Tuesday, November 14, 2017

Trekking

நைனிடால் சென்ற போது படகு சவாரி வேண்டாம், அருகிலுள்ள பறவைகள் சரணாலயத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று tour organizers இடம் கேட்டிருந்தோம். ஆனால் இங்கு அங்கு என மாறி, மாறி பயணித்து சுமார் இரண்டு மணி நேரம் ஒன்றையும் காணாமல் வீணாக பொழுதைக் கழித்து விட்டோம். இதனால் மனம் வருந்திய எங்களிடம் மறுநாள் காலையில் சஃபாரிக்குப் பின் ' Bird Watching and Trekking on the banks of Kosi River' உண்டு என்று tour organizer கூறினார். நொந்த மனதிற்கு மருந்திடுவது போல என எண்ணிக்கொண்டு அந்த ட்ரெக்கிங் அனுபவத்திற்காக ஆவலுடன் காத்திருந்தேன்.
         நதிக்கரையில் என்றவுடன் நம்மூர்களில் ஓடும் நதிகள் ( எங்கே ஓடுகிறது என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான்) படித்துறையில் இறங்கியவுடன் வந்து விடுவது போல் இங்கும் இருக்கும் என்று எண்ணிக் கொண்டது என் தவறு தான். நதியை அடைய சுமார் 100 அடி உயர கரடுமுரடான செங்குத்தான பாதையைக் காட்டி, இதில் இறங்க வேண்டும் என்றார்கள். எங்களுக்கு வழிகாட்ட கைடு போன்ற ஒருவர் இருந்தார். அவர் இருப்பதிலேயே சுலபமான வழி இது தான். நான் தினமும் இதில் நான்கைந்து முறை ஏறி இறங்குகிறேன் என்றார். நாங்கள் அனைவரும்  அவரை ஆச்சர்யத்துடன் பார்த்தோம். பின்னே... நாமெல்லாம் தெருமுனையில் இருக்கும் கடைக்குக் கூட ஸ்கூட்டரில் பறக்கும் ஆட்களல்லவா?! ' நம்பி வாருங்கள்..' என்று புன்னகையுடன் கூறி திரும்பிப் பார்க்காமல் சர சர வென இறங்கலானார். நாங்களும் நம்பிக்கை பெற்று இறங்கலானோம். ஆனால் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று பத்து அடி தூரம் இறங்கியவுடன் புரிந்தது. பிடித்துக் கொள்ள ஏதுவாக ஒன்றும் இல்லை. இருந்ததோ புற்களும் செடிகளும் தான். அவற்றை ஒரு கிரிப் புற்காக பிடித்தால் அவை கையோடு பெயர்ந்து வந்தன. வழியெங்கும் பாறைகள் மட்டுமே. சமயங்களில் பாறைகள் அசைந்தன. இவ்வளவு steep ஆனது எனத் தெரிந்திருந்தால் இறங்கியிருக்கவே மாட்டேன் என்று ரவி சொல்லிக் கொண்டே வந்தார். இளைஞர்கள் அனைவரும் கைகொடுத்து பெண்களையும், மற்றவர்களையும் இறக்கிவிட்டனர். அவர்களே மிகுந்த சிரமத்துடன் தான் இறங்கினர். இதில் காமெடி என்னவென்றால் அவர்களே மிகுந்த சிரமத்துடன் தான் இறங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் வாய் சவடாலாக,' அங்கிள், ஆண்ட்டி பாவம்... எப்படி இறங்குவார்கள்!' என உச் கொட்டிக் கொண்டே வந்தார்கள். அட்டா... நம்மை ஏதோ சீனியர் சிட்டிசன் ரேஞ்சுக்கு ஆக்குகிறார்களே என எனக்குத் தோன்றியது.
 ' We are FIT pa.. regular ஆக வாக்கிங் சென்று வருகிறோம்.'
        Breathtaking view என்று கூறுவார்களே.. அது என்ன என்று அன்று தான் உணர்ந்தேன். அழகிய பசுமையான தோற்றம். சுமார் நூறு அடி உயரமெங்கும். இத்தனை தூரம் நாம் இறங்கி வந்து விட்டோமா என்று எனக்கே மிக ஆச்சர்யமாக இருந்தது. நதியில் தண்ணீர் அங்கும் இங்குமாகத் தேங்கி இருந்தது. சிறிதும் பெரிதுமான கற்கள். மலையிலிருந்து ஆற்று நீரால் அடித்து வரப்பட்ட கற்கள். கைடு, காலை வேளையில் அடர்ந்த மரங்களிலிருந்து பறவைகள் வந்த வண்ணம் இருக்கும். இப்போது இல்லை, இனி மாலையில் திரும்ப வரும் என்றார்.பைனாகுலர் மற்றும் காமிராக்கள் மூலம் இலைகளின் ஊடே நாங்கள் தேடினோம் ஒன்றும் புலப்படவில்லை. ஆற்று நீரில் ,தெளிந்த நீரோடையில் மீன்கள் நீந்திய வண்ணம் இருந்தன. சிறுமி ஒருத்தி எங்களுடன் பயணித்தாள். அவள் ஆவலுடன் மீன்களை ரசித்துக் கொண்டிருந்தாள்.இளைஞர் ஒருவர் கைக்குட்டையைப் பயன்படுத்தி மீன்களைப் பிடிக்க முயன்றார். பெண்களின் கும்பலோ செல்ஃபி எடுப்பதில் மூழ்கியது. அகண்ட பரப்பில் அனைவரும் ஒரே மாதிரி நீல வண்ண டி சர்ட் அணிந்து இங்கும் அங்குமாக உலவிக் கொண்டிருந்தோம். பார்ப்பதற்கு அழகாக இருந்தது. 
          Trekking இந்தப் பக்கம் சிறிது தூரம் செல்லலாம் அல்லது அந்தப்பக்கம் சிறிது தூரம் செல்லலாம் என்று கைடு அழைத்துக் கொண்டே இருந்தார். ஆனால் யார் காதிலும் விழவே இல்லை. அன்று திங்கட்கிழமை. ஆதலால் பணிநிமித்தம் ஆண்கள் பலருக்கும் ஃபோன் கால்கள் வந்து கொண்டே இருந்தன. Designer ஆகப் பணிபுரியும் பெண் ஒருவரும் எங்களில் இருந்தார். அவர் தன் client களிடம், ' நான் சில நாட்களுக்கு இருக்க மாட்டேன். அதற்குப் பதில் என்னுடைய உதவியாளர் இருப்பார். உங்கள் தேவையை நீங்கள் அவரிடம் கூறலாம். அவருக்கு கன்னடம் மட்டுமே தெரியும். ஆனால் ஒன்று கூறிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் என்னிடம் எதிர்பார்க்கும் அதே சேவையை அவனிடம் எதிர்பார்க்க முடியாது' என்று கூறிக் கொண்டிருந்தார். பெரும்பாலும் அனைவரும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தனர். எனக்கு இந்தி புரியும் என்பதால் சில சமயங்களில் என்ன சொல்கிறார்கள் என்று ரவி கேட்கும் போது நான் மொழி பெயர்த்துக் கூறுவேன். 
           இப்படியே அரை மணி நேரம் கழிந்தது. திரும்ப கிளம்ப வேண்டிய நேரம் வந்தது. வந்த வழியே தான் செல்ல வேண்டுமா, வேறு வழி எதுவும் உள்ளதா என்று அனைவரும் ஏக்கமாக கைட் ஐ வினவினர். ' இருப்பதிலேயே சுலபமான வழி இது தான். இறங்குவதை விட ஏறுவது சுலபம். இறங்கும் போது பள்ளம் இருந்தால் பாரத்துப் பார்த்து காலை வைத்து இறங்க வேண்டும். இப்போது ஒரே மூச்சாக ஏறிவிடுங்கள்.' என்றார். நான் திரும்பி ரவியிடம் விளக்க முற்பட்ட போது,' புரிந்து விட்டது. வந்த பாதையிலேயே தான் திரும்ப ஏற வேண்டும். அப்படித்தானே?' என்றார். கைட் புன்னகையுடன்,'ஜி..சாப்..' என்றார். ' உங்கள் காமிராவை வேண்டுமென்றால் நான் தூக்கிக் கொள்கிறேன்' என்றார். சந்தோசமாக அவரிடம் ஒப்படைத்து விட்டு ஏற ஆரம்பித்தோம். 
       படபடவென நெஞ்சு அடித்தது. எகிடுதகிடாக heartbeat ஏறியது. இரண்டு இடங்களில் உட்கார்ந்து ஏறினோம். கால்கள் நடுங்கின. என்றாலும் மனம் தளராமல் ஏறினோம். வெகு தூரம் கடந்து வந்தாற் போல உணர்வு. ஏக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தால் பாதி தூரமே கடந்திருந்தோம். ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் ஏறினோம். ஏசா ஐலசா என்று பாடாத து ஒன்று தான் பாக்கி.கடைசியில் அனைவரும் ஏறி விட்டோம். ஐயோ.. அம்மா என்று புலம்பியவாறு வண்டிக்கு நடந்தோம்.உஸ்...உஸ்..உஸ்.. என்ற பெரு மூச்சு அனைவர் வாய்களிலும். 
            இந்த அனுபவத்தின் போது எடுத்த புகைப்படங்களை tour guide சொன்னது போல் bird watching and trekking on the banks of River Kosi என்ற தலைப்பிட்டு whatsappஇல் என் நண்பர்கள் மத்தியில் share செய்தேன். அவர்களுக்கு உற்சாகம் கரை புரண்டு விட்டது. ' sounds interesting.. please share your experiences ' என்று வேண்டிக் கேட்டனர். எனக்கோ ஒரே ஆச்சர்யம் ' என்ன experience இருந்தது ? share பண்ண்ணுவதற்கு! ' என்று. சரி , கேட்டதைச் செய்வோம் என்று துணிந்து எழுதிவிட்டேன்...ஆனால் மனதிற்குள் ஒரு சிறு சந்தேகம்.. இனி இது போல் துணிந்து கேட்பார்களா? share பண்ணச் சொல்வார்களா?!... ஆனால் நம்பிக்கை தானே வாழ்க்கை! நம்பிக்கை கொள் மனமே!
- முருகேஸ்வரி ரவி.
    



No comments:

Post a Comment