Tuesday, March 10, 2015

வாழ்க்கைக் கற்றுத்தந்த பாடங்கள்


       கற்றல் என்பது பள்ளியுடனோ அல்லது கல்லூரியுடனோ அனைவருக்கும் நின்று விடுவதில்லை. வாழ்க்கை நமக்கு நாள்தோறும் அனுபவங்கள் என்ற பெயரில் பல பாடங்களைக் கற்றுத் தருகிறது. ஆனால் நாம் தான் அவற்றை கவனிப்பதில்லை. அதனை உன்னிப்பாக கவனித்தால் கற்றுக்கொள்ள முடியும்.மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றும் கற்றுக்கொள்ள இயலாது. 
        நாம் செய்யும் தவறுகளே நமக்கு அனுபவ பாடங்கள். ஏதேனும் தவறு நேர்ந்து விட்டால் வருந்தாதீர்கள். அந்நிகழ்ச்சி நமக்கு ஒரு பாடம் என்பதை உணருங்கள். நம் அனைவருக்கும் ஒரு பழக்கம் உண்டு . எதையாவது தவறாகச் செய்து விடுவோம் . பின் பதறுவோம், வருத்தப்படுவோம். ஐயோ இப்படி நடந்துருச்சே என்று கவலைப்படுவோம். அந்த extra baggageஐ சுமந்து கொண்டே இருப்போம். ஒரு பொருளைத் தவற விடுகிறோம், அதற்குப் பின் வருத்தப்பட்டால் அது என்ன திரும்பவா 
 கிடைக்கப்போகிறது? அதற்குப்பின் ஆக வேண்டிய காரியத்தை கவனிக்க வேண்டியது தான்.


          இப்படித்தான் நான் காலேஜில் படிக்கும் போது ஏதோ தவறு செய்து விட்டேன். எப்போதும் துரு துருவென்று இருக்கும் நான் அன்று சோகமே உருவாக உட்கார்ந்திருந்தேன். என்னுடைய ஃபேவரிட் லெக்சர்ர் அதை கவனித்து விட்டார்கள். வகுப்பில் சுரத்தே இல்லாமல் நான் அமர்ந்திருப்பதைப் பார்த்து ஏன் என்ன ஆயிற்று என்று கேட்டார்கள். நான் நடந்ததைக் கூறினேன். "Don't worry ! What is done cannot be undone ! Leave it !" என்றார்கள். அது என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. அன்றிலிருந்து ஒன்று உணர்ந்து கொண்டேன். நடந்து முடிந்தவை நடந்து முடிந்தவை தான். அதை மாற்ற முடியாது. அதை நினைத்து நினைத்து வருந்தாமல் அடுத்து ஆக வேண்டியதைக் பார்க்க வேண்டும். என்ன , திரும்பவும் அதே தவறை செய்யாமல் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நான் இப்போது கூட அவருடைய வார்த்தைகளை அவ்வப்போது நினைவு கூர்ந்து மனதை திடப்படுத்திக் கொள்வேன்.

               பொதுவாக அடக்கம், அமைதி, பண்பு என்ற பெயரில் நமக்கு நன்றாகத்தெரிந்ததைக் கூட நாம் பறை சாற்றிக் கொள்வதில்லை. ஒரு சின்ன தயக்கம் நம்முள் எப்போதும் எட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கும். இதற்குக் காரணம் நமது வளர்ப்பு முறையா அல்லது கலாச்சாரமா? பட்டி மன்றம் வைத்து தான் அதன் பதில் கண்டு பிடிக்க வேண்டும். ஒரு உதாரணத்துடன் விளக்குகிறேன்..ஒரு கூட்டத்தில் அமர்ந்திருக்கிறோம். ஒரு கேள்வி கேட்கப் படுகிறது. நமக்கு விடை தெரிகிறதென்றே வைத்துக் கொள்வோம், உடனே எழுந்து அதனை உரக்க அறிவிக்கத் தயங்குவோம். தவறாயிருந்தால் என்ன? முயல்வதே சாதனை தானே? எல்லோருக்கும் தவறு வருவது உண்டு தானே? ஆனால் அனைவரும் அப்படிச் செய்வதில்லை. மௌனம் காப்போம். யாராவது ஒருவர் விடையளித்த பின் ஐயோ விடையை முதலில் கூறியிருக்கலாமே என்று தோன்றும். இந்தத் தயக்கம் என்றென்றும் தொடரும். நம்மை நாமே அறிமுகப் படுத்திக் கொள்ளும் போது கூட நமக்குத் தெரிந்ததைப் பெருமையாக வெளியிட மாட்டோம். நம் பெருமையை நாமே பேசக்கூடாது , சுய தம்பட்டம் கூடாது என்று சிறு வயது முதலே போதிக்கப்பட்டதுதான் இதற்குக் காரணம். ஆனால் இந்த எண்ண ஓட்டமே தவறு என்று எனக்கு பொட்டில் அடித்தாற்போல British Council இல் போதித்தார்கள். அங்கு ஒரு spoken English course பயின்றேன். அப்போது அவர்கள் சொன்னார்கள் " உங்கள் திறமைகளைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரியாது. நீங்கள் தான் அவற்றை எடுத்துரைக்க வேண்டும். "You should blow you own trumpet .. No one will do that for you."
அது என் வாழ்வில் நான் கற்றுக்கொண்ட முக்கியமான பாடமாகும். அன்றிலிருந்து என் திறமை என்று நான் நினைப்பவற்றை வெளியிடத் தயங்குவதில்லை.

       சில விஷயங்கள் நமக்கு கை கூடி வருவதில்லை. எத்தனை முறை முயன்றாலும் தோல்வியே அடைவோம். உடனே அது வேலைக்கு ஆகாது என்று விட்டுத் தள்ளி விடுவோம். ஆனால் அப்படி விடக்கூடாது. தொடர்ந்து முயன்று கொண்டே இருக்க வேண்டும். முதலில் தப்பும் தவறுமாக வருவது நாளடைவில் திருத்தமாக வந்து விடும். இதுவும் எனது அனுபவ பாடம் தான். அப்போது அருணாவுக்கு இரண்டு வயது. அவளை pre kg யில் சேர்த்து விட்டு நான் ஒரு கிளாஸில் சேர்ந்தேன் . காலையில் பத்து மணிக்கு க்ளாஸ் . வீட்டில் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு கிளம்ப கஷ்டமாக இருந்தது. சாரிடம் இரண்டு நாட்கள் கழித்து வரக் கஷ்டமா இருக்கு என்றேன். அதற்கு அவர் முதலில் அப்பிடித்தான் இருக்கும் . ஒரு வாரம் கழித்து பழகி விடும் என்றார். அதே போல் ஒரு வாரம் கழித்து பழகி விட்டது. சுலபமாக கிளம்ப ஆரம்பித்து விட்டேன். எந்த ஒரு விஷயத்திற்கு பயந்து நாம் ஒத்திப் போடுகிறோமோ அதை அடிக்கடி எதிர் கொள்வது பயத்தை தணிக்கும். பயம், இயலாமை போன்றவை முடிவை நோக்கிய பயணம். வெற்றியை நோக்கி நாம் பயணிக்க வேண்டுமானால் இவற்றைப் புறந்தள்ள வேண்டும். 

          அதே போல் மற்றொரு விஷயம் ..நாம் விரும்பும் அனைவரது வாழ்விலும் நாமே வியாபித்து இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அவர்களது பிரச்னைகளை நம்முடையவை என்று நினைத்து கவலைப் படுவதும், அவர்கள் முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் அவர்களுக்காக நாம் முடிவெடுப்பதும், தெரியாத பிரச்னைகளுக்கு எல்லாம் தெரிந்தது போல் முடிவு சொல்வதும் நாம் அன்றாடம் அனைவர் வாழ்விலும் பார்க்கக்கூடியது. இதற்கெல்லாம் நமது சமூக , சமுதாய கட்டமைப்பே காரணம். பெரியவர்களுக்கு எல்லாம் தெரியும், முடிவை அவர்கள் கையில் கொடு என்று நாம் தொடர்ச்சியாக போதிக்கப்படுவதும் ஒன்று. உண்மையில் இந்த போக்கு தவறானதாகும்.சிறு வயது முதலே நாம் நம் குழந்தைகளுக்கு போதிய சுதந்திரம் கொடுத்து அவர்களது முடிவெடுக்கும் திறனை வளர்க்க வேண்டும். அவர்களது உண்மையான திறன் என்னவென்பதை கண்டுபிடித்து அவர்கள்
 அதில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும் . ஆனால் இன்று பரவலாக நடப்பது என்ன? பெற்றோர் தங்கள் விருப்பத்தை குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். அவர்கள் என்ன படிக்க வேண்டும் என்று ஒரு பதினெட்டு வயது , தானே முடிவெடுக்கக்கூடிய அதற்குரிய திறன் படைத்த , இளைஞன் அல்லது இளைஞி யைக் கட்டாயப் படுத்துகின்றனர். ஆனால் இந்தப் பாச்சாவெல்லாம் எங்கள் வீட்டில் பலிக்காதுங்க... அருணா( என் மகள்) -அவளைக் கட்டாயப் படுத்தினால் உடனே "...மாஆஆ I know what to do , I know I am doing !" என்று என்னை வாயடைத்துவிடுவாள்.

       இப்படியாக என் வாழ்வில் என் உற்றார் உறவினர் , நண்பர்கள் , ஆசிரியர்கள் மூலம் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம் . வாழ்க்கை என்பது சிக்கல் நிறைந்தது அல்ல. சுலபமானது, இன்பமானது, இது போல் அனுபவ பாடங்களை அழகியலோடு ஏற்றுக்கொண்டால் .... நீங்களும் உங்களைச் சுற்றி இருப்பவர்கள் கூறுவதைக் கொஞ்சம் உற்று கவனியுங்கள் , பல சுவை பொதிந்த பொக்கிஷ அறிவுரைகள் கிடைக்கும். 


              

8 comments:

  1. நன்று, தொடரட்டும் எழுத்து பணி

    ReplyDelete
    Replies
    1. நன்றி .. ரொம்பத் தேறீட்டீங்க

      Delete
  2. அருமை முரு! இன்று இனிய நாள்.....!உண்மைதான் முரு , தினம் தினம் நமக்கு புதிய பாடங்கள் காத்திருக்கின்றன.உன் எழுத்து நடை நன்கு மெருகேரியிருக்கிறதுப்பா....எனக்கும் நல்ல அறிவுரை கிடைத்தது நன்றி ;)

    ReplyDelete
    Replies
    1. தேர்ந்த எழுத்தாளரான உன்னிடமிருந்து கிடைக்கும் ஒவ்வொரு பாராட்டும் எனக்கு ஊட்டச்சத்து டானிக்.. ஆனால் இன்னும்
      கருத்துச்செறிவுடன் இருக்க வேண்டுமாம் . இந்துவில் சொன்னார்கள்

      Delete
    2. :) ம்ம்ம்.....’தி இந்து’ உன்னால் முடியும் என்பதை தெளிவுபடுத்துகிறது.இது போதும் என்று விட்டு விடக் கூடாது அல்லவா....இன்னும் இன்னும் என தூண்டும் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வோம்.....!

      Delete
    3. இப்படிச் சொல்லி நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொள்ள வேண்டியது தான் ..ஹி..ஹி

      Delete
  3. so... தோல்வி அடைந்தவர் வாழ்கையை படிப்பது தான் நாம் அனுபவசாலி ஆகும் வழி!

    ReplyDelete