Thursday, March 26, 2015

ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே


நம் வாழ்வில் எத்தனையோ சுவையான சம்பவங்கள் நடக்கின்றன. சில நிகழ்வுகள் நம் மனதை விட்டு நீங்காமல் பசுமரத்தாணி போல நிலைத்து நிற்கும். சில நிகழ்வுகள் அவ்வப்போது நினைவுக்கு வந்து நிழலாடும்.
சிலவற்றை நாம் மறந்தே போவோம். ஆனால் பல சமயங்களில் புகைப்படங்களுடன் கூடிய நினைவுகளை நாம் மறப்பதே இல்லை. அப்படித்தான் என் வாழ்வில் நான் மறக்கியலாத புகைப்படச் சம்பவம் ஒன்று உள்ளது. அது ஒரு அழகிய, இனிய குட்டிக்கதை..கதை கேட்கும் விருப்புடன் எனது இளமைப் பருவத்திற்கு செல்லலாம்.


    நான் அப்போது நான்காம் படித்துக் கொண்டிருந்தேன். விநோதினி டீச்சர் தான் எங்கள் டீச்சர். எனக்கு அவர்களை ரொம்பப்பிடிக்கும். அன்பாக இருப்பார்கள், நிறைய அறிவுரை தருவார்கள். சிறுவனாக இருப்பதினால் குனிந்து என் காதருகே வந்து பேசுவார்கள். அப்போதெல்லாம் ஸ்கூல் முடிந்தவுடன் டீச்சரிடமே டூயுசனுக்கு அனுப்புவார்கள். ஒரு நாள் டீச்சர் டூயுசன் படித்த அனைவரையும் பக்கத்திலிருந்த ஃபோட்டோ ஸ்டூடியோவில் போய் குரூப் ஃபோட்டோ எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். டூயுசனில் மொத்தம் பத்து பேர் இருந்தோம். போட்டோவுக்கு இரண்டு ரூபாய் ஆகும் என்பதால் ஐந்து பேர் மட்டுமே ஃபோட்டோ எடுக்க சம்மதித்தோம்.
நாங்கள் எங்களிடம் இருந்த சிறந்த உடைகளைப் போட்டுக்கொண்டு சும்மா ஜில்லென்று போஸ் கொடுத்தோம். 
              எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.. நான் அன்றைக்கு பொட்டு வைத்திருக்கவில்லை , ஆனால் ராமசாமி வைத்திருந்தான். உடனே ஸ்டூடியோக்கார ர் உனக்கும் வைத்து விட்ட்டுமா என்று கேட்டார் . நான் ஆமாம் என்று வேகமாக தலையை ஆட்டினேன். உடனே புகைப்படத்தில் எனக்கும் ஒரு பொட்டு வைத்து விட்டார். மகிழ்ச்சியுடன் ஃபோட்டோவைத் தூக்கிக்கொண்டு ஆசை ஆசையாய் விநோதினி டீச்சரிடம் கொண்டு போய் காட்டினோம். அவர்கள் எங்கள் பெயர்களை அழகாக எழுதி தேதியிட்டுக் கொடுத்தார்கள்.இதில் ஆச்சர்யம் என்னவென்றால் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ஐவரையும் மிகத் துல்லியமாக ஞாபகம் இருக்கும் எனக்கு என்னுடன் டூயுசன் படித்த ஏனைய ஐவர் துளியும் நினைவில்லை. எங்ஙனம் ஞாபகப்படுத்தினாலும் நினைவில்லை. எல்லாம் அந்த ஃபோட்டோ செய்த மந்திரம்.
             அதன்பின் காலங்கள் எவ்வளவோ மாறிவிட்டன. ஒரே ஊரில் இருந்தாலும் நாங்கள் அடிக்கடி சந்திக்கவில்லை. வியாபாரம், திருமணம், குழந்தைகள், படிப்பு என்று திசைக்கொரு பக்கமாய் ஓடிக்கொண்டே இருந்தோம். சுமார் நாற்பத்தி ஐந்து வருடங்கள் கழித்து ஒரு திருமணத்தின் போது அனைவரும் சந்தித்தோம். பழைய நினைவுகளை மெல்ல அசை போட்டோம். அப்போது போலவே இப்போதும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். எங்களுக்குள் இருந்த குழந்தைத்தனம் வெளிப்பட்டது.


                பின் அவ்வப்போது சந்தித்தோம்.
இப்போது ஐவரும் டீச்சரை சந்தித்தால் என்ன என்று ஒரு நாள் தோன்றியது. ஆனால் டீச்சரைக் கண்டுபிடிப்பது எப்படி? 
எங்கே இருப்பார்களோ? எப்படி இருக்கிறார்களோ? சந்திக்க விரும்புவார்களோ என்னவோ?நினைவிருக்குமோ ? சரி, முயன்று பார்க்கலாம் என்று அறிந்த தெரிந்த ஆசிரியர்களிடம் விநோதினி டீச்சர் பற்றி கேட்கலானோம். 7A செல்வராஜ் வாத்தியார் தான் உடனே நினைவுக்கு வந்தார். அவரைப் பற்றி ஒரு வார்த்தை -வகுப்பறையை lively ஆக்குவதில் அவருக்கு நிகர் அவரே. ஒரு முறை row row a boat பாடலைக் கற்பிக்கும் போது மாணவர்களை டெஸ்க்கின் மீது அமர்ந்து கொண்டு துடுப்பு போடச் சொன்னார்.நாங்கள் அவருடைய வகுப்புகளை ரொம்பவே விரும்பிப் படித்தோம். அவர் என்னுடைய பழைய நண்பனான ஏஞ்ஜல் ஐ தொடர்பு கொண்டால் விநோதினி டீச்சரை சந்திக்கலாம் என்றார். காரியம் எனக்கு சுளுவாயிற்று. என் தோழன் ஏஞ்ஜல் விநோதினி டீச்சரின் சகோதரியின் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்துக் கொடுத்தான். அவர்களிடம் பேசி டீச்சர் பற்றிய விபரம் அறிந்தோம். தொலைபேசி எண்ணையும் பெற்றுக் கொண்டோம். டீச்சர் இப்போது ரிடையர் ஆகிவிட்டார்கள். திருநெல்வேலியில் இருக்கிறார்கள் . உடனே அவர்களுக்கு ஃபோன் போட்டு பேசினோம். அவர்களுக்கு நினைவில்லை.
                டீச்சர் எங்கள் புகைப்படத்தில் கையெழுத்திட்ட நாள் 16-3-1969. அதே நாளில் இந்த வருடம் போய் சந்தித்தால் என்ன என்று தோன்றியது. ஆனால் திரதிர்ஷ்டவசமாய் அன்று திங்கட்கிழமையாய் இருந்தது. அனைவருக்கும் அலுவல் இருக்குமே. சரி, முந்தையான நாளான ஞாயிற்றுக்கிழமை 15-3- 2015 அன்று போகலாம் என்று முடிவு செய்தோம். சுதர்சனால் வர முடியவில்லை, மற்ற மூவரும் சிவகாசியிலிருந்தும் நான் சென்னையிலிருந்தும் கிளம்பினோம். ஏதோ ஜோராக்க் கிளம்பி விட்டோமே தவிர எங்களுக்குள் ஒரு சின்ன சந்தேகம் இருந்தது. அதே டீச்சர் தானா என்று. தெருமுனை வரை வந்து டீச்சரின் கணவர் வரவேற்றார் . சந்தேகத்துடனே அவருடன் நடை பயின்றோம்.டீச்சர் வீடு மாடியில் போல ., மாடியில் நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அதே முகம். எங்கள் ஐயம் தீர்ந்தது. அன்று பார்த்தது போலவே இன்றும் இருந்தது , என்ன தலை தான் நரைத்திருந்தது. 



          டீச்சரை சந்தித்தோம். அவர்களுக்கு எங்கள் பெயர் நினைவில்லை. சுதர்சன் அவர்களுக்கு பக்கத்து வீடாம் அவனை நினைவு கூர்ந்து கேட்டார்கள். வேறு முக்கியமான அலுவல் காரணமாக அவன் வரவில்லை என்று தெரிவித்தோம். எங்களைக் கண்டு ஆனந்தப்பட்டார்கள். ஆச்சரயப்பட்டார்கள். சொல்லி சொல்லி மாய்ந்து போனார்கள். எத்தனையோ வருடங்களுக்கு முன் எப்போதோ டியூசன்படித்ததை நினைவு கூர்ந்து, தன்னைப்பார்க்க வந்ததை எண்ணி நெகிழ்ந்து போய்விட்டார்கள். அப்போது எடுத்த புகைப்படத்தையும் இப்போது எடுத்த புகைப்படத்தையும் காட்டினோம். ஆவலுடன் வாங்கிப் பார்த்தார்கள். அப்போது அந்தப் புகைப்படத்தில் பெயர் எழுதிக் கொடுத்ததைப் போல இதில் கையெழுத்திட்டுக் கொடுத்தார்கள். நாங்கள் வருகிறோம் என்று அக்கம் பக்கத்திலிருந்தவர்களிடம் சொல்லி இருப்பார்கள் போலிருந்தது. சிலர் வந்து எட்டி எட்டி பார்த்து விட்டுச்சென்றனர். டீச்சரின் கணவர் நன்றாக அளவளாவிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து நாங்கள் வாங்கிச் சென்ற பரிசை கொடுத்து விட்டு கிளம்பினோம்.

         
P.S. ராமசாமிஅவர்களின் பார்வையிலிருந்து:
   டீச்சரை சந்தித்து விட்டு வந்ததிலிருந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளேன். என் நண்பர்கள், உறவினர்கள் அனைவரிடமும்இதைப் பற்றிக் கூறினேன். என் அக்காவும் விநோதினி டீச்சரும் ஒன்றாகப் படித்தவர்களாம் . அவர்கள் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தைக் கொண்டு போயிருந்தேன். அதை டீச்சரிடம் காட்டினேன். உடனே அவர்கள் உற்சாகமாகி விட்டார்கள். பழைய நினைவுகளை அசை போட்டார்கள். இருவரும் ஃபோனில் பேசிக் கொண்டார்கள். பழைய நட்பு ஒன்று மறுபடியும் பூக்கக் கண்டு மகிழ்ந்தேன். நான் போய் வந்த இரண்டொரு நாட்களில்  என் அக்காவும் போய் டீச்சரை சந்தித்து விட்டு வந்துவிட்டார்கள். இப்போது அவர்களது நட்பு தொடர்கிறது. 



சுதர்சன் அவர்களது பார்வையிலிருந்து:
 
பொதுவாக Batch Meet என்று பள்ளியில் படித்த நண்பர்கள் அனைவரும்
 சந்தித்து ஆசிரியர்களை கௌரவிப்பது வழக்கம். நானே என்னுடைய ஆசிரியர்களை 2003 இல் ஒரு பெரிய get together போட்டு கௌரவித்துள்ளோம். ஆனால் தனியொரு டீச்சரை இப்படி டூயுசன் படித்த ஐவர்மட்டும் கௌரவிப்பது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். இந்த நட்பு கொஞ்சம் வித்தியாசமானது. ராமசாமி வீட்டுத் திருமணத்தின் போது நாங்கள் ஐந்து பேரும்நின்று புகைப்படம் எடுத்தது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. பல பேர் என்னிடம்,' என்ன ஸ்பெஷல்?நீங்கள் ஐந்து பேரும் நின்று நின்று தனியாக ஃபோட்டோ எடுக்கிறீர்கள் ?' என்று கவனித்து கேட்டார்கள். கேட்ட அனைவருக்கும் நாங்கள் டூயுசன் படித்த கதையையும் புகைப்படம் எடுத்த கதையையும் சொன்னோம். அன்றைய தேதியில் டீச்சரை சந்திக்க முடியாமல் போனது எனக்கு மிகப் பெரிய வருத்தம். விரைவில் என் குடும்பத்தாருடன் போய் அவர்களை சந்திப்பேன்.


பகீரதன் அவர்கள் பார்வையிலிருந்து:
 
அந்தப்புகைப்படத்தில் நான்கு பேரும் பேண்ட் அணிந்திருப்பார்கள். நான் மட்டும் ஷார்ட்ஸ் அணிந்திருந்தேன். என்னிடம் அப்போது பேண்ட் இல்லை. என்னால் யாரிடமும் கடன் வாங்கவும் முடியவில்லை. அப்போது எனக்கு அது வருத்தமாக இருந்தது நம்மால் பேண்ட் போட முடியவில்லையே என்று. ஆனால் அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் போது மிகச் சந்தோசமாக இருக்கிறது. நாம் மட்டும் வித்தியாசமாக ஷார்ட்ஸ் அணிந்திருக்கிறோமே என்று. மேலும் ஒரு கூடுதல் தகவல். நான் காலேஜ் போகும் போதுதான் பேண்ட் அணிந்தேன். அப்போதெல்லாம் பேண்ட் போடுவதென்றால் பெரிய விஷயம். ஆனால் இப்போது அப்படியா? இரண்டு மாதக் குழந்தைக்கும் கூட பேண்ட் உள்ளது. மற்றொரு முக்கியமான விஷயம் டீச்சர் நாங்கள் சந்திக்க சென்ற போது Sunday church செல்வதைக்கூட எங்களுக்காக ஒதுக்கி வைத்து விட்டு காத்திருந்தார்கள். அதை எங்களால் மறக்க முடியாது.



டாக்டர் பொன்னுதுரை அவர்களின் பார்வையிலிருந்து:
 
 பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் கூட நான் கொஞ்சம். பக்கத்து கிராமங்களுக்கு சென்று மருத்துவ சேவை ஆற்றுவேன். ஆனால் விநோதினி டீச்சர் என்றவுடன் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்பி விட்டேன். டீச்சர் மிகவும் அன்பானவர்கள். நிறைய அறிவுரை கூறுவார்கள். டீச்சர் வீட்டுக்கு நான் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட விளையாடச் செல்வேன். அவர்கள் வீட்டில் அவர்கள் வீட்டுப் பையன் போல அமர்ந்து அனைத்தும் செய்வேன். டீச்சர் ஏதாவது கடைக்கு போகச்சொன்னால் ஓடிஓடி செய்வேன். அது எனக்கு சொந்த வீடு போல இருந்தது. இப்போது நாற்பத்தைந்து வருடங்கள் கழித்து சந்தித்த போதும் அவர்களுக்கு அதே குரல். இன்னும் மாறாமல் இருந்தது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர்களுடைய அறிவுரைகளை நான் என்றும் மறக்க மாட்டேன்.



விநோதினி டீச்சர் அவர்களின் பார்வையிலிருந்து:
என்னால் இதை நம்பவே முடியவில்லை. எப்பவோ நான் சின்ன வயதில் இவர்களுக்கு நான்காம் வகுப்பு எடுத்தேனாம். ஒரு புகைப்படத்தை வைத்து இணைந்து என்னைத் தேடி வந்துள்ளனர். இவர்களில் ஒருவனை மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது. பக்கத்து வீட்டு சுதர்சன். மற்றவர்களின் பெயர் மட்டுமே நிழலாடுகிறது. முகம் நினைவில்லை. அது போகட்டும். இவ்வளவு தூரம் நினைவு கொண்டு என்னைத்தேடி வந்து சந்திக்குமளவுக்கு இவர்களுக்கு நான் என்ன செய்து விட்டேன்? இப்போது தான் நான் செய்து வந்த தொழிலின் மீது எனக்கு மிகப் பெரிய மரியாதையே ஏற்படுகிறது.
          எனக்கு திருமணமான பின் பல ஆண்டுகள் சென்னையில் பணியாற்றினேன். பின் ரிடையர் ஆகிவிட்டேன். இப்போது ஓய்வு காலத்தில் மகள் இருக்கும் திருநெல்வேலிக்கே வந்துவிட்டேன்.
அக்கம் பக்கத்தில் இருக்கும் அனைவருக்கும் ஆச்சர்யமான ஆச்சர்யம். என் கணவருக்கோ இதை நம்ப முடியவில்லை. நானும் எத்தனையோ பேரை சந்தித்துள்ளேன் , ஆனால் நான்காம் வகுப்பு ஆசிரியையை நினைவு கூர்ந்து இவ்வளவு தூரம் வந்தவர்களை நான் உளமாற பாராட்டுகின்றேன் என்றார். இனி நாள்தோறும் நான் ஜெபிக்கையில் இந்தக் குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என்னுடைய பிரார்த்தனையில் நிச்சயம் இடம் பெறுவார்கள்.


இறுதியாக....
     
  ஆசிரியப் பணி தெய்வீகமானது. மாணவர் ஆசிரியர் பந்தம் என்பது உணர்வு பூர்வமானது. 'எங்கள் ஆசிரியரை விட எங்களுக்கு அதிகம் தெரியும் ' என்று சந்தர்ப்பம் கிடைக்கும் வேளைகளில் எல்லாம் பறைசாற்றிக்கொண்டிருக்கும் இக்காலத் தலைமுறையினருக்கு இந்த உணர்வு பூர்வமான பந்தம் புரியாது. 
            நாம் வாழ்வில் முன்னேறி பெரும் பதவிகளையும் அல்லது பேறுகளையோ அடையும் போது நம்மைப் பார்த்து மகிழும் சில தூய உள்ளங்கள் உண்டு. ஒன்று நமது பெற்றோர். அது இரத்த பந்தம், அதனால் அவர்கள் ஆனந்திப்பது இயல்பு. அடுத்தது ஆசிரிய பெருமக்கள். தம் மாணவர்கள் தங்களை மிஞ்சினால் அவர்களை விட ஆனந்தப்படுபவர் வேறு எவரும் இல்லை. ஆசிரியர் என்பவர் மனதளவு நன்றிக்கும் , செயலளவு மரியாதைக்கும் உருத்துடையவர் ஆவர்.விநோதினி டீச்சர் அவர்களைச் சந்தித்தது என் வாழ்வின் பெரும்பேறாக கருதுகிறேன். வாழ்வின் மறக்க முடியாத நாள்.
               என்றென்றும் ஆசிரியர்கள் மீது
              மிகுந்த மரியாதைவைத்திருக்கும்
                       ரவி.
----------------------------------------------------------------------------------------


                                                           Sincere thanks to

ANGEL PHILOMEN7A SELVARAJ SIR

     


11 comments:

  1. Excellent presentstion. Hats off to Ravi. This event happened only because of the efforts taken by Ravi. We are thankful to him for making that day, a memorable one.
    Bageerathan

    ReplyDelete
    Replies
    1. Thank you Anna .. It is a joint effort .. Wish I had friends like this .

      Delete
  2. மகிழ்ச்சியாய் இருக்கிறது அண்ணா....ஆசிரியர் தொழில் தேர்ந்து எடுத்தது நினைத்துபெருமையா இருக்கு அண்ணா.அற்புதம் அற்புதம்...வாழ்க பல்லாண்டு

    ReplyDelete
  3. nice ravi uncle... awesome work. thank u for remembering my grandma... i am really astonished ... great job uncle!

    ReplyDelete
  4. Surprised story.New AUTOGRAPH

    ReplyDelete
  5. That was one great write-up.I am pretty moved by your noble gesture.kudos to you and your friends.

    ReplyDelete