தும் விஷயம் என்னவென்றால் அவை பூஞ்செடி குரோட்டன்ஸ் போன்ற அலங்காரமான செடிகள் அல்ல. அனைத்தும் காய்கறிகள். ஆக, மொட்டை மாடியில் அவர் விவசாயமே செய்து வருகிறார்..ஹாட்ஸ் ஆஃப்
            சுகந்திக்கா என்னைப்போல் மண் தொட்டிகளில் அவற்றை வளர்க்கவில்லை. அனைத்துமே பிளாஸ்டிக்கு கவர் தான். அதற்கென்றே பிரத்யேகமாக தயாரித்து விற்கப்படும் கவர்கள். நர்சரி கேக் என்று ஒன்று விற்கப்படுகிறதாம். பார்க்க செங்கல் போல தோற்றமளிக்கிறது. ஒன்றின் விலை எண்பது ரூபாயாம். அவர் அதனை கொடைக்கானல் செல்லும் வழியில் வாடிப்பட்டியில் வாங்கி உள்ளார். அந்த நர்சரி கேக்கை ஒரு பெரிய அகலமான வாளியில் போட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். உடனே அது புஸுபுஸு என ஊதி பெரியதாகி விடுகிறது. 
நர்சரி கேக்      - ஒரு பங்கு 
மண்புழு உரம்.  - ஒரு பங்கு
ஆர்கானிக் உரம்- ஒரு பங்கு
சாதாரண மண்.  - இரண்டு பங்கு
இவை அனைத்தையும் கொடுக்கப்பட்டுள்ள விகித்த்தில் கலந்து கொள்ள வேண்டும். கவர்களில் தட்டி வைக்க வேண்டும். தொட்டியில் வைக்காமல் கவரில் வைப்பதால் நாமே வெவ்வேறு இடத்தில் மாற்றி வைத்துக் கொள்ளலாம். வரிசையாக அவர்கள் அடுக்கி வைத்திருந்ததைப் பார்க்க மிகவும் அழகாக இருந்தது.
என்னென்ன இருந்தன தெரியுமா?!மிக ஆச்சர்யமாக இருந்தது. தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கோஸ், முருங்கை, மல்லி, புதினா, புடலை, காளிபிளவர், கீரை என்று அனைத்துமே இருந்தன. வீட்டில் அன்றாடம் சமையலுக்கு அதிலிருந்து காய்கறிகளை எடுத்துப் கொள்வார்களாம். எப்பேற்ப்பட்ட முயற்சி, ஆர்வம்!! எனக்கு அவர்களைப் புகழ வார்த்தைகளே கிடைக்க வில்லை. மணி பிளாண்ட்களிலும் ரோஜாக்களிலும் சந்தோசப்படும் நாம் எங்கே , தேர்ந்த விவசாயியைப் போலப் பயிரிட்டிருக்கும் அவர் எங்கே! முயன்றால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தினார் அவர். வாய் மூடாமல் ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருந்த என்னை சாப்பிட அழைத்தார்கள். மணக்க மணக்க கத்தரிக்காய் காரக்குழம்பும் கொத்தமல்லி துவையலும் பரிமாறினார்கள். அவை அவர்கள் வீட்டில் காய்த்தவை என்று நான் சொல்லவும் வேண்டுமோ? பிரமாதமாய் இருந்தது. ஒரு பிடி பிடித்தேன்.
      கிளம்பும் முன் நியாபகமாய் மண்புழு அளித்த சக்தி மண் புழு உரக்காரின் போன் நம்பர் கொடுத்தார்கள். வீட்டில் தோட்டம் அமைக்க விரும்புவோருக்கு உபயோகப்படும் என்பதால் இங்கு தருகிறேன் - சக்தி மண் புழு உரம்-99947998312 , 9842147960
        வீட்டிற்குள்ளேயே தோட்டம் அமைத்தால் எத்தனை உன்னதமாய் இருக்கும் தெரியுமா? விவசாயம் என்னவென்றே தெரியாமல் வளரும் நம் குழந்தைகளுக்கு இது ஒரு அறிமுகமாய் அமையும் . மேலும் தாவரப் பச்சை கண்ணிற்கு அளிக்கும் இத த்தை என்னவென்று வருணிப்பது! வளர்ந்து வரும் நகரச் சூழலில் இது போல வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், மண்ணில்லா விவசாயம் என நாமும் மாறிக்கொள்வது தான் புத்திசாலித்தனம்.

Friday, November 28, 2014

விரக்தியின் எல்லை




மனம் என்பது விந்தையான ஒன்று. மனிதமனத்தின் ஆழத்தில் ஊடுருவிக் கிடக்கும் எண்ணங்களை எவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வருவது போல் தோற்றமளிக்கும் ஒருவர் திடீரென்று தற்கொலை செய்து கொள்கிறார் என்றால் அவர் எத்தகைய மன அழுத்தத்தில் இருந்துள்ளார் என்று புரிந்து கொள்ள முடியும். இதே போல, இந்த தம்பதியரைப் போல உண்டா என்று ஊரே சிலாகித்துப் பேசும் தம்பதியினர் திடீரென்று விவாகரத்து முடிவை அறிவிக்கும் போது உலகம் அதிர்ந்து தான் போகிறது. 
           தற்கொலை முயற்சிக்கு முயன்ற ஒருவரை நான் சந்தித்த வேளையில் அவர் கூறியது." என் வாழ்வின் துன்பங்களை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. வாழ்வதே துன்பம். நான் இருப்பதே அனைவருக்கும் பாரம், கஷ்டம்" என்று கூறினார். இந்த இடத்தில் அவருக்கு நான் எங்கோ படித்ததை நினைவூட்ட விரும்புகிறேன். I told my psychiarist that everyone hates me. He said I was being ridiculous -everyone hasn't met me yet.
                      - Rodrey Dangerfield.
                               ( A Comedian) 
          பொதுவாக தற்கொலை என்றவுடன் கடன் தொல்லை, காதல் தோல்வி, திருமண வாழ்வின் தோல்வி, தேர்வில் தோல்வி, உடல் உபாதைகள், பணியில் நிரந்தரமின்மை, பணக்கஷ்டம் என்று ஏதேனும் ஒரு காரணத்தை அதனுடன் காரணப்படுத்திவிடுவோம். ஆனால் stress என்னும் மன அழுத்தம் தான் முக்கிய காரணமாகத் திகழும். இத்துடன் போதைப்பழக்கம் ஏதாவது ஒட்டிக்கொண்டால் தற்கொலை எண்ணம் தலைதூக்குவது நிச்சயம். 
            மன அழுத்தம் என்பது விநோதமான கொடிய மனநிலை. பிடிப்பற்ற தன்மை, விரக்தி, துன்பம் - போன்றவை அதனைப் பின் தொடரும் நிலைகள். நம் எல்லோருக்கும் வாழ்வில் பிடித்ததானவை பல உண்டு. அவற்றையெல்லாம் வெறுத்து, சாவது ஒன்றே சிறந்தது என்ற எண்ணத்தை விதைக்கும் கொடூர மனநிலை அது.
 
              இது போல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை -psychotherapy, என்பது வெறும் ஏட்டளவிலே உள்ளது. உதவுவதற்கு நிறைய அமைப்புகள் முன் வந்தாலும் ஏற்றுக்கொள்ள நோயாளிகள் முன் வருவதில்லை. மன அழுத்தத்தைத் தொடர்ந்து மனச்சோர்வு ( depression) ஏற்படும். இது சிந்தித்து செயலாற்றும் திறனையும் ஞாபக சக்தியையும் குறைத்து விடும். அதனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கமுடிவெடுத்தால் அது பற்றி அவர்களிடம் அறிவித்து விட வேண்டும். பொதுவாக இதற்கு யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். 
            நோயாளிகளிடம் பேசுவதே சிறந்த தீர்வாகும். அவர்கள் தாங்களாக உதவி கேட்க மாட்டார்கள். அப்படியென்றால் அவர்களுக்கு உதவி தேவை இல்லை என்று அர்த்தம் அல்ல. நோயாளிகள் சுலபமாகப்பேசி தங்கள் மனதில் உள்ளவற்றை பகிர மாட்டார்கள். அவர்களுடன் பேசுவது என்பது மிகவும் கடினமான வேலை. முதலில் அவர்களது நம்பிக்கைக்கு நாம் பாத்திரமாக வேண்டும்.தங்கள் தனிமையிலிருந்து விடுபட்டு உங்களுடன் உரையாட அவர் விரும்ப வேண்டும். அது வரை நாம் பொறுமை காக்க வேண்டும்.நிதானமாகப்பேச வேண்டும். ஆர்க்யுமெண்ட் செய்யக்கூடாது., அறிவுரை சொல்லக்கூடாது. அவர்கள் புறக்கணிக்கப் படவில்லை என்று அன்பாக உணர்த்த வேண்டும். யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று வாக்களித்து விட்டு பின் யாரிடமாவது அவர்களது பிரச்சனையை வெளியிடக்கூடாது. அவர்களது நம்பிக்கைக்கு பாத்திரமாக நாம் செயல்படவேண்டும்.வேறு எண்ணங்களில், செயல்களில் மனதை செலுத்த அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
    சுய முன்னேற்ற நூல்கள், சுயசரிதை நூல்கள், வாழ்க்கை சரிதங்கள் போன்றவற்றை அவர்கள் வாசிக்க ஊக்குவிக்க வேண்டும். உயிர் உன்னதமானது ., அதனைப் போக்குவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை என்று உணர்த்த வேண்டும். நொடிப்பொழுதில் ஏற்படும் சஞ்ஜலங்களுக்கு அடிமை ஆக்க்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்.
சமீபத்திய செய்திகளில் தற்கொலைகள் அதிகம் இடம்பெற்றதைத் தொடர்ந்து இந்த பதிவு உருவானது. இது எவர் மனதையாவது மாற்றினால் பெரும் மகிழ்ச்சி அடைவேன் .

Thursday, November 20, 2014

Auto

்முன்பின் அறியாத ஒருவருடனோ அல்லது தெரிந்தும் நன்றாகப் பழகாத ஒருவருடனோ பேசும் போது பொதுவாக நான் சர்வஜாக்கிரதையாக கிளைமேட் பற்றியே பேசுவேன். சினிமா, அரசியல் போன்ற பொதுப்படையான விஷயங்கள் சில    
சமயங்களில் கருத்து வேறுபாட்டை உருவாக்கி மனக்கஷ்டத்தை உருவாக்கிவிடும். அதனால் இப்போதெல்லாம் பொதுப்படையாய் பேசுவதற்கு ஆட்டோக்கார்ர்கள் தான் அகப்பட்டார்கள். ஆட்டோ அனுபவங்கள் எப்போதுமே சுவையாகவும் சில சமயங்களில் நூதனமாகவும் இருக்கும்.
   
      ஆட்டோ சவாரி உங்களுக்கெல்லாம் எப்படியோ தெரியாது, ஆனால் வெளிநாட்டினருக்கு மிகவும் பிடித்த ஒன்று. வெளிநாட்டினர் ஆட்டோ மீதேறி உற்சாகமாக போஸ் கொடுப்பதை நீங்கள் நாளிதழ்களில் அடிக்கடி பார்த்திருக்கலாம். சென்ற வருடம் அருணாவின் விருந்தாளியாக ஜெர்மன் மாணவி லேனா எங்கள் வீட்டில் வந்து சுமார் பதினைந்து நாட்கள் தங்கியிருந்தாள். எங்களுடன் காரில் பயணிப்பதை விட ஆட்டோவில் சென்னை வீதிகளில் வலம் வருவதையே அவள் அதிகம் விரும்பினாள். நீங்கள் குதிரை மீதோ யானை மீதோ சவாரி செய்வதை எந்த அளவு ரசிப்பீர்களோ அதே அளவு உற்சாகத்துடன் அவள் ஆட்டோ சவாரியை ரசித்தாள். எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு முறையை கடைபிடிப்பவர்கள் ஜெர்மானிர்கள். இங்கு ஓயாமல் ஹார்ன் அடிப்பது, டிராபிக் ரூல்ஸ்களை மதியாமல் இஷ்டப்படி வண்டி ஓட்டுவது போன்றவை அவளுக்கு புதுமையாய் இருந்தது. ஆட்டோக்கார்ர்கள் சந்துபொந்துகளில் புகுந்து புகுந்து  வண்டி ஓட்டியதை அவள் ரொம்பவும் ரசித்தாள். நாங்கள் தான் உயிரை கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தோம். அவளுக்காக நாங்கள் பல நாட்கள் காரைத்தவிர்த்து ஆட்டோவில் பயணித்தோம்.
  தமிழ் சினிமாக்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் ஆட்டோக்காரர்கள் முக்கிய கதாபாத்திரங்களாய் வலம் வந்துள்ளனர். பல படங்களில் கதாநாயகர்கள் ஆட்டோ ஓட்டுனர்களாய் ஜொலித்துள்ளனர். ரஜினி நான்ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் என்று பாடி அவர்களுக்கு ஒரு தனி அந்தஸ்தையே ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். 
 ஆட்டோ டிரைவர்கள் பொதுவாக சுவையாகப்பேசுவதுண்டு. ஒரு முறை நான் ஆட்டோவில் செல்லும் போது  ஆட்டோக்கார்ருக்கு போன் வந்தது. ஏர்போர்ட் சவாரி ஒன்று அவருக்கு வந்தது போலிருந்தது. போனில் பேசிக்கொண்டே வந்தவர் சட்டென்று திரும்பி "மேடம் உங்களுக்கு ஹிந்தி தெரியுமா? இவர் என்ன சொல்கிறார் என்று கேட்டுச்சொல்லுங்கள்" என்று என்னிடம் போனை கொடுத்து விட்டார். நான் முதலில் விழித்தேன். பின் சுதாரித்துக் கொண்டு, ஹிந்தியில் பேசி எந்த இடத்திற்கு வர வேண்டும் என்ற விபரத்தை அறிந்து கொண்டு அவரிடம் தெரிவித்தேன். கஸ்டமரைத் தன்னுடைய PA ஆக்கிய அந்த ஆட்டோக்காரின் management திறனை என்னவென்று புகழ்வது.(ஹி..ஹி..சமாளிப்பு!!)
மற்றொரு முறை வீட்டின் வாசலில் நின்று கொண்டு ஸ்டாண்டில் உள்ள ஆட்டோவை அழைத்தேன்.வீட்டின் எதிரே தான் ஸ்டாண்ட் உள்ளது. அவர் கிளம்பி வருவதற்குள் மற்றொரு ஆட்டோ வந்தது, அதில் நான் ஏறி விட்டேன். உடனே அவர் கத்திக்கொண்டேஅங்கேயிருந்து ஓடி வந்து         என்னைத்திட்டினார். " என்னம்மா நீ ? வர்ரதுக்குள்ள அடுத்த ஆட்டோவைப் பிடித்துவிட்டாய்?"என்று கோபமாக்க் கேட்டார். நான் கண்டுகொள்ளாமல் சென்று விட்டேன். பதில் பேசியிருந்தால் அங்கே ஒரு கூட்டம் கூடியிருக்கும். ஒரு பத்து பேர் நியாயம் பேசியிருப்பார்கள்( வாழ்க இந்தியா!!😝😜)

ஆட்டோக்கார்ர்கள் அடாவடியாகப்பேசுகின்றனர், தடாலடியாகப் பணம் கேட்கின்றனர் என்ற பொதுவான குற்றச்சாட்டு அவர்கள் மீது உண்டு. எல்லோரும் அதனை அனுபவித்திருப்பார்கள். நானே வெளி மாநிலங்களில் கொடுத்த கட்டணத்தை விட சென்னையில் அதிகம் கொடுப்பதை உணர்ந்துள்ளேன். வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளி நாட்டினர் இங்கு வரும் போது, சென்னையில் ஆட்டோக்கார்ர்கள் இப்படி கொள்ளை அடிக்கிறார்களே? யாரும் கேட்கும் மாட்டார்களா , என்று நினைப்பார்களே..நம் மாநிலத்தைப்பற்றி இகழ்வாக நினைப்பார்களே என நான் வருந்துவதுண்டு.

பொது மக்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து கட்டாயம் மீட்டர் போடணும், மீட்டருக்கு மேல் கட்டணம் வசூலித்தால் ரூபாய்.2500 அபராதம் என்று தமிழக காவல்துறை அதிரடியாய் நடவடிக்கை எடுத்துள்ளது. அவசரத் தேவைக்கு ஆட்டோவைத் தான் நாடியாக வேண்டும். நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம், ஆட்டோ உரிமையாளர்களுக்கு தினசரி இவ்வளவு என்று கொடுத்தாக வேண்டிய நிலை போன்றவற்றை ஆட்டோக்கார்ர்கள் தங்கள் தரப்பு நியாயமாகச்சொல்கிறார்கள். 
மீட்டர் போடாவிட்டால் அபராதம் என்ற சட்டம் அமலுக்கு வந்த அன்று, ஆட்டோவில் சென்னைப்பல்கலைக்கழகம் வரை சென்றேன். ஏறும் போதே மீட்டருக்கு மேல் 20 ரூபாய் தர வேண்டும் என்று நிபந்தனை விதித்தார் ஆட்டோக்கார்ர். "முடியாது, நான் போன் செய்து உன் ஆட்டோ மீது கம்ப்ளெயிண்ட் கொடுத்தால்  உனக்கு ரூபாய் 2500 fine போடுவார்கள், தெரியுமா?" என்றவுடன் அமைதியாக ஏற்றுக்கொண்டார் . ஆனால் வழியெங்கும் தன் தரப்பு நியாய வாதங்களை பேசிக்கொண்டே வந்தார்." ஊர் உலகத்துல கோடி கோடியா கொள்ளை அடிக்கிறவங்களை விட்டுற்றாங்க, நாங்க ஐம்பது நூறு அதிகமா கேக்கறதப்பெரிசு படுத்துறாங்க." மோசடி என்பது எல்லாம் ஒன்று தானே!!!அது ஐம்பது ரூபாயாக இருந்தாலும் ஐம்பது கோடியாக இருந்தாலும் தவறு தவறு  தானே!! அமௌன்ட் கம்மி என்றால் குற்றம் தவறில்லை என்றாகி விடுமா? அவர் மேலும் கூறியது, "இந்த அரசாங்கமா ஆட்டோ வாங்கிக் கொடுத்தது? நான் என் சொந்தப்பணம் ஒண்ணேமுக்கால் லட்சம் போட்டு ஆட்டோ வாங்கியிருக்கேன். அதுல மீட்டர் போடுன்னு அரசாங்கம் எப்படி சொல்லலாம்?அரசாங்கம் ஆட்டோ வாங்கிக்கோடுத்தால் அது பேசலாம்." நான்  ஆமா, அதானே அரசாங்கத்துக்கு வேலை என்று நினைத்துக்கொண்டேன். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல மற்றொன்று சொன்னார்." வேணும்னா ஒண்ணு செய்யலாம் ..ஒரு பத்து வருஷம் ஆட்டோ ஓட்டினவங்களாப் பாத்து அரசாங்கமே செலக்ட் பண்ணி அதுவே ஆட்டோ வாங்கிக் கொடுத்து ஓட்டசொன்னால், அதுல மீட்டர் போட்டு காசு வாங்கலாம். இப்போ இது நியாயமே இல்லை." என்றார்.ஆஆஆ..... எப்பேற்பட்ட சிந்தனை!! இப்படி கூட யோசிக்க முடியுமா? நான் அப்படியே ஆடிப்போயிட்டேன். எல்லாவற்றையும் இப்படி அரசாங்கத்தின் தலையில் கட்டுவது சாத்தியமா? அரசாங்கத்தை ஆஊ என்றால் குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம்? நேர்மை, நமக்கென்று சில சமூக்க்கடமை போன்றவை இல்லையா என்றெல்லாம் என் சிந்தனை செல்ல ஆரம்பித்தது. அதற்குள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. எண்ணங்களைஉதறி விட்டு வந்தவேலையை கவனிக்க சென்று விட்டேன்.
மற்றொரு ருசிகரமான தகவல். இதனை எழுதி விட்டு என்ன தலைப்பிடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். Auto என்பதையே தமிழில் எழுதலாம் என்று ஆட்டோக்கு தமிழ் வார்த்தை கூகுளில் தேடினேன் .தானியங்கி மூவுருளி உந்து - இது தான் ஆட்டோவாம்.. சிரித்துக்கொண்டே auto  என்றே தலைப்பிட்டுவிட்டேன்.

Monday, November 17, 2014

தர்ம சங்கடம்


தர்ம சங்கடம் என்ற ஒரு வார்த்தை தமிழில் உள்ளதே அதற்கு மிகச்சரியான அர்த்தத்தை உங்களில் பலர்
உணர்ந்திருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் அதைப் பல முறை உணர்ந்து அனுபவித்துள்ளேன். நம் இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு ஒரு வழக்கம் உண்டு- கவனித்திருக்கிறீர்களா? யாராவது ஒரு நபரை சந்தித்தால், உடனே வீட்டுக்கு வாங்க என்று அழைப்பார்கள். இது எல்லோரும்செய்வது தானே என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் மேலை நாடுகளில் இந்தப் பழக்கம் இல்லை என்று கேள்விப்பட்டுள்ளேன். சரி அதை விட்டுவிடுவோம். நாம் அதே நபரை மீண்டும் ஒரு முறை சந்திக்கும் போது, அவர் நம்மிடம் பேச ஆரம்பிப்பதே , "என்னங்க வீட்டுக்கு வரவேயில்லை" என்ற குறையோடுதான். உடனே நாம் ஒரு அசட்டுச்சிரிப்பு சிரித்து குற்றவுணர்வுடன் அடுத்த முறை வருகிறேன் என்போம்.அவரும் அத்துடன் விடமாட்டார் கட்டாயமாக வாங்க என்று அன்புக்கட்டளை இடுவார்.
      சரி நம்மைப் பார்க்கும் இடத்தில் எல்லாம் கூப்பிடுகிறாரே என்று நாம் போய்விட்டால் அங்கு நமக்கு ஒரு விநோதமான அனுபவம் காத்திருக்கும். வாயிற்கதவைத் திறந்தவுடன், ஒரு திகைத்த பார்வையுடன் சிரிப்பார். "என்னடா இது, சும்மாதானே கூப்பிட்டோம், நிஜமாகவே வந்துவிட்டார் " என்று அந்தப்பார்வை அர்த்தம் சொல்லும். சமாளித்துக்கொண்டு வாங்க வாங்க என்று உள்ளே அழைத்துச்செல்வார். அடுத்து அவரது மனைவியோ கணவரோ வந்து ஒரு அசட்டுச்சிரிப்புடன் வாங்க என்பார். நம்மை உக்கார வைத்து விட்டு அரக்க பரக்க வீட்டை ஒதுக்குவார்கள். என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்பார்கள். ஒன்றும் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காமல் காபியோ குளிர்பானமோ ஏதாவது ஒன்று எடுத்து வருவார்கள். மிக மிக சூடாக ஸ்ட்ராங்காக காபி குடிக்கும் பழக்கம் உள்ள எனக்கு அவர்கள் தரும் மிதமான சூட்டில் உள்ள காபியைக் குடிக்கவே முடியாது. மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் நாகரீகம் கருதி வைத்துக்கொண்டே இருப்பேன் பின் விழுங்கித்தொலைப்பேன். 

அடுத்து அவர், "என்ன சார் இந்தப்பக்கம்?" என்று கேட்பார். அச்சச்சோஇவருக்கு அதற்குள் மறந்து விட்டதா? இவர்தானே என்னைக்கட்டாயம் வீட்டிற்கு வரவேண்டும் என விரும்பி அழைத்தார் என்ற எண்ண ஓட்டத்துடன் நான் சிரித்துக்கொண்டே சமாளிப்பேன், "இந்தப்பக்கமாய் வந்தேன், அதான் உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தேன்" என்பேன். அவரும் சரி சார் என் பிள்ளைகளைக்காட்டுகிறேன் என்று அவர்களை அழைப்பார். பதிலே வராது. மீண்டுமொரு முறைஅழைப்பார். மற்றொருமுறை அழைப்பார். இம்முறையும் பதில் வராது. சரி விடுங்க சார் என்று நான் கூறினாலும் விடாது போய் அழைத்து வருவார். நாம் சிரித்துக்கொண்டே உன் பேர் என்ன என்று கேட்டால் அந்த வாண்டுகள் நம்மை முறைக்கும். இவர் எதற்காக வந்து இப்படி நம் உயிரை எடுக்கிறார் என்பது போல் இருக்கும் அந்தப்பார்வை. வேண்டாவெறுப்பாக பதில் வரும். இது தெரிந்து உனக்கு என்னடா ஆகப்போகிறது என்று கேட்பது போலவே அந்த பதில் இருக்கும். சரி இதோடு போகட்டும் என்று விடமாட்டார் அவர். அவரது மகனது பெருமையைப்பற்றி பேசி மார்க் எடுத்துட்டு வா என்பார் அல்லது ஏதாவது கவிதை சொல்லச்சொல்வார். அந்தக்குழந்தை அப்பா சொல்வதையும் தட்ட முடியாமல் நம்மிடமும் சொல்ல விருப்பம் இல்லாமல் விழிக்கும். அப்போது ஒரு உணர்வு தோன்றுமே அது தான் தர்ம சங்கடம். அதை விடவும் மோசம் சின்னகுழந்தைகளாக இருந்தால் அவர்தம் ஸ்கூலில் படித்த அத்தனை ரைம்ஸ் ஐயும் நாம் கேட்டாக வேண்டும்.
சரி ., இவ்வளவு பேசுகிறாயே , நீ எப்படி என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. அடியேனும் அப்படித் தான். நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்தால் நீரஜா , அருணா இருவர் பற்றிய கதைகளிலிருந்து நீங்கள் தப்ப முடியாது. என்ன சார் செய்வது? என்னுள் ஓடுவது தமிழ் ரத்தமல்லவா? ஹாஹா நானும் தமிழச்சி தானுங்கோ😝😜😃 
         

Wednesday, November 12, 2014

நேர விரயம்

மென் திறன்கள், ஆளுமைத்திறன்கள், பன்முகத்திறன்கள் என்று என்னன்னவோ பற்றி படிக்கிறோம். வாழ்க்கையில் முன்னேற டிப்ஸ், வெற்றிக்கு வழிக்காட்டி என்று பலப்பலக் கட்டுரைகள்  வருகின்றன. ஆனால் இக்கட்டுரை  அது  போன்றதல்ல .எனினும் அது போன்றது தான் .என்ன குழப்புகிறேன் என்கிறீர்களா ?விஷயத்திற்கு வருகிறேன்.
 நேரத்தின் மகிமையைப் பற்றிக்கொண்டு பல கட்டுரைகள் வாசித்திருப்போம் - நேரத்தை நிர்வகிப்பது எப்படி , குறைந்த நேரத்தை எப்படி நிறைந்த அளவில் பயன்படுத்துவது என்று பலவாறு கற்றுத்தரப்பட்டுளளோம்.நாமும் அவற்றை முடிந்த அளவு பின்பற்றி வாழ்க்கையில் முன்னேறுகிறோம்.ஆனால் நாம் அனைவரும் மறந்த ஒன்று-அடுத்தவர் நேரத்தை எப்படி வீணாக்காமல் இருப்பது  என்பதை. அடுத்தவர் நேரத்தை நாம் எப்படி கவருவது, நமக்கு நம்முடைய நேரம் மட்டும் தானே கிடைக்கிறது என்கிறீர்களா?ஆமாம், நம்முடைய நேரத்திற்கு நாம் தான் சொந்தக்காரர். ஆனால் பல சமயங்களில் கடமை, விருப்பம் அல்லது தொழில் காரணமாக நம்முடைய நேரம் பிறர் கைகளில் அகப்படுகிறது .
புரியவில்லையா..என்னுடைய மனதில் வெகு  நாட்களாக  நெருடிக்கொண்டிருக்கும் சில சம்பவங்களை கூறி விளக்குகிறேன்.நமக்கு மருத்துவமனை செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம், முன்பு போல் நமது குடும்ப மருத்துவரை  உடனே பார்த்து விட முடியாது.மருத்துவமனையில் முதலில் அப்பாய்ண்ட்மெண்ட்  டோக்கன் வாங்க வேண்டும்.அப்பாய்ண்ட்மெண்ட் தான் வாங்கியாகி விட்டதே என்று  நாம் அங்கு போனால் மருத்துவரை உடனே சந்திக்க முடியாது. அதற்கு அப்புறம் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்தால்தான் அவரைச் சந்திக்க இயலும். உதாரணமாக நான் மருத்துவமனைக்கு அப்பாய்ண்ட்மெண்ட்  வாங்கி விட்டு மாலை நான்கு மணிக்குச் சென்று காத்திருந்தேன். அனால் மருத்துவரோ மாலை ஐந்தரை மணிக்கு தான் வந்தார். பின் எனக்கு முன்பு வந்தவர்களை சந்தித்தப் பின் என்னை சந்தித்த போது இரவு மணி ஏழரை .மூன்று மணி நேர காத்திருப்பு. நேரம் எவ்வளவு விரயம். மருத்துவருக்கு அவருடைய நேரம் எவ்வளவு முக்கியமோ அதே போல் காத்திருக்கும் நோயாளிகளின் நேரமும் அதே அளவு முக்கியமானது தானே? இதில் சோகம் என்னவென்றால் காத்திருப்போர் அனைவரும் நோயாளிகள். ஐந்தரை மணிக்கு தான் வருகிறார் என்றால் ஐந்தரை மணிக்கு அப்பாய்ண்ட்மெண்ட்  தர வேண்டியது தானே! இது அன்று மட்டும் அல்ல தினமும் நடப்பது. அந்த மருத்த்துவமனை மட்டும் அல்ல அனைத்து மருத்துவமனைகளிலும் நடப்பது. ஒரு உதாரணத்திற்காக மருத்துவமனையை குறிப்பிட்டேன். அரசு  அலுவலகங்கள, கல்வி நிலையங்கள்,  இன்னும் பலப்பல இடங்களில் இது சர்வ சாதாரணம். இது குறித்த கவலை எவருக்கும் இல்லை .அப்படிதான் லேட் ஆகும் என்று தங்களைத்தாங்களே சமாதானப் படுத்திக் கொள்கிறார்கள்.
அதே போல் மற்றொரு சம்பவம். JFW மேகசினின் அவார்ட் விழாவிற்கு சென்றேன்.விழா மாலை ஆறரை மணிக்குத்தொடங்கும் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது . அப்படியானால் விழா சுமார் ஒன்பது மணி அளவில் முடிந்து விடும் என்ற நம்பிக்கையில் சென்று விட்டேன். அனால் விஐபி களின் வரவிற்காகக் காத்திருந்துக்   காத்திருந்து விழா ஆரம்பிக்கும் பொது மணி எட்டரை .இரண்டு மணி நேர தாமதம்.சுமார் இருபது விஐபி களுக்காக சுமார் ஆயிரம் பேரின் இரண்டு மணி நேரம் வீண். ஆனால் அதற்கு  யாரும் கவலை படவில்லை. குறைந்தபட்சம் ஒரு மன்னிப்பு கேட்பார்கள் என எதிர்பார்த்தேன்.ம்ஹூம் ..நான் அதிகம் எதிர்பார்க்கிறேன் போல. இந்த இடத்தில கவியரசு கண்ணதாசன்  கூறியது நினைவுக்கு வருகிறது. "எனக்கு பிடிக்காத மதம் தாமதம்" என்று ஒரு முறை கூறினார்.
நாம் அனைவரும் மாற்றிக்  கொள்ள வேண்டிய பழக்க வழக்கங்கள் நிறைய உண்டு . குப்பையை குப்பைத்தொட்டியில் போடுதல் ,வரிசையில் நிற்றல் போன்றவற்றை போல நேர விரயத்தையும் தவிர்க்க வேண்டும்.அதிலும் குறிப்பாக அடுத்தவருடைய    நேரத்தை விரயம் செய்ய நமக்கு அதிகாரம் இல்லை.
மற்றொரு சுவையான சம்பவமும் என் நினைவுக்கு வருகிறது. சமீபத்தில் நாளிதழில் படித்தேன் ...RSS மீட்டிங் ஒன்றிற்கு மத்திய அமைச்சர் வி. கே. சிங் சிறப்புரை ஆற்ற அழைக்கப்படிருந்தார். அனால் அவர் விழாவிற்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வந்திருக்கிறார். பொதுவாக நிகழ்ச்சி அமைச்சருக்காக காத்திருப்பது வழக்கம். ஆனால் ஆர் எஸ் எஸ்  அமைப்பாளர்கள் அப்படி எல்லாம் காத்திருக்கவில்லை நிகழ்ச்சி நேரத்திற்கு தொடங்கியது.தாமதமாக வந்த அமைச்சர் மேடை ஏற்றப்படவில்லை. மாறாக பார்வையாளராக அமர வைக்கப்பட்டார். ஆர் எஸ் எஸ் கருத்துக்களில் அனைவருக்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவர்களது இந்த நேர்மையான செயல் என்னை பிரமிக்க வைத்தது.
மென் திறன்களை வளர்த்துக்கொள்ளும் நாம் சில பொதுத்  திறன்களையும் வளர்த்து கொள்ள வேண்டும்