சரி நம்மைப் பார்க்கும் இடத்தில் எல்லாம் கூப்பிடுகிறாரே என்று நாம் போய்விட்டால் அங்கு நமக்கு ஒரு விநோதமான அனுபவம் காத்திருக்கும். வாயிற்கதவைத் திறந்தவுடன், ஒரு திகைத்த பார்வையுடன் சிரிப்பார். "என்னடா இது, சும்மாதானே கூப்பிட்டோம், நிஜமாகவே வந்துவிட்டார் " என்று அந்தப்பார்வை அர்த்தம் சொல்லும். சமாளித்துக்கொண்டு வாங்க வாங்க என்று உள்ளே அழைத்துச்செல்வார். அடுத்து அவரது மனைவியோ கணவரோ வந்து ஒரு அசட்டுச்சிரிப்புடன் வாங்க என்பார். நம்மை உக்கார வைத்து விட்டு அரக்க பரக்க வீட்டை ஒதுக்குவார்கள். என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்பார்கள். ஒன்றும் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காமல் காபியோ குளிர்பானமோ ஏதாவது ஒன்று எடுத்து வருவார்கள். மிக மிக சூடாக ஸ்ட்ராங்காக காபி குடிக்கும் பழக்கம் உள்ள எனக்கு அவர்கள் தரும் மிதமான சூட்டில் உள்ள காபியைக் குடிக்கவே முடியாது. மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் நாகரீகம் கருதி வைத்துக்கொண்டே இருப்பேன் பின் விழுங்கித்தொலைப்பேன்.
அடுத்து அவர், "என்ன சார் இந்தப்பக்கம்?" என்று கேட்பார். அச்சச்சோஇவருக்கு அதற்குள் மறந்து விட்டதா? இவர்தானே என்னைக்கட்டாயம் வீட்டிற்கு வரவேண்டும் என விரும்பி அழைத்தார் என்ற எண்ண ஓட்டத்துடன் நான் சிரித்துக்கொண்டே சமாளிப்பேன், "இந்தப்பக்கமாய் வந்தேன், அதான் உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தேன்" என்பேன். அவரும் சரி சார் என் பிள்ளைகளைக்காட்டுகிறேன் என்று அவர்களை அழைப்பார். பதிலே வராது. மீண்டுமொரு முறைஅழைப்பார். மற்றொருமுறை அழைப்பார். இம்முறையும் பதில் வராது. சரி விடுங்க சார் என்று நான் கூறினாலும் விடாது போய் அழைத்து வருவார். நாம் சிரித்துக்கொண்டே உன் பேர் என்ன என்று கேட்டால் அந்த வாண்டுகள் நம்மை முறைக்கும். இவர் எதற்காக வந்து இப்படி நம் உயிரை எடுக்கிறார் என்பது போல் இருக்கும் அந்தப்பார்வை. வேண்டாவெறுப்பாக பதில் வரும். இது தெரிந்து உனக்கு என்னடா ஆகப்போகிறது என்று கேட்பது போலவே அந்த பதில் இருக்கும். சரி இதோடு போகட்டும் என்று விடமாட்டார் அவர். அவரது மகனது பெருமையைப்பற்றி பேசி மார்க் எடுத்துட்டு வா என்பார் அல்லது ஏதாவது கவிதை சொல்லச்சொல்வார். அந்தக்குழந்தை அப்பா சொல்வதையும் தட்ட முடியாமல் நம்மிடமும் சொல்ல விருப்பம் இல்லாமல் விழிக்கும். அப்போது ஒரு உணர்வு தோன்றுமே அது தான் தர்ம சங்கடம். அதை விடவும் மோசம் சின்னகுழந்தைகளாக இருந்தால் அவர்தம் ஸ்கூலில் படித்த அத்தனை ரைம்ஸ் ஐயும் நாம் கேட்டாக வேண்டும்.
No comments:
Post a Comment