Friday, November 28, 2014

விரக்தியின் எல்லை




மனம் என்பது விந்தையான ஒன்று. மனிதமனத்தின் ஆழத்தில் ஊடுருவிக் கிடக்கும் எண்ணங்களை எவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வருவது போல் தோற்றமளிக்கும் ஒருவர் திடீரென்று தற்கொலை செய்து கொள்கிறார் என்றால் அவர் எத்தகைய மன அழுத்தத்தில் இருந்துள்ளார் என்று புரிந்து கொள்ள முடியும். இதே போல, இந்த தம்பதியரைப் போல உண்டா என்று ஊரே சிலாகித்துப் பேசும் தம்பதியினர் திடீரென்று விவாகரத்து முடிவை அறிவிக்கும் போது உலகம் அதிர்ந்து தான் போகிறது. 
           தற்கொலை முயற்சிக்கு முயன்ற ஒருவரை நான் சந்தித்த வேளையில் அவர் கூறியது." என் வாழ்வின் துன்பங்களை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. வாழ்வதே துன்பம். நான் இருப்பதே அனைவருக்கும் பாரம், கஷ்டம்" என்று கூறினார். இந்த இடத்தில் அவருக்கு நான் எங்கோ படித்ததை நினைவூட்ட விரும்புகிறேன். I told my psychiarist that everyone hates me. He said I was being ridiculous -everyone hasn't met me yet.
                      - Rodrey Dangerfield.
                               ( A Comedian) 
          பொதுவாக தற்கொலை என்றவுடன் கடன் தொல்லை, காதல் தோல்வி, திருமண வாழ்வின் தோல்வி, தேர்வில் தோல்வி, உடல் உபாதைகள், பணியில் நிரந்தரமின்மை, பணக்கஷ்டம் என்று ஏதேனும் ஒரு காரணத்தை அதனுடன் காரணப்படுத்திவிடுவோம். ஆனால் stress என்னும் மன அழுத்தம் தான் முக்கிய காரணமாகத் திகழும். இத்துடன் போதைப்பழக்கம் ஏதாவது ஒட்டிக்கொண்டால் தற்கொலை எண்ணம் தலைதூக்குவது நிச்சயம். 
            மன அழுத்தம் என்பது விநோதமான கொடிய மனநிலை. பிடிப்பற்ற தன்மை, விரக்தி, துன்பம் - போன்றவை அதனைப் பின் தொடரும் நிலைகள். நம் எல்லோருக்கும் வாழ்வில் பிடித்ததானவை பல உண்டு. அவற்றையெல்லாம் வெறுத்து, சாவது ஒன்றே சிறந்தது என்ற எண்ணத்தை விதைக்கும் கொடூர மனநிலை அது.
 
              இது போல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை -psychotherapy, என்பது வெறும் ஏட்டளவிலே உள்ளது. உதவுவதற்கு நிறைய அமைப்புகள் முன் வந்தாலும் ஏற்றுக்கொள்ள நோயாளிகள் முன் வருவதில்லை. மன அழுத்தத்தைத் தொடர்ந்து மனச்சோர்வு ( depression) ஏற்படும். இது சிந்தித்து செயலாற்றும் திறனையும் ஞாபக சக்தியையும் குறைத்து விடும். அதனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கமுடிவெடுத்தால் அது பற்றி அவர்களிடம் அறிவித்து விட வேண்டும். பொதுவாக இதற்கு யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். 
            நோயாளிகளிடம் பேசுவதே சிறந்த தீர்வாகும். அவர்கள் தாங்களாக உதவி கேட்க மாட்டார்கள். அப்படியென்றால் அவர்களுக்கு உதவி தேவை இல்லை என்று அர்த்தம் அல்ல. நோயாளிகள் சுலபமாகப்பேசி தங்கள் மனதில் உள்ளவற்றை பகிர மாட்டார்கள். அவர்களுடன் பேசுவது என்பது மிகவும் கடினமான வேலை. முதலில் அவர்களது நம்பிக்கைக்கு நாம் பாத்திரமாக வேண்டும்.தங்கள் தனிமையிலிருந்து விடுபட்டு உங்களுடன் உரையாட அவர் விரும்ப வேண்டும். அது வரை நாம் பொறுமை காக்க வேண்டும்.நிதானமாகப்பேச வேண்டும். ஆர்க்யுமெண்ட் செய்யக்கூடாது., அறிவுரை சொல்லக்கூடாது. அவர்கள் புறக்கணிக்கப் படவில்லை என்று அன்பாக உணர்த்த வேண்டும். யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று வாக்களித்து விட்டு பின் யாரிடமாவது அவர்களது பிரச்சனையை வெளியிடக்கூடாது. அவர்களது நம்பிக்கைக்கு பாத்திரமாக நாம் செயல்படவேண்டும்.வேறு எண்ணங்களில், செயல்களில் மனதை செலுத்த அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
    சுய முன்னேற்ற நூல்கள், சுயசரிதை நூல்கள், வாழ்க்கை சரிதங்கள் போன்றவற்றை அவர்கள் வாசிக்க ஊக்குவிக்க வேண்டும். உயிர் உன்னதமானது ., அதனைப் போக்குவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை என்று உணர்த்த வேண்டும். நொடிப்பொழுதில் ஏற்படும் சஞ்ஜலங்களுக்கு அடிமை ஆக்க்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்.
சமீபத்திய செய்திகளில் தற்கொலைகள் அதிகம் இடம்பெற்றதைத் தொடர்ந்து இந்த பதிவு உருவானது. இது எவர் மனதையாவது மாற்றினால் பெரும் மகிழ்ச்சி அடைவேன் .

No comments:

Post a Comment