Tuesday, December 30, 2014

புத்தாண்டு கஜினிக்கள்



இதோ.. இன்னும் சில மணி நேரங்களில் 2015 பிறக்கப் போகிறது. எனக்குத் தெரியும், எல்லோரும் பிளான் போட ஆரம்பித்திருப்பீர்கள். இந்த வருட ஆரம்பத்திலிருந்து இதைச்செய்யணும்பா என்றுஎல்லோரும் முடிவு செய்து வைத்திருப்பீர்கள். ஏன் .,நானே ஒரு சீக்ரெட் பிளான் வைத்துள்ளேன் . அதை உங்களுக்கு கடைசியில் சொல்கிறேன்.
         உங்களுக்கெல்லாம் ஒன்று தெரியுமா? புத்தாண்டு அன்று நாம் எடுக்கும் தீர்மானங்கள் பல பிப்ரவரி 10ம் தேதி கூடத் தாண்டுவதில்லை.புத்தாண்டுத் தீர்மானங்கள் உடைக்கப் படுவதற்காகவே எடுக்கப்படுகின்றனவோ என்று எனக்கு ஒரு சின்ன சந்தேகம் உண்டு. நீங்கள் புத்தாண்டுத் தீர்மானங்கள் எடுப்பவராயின் ., கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.. நீங்கள் சில வருடங்களாய் அதேத் தீர்மானங்களையே திரம்பத் திரும்ப எடுத்திருப்பீர்கள். மாடர்ன் கஜினிக்களான நீங்கள் விடா முயற்சியுடன் அதே தீர்மானங்களை எடுத்து விடா முயற்சியுடன் தோற்றுக் கொண்டே இருந்திருப்பீர்கள். 
           புத்தாண்டுத் தீர்மானங்களில் தலையாயது - நான் இந்த ஆண்டு முதல் அதிகாலையில் எழுந்து... என்று முடிவெடுப்போம். இது முதல் நாளே ஊற்றிக்கொள்ளும். முந்தின நாள் தான் இரண்டு மணி வரை கூத்தடித்திருப்போமே! விடிய விடிய டிவி புரோக்ரம், அல்லது பார்ட்டி அல்லது உறவினருக்கு ஃபோன் பண்ணி வாழ்த்து தெரிவித்தல் என்று ஏதாவது ஒரு வகையில் லேட் ஆகியிருக்கும். ஸோ, கண்டிப்பாக எழுந்திருக்க முடியாது. அத்துடன் அன்று விடுமுறை தினம் வேறு , யாராவது விடுமுறை அன்று அதிகாலையில் எழுவார்களா? சரி நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்க ஆரம்பிப்போம். இந்தக் கதை நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் தினந்தோறும் புதுப்புது சாக்குகள் கண்டுபிடித்து வளரும். என்னடா இது எடுத்த தீர்மானத்திலிருந்து விலகி விட்டோமே என்பதற்குள் ஒரு மாதம் சிட்டாய்ப் பறந்திருக்கும். அப்புறமென்ன அடுத்த வருடத்திற்கு தள்ளிப்போட வேண்டியது தான்.
         அடுத்ததாக ., வாக்கிங் போவது. பெரும்பாலோர் கன ஜோராய் வாக்கிங் போக ஆரம்பிப்பார்கள். காண்போர் அனைவரிடமும் தான் வாக்கிங் போக ஆரம்பித்தத்தைப்பற்றி கூறுவார்கள். நீங்கள் மாட்டினீர்களானால் உங்களையும் இழுப்பார்கள். நீங்கள் மறுத்தால் உங்களுக்கு இலவச அட்வைஸ் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமானது என்று விலாவரியாக லெக்சர்  அடிப்பார்கள். புது ஷூ, புது ட்ராக் ஷூட் என்று கலக்குவார்கள். நீங்கள் பாருங்கள் புத்தாண்டிலிருந்து சுமார் ஒரு மாத காலத்திற்கு பீச் , பார்க் எல்லாம் ஜேஜே என்றிருக்கும். அப்புறம் காத்தாடும். ஜிம்மிலும் இதே கதை தான். ஜனவரி மாதம் களை கட்டும் . அவர்களும் ஆஃபர் எல்லாம் போட்டு அசத்துவார்கள். இரண்டு மாதம் கழித்து வந்து பாருங்கள் .. மாஸ்டர் ஈ ஓட்டிக் கொண்டிருப்பார். அதனாலென்ன?? கல்லா தான் களை கட்டியாச்சே.!
   இது மிக முக்கியமானது. 99 சதவித த்தினர் கண்டிப்பாக இந்த உறுதிமொழி எடுப்பர். மீதி 1 சதவீத த்தினர் அவர்களது உறவினர்களால் தூண்டப்பட்டு உறுதிமொழி எடுப்பர். ஆனால் வெல்வதென்னவோ சிகரெட் மற்றும் மது தான். ஆம் அந்தப் பழக்கம் உடையவர்கள் கட்டாயம் இனி மது அருந்த மாட்டேன் அல்லது புகைக்க மாட்டேன் என்ற தீர்மானம் எடுப்பார்கள். உலகிலேயே சுலபமானது மதுவை விட்டொழிப்பது தான். நான் இதை ஆயிரம்முறை செய்துள்ளேன் என்று மார்க் ட்வெயின் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். அவ்வளவு ஏன்? கவியரசு கண்ணதாசன் மிக அழகாகப் பாடியுள்ளார்-" நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்.இன்னைக்கி ராத்திரிக்கு மட்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்.." புகைப்பதைப்ப ற்றி கூட ஒரு ஜோக் உண்டு . " நான் புகைப்பதை நிறுத்தலாம் என்று யோசிக்கிறேன். ஆனால் நான் யோசிப்பதற்கு சிகரெட் வேண்டுமே!!" 
         இவை மூன்று தான் பிரதான தீர்மானங்கள். இதற்கு அடுத்து வருவன பணம் சம்பாதிப்பது பற்றி இருக்கும் அல்லது குடும்பத்தை கவனிப்பது பற்றி இருக்கும்.புத்தாண்டு இவ்வுலகில் நுழையும் போதே தன்னுடன் நம்முடைய அழகான எண்ணங்களை அழைத்து வருவதென்னவோ வாஸ்தவம் தான். ஆனால் நாம் தான் புதுப்பெண்டாட்டியின் மேல் உள்ள ஆசை அறுபது நாள் , மோகம் முப்பது நாள் என்றாற்ப் போல் நமது சிறந்த வைராக்கியங்களை தவற விடுகிறோம். இது போல தீர்மானங்களை புத்தாண்டு அன்று தான் எடுக்க வேண்டுமா? ஒவ்வொரு நாளும் இனிய நாள் தானே? ஏன் நாளை ? இன்றே செய்வோம் அதை நன்றே செய்வோம். என்ற மனநிலை இருந்தால் எதையும் சாதிக்கலாம். 


       சரி .. என்னுடைய சீக்ரட் பிளான் பற்றி சொல்கிறேன். என்னுடைய பிளான் 
நம்பர் ஒன்று.. யாரையும் இகழக் கூடாது .( எல்லோரையும் கிண்டல் செய்யும் பெட்ட பழக்கம் எனக்கு உண்டு.) எல்லோரிடமும் உள்ள நல்ல குணங்களை மட்டுமே பார்ப்பது. உதாரணமாக நீங்கள் இதை வாசித்து விட்டு லைக் போடாமல் முன்னேறினாலும் உங்களைக் கோவிக்காமல்  "பாவம்அவர்.. ரொம்ப பிஸி..லைக் போடக்கூட நேரமில்லை போலிருக்கிறது " என்று மன்னித்து விடுவது.
நம்பர் ரெண்டு - டிவி யில் வரும் மொக்க புரோக்ரம்களை பார்க்காமலிருப்பது. நேர்பட பேசு என்று தலைப்பிட்ட விட்டு சில்லறைத்தனமாக சண்டையிடுவது, சூப்பர் சிங்கர் என்ற பெயரில் பெற்றோர்கள் , காம்பியர்கள் மற்றும் ஜட்ஜ்கள் அடிக்கும் கூத்து , மற்றும் தமிழ்க்குடும்பங்களில் கொலை செய்வது , கள்ளத்தொடர்பு போன்றவை சகஜம் என்பது போல் சித்தரிக்கும் நாடகங்கள் போன்றவற்றை பார்க்காமலிருக்க வேண்டும். 
நம்பர் மூன்று- பொதுவாக எல்லோரும் செலவைக்குறைக்க வேண்டும் வருமானத்தை பெருக்க வேண்டும் எனத்தீர்மானம் எடுப்பார்கள். ஆனால் அதிக ஷாப்பிங் போக வேண்டும் என நான் யோசித்துள்ளேன் . ஏனென்றால் புத்தாண்டுத்தீர்மானங்கள் எப்போதும் தோல்வியில் தானே முடியும். நான் ஷாப்பிங் அதிகமாக செல்ல ஆசைப்படுவது எதில் முடியும் என்று புரிகறதா?
எனக்கு ஒரு சின்ன ஐடியா உள்ளது . நான் இதை ஏற்கனவே செயல்படுத்தி வருகிறேன் . நீங்களும் வேண்டுமானால் புத்தாண்டிலிருந்து செய்து பாருங்கள். ஒரு அழகிய கண்ணாடி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் . வருடப்பிறப்பிலிருந்து உங்கள் வாழ்வில் ஏற்படும் சுவையான சம்பவங்களை சிறிய துண்டுச்சீட்டில் எழுதி உள்ளே போடுங்கள் . அது எது வாகவும் இருக்கட்டும். உங்கள் வீட்டில் ரோஜா பூத்ததாக இருக்கலாம் அல்லது உங்கள் மகள் உங்களுடன் விளையாடியதாக இருக்கலாம், உங்கள் உயரதிகாரி உங்களைப் பாராட்டியதாகட்டும் இப்படி ஏதாவது ஒன்று உங்களை மகிழ வைத்தது, நெகிழ வைத்தது, அல்லது கோப படவைத்தது எதையாவது எழுதி உள்ளே போட்டுக்கொண்டு வாருங்கள். வருட முடிவில் எடுத்துப்பார்த்தால் மிகவும் சுவையாய் இருக்கும். (உங்கள் ப்ஃரெண்ட் முருகேஸ்வரி எழுதியதைக்கூட நீங்கள் எழுதி உள்ளே போடலாம் . இல்லை இல்லை இது கட்டாயமில்லை . சும்மா ஒரு விளம்பரம் தான்.) எப்போதுமே பழையன வற்றை அசை போடுவதில் ஒரு அலாதி இன்பம் இருக்கும் . நீங்கள் பார்திருப்பீர்களே சிலர் அந்த காலத்திலே என்று பழம்பெருமை பேசும் போது எவ்வளவு ரசித்துப்பேசுவார்கள் என்று . அது போலத்தான் இதுவும், பழையதை மறக்காமல் நினைத்து மகிழ்வது.
       வாருங்கள் அனைவரும் 2015 ஐ வரவேற்போம். நம்மிடம்நல்ல விதமாகவே நடந்து கொண்ட 2014 க்கு விடை கொடுப்போம். 





 


 

No comments:

Post a Comment