Wednesday, August 24, 2016

நட்பென்னும் சரணாலயம்.

' இந்த மீன்களையும், காய்ஞ்சு போன மரங்களையும் பாத்துப் பாத்து போரடிக்குதே.. எப்போ தான் இந்தப் பறவைக்கூட்டமெல்லாம் வரப்போகுதோ? அவை வந்தால் தான் இந்த இடமே களை கட்டும்.' என்று மனதிற்குள் எண்ணியவாறே மெல்ல நடை போட்டது அந்த குட்டி ஆமை. 
       அந்த ஆமை இருப்பது ஒரு பறவைகள் சரணாலயத்தின் சிறிய குளத்தில். அமைதியாக இருக்கும் மீன்களைக் கண்டால் ஆமைக்குப் பிடிக்காது. சத்தம் எழுப்பியவாறே வரும் பறவைகளையும், அவற்றின் படபடவன பறக்கும் ஓசையும், அவை பறந்து செல்லும் அழகையும் பார்க்க அதற்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் அவை எப்போதும் அங்கிருப்பதில்லையே! வருடத்திற்கு ஆறு மாதங்கள் மட்டுமே அங்கிருந்து விட்டு மற்ற மாதங்கள் தன் சொந்த நாட்டிற்குச் சென்றுவிடுமே! 
       ஆமை அந்தப் பறவைகளின் வருகையை விரும்ப மற்றொரு காரணமும் உள்ளது. அந்தப் பறவைகளைப் பார்க்க ஊர் மக்கள் திரளாக திரண்டு வருவர். இது தவிர வெளியூர்களிலிருந்தும் கார்களிலும், பைக் க்களிலும் மக்கள் வந்து குவிவர். காமிரா, பைனாக்குலர் சகிதம் வரும் அவர்கள் கூடவே குழந்தைகளையும் அழைத்து வருவதுண்டு. கைகளில் ஐஸ்க்ரீம் அல்லது கொரிப்பான்களை மென்று கொண்டே அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பெற்றோர் மிகப் பொறுமையாக பதிலளிப்பதை ஆமை ரசித்துப் பார்க்கும்.
        குட்டி ஆமைக்குப் வீடு அதன் முதுகிலேயே உள்ளது. வீட்டின் உள்ளேயே இருந்து போரடித்துப் போயிருக்கும் அதற்கு இப்படி திருவிழா போல அந்த சரணாலயம் திகழ்வது ரொம்பப் பிடிக்கும். பாறையின் மீதமர்ந்து தலையை நீட்டி எல்லோரையும் வேடிக்கை பார்க்கும். ஆனால் யாராவது அருகில் வருகிறார்கள் என்றால் அதற்கு வெட்கம் வந்துவிடும். உடனே தலையை உள்ளே இழுத்துக்கொள்ளும்.
          இப்படித்தான் பறவைகள் வந்த பிறகு ஆமை உற்சாகமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது ஒரு நாள் நாரை ஒன்று அதன் அருகில் வந்து," நண்பா!" என்று அழைத்தது. திடுக்கிட்ட ஆமை வெட்கத்தால் வீட்டினுள் ஒளிந்து கொண்டது. சிறுது நேரம் கழித்து நாரை போய் விட்டதா என்று மெல்ல எட்டிப் பார்த்தது. ' ஐயோ! என்ன இது? இன்னும் நின்று கொண்டிருக்கிறதே! இந்த நாரை போனால் தான் நான் வீட்டை விட்டு வெளியே வருவேன்!' என்று எண்ணியபடியே காத்திருந்தது. ' பேசாமல் தண்ணீரில் குத்தித்து விடலாமா? ஆனால் அது அங்கேயும் பின் தொடருமே!' என்று அங்கலாய்த்துக் கொண்டே யோசனையில் ஆழ்ந்தது.
         கொஞ்ச நேரம் கழித்து தைரியத்தை வரவைத்துக் கொண்டு மெதுவாக எட்டிப் பார்த்தது. இன்னும் அந்த நாரை நின்று கொண்டிருந்தது. " ஹலோ நண்பா.." என்றபடியே கை நீட்டியது. ஆமையும் தயங்கி தயங்கி கைகுலுக்கி மெல்லிய குரலில்" ஹலோ!" என்றது. நாரை கம்பீரமாக," என்ன! என்னைப் பார்த்து பயமா? நான் உன் நண்பன். உன்னை ஒன்றும் செய்து விட மாட்டேன். நான் புதிதாக இங்கு வந்துள்ளேன்" என்றது புன்னகையுடன்.
          ஆமையும் ," ஓ.. அப்படியா? நீ எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டது. நாரை, " நான் சைபீரியாவிலுருந்து வருகிறேன். அங்கு இப்போது பனி அதிகம். எனவே நானும் எனது நண்பர்கள் சிலரும் இந்த இடத்தைத் தேர்வு செய்து வந்துள்ளோம்." என்றது. " ஓ..நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்கு தான்" என்றது. " நல்லதாயப் போயிற்று. உங்கள் ஊர், மற்றும் உங்கள் நாட்டைப் பற்றிக் கூற உன்னை விட சிறந்தவர் யாருமில்லை. அதனாலேயே உன்னுடன் சிநேகமாய் இருக்க வந்துள்ளேன்" என்றது. ஆமைக்கு அதன் பேச்சில் ஆர்வம் வந்தது. லாகவமாகப் பேசும் நாரையைப் பார்த்து சிநேகமாக புன்னகைத்து," ஓ! அதுக்கென்ன! சொல்லிவிட்டால் போச்சு. அதற்கு முன் நீ கடந்து வந்த நாடுகளைப் பற்றியும், கண்ட காட்சிகளைப் பற்றியும் கூறு " என்றது. நாரையும் கூறலாயிற்று. பல தரப்பட்ட பறவைகள் கூட்டம் கூட்டமாய் வந்தாலும் தங்களுக்கு அந்த இடம் சௌகர்யமாய் இருந்தால் மட்டுமே அங்கு தங்குமாம். தோதுப்படவில்லை என்றால் வேறு இடம் தேடி செல்லுமாம். முட்டையிட்டு குஞ்சு பொரித்து, பின் குஞ்சுகளுக்கு பறக்கத் தெரிந்தவுடன் தன்னுடன் அழைத்துச்செல்லுமாம். உணவுக்காக அருகில் உள்ள ஊர்களில் உள்ள ஏரிகளுக்குச் செல்லுமாம். ஆமை ஆர்வமாய் கேட்டுக் கொண்டது. பொழுது போனதே தெரியாமல் கதை பேசிக் கொண்டிருந்ததில் மாலை நெருங்கியதை இருவரும் கவனிக்கத் தவறி விட்டனர். பின்னர் சுதாரித்து மறு நாள் சந்திக்க உறுதி பூண்டனர்.

          பொழுது புலர்ந்தது. ஆமை நாரையின் வருகைக்காக காத்திருந்தது. வந்தவுடன்," நீ உன் நாட்டைப் பற்றி கூறினாயல்லவா!  நான் எங்கள் நாட்டின் அழகை உனக்குக் காட்டுகிறேன்." என்று கானகத்துள்ளே அழைத்துச்சென்றது. மழை மேகமாய் இருந்தபடியால் அங்கு மயில் ஒன்று தோகையை விரித்து நடனமாடிக் கொண்டிருந்தது. ' இத்தனை அழகான பறவையா!' என்று நாரை அதனை வைத்த கண் வாங்காமல் பார்த்தது. ஆமை," இது தான் எங்கள் தேசியப்பறவை.. அதோ அந்தக் குளத்தில் அழகழகாய்ப் பூத்திருக்கிறதே.. அது தான் எங்கள் தேசிய மலரான தாமரை." என்றது. இவை இரண்டின் அழகில் அப்படியே சொக்கிப் போய் நின்றது நாரை. தேசிய விலங்கான புலியின் கம்பீரத்தைப் பற்றியும், வீரத்தைப் பற்றியும் கூறியது. ஆமை மேலும் தொடர்ந்தது," இந்த நாட்டின் மக்களும் அன்பானவர்கள். அருகில் சரணாலயம் இருப்பதால் இந்த ஊர் மக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடு கின்றனர். பறவைகள் பயப்படக் கூடாது என்ற காரணத்திற்காக. அவற்றை இடையூறு செய்யக்கூடாது என்று தொலைநோக்கிக் கருவி மூலமே பறவைகளைக் கண்டு களிக்கின்றனர். விலங்குகள், பறவைகள் மீது அவர்களுக்கு எப்போதும் மாறாக் காதல் உண்டு."  நாரை வியந்து கேட்டுக் கொண்டிருந்தது.  " நண்பா! வந்து தங்கப்போகும் இடத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாய் இருந்தேன். இப்போது பெருமையாக இருக்கிறது." என்றது." நீ பறந்து வரும் வழியில் அழகிய கோயில்கள், சர்ச்கள், மசூதிகள் பலவற்றைக் கண்டிருக்கலாம். அவை யாவும் இந்த நாட்டு மக்கள் ஒற்றுமையாய் வாழ்வதற்கான ஆதாரம்" என்றது ஆமை. 

       அதன்பின் நாள்தோறும் இருவரும் சந்தித்து பல கதைகள் பேசி மகிழ்ந்தனர். தன் நட்பின் அடையாளமாய் ஆமை மிக அழகிய கூழாங்கல் ஒன்றை நாரைக்குப் பரிசளித்தது. நாட்கள் பறந்து சென்றன. நாரை தன் நாட்டிற்கு திரும்ப வேண்டிய நேரம் வந்தது. ஆமைக்கு நண்பனை விட்டுப் பிரிய மனமில்லை. நாரை தான் விரைவில் மீண்டும் சந்திக்கலாம் என்று தைரியம் கூறி தன்நண்பர்களுடன் கிளம்பத் தயாரானது. ஆமையும் அதன் வருகைக்காக காத்திருப்பதாக உறுதியளித்து விட்டு பிரியாவிடை அளித்தது.

   இப்போது தன் நண்பன் எப்போது வருவான், அவனோடு எப்போது கதைகள் பேசி மகிழலாம் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறது. ஏதோ சிறிய விமானம் தரை இறங்குவது போல ஒயிலாக இறக்கையை விரித்து தரை இறங்கித் தன்னைத் தேடி வரும் காட்சியைக் காண காத்துக் கொண்டிருக்கிறது.