Monday, January 30, 2017

டில்லி அனுபவங்கள்..

      விஜய் டிவியில் ' சூப்பர் சிங்கர்' என்று ஒரு நிகழ்ச்சி போடுவார்கள். பாரத்திருக்கிறீர்களா? அந்த நிகழ்ச்சியை விட அது முடிந்த பின் புளூப்பர்ஸ்(bloopers) என்று ஒன்று போடுவார்கள். அது தான் ரொம்ப ரசிக்கும்படி இருக்கும். அது போல நாங்கள் டில்லி மற்றும் ஆக்ரா சென்று வந்த கதையை ரொம்பவும் dignified, decent, diligent( இன்னும் என்னென்ன d words இருக்கோ..சேர்த்துக் கொள்ளுங்கள்) ஆக முந்தைய பிளாக்கில் சொல்லி இருந்தாலும், இதில் உண்மையைப் போட்டு உடைக்கப் போகிறேன். என்னென்ன முட்டாள்தனம், கோணங்கித்தனம் பண்ணினோம்னு இப்போது வெளிவரும். (சிரிப்புக்கு நான் கியாரண்டி.)

         ஊருக்குப் போகலாம் என்று முடிவெடுத்த பின் தினமும் வீட்டில் அதைப் பற்றி தான் பேச்சு. ஆளாளுக்கு டில்லியில் அங்கே போகனும் இங்கே போகணும் என்று லிஸ்ட் அடுக்கிக் கொண்டே போனோம். நிற்க.. ட்ரிப் மொத்தமே மூன்று நாட்கள் தான். அதில் ஒரு நாள் ஆக்ராவுக்கு. பின் மீதமிருக்கும் நாட்களுக்குத்தான் இத்தனை களேபரம். இந்த கூகுள் அக்கா வேறு சும்மா இருக்க மாட்டார்கள். டில்லி என்று டைப் செய்தவுடன் எகிடுதிடாக பல இடங்களையும் ஷாப்பிங் செல்ல வேண்டிய இடங்களையும் அடுக்கிக் கொண்டே போனது. வீட்டில் செய்யும் அலப்பறை போதாதென்று ஷாப்பிங் சென்று வேறு லூட்டி அடித்தோம். ஊரெல்லாம் ' sale'  போட்டிருக்கிறான் என்று மக்கள் துணிமணிகளை அள்ளிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் ஸடைலாகப் போய் சேல்ஸ் நபரிடம் ' winter clothes' பற்றி விசாரித்தோம். அவர் எங்களை ஏற இறங்க பார்த்து விட்டு,' அதெல்லாம் இல்லீங்க' என்றார். ஆனால் நாங்கள் ' விடாது கருப்பு' என்பது போல் பெருமுயற்சி செய்து பிளேசர், ஸ்வெட்டர், க்ளவ்ஸ், ஷூஸ் என்று ஒரு பெரிய பை நிறைய சாமான் சேர்த்து விட்டோம். நான் சும்மாவாச்சும் கிண்டல் செய்கிறேன் என்றாலும் அங்கு அதீத குளிரின் காரணமாக இவை பெரிதும் உபயோகமாய் இருந்தன. இவை இல்லாமல் இருந்திருந்தால் மிகவும் சிரமமாய் இருந்திருக்கும்.

          ஏர்ப்போர்ட் கிளம்பும் போது ஒரே புகை மண்டலம். காரில் போகும் போது,' போகி... அதனால் தான் இப்படி இருக்கு' என்று பேசிக் கொண்டிருந்தோம். ' இன்னைக்கு ஊருக்குப் போனாப்ல தான்... பிளைட் எவ்வளவு நேரம் டிலே ஆகப் போகுதோ?' என்று அவர் கவலைப் பட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அருணா அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள். இடியே விழுந்தாலும் அவளுடைய இயர்ஃபோனை எடுக்க மாட்டாள். சின்சியரா பாடம் படிக்கிறாளோ இல்லையோ சின்சியரா பாட்டு கேட்பாள்
         பிளைட் நாலு மணி நேரம் தாமதம். கொடுமையாக இருந்தது. எவ்வளவு நேரம் தான் ஏர்ப்போர்ட் லவுன்ஜ் ஐ சுற்றி வர்றது!!! மிகவும் போர் அடித்தது. அதற்குள் இரண்டு காபி இரண்டு சமோசா ஸ்வாகா பண்ணியாயிற்று.(ம்ம்...என்ன கேக்கறீங்க? டயட் என்னாச்சுன்னா? அதெல்லாம் காத்தோட பறந்துருச்சு... ) போர் அடித்தது. ஆனால் திடீர்னு ஒரு சர்ப்ரைஸ்..நடிகர் சூர்யா, ஜோதிகா மற்றும் அவரோட குழந்தைகள் கோயம்புத்தூர் போறதுக்காக வந்தாங்க.( பாவம் அவர் எவ்வளவு நேரமாக காத்திருந்தாரோ?) தமிழ்நாட்டின் கனவு ஜோடியைப் பார்த்த சந்தோசத்தில் நாங்கள் ஹேப்பி ஆகிவிட்டோம்.
           தாஜ் மஹால் பார்த்தோம். அப்படி ஒரு அழகு! டிவியில், புகைப்படங்களில், திரைப்படங்களில் பார்த்ததை விட கொள்ளை அழகு. வெள்ளை வெளேரென்று மனதைக் கவர்ந்து. தனுஷ் ஒரு படத்தில் பாடுவார்,' வெள்ளாவி வைச்சுத்தான் வெளுத்தாய்ங்களா? இல்ல வெயிலுக்குக் காட்டாம தான் வளத்தாய்ங்களா?' என்று. அது போல தான் எனக்கும் தோன்றியது. அதன் அழகில் சொக்கிப் போய் என்னவர் புகைப்படங்களாய் எடுத்துத் தள்ளினார். அருணா அவள் பங்கிற்கு புகைப்படங்கள் மற்றொரு பக்கம் போய் எடுத்தாள். ஆகவே முக்கால் வாசி படங்களுக்கு நான் தான் pose கொடுக்க வேண்டியிருந்தது. இப்படி நில்...அப்படி நில் என்று ரொம்ப நேரம் ஆகிவிட்டது. வெளியே வரும் போது கொஞ்சம் பறவைகள் மற்றும் குரங்குகள் திரிந்தன. அவற்றையும் ஓடி ஓடி புகைப்படம் எடுத்தார். ' இவற்றிடம் இப்படி நில், அப்படி நில் என்று சொன்னால் கேக்குமா? முடியுமா?' என்று எனக்குத் தோன்றியது. சிரித்துக் கொண்டேன்.' அவை என்ன முருகேஸ்வரியா?? சொல்வதையெல்லாம் கேட்பதற்கு!? ' என்று தோன்றியது. அருணாவிடம் சொன்னேன்.' ஜோக்கா?? சிரிச்சுட்டேன்..' என்று சொன்னாள். எனக்கு புஸ்.. என்று ஆகி விட்டது.
               இதே போல் தான் குதுப் மினாரில் நடந்த சம்பவமும். குதுப் மினாரின் வரலாறு கொஞ்சம் சிக்கலானது. Slave Dynasty இன் குதுப்-தின- ஐபக், இல்துமிஷ் போன்ற மன்னர்களைப் பற்றியெல்லாம் அருணாவுக்குத் தெரியவில்லை. என்னுடைய கட்டுக்கடங்காத ஆர்வம்( கரை புரண்டு வருவதை பாவம் தடை போடுவதற்குள் இருவருக்கும் போதும் போதும் என்று ஆகி விட்டது) அங்கு வீடியோ ஷோ என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றது. என்னைத் தவிர அங்கே சீந்துவாரில்லை. ஆளே இல்லாத கடையில் யாருக்குடா டீ ஆத்துறீங்க? என்கிறாற் போல அங்கு ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். எழுப்பிக் கேட்டவுடன் ' விடக் கூடாது இந்த பலி ஆடுகளை' என்கிறாற் போல என்னைப் பரிதாபமாக ஒரு பார்வை பார்த்து விட்டு எத்தனை பேர் என்று ஆர்வம் பொங்க கேட்டார். நான் மூன்று பேர் என்றவுடன் அவருக்கு சப்பென்று ஆகிவிட்டது. சரி என்று என்று டிவியை ஆன் செய்து பென் டிரைவை சொருகினார். சுமார் பத்து நிமிடங்கள் குதுப் மினாரின் வரலாற்றுப் பெருமைகளை அது பேசியது. எனக்கு மிகவும் பிடித்திருந்து. வெளியே வந்தவுடன்,' புரிந்ததா?' என இருவரிடமும் கேட்டேன். அவர்,' உனக்கு புரிஞ்சதுல்ல...அப்போ எங்களுக்கும் புரிஞ்ச மாதிரி தான்' என்றார். அங்கும் இருவரும் புகைப்படம் எடுப்பதில் தான் ஆர்வம் காட்டினர். நான் இது கதைக்கு உதவாது என்று புரிந்து கொண்டு தனியாகவே சுற்றிப் பார்த்தேன். 
               எந்த ஊருக்குப் போனாலும் என்னவர் ஸ்பூன், ஃபோர்க் வைத்து சாப்பிடுவது எப்படி என்று எனக்கு பாடம் நடத்த ஆரம்பித்து விடுவார். ஆனால் நான் அதற்கெல்லாம் அசாராமல் சாப்பாட்டில் புகுந்து விளையாடுவேன். இம்முறையும் அப்படித்தான் ஆலூ பராத்தாவையும், பான் கேக் ஐயும் ஃபோர்க், நைஃப் இனால் சாப்பிட்ட முதல் ஆள் நானாகத்தான் இருக்கும். அது என்னவோ தெரியவில்லை...மெனு கார்டை கொண்டு வந்து நீட்டினால் அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது என்பது எனக்கு கடினமாக இருக்கும். ஆனால் அதே மெனுவை பஃப்ஏ(buffet) ஆக பரப்பி வைத்தால் ஒன்று பாக்கி இல்லாமல் அனைத்தையும் ருசித்துப் பாரத்து விடுவேன். 
          சுற்றுலா செல்வதற்கு முன் கூகுள் செய்வது என் வழக்கம் என்று முன்பே சொன்னேன் அல்லவா! சென்ற வருடம் லோனாவாலாவுக்கு சென்ற போது அங்கு ' சிக்கி' மிகவும் பிரபலம் என்று கேள்விப்பட்டேன். உடனே அது வேண்டும் வேண்டும் என்று கேட்டு அடம் பிடித்து வாங்கினேன். அது ஒன்றுமில்லை.. நம்ம ஊரு கடலை மிட்டாய் தான். ஆனால் ருசியில் நம் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு அருகில் கூட வர முடியாது. சிக்கி யை நான் கீழே தான் போட்டேன். இம்முறையும் ஆக்ராவில் 'பேடா' ரொம்ப பிரபலம் என்று கூகுள் தெரிவித்து விட்டது. அது போலவே ஆக்ராவில் தெருவுக்கு தெரு கடை விரித்து பேடாவை பரப்பி இருந்தார்கள். ஆனால் சிக்கி அனுபவத்தால் பேடாவை கவனமாக தவிர்த்து வந்தேன். ' முயற்சி செய்து தான் பாரேன்!' என்று மனம் ஏனோ சொல்லிக் கொண்டே இருந்தது. ஆனால் புத்தி,' வேண்டாம்..முருகேஸ்வரி! எல்லோரும் போன தடவை மாதிரி கிண்டல் செய்வார்கள். ரிஸ்க் பா!' என்று கண்டிப்பாக கூறிவிட்டது.
          என் அறிவுத் தாகத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியும் தானே! நான் மீண்டும் ஒரு முறை அதனைப் பயன்படுத்தி அவர், மற்றும் அருணாவிடம் மாட்டிக் கொண்டேன். டில்லியில் Red Fort இல் ஆடியோ வீடியோ ஷோவிற்கு பந்தாவாக டிக்கெட் வாங்கிக்கொண்டு நுழைந்து விட்டோம். நுழைவாயிலில் தான் தெரிந்தது.. முதல் ஒரு மணி நேரம் ஹிந்தியிலும் அதன் பிறகு ஆங்கிலத்திலுமாம் என்று. நான் தெரியாமல் ஹிந்திக்கு டிக்கெட் வாங்கிவிட்டேன். அவர்கள் இருவருக்கும் ஹிந்தி தெரியாது. என்னை முறைத்தார்கள். நன்றாகப் புரியும் நான் இருக்கிறேன் என்று சமாளித்து உள்ளே அழைத்துச் சென்றேன். ஷோ ஆரம்பித்தது. கொடுமை அது. ரொம்ப போர். நம் அரசின் சுற்றுலாத்துறை இன்னும் 1950 இலேயே இருக்கிறதோ என்று எனக்கு சந்தேகம் தோன்றியது. இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக்கி இருக்கலாம். பாவம் தெரியாமல் மாட்டிக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நெளிந்தனர். குழந்தைகள் அழ ஆரம்பித்துவிட்டனர்.( அவர்களால் அப்படி செய்ய முடியும்..நம்மால் முடியாதே!!) வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் சிலர் வெளியேறினார்கள் .அவர்களுடன் நாங்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என,று வெளியே ஓடி வந்து விட்டோம். அந்தக் கோட்டையின் அழகையும் கம்பீரத்தையும் குலைப்பதற்கென்றே இதை ஏற்பாடு செய்திருப்பார்கள் போல!
        Delhi Dhaba என்று சென்னையெங்கும் கடை விரித்திருப்பார்கள்.அதனால் டில்லியில் என்ன கிடைக்கும்? அதை உண்ண வேண்டும் என்று பெரும் ஆவலோடு இருந்தேன்.ஆனால் என்னவருக்கு டில்லி வந்ததும், சரவணபவன் மீது காதல் வந்து விட்டது. நாளைக்கு சரவண பவனில் லன்ச் சாப்பிட வேண்டும் என்று முந்தைய நாள் இரவிலிருந்தே சொல்ல ஆரம்பித்து விட்டார். சமார் பத்து முறை சொல்லி இருப்பார்( எண்ணாமல் விட்டு விட்டேன். எண்ணியிருந்திருக்கலாம்). எனக்கு துளி கூட விருப்பம் இல்லை என்றாலும் வாயை மூடிக்கொண்டேன். அங்கே போய் அவர் மற்றும் அருணா மீல்ஸ் மற்றும் தோசை என்று வெளுத்துக் கட்டினார்கள். விதியை நொந்தபடி ஆனியன் ஊத்தப்பத்தை கடனே என்று மென்று தின்னேன். என்னுடைய கனவு( பட்டர் சிக்கன் ,பட்டர் நான்) தகர்ந்தது. சரி, வெந்த புண்ணிற்கு மயிலறகால் மருந்திடலாம் என்று எண்ணி நொந்த வயிற்றிற்காக ஃபில்டர் காபி ஆர்டர் செய்தேன். ஆனால் சரவண பவன் காரர்கள் என்னைப் பழி வாங்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்தாற் போல மிக மட்டமான ஒரு காபியை வந்து நீட்டினர். விதியை நொந்தபடி விழுங்கித் தொலைத்தேன். வெளியே வரும் போது அருணா, மற்றும் அவர், இருவர் முகமும் பிரகாசமாக இருந்தது. ' அப்பா... சாப்பாடு நல்லா இருந்துச்சுல்ல...' அருணா அவரிடம் கூறினாள். (இருடி.. உன்னை வைச்சுக்கிறேன் என்றேன் நான் மனதிற்குள் மௌனமாக). அவர்' சரவண பவன் ..சரவண பவன்  தான்.. இல்ல?' என்று என்னிடம் புன்னகைத்த படி கேட்டார். நான் சிரித்துக் கொண்டேன். நம்ம துன்பத்தை பிறரது இன்பத்தில் மறந்துரணும்னு எங்கம்மா எனக்கு சொல்லி இருக்காங்க!
             டில்லியில் நான் ரசித்த சிலவற்றைப் பற்றி சொல்ல வேண்டும். டில்லியில் இன்னும் ரிக்ஷாக்கள் உலவுகின்றன. சென்னையில் அவற்றைக் காண்பது அபூர்வம். இன்னும் ஒரு வித்தியாசமான வாகனத்தையும் கண்டேன். அதன் புகைப்படத்தை இணைத்துள்ளேன். இது தவிர குதிரை வண்டியில் காய்கறி விற்ற விநோதத்தையும் பார்த்தேன். டில்லியின் பசுமை கண்ணைக் கவர்ந்தது. அன்னை இந்திராவின் நினைவிடத்திற்கும், மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கும் சென்றோம். மனம் கனத்தது. கண்களில் கண்ணீருடன் அந்த தியாகச் செம்மல்களுக்கு அஞ்சலி செலுத்தினோம்.
               விமான நிலையத்திற்கு செல்லும் சாலைகள் சிங்கப்பூரை ஒத்து இருந்தன. விமான நிலையத்தின் அழகில் சொக்கிப்போனேன். ஊருக்குத் திரும்ப மனமே வரவில்லை. இன்னும் கொஞ்ச நாட்கள் இரேன் என்று டில்லி கூறுவது போன்ற ஒரு பிரம்மை தோன்றியது. திரும்பவும் வர வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டு சென்னை திரும்பினேன்.
பின் குறிப்பு: சுவாரசியத்திற்கு என்னுடைய Impressions on Delhi, Agra பிளாக் வாசிக்கவும்.






4 comments:

  1. Hahha... am on my wayto wrk.. in the mean tym thanks for giving me a short trip to delhi nd agra...

    Beautifully written.. appdiye oru movie partha maadhiri irundhadhu...

    Sooper aunty... lukin fwd for ur other stories...

    ReplyDelete
    Replies
    1. Thank u babloo.. more to come hereafter.. stay tuned😃

      Delete
  2. சுவாரசியமாக இருந்த பயணம் தாங்களின் எழுத்து வடிவில் வாசிக்கும் போது அதிக சுவாரசியமாக இருக்கிறது. நன்றி

    ReplyDelete
  3. முரு.....கலக்கிட்டேயேம்மா...என்னமா எழுதியிருக்கே....அப்படியே உங்க கூடவே நானும் டூர் அடிச்சிட்டேன் போ....(டிக்கெட் காசு கேட்கப்ப்டாது...ஹி ஹி)ரவி அண்ணா ....உங்க க்ளீக்ஸ் அற்புதம்ண்ணா.....அருணா அழகோ அழ்கு!

    ReplyDelete