Saturday, January 30, 2016

பந்தா

ஆடம்பர சொகுசுக் காரில் வந்திறங்கினார் முதலாளி.
தொழிலாளர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்." நமக்கெல்லாம் மூணு மாசமாக சம்பள பாக்கி. நாலு வருசமா இன்கிரிமெண்ட் போடவே இல்லை! ஒரு அவசரத்துக்கு கடன் கேட்டால் கூட ' கஜானா காலி'னு கேஷியர் விரிக்கிறாரு. இன்னிக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டியே தீரணும். வாங்கப்பா...அவர்ட்ட பேசிட்டு வரலாம்," என்று மொத்தமாக அவரின் அறைக்குள் நுழைய முற்பட்டனர்.
ஆடிட்டரும் அவரும் பேசிக் கொண்டிருந்தனர். அவர் பேசி முடித்த பின் உள்ளே போகலாம் என்று வெளியே காத்திருந்தனர். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தது அனைவருக்கும் தெளிவாக்க் கேட்டது.
" என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் சப்ளை பண்ற கம்பெனியின் ஷிப்மெண்ட் லாஸ் ஆகிவிட்டது. அதனால் அவர்கள் எனக்கு பேமெண்ட் தராமல் இழுத்தடிக்கிறார்கள். அதற்காக என் தொழிலாளர்களை நான் வஞ்சிக்கலாமா? அவர்களுக்கு நேரத்திற்கு சம்பளத்தை அளிக்காத து என் மனதை வருத்துகிறது. அவர்களுக்கும் ஆயிரம் ஜோலி இருக்குமே!! பேசாமல் ஒரு வாரம் லீவ் விட்ரலாமா என்று யோசிக்கிறேன்," என்றார் மிகவும் வருத்தத்துடன்.
காத்திருந்த அனைவரும் அதிர்ந்தனர். 'இவ்வளவு பிரியமா நம் மீது!! நம்முடைய கஷ்டத்தை நினைத்துப் பார்க்கும் அவரின் கஷ்டத்தை நாம் நினைத்துப் பார்க்கவில்லையே! ' என்று எண்ணியவாறே திரும்பினர். 
அதில் ஒருவன் ' வேலையைப் பாருங்கப்பா ...நல்லது நடக்கும்." என்றான்.
உள்ளே ஆடிட்டர் ," அப்படியெல்லாம் செய்ய வேண்டாம். நான் அந்தக் கம்பெனியில் பேசுகிறேன். உங்க தொழிலாளர்களிடம் நீங்கள் பேசுங்கள்..பார்க்கலாம்."என்றார்.
அனைவரும் நம்பிக்கையுடன் திரும்பினர்.

ராஜாவை சந்திப்போம்.


வீட்டு சாப்பாடு சாப்பிட்டு போரடித்துப் போய்விட்டால் ஒரு நாள் ஹோட்டலில் சாப்பிடுவோம். மிகவும் ருசியாகத் தெரியும். அது போலத்தான், நம் நண்பர்கள், உறவினர்கள் சொல்லும் ஜோக்ஸ், பேசும் பேச்சு எல்லாம் திடீரென்று போரடிக்கும். அப்போது நாம் புதிதாக சந்திக்கும் ஒரு நபர், அதுவும் உற்சாகம் மிக்கவராகவும் இருந்தால், அவரது பேச்சு சுவாரஸ்யமாய்த் தெரியும்.
      என் எதிர் வீட்டில் இருக்கும் ராஜா சிட்டி பேங்க்வில் வேலை செய்கிறார். எம்பிஏ படித்தவர். வேளச்சேரியில் குடியிருக்கிறார். இப்போது காலில் அடிபட்டு அம்மா வீட்டில்(ராயபுரம்) வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.  வயதான அம்மாவைத் தவிர அவருடன் பேசுவதற்கு எவருமில்லை. வாய் ஓயாமல் பேசும் வழக்கம் உள்ள அவருக்கு அது மிகவும் கடினம். பொழுதை எப்படி ஒப்பேத்துவது என்று வாசலையே பார்த்துக் கொண்டிருக்கும் ராஜா, நான் எப்போதாவது வெளியில் தென்பட்டால்," ஆண்ட்டி.."என்று அழைத்து பேச ஆரம்பித்து விடுவார்.
        ராஜாவுக்கு நல்ல நகைச்சுவை உணர்ச்சி உண்டு. காலில் எப்படி அடிபட்டது என்பதை விலாவரியாக விவரிப்பார். அது ஏதோ ஸ்விட்ச் போட்டு ஒப்பிப்பது போலவே இருக்கும். ஏன் இப்படி என்று கேட்டேன். " இல்ல.. ஆண்ட்டி, தப்பு என் பேர்ல இல்ல. எதிர்பாராம ஒருத்தன் வந்து மோதிட்டான். இதை என்னைப்பார்க்க வர்ற ஒவ்வொருத்தர்ட்டயும் சொல்லி சொல்லி மனப்பாடம் ஆயிடுச்சு. அதான் ஸ்கூல்ல திருக்குறள் ஒப்பிக்கிற மாதிரி யாராவது கேட்டா மடமடன்னு கொட்டுது," என்பார். மேலும், "ஆனாலும் ஆண்ட்டி.. என்னைப் பார்க்க வர்றவங்க எனக்கு சாப்பிட ஏதாவது (ஆப்பிள், ஆரஞ்சு, ஹார்லிக்ஸ்) வாங்கிட்டு வர்றாங்களோ இல்லையோ, வண்டி வண்டியா அட்வைஸ் தர்ராங்க," என்பார்.
      " ஹெல்மெட் போட்டுக்கணும். வண்டியை இன்ஸ்யுர் பண்ணிக்கணும். இது போன்ற அட்வைஸ்களை தாங்கிக்குவேன். ஆனால் வெளியே கிளம்பும் போது சகுனம் பார்த்து கிளம்பணும். பிள்ளையார் கோயில்ல தேங்காய் உடைக்கணும். இது போன்ற ஐடியாக்களைத்தான் என்னால் தாங்க முடியலை. கண் திருஷ்டி அதிகமாக இருக்கும். இந்த இருபத்தெட்டு வயது குழந்தையை யார் ஆண்ட்டி கண் வைப்பார்கள்?," என்று முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு கேட்பார்.
          "அதுக்காக ஆளாளுக்கு ஒரு ஐடியா சொன்னார்கள். அதன்படி எங்க வீட்டு பாத்ரூம் சரியில்லையாம். இடிச்சு மாத்தி கட்ட சொல்றாங்க. என் காலில் அடிபட்டதற்கும் என் வீட்டு பாத்ரூமிற்கும் என்ன சம்பந்தம்? வாஸ்து பகவானுக்கே வெளிச்சம்..இன்னொருத்தர் வந்து ' வாஸ்து எல்லாம் வேஸ்ட்பா.. சூப்பர் வாஸ்து பார். அதுதான் பெஸ்ட்' என்றார்."
            அவர்கள் வீட்டு வாசலில் இப்போது புதிது புதிதாக நான்கைந்து கலர் கயிறு கல், பச்சைமிளகாய், எலுமிச்சை என்று தோரணங்கள் தொங்குகின்றன. வீட்டு வாசலில் காலையில் ஐந்து அகல்கள், மாலையில் ஐந்து என்று பெரியம்மா ஏற்றுகிறார்கள். ஏதோ ஐயர் சொன்னாராம். கதவருகில் எரியும் அவற்றைப் பார்த்து எனக்கு தான் பகீரென்று இருக்கும். ராஜாவைப் பார்க்க தினமும் பத்து பேராவது வருகிறார்கள். அவர்களுடன் குழந்தைகளும் வருகிறார்கள். அவர்கள் எங்கே அதை தட்டி விட்டு விடுவார்களோ என்று எனக்குப் பதறும். என் வீட்டு வாசலில் இருந்து அவர்கள் வீட்டு வாயிற்கதவுக்குப் பாதுகாப்பாய் பார்த்துக் கொண்டே இருப்பேன்.
              அதையெல்லாம் விட்டுவிடுவோம். ஒவ்வொருத்தரின் நம்பிக்கை. ராஜா தன்னுடைய வேலையைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். அவர் கலெக்ஷன் டிபார்ட்மெண்ட். லோன் வாங்கி விடுவார்கள். ஆனால் ட்யு கட்டாமல் எப்படியெல்லாம் பொதுமக்கள் டிமிக்கி கொடுப்பார்கள், அவர்களிடம் எப்படியெல்லாம் ஜகஜ்ஜால கில்லாடி வேலை செய்து அதை வசூலிப்பர் என்று விவரித்துக் கொண்டிருந்தார்.
                 தான் இருக்கும் வாடகை வீட்டை( இப்போது தான் fully furnished apartment வாடகைக்கு கிடைக்கிறதே!) தன் சொந்த வீடு என்று காட்டி கடன் வாங்குவார்களாம். இவர்களும் டிவி, ஃபிரிட்ஜ், கட்டில், சோபா என்று கனகச்சிதமாய் இருக்கும் வீட்டைப் பார்த்து நம்பி கடன் கொடுப்பார்களாம். ஆனால் அந்த நபருடைய பொருட்கள் என்னவோ ஒரு சூட்கேஸுக்குள் அடங்குவது தானாம். திடீரென்று ஒரு நாள் காணாமல் போய் விடுவாராம். காலையில் போனாலும் பார்க்க முடியாது. மாலையில் போனாலும் பார்க்க முடியாது. நாங்கள் வருகிறோம் என்று எப்படித் தெரிகிறது என்று தெரியவில்லை. ' இப்போ தான் இங்கே இருந்தார். அதற்குள் எங்கே போயிட்டார்' என்று அண்டை வீட்டில் சொல்வார்களாம்.
                   நாங்கள் வருவதை எப்படித்தான் மோப்பம் பிடிப்பார்களோ தெரியவில்லை என அங்கலாய்த்தார் ராஜா. இப்படித்தான் ஏமாற்றிக் கொண்டிருந்த ஒருவரிடம் சாமர்த்தியமாகப் பேசி அவருடைய பான் கார்ட்ஐ வாங்கி, நம்பரை நோட் செய்து, அவருடைய IT Returns செக் செய்து , அவருடைய வீடு சொந்த வீடு இல்லை என்று கண்டுபிடித்தார்களாம். பெண்களும் இப்படி செய்வதுண்டாம்.லோன் வாங்கிய பின் ஐடி துறையில் பணியாற்றிய பெண் இன்ஸ்டால்மெண்ட் கட்டாமல் யுஎஸ் பறந்து விட்டாளாம். என்ன செய்வது, வரும் வரை காத்திருக்க வேண்டியது தான் என்றார் சோகமாக.
                 இவை அனைத்தையும் விட சுவாரசியமாய் ஒன்றைச் சொன்னார். இவர்கள் இரண்டு பேர் சேர்ந்தது ஒரு டீம். கொஞ்ச நாட்களாய் போய் அவரிடம் வசூலிக்க முடியாமல் திரும்பி வந்து கொண்டே இருந்தனராம். கஸ்டமர் இரண்டு நாட்களில் தருகிறேன் என்று மீண்டும் மீண்டும் உறுதியளித்து ஏமாற்றி வந்தாராம். கால்வலிக்க நடந்தது தான் மிச்சம். ஒரு மாதமாகியும் பணம் வசூலாகவில்லை. ' நான் இறங்குகிறேன்', என்று களத்தில் இறங்கினார் ராஜா. புதியதாய் ஒருவரை  உள்ளே அனுப்பிவிட்டு இவர்கள் இருவரும் வீட்டின் அருகே மறைந்து நின்று கொண்டனராம். புதிதாய் வந்தவரிடம் அந்த நபர் தான் அவரில்லை என்று கூறிவிட்டு அவசரமாக அங்கிருந்து கிளம்பினராம். அதற்குள் அவர் இங்குதான் இருக்கிறார் என்று தொலைபேசி மூலம் இவர்களுக்கு தகவல் அனுப்பிவிட்டாராம். இவர்கள் காத்திருந்து அவர் அவசரமாக வெளியேறும் போது பாய்ந்து பிடித்தார்களாம். திரைப்படங்களில் வருவது போல் திரில்லிங் காக இருந்தது என்றார் ராஜா. கொசுறாக ஒரு தகவல் கூறினார். 'இந்த முறை பணத்தை வசூலிக்கவில்லையென்றால், உன் சம்பளத்தில் பிடிப்பேன்,' என்று மேனேஜர் ராஜாவை எச்சரித்திருந்தாராம். அதனால் தான் இந்தப் பாய்ச்சல்.
            இப்படி ராஜாவிடம் பேசிக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. சரி, இப்போது எனக்கு வேலை இருக்கிறது... இன்னொரு முறை இன்னொரு சுவாரஸ்யமான நபருடன் உங்களை சந்திக்கின்றேன்..பை..பை.

Thursday, January 21, 2016

Coronation Bakery

In numerous small towns you can find local bakeries that have been around for many years, owned and operated by local families. This is where you will find the best kept secret recipes , that have survived the test of time because of popular demand.  They are part of our history lingering in our minds and participate in our present. In some ways these local bakeries are a part of the past and the present.

          In my native town of Sivakasi, renowned place for crackers, we have this 'Coronation Bakery' ,which is such a 'darling' to all the people of the place. The name itself brings a flood of memories. Getting bread and rusk was Herculean task for me by then. Bread was available only  after one o'clock in the afternoons and rusk only after eleven thirty in the morning. Come too early, you will go empty handed. Come too late you have to go empty handed. Don't be too happy that you are on time , you may have to stand in a long queue of fellow citizens, relying purely on luck of getting your portion of 'royal' pastries.

         Born and brought in the town, I shall always remain an ardent fan of  their products. Talk to me about the bakery, my face lights up, I chatter nonstop about its taste and flavor and get enthusiastic and begin to recount those   with all praise for it. Quality is their mantra, not quantity. There is always a demand. Stories mill around about how even people settled in foreign countries love their bread and cakes.

      It has been a few years since we moved out of the town. The Chennai city offered us with marvelous food, entertainment and connections. Basically being introduced to nothing other than parotta, naan and biryani., we were stunned by the array of burgers, pizzas, chaats and other various cuisines . However , when it comes to the basic ' bread' for morning breakfast, we longed for our own ' desi' bread.

       The Bakers of the city have an ' international' twist in their products. Cakes range from a wide variety of  cheese cakes to blueberry cakes., puffs, buns, rolls,etc., But Coronation Bakery has just cream cakes, plum cakes and Sponge cakes and that's it. Nothing more . Other than this they have bread and rusk.

       Having heard of my lofty descriptions of the place, a foodie friend of mine expected it to be posh one and visited it last year. But to her surprise it turned out to be dingy, crowded place overflowing with people of all classes. However the cakes and bread were such a revelation, she acknowledged. She has been in all praise for the Bakery. And now, whenever I visit my hometown, I have to carry a loadful of cakes and bakes for her along with mine. She rings me after receiving it with her mouth ful churning them. I used to say her one thing .."Eat or speak.. Do one thing at a time.. I cant understand."

         The smell of the warm loaves is so enduring. There is nothing like the aroma of the freshly baked bread , that we experience while passing the area around the place. It's comforting, uplifting and tends to activate our salivary glands. The smell is so irresistible that it invades with a ocean of happiness.

       Of late when I read one of the tweets of historian Sriram.V, speaking about the library of Saraswathi Mahal , Tanjore" After 25 minutes of wait to bill 7 books, I am told to give the exact change" ., I was reminded of Coronation Bakery. One of the peculiar  habits of the place is.. People thronging the place will be allowed with a ration of only half kg of rusk and have to queue for their share. If you need more , you have to go the end of the queue and come again for the extra amount. Moreover you have to tender the exact change such is the anomaly of the place.    

         The list would be incomplete if I had not mentioned the 'Christmas thatha' cakes, which are cream based 'khoa' moulded in Santa faces. Now I am writing this eating slowly ,savouring every bite of the plum cake, my husband has brought from the town yesterday. It is a divine experience to have it melting down your mouth.

Tuesday, January 19, 2016

வண்ணம் , நம் வீட்டிற்கு.


      
ஒவ்வொரு மனிதனுக்கும் மகிழ்ச்சி என்பது அவனுடைய வீட்டின் மையத்திலிருந்தே ஆரம்பிக்கின்றது. எங்கு சென்றாலும் வீடு திரும்பும் போது ஏற்படும் உற்சாகம் அளவில்லாத து. மகிழ்ச்சியோ கோபமோ விருப்பமோ நாம் எந்த மனநிலையில் இருந்தாலும் ,வீடு நம்மை உள்ளபடியே ஏற்றுக்கொள்ளும். அத்தகைய வீடு சொந்தமோ அல்லது வாடகையோ நமது மனதிற்குப் பிடித்த வித த்தில் அமைய வேண்டும் என்று அனைவரும் எதிர்ப்பார்ப்பது இயல்பு. பெரும்பாலோர் கட்டுமானத்தின் தரத்தை மனதில் கொண்டு கட்டிடம் வளரும் நிலையில் அதிகம் தலையிடுவதில்லை என்றாலும் வண்ணம் பூச வேண்டிய நிலை வந்தவுடன் தங்களின் ரசனைக்கேற்ப வண்ணம் பூச வேண்டும் என்பதில் தெளிவாய் உள்ளனர்.
            வீடு தரமானதாகவும், உறுதியானதாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் அதன் உட்புறம் மற்றும் வெளிப்புறம் அழகிய வண்ணங்களால் நமது மனதைக் கொள்ளை கொள்வதாகவும் திகழ வேண்டும். பச்சை, மஞ்சள், நீலம், ஆரஞ்சு, சிவப்பு என்று பல நூறு வண்ணங்கள் இருந்தாலும் வீடுகளை அழகுபடுத்தும் வண்ணங்கள் காலத்திற்கேற்ப ரசனைக்கேற்ப மாறி வருகிறது. கட்டி முடித்த வீட்டில் வண்ணம் பூசவது என்பது ஒரு முறையிலும், பழைய வீட்டில் வண்ணம் பூசுவது என்பது  மற்றொரு முறையிலும் இருக்கும். கட்டுமான செலவில் ஒரு குறிப்பிட்ட தொகை, அதாவது 8 முதல் 12 சதவீதம் வரை வண்ணம் பூசுவதற்கு ஆகும் என்பது நிபுணர்களின் கருத்து. 
               உரிய முறையில் வண்ணம் பூசாவிடில் வீட்டின் அழகு கெடுவதுடன் நமது பணமும் வீணாகும். சில சமயங்களில் வீட்டின் கட்டுமானத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்திவிடும். எனவே வண்ணம் பூசவதில் கவனம் தேவை. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையேனும் வீடுகளுக்கு வண்ணம் பூசுவது நல்லது. மேற்பாகத்தில் சிறுசிறு விரிசல்கள் ஏற்பட்டாலும், அவற்றில் காற்று புகாமல் தடுத்து, விரிசல் அதிகரித்து வீடுகளுக்கு சேதம் ஏற்படுவதை தடுக்கும் தன்மை 'பெயிண்ட்' களுக்கு உண்டு.
               வண்ணம் அடித்தல் என்பது.. வீட்டின் சுற்றுச்சுவர்கள், வெளிப்புற சுவர்கள், உட்புற சுவர்கள், சீலிங் என்னும் கூரை, கதவுகள், ஜன்னல்கள் மற்றும் ஜன்னல் கம்பிகள், மர சாமான்கள் மற்றும் தோட்டம் அமைந்தால் அதன் அலங்கார விளக்குகள் மற்றும் நாற்காலிகள் ..என்று இவை அனைத்திற்கும் தேவையாகும்.
                சுற்றுச்சுவர் என்பது மிகவும் இன்றியமையாத து. வீட்டின் அழகை எடுத்தியம்பும் சுற்றுச்சுவர்களுக்கு வண்ணம் பூசுவதில் கவனம் கொள்ள வேண்டும். நீண்ட காலம் மழையிலும் வெயிலிலும் நீடித்திருக்கும் வண்ணங்களைப் பூச வேண்டும். அதே போல வீட்டின் வெளிப்புற சுவர்களும் காற்று, மழை, வெயில், கடல் காற்று என அனைத்தையும் தாங்கி நீண்ட நாள் நிலைத்திருக்கும் வண்ணம் அமைய வேண்டும் . அவ்வாறான பிரத்யேகத் தயாரிப்புகள் அனைத்து இடங்களிலும் கிடைக்கின்றன. இப்போதெல்லாம் பளிச்சென்ற வண்ணங்களிலே பல வீடுகள் பளபளக்கின்றன. மிகவும் மென்மையான வண்ணத்தை பூசும் போது அவை எளிதில் நிறமிழந்து விடும். அதனாலேயே பளீர் வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் அந்த வண்ணத்தின் வெப்பத்தை கிரகித்து வெளியிடும் தன்மையையும் மனதில் கொண்டு வண்ணத்தை தேர்ந்தெடுப்பது நல்லது. அடர்த்தி வண்ணம் அதிகமான வெப்பத்தை உள்வாங்கி வைத்துக் கொள்ளும் பட்சத்தில் சிறுது மென்மையான வண்ணத்தைப் பூசலாம்.
                  வீட்டினுள்ளே வண்ணம் பூசும் போது அது வரவேற்பறையா, சமையலறையா, படுக்கையறையா அல்லது பூஜையறையா என்பதை கவனத்தில் கொண்டு வண்ணத்தைத் தீர்மானிக்கலாம். மேலும் அறையின் நீள அகலத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். சிறிய ஜன்னல்கள், தாழ்வான கூரை போன்றவை அறைகளை சிறியதாக காட்டக்கூடும். இதனைப் போக்கும் விதமாக வெளிர் நீலம், சாம்பல் நிறம் போன்றவற்றை பூசலாம். பளிச்சென்ற தோற்றம் வேண்டுமெனில் மஞ்சள் நிறம் பூசலாம். நீண்ட சுவர்களுக்கு வெளிர் நிறங்களும், அதனை ஒட்டி வரும் சிறிய சுவர்களுக்கு முரண்பாடான வண்ணங்களைப் பூசினால் அறை பெரிதாகத்தெரியும். சமயங்களில் தொனி திட்ட (tonal scheme)அடிப்படையில் அறைகளுக்கு ஒத்த வண்ணங்களை மேலே பாதியும் கீழே பாதியும் அடிக்கலாம். அதன் பின் கவனமாக திரைச்சீலைகளையும் ' பர்னிச்சர்' என்னும் மரசாமான்களை அதே நிறங்களை ஒட்டி தேர்வு செய்தால் அறைகள் அழகுறும்.
                    வண்ணம் பூசவது என்பது வெளிர் நிறங்கள், அடர்நிறங்கள், முரண்பாடான நிறங்கள் என்ற நிலையிலிருந்து மாறி தற்போது ' டெக்ஸசர்(textured)' மற்றும் ' வால் பட்டர்ன்(wall pattern)' என்று சந்தையில் வண்ணங்கள் கிடைக்கின்றன். இதனைக் கம்பெனிகளைச் சார்ந்த பயிற்சி பெற்ற வல்லுனர்கள் பூசுவர். இதற்கான உபகரணங்களை அவர்களே கொண்டு வருகின்றனர். ஒரு பக்க சுவருக்கு அல்லது அறையெங்கும் இது போன்ற டிசைன்களில் வண்ணம் பூசிகின்றனர். சிலர் அழுக்குறாமல் இருக்க  வேண்டும் என்பதற்காக பளப்பளப்பான வண்ணங்களைப்(glossy paint) பூசுகின்றனர். இது பூசப்பட்ட சுவர்களை சுத்தப்படுத்துவது எளிது.
                       குழந்தைகளின் அறைகளுக்கு சிலர் கார்ட்டூன் தீட்டுகின்றனர். இப்போதெல்லாம் பள்ளிகளிலும், மருத்துவமனைகளிலும் இது போன்ற கார்ட்டூன்கள் இடம் பெறுகின்றன. இணையத்தில் இணைந்திருந்தால் புதுமையான யோசனைகள் பல கிட்டும். சமீப காலமாக செயலிகள்(app) மூலமும் வண்ணம் பூசுவதற்கான யோசனைகளைப் பெற முடிகின்றது. கதவுக்களுக்கு மற்றும் மரச்சாமானகளுக்கு பாலிஷ் போட்டாற் போன்ற பெயிண்ட் களும் கிடைக்கின்றன. சமையலறைகளில் அலமாரிகளுக்கு வண்ணமயமான வண்ணங்களைப் பூசலாம். புதுமையாக இருக்க வேண்டுமெனில் அலமாரியின் வெளியே ஒரு வண்ணமும் உள்ளே ஒரு வண்ணமும் பூசலாம். தோட்டம் அமைத்தோமெனில் அங்கு அமைக்கும் நாற்காலிகளுக்கும், அலங்கார விளக்குகளுக்கும் அழகிய வண்ணங்களைப் பூசலாம். குழந்தைகள் உள்ள வீட்டில் ஏதேனும் ஒரு சுவற்றில் கரும்பலகைக்குரிய வண்ணம் பூசலாம். இதனால் குழந்தைகள் சுவற்றில் கிறுக்குவதைத் தவிர்த்து கரும்பலகையில் எழுதி மகிழ்வர். கட்டிடத்தின் கூரையைப் பொறுத்த வரை வெள்ளையையே அனைவரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் சில இடங்களில் பிற வண்ணங்களையும் இப்போது சிலர் பயன்படுத்துகின்றனர்.
                ஆக, உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர் அதன் அழகில் மயங்கி 'வாவ்' என பிரமிக்கத் தேவை அழகிய வண்ணம் பூசிய வீடு, அதற்குத் தேவையான புத்திசாலித்தனமான வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பதும் தான். வீட்டை ஒவ்வொரு கணமும் நேசிக்கும் மக்கள் அதனை தாங்கள் தேர்ந்தெடுக்கும் ரசனைமிக்க வண்ணம் மூலம் வெளிப் படுத்துகின்றனர்.      

     

Wednesday, January 13, 2016

சொன்னது சரியா???

ஆயாசமூட்டும் நாட்டு நடப்புகள்

தார்மீக க்கோபம் என்று சொல்வார்களே! இன்றைய நடப்புகளைப் பார்த்தால் அது தான் ஏற்படுகிறது. அதிர்ச்சி தரும் சம்பவங்கள் பலவற்றை தினந்தோறும் நாளிதழ்களில் படித்தாலும் சமீபத்தில் அதிர்ந்த விஷயம்...
       குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஒன்றை அமல்படுத்த அரசு முடிவு செய்தது. அதன் செயல்திட்டமும் வழிகாட்டுதலும், நடைமுறைப்படுத்தலும் என்ன லட்சணத்தில் உள்ளது என்பதைப் பாருங்கள்.ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையான கோயம்பேட்டில் நாள்தோறும் நூறு டன் வரை காய்கறி, பழங்கள், பூ அகற்றப்படுகின்றன. விழா மற்றும் பண்டிகைக் காலங்களில் இந்த கழிவின் அளவு மூன்றிலிருந்து நான்கு மடங்கு வரை அதிகரிக்கும். அந்த திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்று 2006ஆம் ஆண்டில் சுமார் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் திட்டம் தொடங்கப்பட்டது.
          திடக்கழிவுகளை இயந்திரங்களில் இட்டு அதிலிருந்து உருவாகும் மீத்தேன் வாயுவை சுத்திகரித்து ஜெர்மானிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தினமும் 500 முதல் 1200 யுனிட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்ததாம்.
          சரி, பாராட்ட வேண்டிய விஷயம் தானே! இதில் கோப ப்பட என்ன இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். இந்த இயந்திரத்தின் மூலம் 2500 யுனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய இயலுமாம். என்றாலும் பழுது ஏற்பட்டுவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு 300 முதல் 500 யுனிட் வரை மின்சார உற்பத்தி செய்து வந்தார்களாம். இது என்ன மாதிரியான ஒரு மனநிலை? ஒரு பொருளின் அதிகபட்ச வெளியீட்டை சீராக நிர்வகித்து அதனால் பயனடைவது தானே புத்திசாலித்தனம். அதை விடுத்து அது பழுதாகிவிடும் என்று அதன் திறனில் கால பங்கு வெளியீட்டைக் கூட பெறாமல் இருப்பதை என்னவென்று கூறுவது?? இதைப் படித்தவுடன் ஒரு சிறிய புள்ளிவிவரம் எனக்கு நினைவுக்கு வந்தது. மக்கள்தொகையின் 3 சதவீத்த்தினரே விவசாயம் செய்யும் அமெரிக்கா ,65 சதவிகித விவசாயிகளைக் கொண்ட நமக்கு உணவுப் பொருளை ஏற்றுமதி செய்கிறது. எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை உதாரணத்திற்கு இழுக்கும் நாம் குறைந்த உள்ளீட்டில் நிறைந்த வெளியீட்டை வெளிக்கொணரும் பாடத்தை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் நாம் செய்வதென்னவோ எதிர்ப்பார்க்கப்படும் வெளியீடுகளை விட கம்மியாக தயாரித்தாலும் அதிலேயே திருப்தி அடைந்து விடுவது தான்.
      அதை விடுவோம், அடுத்ததற்கு வருவோம்.. அந்த இயந்திரத்தில் காயகறிக்கழிவுகளை தரம் பிரித்து போட வேண்டுமாம். இல்லையென்றால் மீத்தேன் வாயுவுடன் சேர்ந்த பிற வாயுக்களும் வெளியேறி இயந்திரம் பழுதாகிவிடும் விடுமாம். இவ்வாறு கவனமாக கையாளப்பட வேண்டிய ஒரு செயல்  மெத்தனமாக, தரம் பிரித்து கையாளப்படாமல், இயந்திரத்தில் அடிக்கடி பழுது ஏற்படுகிறதாம். என்ன ஒரு அஜாக்கிரதை??
      2011 -2014 வரை மின் உற்பத்தி நடைபெறவில்லை. சரி, இதோடு விட்டதா!? 2014 ஆம் ஆண்டு செக் குடியரசு நாட்டிலிருந்து புதிய கருவி வரவழைத்து மீண்டும் தொடங்கப்பட்டது. எல்லாம் சில நாட்களுக்குத்தான் . இய்நதிரம் மீண்டும் பழுதுபட்டது. இப்போது ஏழெட்டு மாதங்களாக இயந்திரம் பழுது பார்க்கப்படவில்லை. ஆகையால் 5கோடியே50லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட திட்டம் இப்போது தூங்குகிறது. கிராம்ப்புறங்களில் இப்படி யாராவது பணத்தை வெட்டியாக செலவழித்தால்,' உங்கப்பன் வீட்டு காசா??? அவனா கொடுப்பான்??' என்று கோப்ப்படுவார்கள்.
         சரியான வழிகாட்டுதலும், பராமரிப்பும் இல்லாத தால் தொடர்ச்சியாக மின்சாரம் தயாரிக்க இயலவில்லை என்பது தெளிவு. இப்படித்தான் அரசு தான்தோன்றித்தனமாக, கண்மூடித்தனமாக தன் பணத்தை செலவு செய்கிறது. மக்களின் வரிப்பணத்தை இவ்வாறு சூறையிடுவதை என்னவென்று கூறுவது?
           சுற்றுச்சூழல் பேண, நலிந்த மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட, சுகாதார சீர்கேட்டை தவிர்க்க என்று அரசு பல திட்டங்களைத்தீட்டுகிறது. தீட்டி அதற்கான நிதி ஒதுக்குவதில் இருக்கும் தீவிரம் அதை செயல் படுத்தும் போது காணாமல் போய்விடுகிறது. ஏட்டளவில் இருக்கும் திட்டங்களில் எப்படி பலனை எதிர்பார்க்க முடியும் ? அரசு கூறும் புள்ளி விவரங்கள்- எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டது என்ற செவிவழி கருத்துக்களுடன் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்.
             சில சமயங்களில் அரசு பொதுமக்களுக்காக வகுக்கும் திட்டங்கள் குறித்து சரியான புரிதல் இல்லை என்பது கண்கூடு. பொது விநியோகத்தின் கீழ் வழங்கப்படும் இலவச அரிசி முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்ற கேட்கப்பட்டால் ,இல்லை என்று நூறு சதவீதம் உறுதிபட கூற முடியும். தெரு வோர சிற்றுண்டிக் கடைகளும் ,சிறிய உணவு விடுதிகளுமே இதனால் லாபம் அடைகின்றன. எதையுமே இலவசமாகப் பெற்றால் அதன் அருமை அவர்களுக்குத் தெரியாது. அதே போல் இலவசமாக்க் கொடுக்கும் பொருள்களின் தரத்தில் கொடுப்பவர்  சமரசம் செய்து கொள்வார்.இதை மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
           வண்ணத்தொலைக்காட்சிப்பெட்டி, எரிவாயு இணைப்பு அடுப்பு, மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், மடிக்கணினி, சைக்கிள், சேலை, வேட்டி என்று அரசு வழங்கும் இலவசப் பொருட்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இலவசங்களைப் பெற்றுக் கொள்ள கை கூசும், மனம் வெட்கப்படும் என்று சிறிய வயது கதைகள் மற்றும் பாடங்களில் படித்த ஞாபகம். ஆனால் இன்றைய மனநிலை என்ன? " கப்பல்ல பொண்ணு ஓசியில வருதா?? அப்ப.. எனக்கொண்ணு., எங்கப்பனுக்கு ஒண்ணு..." என்ற கதை தான். இது போன்ற இலவசங்கள் எல்லாம் ஆட்சியில் அமர்ந்து மக்களின் வரிப்பணத்தை நாங்கள் வீண்டிப்பதை நீங்கள் கண்டுகொள்ளக்கூடாது என்ற சூசக அறிவிப்புக்கு கொடுக்கப்படும் கையூட்டு போலும். 
          இலவசங்கள் வேண்டாம்., ஆட்சியிலிருப்பவர்களும் சரி, அரசு ஊழியர்களும் சரி த த்தமது கடமைகளை செவ்வனே ஆற்றினால் போதும் என்று மக்கள் அறிவிக்கும் காலம் என்று வருமோ அன்று தான் ஏழை எளிய மக்களின் வாழ்வு மேம்பாடு அடையும். அது வரை நாளிதழ்களை வாசித்து பிபி எகிறி ,எதிர்படுபவர்களிடம் நாட்டு நடப்பைப் பற்றி புலம்பி ஆயாசமடைவதைத் தவிர வேறு வழியில்லை. 

Monday, January 11, 2016

நோட்டம்

தெருக்கோடியில் நின்று டீ குடித்தவாறு நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர் காசியும், கபாலியும். அந்த தெருவில் எதிரும் புதிருமாக மொத்தம் இருபது வீடுகள். சைக்கிளில் இரு முறை சுற்றி வந்தனர்.
          இருபது வீடுகளில் ஆறு வீடுகளில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்கின்றனர். குழந்தைக் இல்லை. இருந்தாலும் பள்ளிக்கு சென்று விடுகின்றனர். இவர்களது வீடுகள் பகலில் பூட்டியே இருக்கும். மாலையில் ஆறு மணிக்கு மேல் வீடு திரும்புகின்றனர்.
           நான்கு வீடுகளில் மிகப் பெரிய குடும்பங்கள் வசிக்கின்றன. கூட்டுக்குடும்பம். வீடு ஜே..ஜே என்று இருக்கும்.எப்போதும் திறந்தே கிடக்கும் இந்த வீடுகளில் ஆட்கள் வருவதும் போவதுமாக இருக்கும். உள்ளே நுழைந்து விடலாம்., ஆனால் யார் கண்ணிலாவது பட்டு விடும் அபாயம் உள்ளது.
           இரண்டு வீடுகளில் வயதான பெரியவர்கள் கணவன் மனைவி மட்டும் தனியாக வாழ்கின்றனர். அவர்களின் வீட்டில் எந்நேரமும் டிவி அலறும். காலிங் பெல் அடித்தால் கூட கேட்காது. அப்படியே கேட்டாலும் கால் மணி நேரம் கழித்து தான் வந்து கதவைத் திறப்பார்கள். 
            ஒரு வீட்டில் காலேஜ் ஸ்டூடெண்ட்ஸ் ஐந்தாறு பேர் சேர்ந்து தங்கியுள்ளனர். இரவெல்லாம் லைட் எரியும். பேச்சும் கும்மாளமுமாய் இருக்கும். சிரிப்புச் சத்தம் எந்நேரமும் கேட்கும். 
            இப்படி ஒவ்வொரு வீடாக நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர் கபாலியும், காசியும். யாருக்கும் அவர்கள் மீது சந்தேகம் வரவில்லை. இரவில் மாரி அண்ணனிடம் சொல்லி காரியத்தை முடித்து விட்டு காசு வாங்கிக் கொள்ளலாம் என்று பேசியவாறு அங்கிருந்து அகன்றனர்.
            ஏழு மணி இருக்கும். மாரி வீட்டு வாசலில் போய் இருவரும் நின்றனர்." அண்ணே... அந்தத் தெருவில் மொத்தம் முப்பது ஓட்டு இருக்குண்ணே.. எல்லோருக்கும் ரூபா கொடுத்து மடக்கிறலாம். ஆனா அந்த தாத்தா பாட்டி இருக்கிற வீடு மட்டும் வேண்டாம்..அவர் கம்பெயிண்ட் எழுதிப் போட்ருவாரு..." என்றபடியே தலையை சொறிந்தனர்.
         கவுன்சிலர் மாரி நான்கு நூறு ரூபாய்களை நீட்டி," சரி.. சரி.. நாளைக்கு இன்னும் இரண்டு தெருக்களை நோட்டம் விடுங்கடா.." என்றான்.
     " சரிண்ணே..." என்றபடியே 'டாஸ்மாக்' நோக்கி சிட்டாகப் பறந்தனர் இருவரும்.

Saturday, January 9, 2016

இலவசம் அல்ல...


"என்னப்பா இன்றைக்கு கீரை என்ன விலை?"
" இன்றைக்கு விலை ஜாஸ்திம்மா...ஏதோ லாரி ஸ்டிரைக்காம்.. கீரைக்கட்டு வர்றதுக்கே இம்மாம் நேரமாயிருச்சு..கொஞ்சமா வேற இருக்கு.. லேட்டாயிடுச்சு..இன்னும் நாலைஞ்சு தெரு போனா தான் முழுசையும் விக்க முடியும்..." என்று அங்கலாய்த்தான் கன்னையன்.
ஆனந்தி அவனிடம் தினமும் கீரை வாங்குவாள். கள்ளமில்லாமல் வெகுளியாய்ப் பேசும் அவனுடைய இயல்பு அவளுக்கு மிகவும் பிடிக்கும். அவனிடம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். எல்லாவற்றிற்கும் அவனிடம் ஒரு விளக்கம் இருக்கும். இது போன்ற எளிய மக்கள் தான் உண்மையான அன்பு காட்டுபவர்கள் என்பது அவளது எண்ணம்.
அன்று அப்படித்தான் ..பேச்சுவாக்கில் சொன்னான்," இப்போ முன்னே மாதிரி இல்லை. ரொம்ப நேரம் நடக்க முடியலை. ஆனா நான் வியாபாரம் பண்ணலைன்னா வீட்டுக்கு பாரமாயிடுவேன்.." என்று வருந்தினான். அவனுடைய பிள்ளைகள் நல்ல வேலையிலிருந்தாலும் தான் சும்மா இருக்கக்கூடாது என்ற திடமான எண்ணத்தில் வேலை செய்து வருகிறான்.
மறுநாள் ஆனந்தி அவனுக்கு ஒரு சைக்கிள் வாங்கி வைத்துக் காத்திருந்தாள். " கன்னையா.. நீ இனி இதில் போகலாம் உனக்கு சுலபமாய் இருக்கும்." 
" இல்லீங்கம்மா.. உங்களுக்கு எதுக்கு வீண் சிரம்ம்! ??ஐயாவுக்கு இது தெரியுமா?? நீங்க இப்படி செலவு செய்தால் உங்களுக்கு கஷ்டமாயிரும்... நான் வாங்கினால் அது தப்பு..." என்று மறுத்தான்.
" கன்னையா ..நீ நினைப்பது போல் இது இலவசம் இல்லை. இந்தப் பணம் பழைய நாளிதழ்களைப் போட்டு நான் சிறுக சிறுக சேமித்த பணம்.. இதை நீ வாங்கிக்கொண்டுஎனக்கு இலவசமாய் காய்கறிகள் கொடுத்து கடனை அடைக்கலாம். எனக்கு இதனால் லாபம் தான். கொஞ்ச நாட்களுக்கு இலவசமாய் காய்கறி கிடைக்குமல்லவா??!!" என்று புன்னகைத்தாள்.
கன்னையனுக்கு கண்களில் நீர் தளும்பிற்று." ஆனா.. நீ பேரம் பேசக்கூடாது.." என்று சிரித்துக்கொண்டே கூறியபடி சைக்கிளைப் பெற்றுக்கொண்டான்.

கோபம்.


சுந்தரம் ஓய்வு பெற்ற பேராசியர். அவருடைய பொழுது போக்கே நாளிதழ்கள் வாசிப்பது தான். தமிழில் இரண்டு ,ஆங்கிலத்தில் இரண்டு என்று நாளிதழ்கள் வாங்குகிறார். 
      நாள் முழுக்க அவற்றில் மூழ்கிக் கிடக்கும் அவருக்கு அவை கொஞ்சம் கசங்கி வந்தால் கூட பிடிக்காது. புத்தம் புதுமலர் போல அவை கொஞ்சம் கூட கசங்காமல் இருக்க வேண்டும் என்று எண்ணுவார்.
      ஆனால் இரண்டு நாட்களாக கடும் கோபத்தில் இருக்கிறார். ஒன்றுமில்லை...நாளிதழ் போடும் பையன் இரண்டு நாட்களாக அவற்றை பூஞ்செடிகளின் மீது வீசி விட்டு போய்விட்டான். அவை தண்ணீர் பட்டு நனைத்து விட்டன. மனைவி கமலாவிடம் கோபமாக கத்தினார்," நீ சொல்லக்கூடாதா? இதையெல்லாம் பார்க்க மாட்டாயா? " என்று. அவருக்கே தெரியும் அவள் என்ன செய்வாள் பாவம் என்று. அதிகாலையில் அடுக்களையில் அல்லவா அவள் இருப்பாள்!
       அவளைச் சொல்லி குற்றமில்லை. நாமே அவனைக் கையும் களவுமாகப் பிடிப்போம் என்று எண்ணி அதிகாலை ஐந்தரை மணிக்கே எழுந்து காத்திருந்தார். ஆறு மணிக்கு சைக்கிளில் மணி அடித்தவாறு வந்த பதினான்கு வயது சிறுவன் ஒருவன் நாளிதழ்களை தூக்கி வீசினான். அவனைப் பாய்ந்து சென்று பிடித்தார். 
        " என்ன இது?" என்று கோபமாக்க் கேட்டார். சிறுவன் பயந்து விட்டான்." ஸாரி சார்..எங்கம்மாவுக்கு இரண்டு நாட்களாக உடம்பு சரியில்லை. அவங்களுக்கு சமைச்சு வைச்சுட்டு நான் ஸ்கூலுக்குப் போகணும். அதனால் தான் இப்படி அவசரமாக தூக்கி எறிந்து விட்டேன். மன்னிச்சுக்கோங்க சார்.. இனி கவனமாக இருக்கிறேன்."
            சுந்தரத்திற்கு மனம் இளகிவிட்டது. " சரி, சரி.. பரவாயில்லை. நாளை நானே வந்து வாங்கிக்கிறேன். நீ போய் உங்கம்மாவை கவனி..." என்றார்.
             மறுநாள் காலையிலேயே நாளிதழ் போடும் சிறுவனுக்காக ஆவலுடன் காத்திருக்கும் கணவனை வியப்புடன் பார்த்தாள் கமலா.