Sunday, January 8, 2017

பசுமைப் போர்வை.

"என்னங்க.. இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே. உங்கள் நண்பரைப் போய் பார்த்து விட்டு வரலாமே!" காபியை நீட்டியவாறு சுமதி கூறினாள். நாளிதழில் மூழ்கியிருந்த சுந்தரம்," ம்..ம்.." என்றவாறே காபியை வாங்கிக் கொண்டார். 
அவருடைய தோழர் ராமலிங்கத்தின் மகன் சமீபத்தில் தான் சாலை விபத்தில் அகால மரணமடைந்தான். 'இந்தக் காலப் பசங்க என்ன வேகமாப் போறாங்க.. அது சில சமயங்களில் அவர்கள் உயிரையே பறித்து விடுகிறதே' என்று எண்ணியவாறே எழுந்தார். " சரி, சுமதி நான் ஒரு பதினோரு மணி வாக்கில் அவனைப் போய் பாரத்து விட்டு வருகிறேன். அவன் சோகத்தை சுலபமாக பகிர்ந்துக்க மாட்டான். அதான் யோசனையாக இருக்கு" என்றார்.
போகும் வழியெல்லாம் நண்பனை என்ன சொல்லி தேற்றுவது என்று பலவாறு யோசித்துக் கொண்டே போனார். நண்பர் வீட்டை நெருங்கும் போது வீடே ஜே ஜே என்றிருந்தது. நாலைந்து பேர் உள்ளேயும் வெளியேயும் ஓடிக் கொண்டிருந்தனர். வீட்டில் புது மாற்றமும் தெரிந்தது. புதிதாய் நிறைய மரக்கன்றுகள் வாசலில் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. 
சுந்தரத்தைக் கண்டவுடன் ராமலிங்கம் புன்னகையுடன் ஓடி வந்தார். " வா.. சுந்தரம். என்ன இந்தப்பக்கம்? ரொம்ப நாளாக ஆளையே காணோம்" என்று கூட்டிக் கொண்டு போய் ஹாலில் உட்கார வைத்தார். அவரின் இந்த மாற்றம் ஆச்சர்யமளித்தது. என்றாலும் நண்பனின் பெரும் இழப்பைப் பேச சிறிது தயக்கமாக இருந்தது. 
அவருடைய சோகத்தை திரும்பவும் கிளறக் கூடாது என்று எண்ணிக் கொண்டாலும், அவர் அதிலிருந்து மீள வேண்டும் என்று அறிவுரை கூறுவது தன் கடமை என்று நினைத்தார். தன் வீட்டிற்கு அழைக்கலாம் அல்லது ஏதாவது சுற்றுலாவிற்கு அழைக்கலாம் என்று எண்ணினார்.
சுந்தரம் பேச்சை என்னவென்று ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அவரே தொடங்கினார். " என் மகன் பறி போன பிறகு வாழவே பிடிக்க வில்லை. சோர்ந்திருந்த மனதைத் தேற்ற வழி தெரியவில்லை. வார்தா புயல் வந்து ஊரில் உள்ள மரமெல்லாம் சாய்ந்த  போது அக்கம் பக்கத்தில் உள்ள சில நல்ல உள்ளங்கள் திரும்பி மரம் நட ஆரம்பித்தனர். நானும் அவர்களுடன் இணைந்து கொண்டேன். இதோ இப்போது கூட நாங்கள் அனைவரும் இணைந்து அருகிலுள்ள பூங்காவில் மரம் நடப் போகிறோம். அதற்குத் தான் வேலை ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது" என்று புன்னகைத்தார்.
கேட்கவே சந்தோசமாக இருந்தது. அவரே தொடர்நதார்," என் மகன் போனது தீராத சோகம் தான். ஆனால்  அதிலிருந்து மீண்டு வர எனக்கு வழி தெரியவில்லை. அப்போது இந்த தன்னார்வலர்கள் இந்த சேவையில் ஈடுபட்டதைப் பார்த்து என்னை நானும் இணைத்துக் கொண்டேன்" என்றார். " நீயும் வா. உன்னால் முடிந்த உதவியைச்செய்." 
" கண்டிப்பாக " என்றபடி சுந்தரம் எழுந்தார். தான் எண்ணி வந்த வேலையை அந்த நல்ல நெஞ்சங்கள் ஏற்கனவே செய்து விட்டதை அறிந்து மகிழ்ந்தார்.நண்பனின் சோகம் தீர்க்க உதவுவதோடு பசுமையையும் உருவாக்க உதவப் போகிறோம் என்ற எண்ணமே அவருக்கு மகிழ்ச்சி அளித்தது. இருவரும் இணைந்து பூங்காவிற்குப் புறப்பட்டனர்.

1 comment:

  1. அற்புதம்! இழப்புக்களை ஈடுசெய்ய முடியாது என்றாலும் எண்ண்மும் செயலும் மடைமாற்றிவிடப்படும் போது பெரிய ஆறுதல் கிடைக்கதான் செய்கிறது!

    ReplyDelete