Tuesday, October 13, 2015

மனம் கவர்ந்த வீடு




மாதம் ஐந்தாயிரம் சம்பளம் வாங்குபவரானாலும் சரி, ஐந்து லட்சம் சம்பளம் வாங்குபவரானாலும் சரி சொந்த வீடு ஆசை கட்டும் இல்லாதவர் இந்த உலகில் இல்லை. பெரிய மாடமாளிகையோ சிறிய ஓலைக்குடிசையோ .. வீடு கட்டும் பாக்கியமும் அதற்குரிய சூழ்நிலையும் நம்மில் எத்தனை பேருக்கு அமைகிறது?! பொதுவாக எல்லோருக்கும் தன்னுடைய நடு வயதில் தான் வீடு கட்டும் எண்ணமே முளை விடும். அதன் பிறகு அதனை செயல்படுத்த இன்னும் கொஞ்சம் காலம் எடுத்துக் கொள்வர். ஆனால் என்னுடைய முப்பத்திரண்டாவது வயதிலேயே எங்களுக்கு அந்த யோகம் கிட்டியது. எங்களுக்கு திருமணமாகி ஏழாவது ஆண்டிலேயே நாங்கள் வீடு கட்ட ஆரம்பித்தோம்.
      இளம் வயது என்றாலும் எனக்கும் என் மனைவிக்கும் அப்போதே அதன் மீது அதீத ஆர்வம். வீடு செங்கல் கட்டடமாக உயரும் போதே வீட்டை சுற்றி மரங்கள் நட்டேன். அவை வெகு சீக்கிரமே வளர்ந்து நிழல் கொடுக்க ஆரம்பித்து விட்டன. மேஸ்திரி சுத்தி மரம் இருப்பதால் வெயில் தெரியாம வேலை பாக்க முடியுது என்பார். போரிங் போட்டு தண்ணீர் உள்ள இடத்திலேயே நாங்கள் வீடு கட்டியதால் கட்டிட வேலை, மரங்கள் இரண்டிற்குமே தண்ணீர் போதுமானதாக இருந்தது. வீடு மெது மெதுவாக வளர்ந்தது. அதன் ஒவ்வொரு வளர்ச்சியையும் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டேன். வானம் தோண்டியது,நிலை தூக்கியது, தட்டோடு போட்டது , பெயிண்ட் அடித்தது என்று அனைத்தையுமே புகைப்படம் எடுத்து வைத்துள்ளேன். இன்றும் அவ்வப்போது எடுத்துப் பார்த்து மகிழ்வேன். 




      வீடு கட்டி முடித்தாயிற்று.. அதற்கு என்ன பெயர் பெயர் வைக்கலாம் என்று நானும் என் மனைவியும் நீண்டதொரு ஆராய்ச்சி செய்தோம் . Dream castle என்று வாயில் நுழையாத பெயர்களை எல்லாம் அவள் கூறினாள். எனக்கு என்னவோ என் இல்லாளின் பெயர் தான் பிடித்தது. அதனால் முருகேஸ்வரி இல்லம் என்று முடிவு செய்தேன். வீட்டில் வேலை செய்த மேஸ்திரி , சித்தாள், ஆசாரி, பெயிண்டர் என்று அனைவருக்கும்  துணிமணி எடுத்துக் கொடுத்து ஒரு நாள் விருந்து வைத்தோம். 
      பால் காய்ச்சுவதையும் மிக விமரிசையாக செய்தோம்.உறவினர்கள் அனைவரையும் அழைத்தோம். அனைவரும் வந்து வாழ்த்தி விட்டு சென்றனர். இப்போது தான் உன் திருமணத்திற்கு வந்தோம் அதற்குள் மறுபடியும் எல்லோரையும் அழைத்து விட்டாயே என்று மகிழ்ந்து கூறினர். பால் காய்ச்சும் ஃபங்ஷன் இனிதே  முடிந்தாலும் வீட்டில் வைத்திருந்த டேப் ரிக்கார்டர் அப்போது தொலைந்து விட்டது. முதலில் மனம் சஞ்சலம் அடைந்தாலும் ஏதோ திருஷ்டி ...இப்போது இந்த சம்பவத்தினால் கழிந்து விட்டது என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.
       இப்போது நாங்கள் வீடு கட்டி முடித்து சுமார் இருபது வருடங்கள் ஆகிவிட்டன. என்றாலும் எங்கள் இல்லம் இன்றும் புத்தம் புதியது போல் காட்சி அளிக்கின்றது. ஹால் பெரியதாக அமைந்தபடியால் நான் என் குழந்தைகளின் பிறந்த நாள் பார்ட்டிகள், நண்பர்கள் கெட் டுகதர் அனைத்தையும் அங்கேயே வைத்துக் கொள்வேன்.
        இப்போதெல்லாம் வீடு கட்டி முடிந்தவுடன் landscaping artist இடம் சென்று விடுகிறார்கள். ஆனால் நான் அப்போதே என் தோட்டத்தை வடிவமைத்தேன். சிறு வயதிலேயே மரம்செடி வளர்ப்பதிலும் செல்லப்பிராணிகள் வளர்ப்பதிலும் எனக்கு ஆர்வம் அதிகம். அந்த ஆர்வம் நான் வீடு கட்ட ஆரம்பித்தவுடன் ஆல் போல் தழைத்தோங்கியது. வீட்டின் வலப்புறத்தில் புல்வெளியும் இடது புறத்தில் பூஞ்செடிகள் கொண்ட பூந்தொட்டிகளை வரிசையாக அடுக்கி வைத்தேன். மிகப் பெரிய சிமெண்ட் தொட்டிகள் வாங்கி அவற்றில் மீன்கள் வளர்க்கின்றேன். பூக்கள் போன்ற வடிவுடைய அந்த தொட்டிகள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்.அதில் அல்லி மலர்கள் வளர்த்தேன். ஏனோ அவை நீண்ட நாள் நிலைக்கவில்லை. மீன்கள் இருப்பதால் அந்தத் தொட்டிகளை குழந்தைகள் விரும்பிப் பார்ப்பர்.
          மா, தென்னை, பலா, சாத்துக்குடி, எலுமிச்சை, மாதுளை, கொய்யா, ப ப்பாளி என்று அனைத்து வகை மரங்களையும் வீட்டைச் சுற்றி நட்டு வைத்துள்ளேன். என்னுடைய பேராசைக்கு என் வீட்டை சுற்றியுள்ள இடம் போதவில்லை. எங்காவது வெளியூர்களுக்குச் சென்றால் கட்டாயம் நர்சரிக்குச் செல்வேன் . இப்பொழுதெல்லாம் மரக்கன்றுகள் வாங்குவதில்லை. பூஞ்செடிகளோடு சரி. மரங்கள் அதிகம் இருப்பதால் வீட்டைச்சுற்றி அடர்த்தியாக நிழல் உள்ளது. வெயில் இல்லை. இதனால் துணிமணி காயப்போட மிகவும் கடினமாக உள்ளது என்று என் மனைவி புகார் வாசித்துக் கொண்டே இருந்தாள். பின்னர் மொட்டை மாடியில் காயப்போட தொடங்கி விட்டாள்.
            வீட்டிற்கு யார் வந்தாலும் எங்கள் தோட்டத்தின் அழகில் மயங்கி அதனை சுற்றிப் பார்த்த பின்னரே உள்ளே நுழைவார்கள். பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள் என்று இப்போது வலியுறுத்தப் படுகின்றது. வாட்ஸ் அப் பில் கூட குறுஞ்செய்திகள் வருகின்றன. ஆனால் நான் அப்போதிருந்தே என் தோட்டத்தில் மூன்று இடங்களில் பறவைகளுக்காக தண்ணீர் ஊற்றி வருகிறேன். 

        சிவகாசியில் மயில்கள் அதிகம் இருக்கின்றன. எங்கள் வீடு சோலை வனம் போல இருப்பதால் அவை அடிக்கடி விஜயம் செய்யும்.
" கிளி கொஞ்சிப் பேச..
கருங்குயில் இசை விருந்து நல்க..
வண்டுகள் நீண்ட ரீங்காரம் செய்து பாடச..
சோலையில் அடியெடுத்து ஊன்றி உடல் புளகித்து ஆடும் மயில்நடனத்தால்...
தென்றல் உலவும் சோலையே  சிலிர்க்கிறது."  என்று நான்
 எங்கேயோ படித்த வரிகளுக்குச் சான்றாக  இப்போது என் வீடு திகழ்கின்றது.
     மழை பெய்தால் இடம் மிகவும் ரம்யமாய் இருக்கும். எனக்கு வேறு எதுவும் தேவையில்லை ..பார்க்க இது ஒன்று மட்டும் இருந்தால் போதும் என்று பாடத்தோன்றும். முன்பெல்லாம் குழந்தைகளுடன் மழையில் குளித்து மகிழ்வேன். மறுநாள் குழந்தைகளுக்கு வரப்போகும் காய்ச்சலை எண்ணி என் மனைவி கவலைப்படுவாள். ஆனால் மழையில் நனையும் இன்பம் அவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில் உறுதியாய் நிற்பேன்.
      வீட்டின் அருகிலேயே கிணறு ஒன்றும் உள்ளது. அதில் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும். மோட்டார் போட்டும் குளிக்கலாம். நீந்தியும் மகிழலாம். அதற்காகவே உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரும் வருவார்கள். குடும்பத்தில் உள்ள அனைவரும் கிணற்றில் தான் நீந்தக் கற்றுக்கொண்டோம். இப்போது மூன்றாவது தலைமுறை அந்தக்கிணற்றில் விடுமுறை நாட்களில் நீந்தக் கற்றுக் கொள்கிறது. சைக்கிள் ஓட்டப் பழகுவதற்கும் வீட்டின் அருகில் உள்ள இடம் ஏதுவாயிருக்கும். என் மகள்கள் இருவரும் அப்படித்தான் ஓட்டக் கற்றுக்கொண்டார்கள்.
     இப்படியாக என் உள்ளம் கவர்ந்த என் வீட்டைப் பற்றி நான் கூறிக்கொண்டே போகலாம். எங்கள் சிந்தனையில் உதித்த எங்கள் சித்தமாக உள்ள எங்கள் வீடு என் மனைவி முன்பே கூறியது போல் ட்ரீம் காஸில்( dream castle) தான். மனைவி சொன்னால் மறுக்க முடியுமா?


                 
               


       

Monday, October 12, 2015

எனக்குப் பிடித்த வீடு




கதவு பற்றிய புகைப்படக்கட்டுரை ஒன்றை தி இந்து ஆங்கிலத்தில் வாசித்துக்கொண்டிருந்தேன். ஜெய்ப்பூரில் உள்ள பாரம்பரியம் மிக்க வீடுகளின் கதவுகளைப் பற்றி அதன் ஆசிரியர் சிலாகித்து எழுதியிருந்தார். உடனே எனக்கு என் அம்மா வீட்டின் கதவு நினைவுக்கு வந்தது.
        சிவகாசியில் நான் பிறந்தேன். எனக்கு சுமார் பன்னிரெண்டு வயது இருக்கும் போது என் தந்தை எங்கள்
 வீட்டைக் கட்டினார். வீட்டின் ஒவ்வொரு வளர்ச்சியையும் என் தந்தை ரசித்து ரசித்து கட்டுவதையும், அதைப்பற்றி அனைவரிடமும் பெருமை பொங்க பேசுவதையும்  நான் சிறு வயதில் கண்டு வியந்திருக்கிறேன். வீட்டில் மார்பிள் தரை போட்டிருந்தோம். அதை வாங்குவதற்கு அந்தக் காலத்திலேயே என் தந்தை, ஆசாரி, இன்ஜினியர் மூவரும் ராஜஸ்தான் வரை சென்றனர். ஆசாரி திரும்பி வந்தவுடன் என் தந்தைக்கு ஒரே புகழாரம் தான், தான் எத்தனையோ வீடுகளில் வேலை செய்திருந்தாலும் தன்னை யாரும் இந்த அளவுக்கு மதித்து ஊருக்கு அழைத்து போய் மரியாதை செய்ததில்லை என்று நெகிழ்ந்து கூறினார்.
         வீட்டின் எல்லாம் கதவுகளும் வேலைப்பாடு மிக்கதாய் தான் இருந்தன என்றாலும் நிலைக்கதவு மிகவும் அழகிய வேலைப்பாடு கொண்டதாய் இருக்கும். ஆசாரி அக்கதவுகளை செதுக்கி செதுக்கி செய்த நாட்கள் இன்றும் என் நினைவிலாடுகின்றன. பாலிஷ் போட்டு சும்மா பளபளவென்று மின்னும். அப்போதெல்லாம் எங்கள் வீட்டிற்கு வருபவர்கள் கதவு மிகவும் அழகாய் இருக்கின்றது என்று கண்டிப்பாய் பாராட்டி விட்டு செல்வார்கள். திருஷ்டி படுகின்றது என்று என் அன்னை கதவின் மேல் ஒரு சிறிய நிலைக்கண்ணாடி ஒன்றை மாட்டி வைத்தார்கள். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கூட சமீபத்தில்," கதவும் ஜன்னலும்  வீட்டின் அடையாளங்கள் மட்டும் அல்ல.அவை பண்பாட்டின் சின்னங்கள்." என்று எழுதியிருந்தார்.




       நாங்கள் நால்வர். எங்கள் உலகமே அந்த வெராண்டாவில் தான் சுழலும். அனைவரும் ஒரே பள்ளியில் படித்ததால், மாலையில் பள்ளி விட்டு வந்தவுடன் அவரவர் வகுப்பில் என்னென்ன நடந்தது என்று வெராண்டாவில் உட்கார்ந்து விவாதிப்போம். வெராண்டாவின் கிரில்கள் மிகவும் வித்தியாசமானவை. என் தந்தை தெய்வ பக்தி மிக்கவர். கிருஷ்ணர் அபிமானி. எனக்கு கூட அதனாலேயே அந்த பெயரையே வைத்துள்ளார். அவருடைய அந்த அபிமானம் எங்கள் வீட்டு  கிரில்களில் பிரதிபலித்தது. வீடெங்கும் கிருஷ்ணர் நீக்கமற கிரில்கள் மூலம் நீக்கமற நிறைந்திருப்பார். வாசலில் மிகப்பெரிய குத்துவிளக்குகள் இரண்டு, பக்கத்து கிரில்களில் ராதையுடன் கிருஷ்ணரும், ஊஞ்சலாடும் குழந்தைக் கிருஷ்ணரும் இருக்கும். அந்த வெராண்டாவிற்கு ஜன்னல்கள் கிடையாது. கிரில்கள் மட்டுமே. அதனை ஒரு ஆர்டிஸ்ட்  மூலம் வரைந்து பின் கிரில் செய்பவரிடம் கொடுத்து ஸ்பெஷலாக டிசைன் செய்ததாக என் தந்தை கூறியுள்ளார். அதைப் பற்றி அவ்வளவு பெருமை அவருக்கு. புதிதாய் வீடு கட்டுபவர்கள் கிரில் டிசைன் மிகவும் அழகாய் இருக்கிறதென்று வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு போன சம்பவங்களும் உண்டு. 
      நிலா ஒளியுயோடு வரும் போது லட்சக்கணக்கான நட்சத்திரங்களையும் கொண்டு வருவதைப் போல அந்த கிரில்களுடன் கலந்த நினைவுகள் பல வந்து மோதுகின்றன.கிரில்கள் எத்தனைதான் அழகாய் இருந்தாலும் அவற்றால் என் அன்னைக்கு ஒரு கஷ்டம் ஏற்ப்பட்டது. அவற்றைத்துடைப்பது கடினமாயிருந்தது. நுணுக்கமான வேலைப்பாடுகளை அவை கொண்டிருந்தமையால் தூசியை அகற்றுவது கடினமாயிருந்தது. ஆனால் என் அன்னை ஓர் உபாயம் செய்வார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் கிரில்கள் , கதவுகள், ஜன்னல்கள் ஆகியவற்றை நாங்கள் துடைத்து சுத்தம் செய்தால் மாலையில் அனைவரையும் திரைப்படத்திற்கு அழைத்துச் செல்வதாக உறுதியளிப்பார்கள். தியேட்டர் வீட்டின் அருகிலேயே இருந்தது. நாங்கள் அனைவரும் அத்தனை சுட்டி..விரைவிலேயே முடித்து விட்டு மதியமே அழைத்து செல்லச்சொல்வோம்.

          பொதுவாகவே சிறிய ஊர்களில் கொல்லைப் புறங்களில் தான் அதிகம் பழங்குவார்கள். என் அம்மா வீட்டிலும் அப்படித்தான். என் அன்னை காய்கறி அரிவது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது என்று அனைத்தையும் அங்குதான் செய்வார். அந்த இடத்தில் ஒரு ஊஞ்சல் உண்டு. நாங்கள் அதில் ஆடிக்கொண்டே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்போம் அல்லது வேலை செய்து கொண்டிருப்போம். முருங்கை மரத்தின் காய்களைப் பறிப்பது, இருக்கும் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது போன்ற வேலைகளைப் பகிர்ந்து செய்வோம்.
       வாழ்க்கை என்னும் நீரோடை எங்கள் நால்வரையும் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்றாலும், பண்டிகை , விடுமுறை ஆகிய நாட்களில் நாங்கள் அனைவரும் குடும்ப சகிதம் அம்மா வீட்டில் இணைந்து விடுவோம். நாங்கள் பேசிய பேச்சுக்கள்,விளையாடிய விளையாட்டுகள் என்று இரவு நெடுநேரம் வரை பேசி மகிழ்வோம். வீட்டின் ஒவ்வொரு பொருளும் ஒரு சம்பவத்தை நினைவு படுத்துவதாய்த் தோன்றும். பழைய ஆல்பங்களை எடுத்துப் பார்ப்போம். ஆச்சர்யம் என்னவென்றால் எங்கள் குழந்தைகளுக்கும் எங்களுடைய அம்மா வீடு மிகவும் பிடித்துப்போனது தான். அவர்களுக்கும் சைக்கிள் பழக, வீதிகளில் விளையாட என்று மிகவும் வசதியாக இருப்பதால் அங்கு செல்ல ஆசைப்படுகிறார்கள். 
         நான் சின்ன வயதில் பார்த்த போது என்னுடன் பேசிப் பழகி விளையாடிய என் வயதை ஒத்தவர்கள் இப்போது யாரும் அங்கில்லை. காலத்திற்கேற்ப பல மாற்றங்கள் அருகாமையில் உள்ள வீடுகளில். என்றாலும் மிக நீண்ட பெரிய படிகளில் உட்கார்ந்து கொண்டு நாங்கள் நால்வரும் பழைய கதைகளைப் பேசிக்கொண்டிருப்போம்.பக்கத்து வீட்டுப் பெண்களுடன் போட்டி போட்டுக்கொண்டு வாசலை அடைத்துகோலங்கள் போட்டது,  ஓவர் டாங்கு நிரம்பி வழியும் நீரில் குளித்தது, பால் ஐஸ் , கப் ஐஸ் என்று தெருவில் போகும் ஒன்றைக் கூட விடாமல் வாங்கி சாப்பிட்டது, பள்ளியிலிருந்து சைக்கிள் ஓட்டிக்கொண்டு வராமல் தோழிகளுடன் பேசிக்கொண்டே உருட்டிக்கொண்டே வீடு வரை வந்தது என்று நினைவலைகள் நீண்டு  கொண்டே போகும். 


       இப்படியாக என் அம்மா வீடு தான் என் மனம் கவர்ந்த வீடு என்று சொல்வேன். பூலோகத்தில் உள்ள சொர்க்கம் தான் அது. மீண்டும் நான் சிறுமியாய் உணரப்படும் தருணங்களைத் தர வல்லது.
                      - கிருஷ்ண குமாரி மதன்.
                           தூத்துக்குடி.