ராமு ராகேஷ் சாரிடம் டிரைவராக இருபது வருடங்களாக இருக்கிறான். அவர் அவனுக்கு ஒரு குறையும் வைத்ததில்லை. உண்மையைச் சொல்வது என்றால் அவன் முகம் கொஞ்சம் சோர்வாக இருந்தால் கூட கவனித்து அவனுக்கு என்ன பிரச்னை என்று அறிந்து உதவுவார். ராமுவும் கால நேரம் பார்க்காமல் அவர் குடும்பத்துக்கு உழைத்துள்ளான்.
டிரைவர்தான் என்றாலும் ராமு சிறுக சிறுக சேமித்த பணத்தைக் கொண்டு சொந்த வீடு ஒன்று கட்டி விட்டான். பிள்ளைகள் இருவருமே படிக்கிறார்கள். கடவுள் புண்ணியத்தில் இருவருமே நன்றாகப் படிப்பதால் அவனுக்கு எந்தக் கவலையுமில்லை. ஆனால் இப்போது கொஞ்ச நாட்களாக மனைவி லட்சுமி தான் மகனை எப்படியாவது இன்ஜினியரிங் படிக்க வைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறாள். நம் வசதிக்கு அது தோதுப்படாது என்று சொன்னால் அவளுக்குப் புரியவில்லை. பையனுடைய எதிர்காலம் நல்லா இருக்கும்.. எப்படியாவது பணம் புரட்டிக் கொடுய்யா என்று நச்சரித்துக் கொண்டிருக்கிறாள்.
அதெல்லாம் வேண்டாம் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டான். விரலுக்கு தகுந்த வீக்கம் போதும். அவன் ஆர்ட்ஸ் காலேஜில் பி.எஸ்ஸி படிக்கட்டும். போதும் என்றான். மகனும் ஒத்துக் கொண்டான். மனைவியும் அமைதியாகி விட்டாள். இந்த மனுசனை ஒண்ணும் பண்ணமுடியாது, பிழைக்கத் தெரியாதவன் என்று முடிவு கட்டி விட்டாள் போலும் .
ரிசல்ட் வந்தது. ராமுவின் மகன் 1110 மார்க் வாங்கியிருந்தான். சந்தோசத்தில் ராமுவிற்கு தலைகால் புரியவில்லை. முதலில் ராகேஷ் சாருக்கு தான் சொல்ல வேண்டும் என்று மகனை கூட்டிக்கொண்டு ஸ்வீட் வாங்கிக் கொண்டு அவரைப் பார்க்க ஓடினான்.
" ஐயா.. என் பையன் நல்ல மார்க் வாங்கி பாசாயிட்டான். முதல்ல உங்ககிட்ட தான் சொல்லணும்னு கூட்டி வந்தேன். தம்பி ஆசிர்வாதம் வாங்கிக்கோ. உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கின பிறகு தான் சார் நாங்க கோயிலுக்கே போகப்போறோம்," என்று சந்தோசமாக்க் கூறினான்.
ராகேஷ் அவனை தூக்கி நிறுத்தியவாறே," நானும் உனக்கு ஒரு பரிசு வைத்திருக்கிறேன்" என்று ஒரு கவரை நீட்டினார். அது.. நகரில் உள்ள தலைசிறந்த இன்ஜினியரிங் காலேஜில் அவனை சேர்ப்பதற்கான அட்மிஷன் கடிதம். அதுவும் அவன் விரும்பும் பிரிவை எடுத்துக் கொள்ளலாம் என்ற சலுகை வேறு அளிக்கப்பட்டிருந்தது.
ராமு விக்கித்துப்போய் நின்று விட்டான் . அவன் கண்களில் நீர் திரண்டது. பேச நா எழவில்லை. ராகேஷ் " நீ சொல்லவில்லை என்றால் எனக்குத் தெரியாதா?!" என்று புன்னகைத்தார்.
No comments:
Post a Comment