Thursday, November 20, 2014

Auto

்முன்பின் அறியாத ஒருவருடனோ அல்லது தெரிந்தும் நன்றாகப் பழகாத ஒருவருடனோ பேசும் போது பொதுவாக நான் சர்வஜாக்கிரதையாக கிளைமேட் பற்றியே பேசுவேன். சினிமா, அரசியல் போன்ற பொதுப்படையான விஷயங்கள் சில    
சமயங்களில் கருத்து வேறுபாட்டை உருவாக்கி மனக்கஷ்டத்தை உருவாக்கிவிடும். அதனால் இப்போதெல்லாம் பொதுப்படையாய் பேசுவதற்கு ஆட்டோக்கார்ர்கள் தான் அகப்பட்டார்கள். ஆட்டோ அனுபவங்கள் எப்போதுமே சுவையாகவும் சில சமயங்களில் நூதனமாகவும் இருக்கும்.
   
      ஆட்டோ சவாரி உங்களுக்கெல்லாம் எப்படியோ தெரியாது, ஆனால் வெளிநாட்டினருக்கு மிகவும் பிடித்த ஒன்று. வெளிநாட்டினர் ஆட்டோ மீதேறி உற்சாகமாக போஸ் கொடுப்பதை நீங்கள் நாளிதழ்களில் அடிக்கடி பார்த்திருக்கலாம். சென்ற வருடம் அருணாவின் விருந்தாளியாக ஜெர்மன் மாணவி லேனா எங்கள் வீட்டில் வந்து சுமார் பதினைந்து நாட்கள் தங்கியிருந்தாள். எங்களுடன் காரில் பயணிப்பதை விட ஆட்டோவில் சென்னை வீதிகளில் வலம் வருவதையே அவள் அதிகம் விரும்பினாள். நீங்கள் குதிரை மீதோ யானை மீதோ சவாரி செய்வதை எந்த அளவு ரசிப்பீர்களோ அதே அளவு உற்சாகத்துடன் அவள் ஆட்டோ சவாரியை ரசித்தாள். எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு முறையை கடைபிடிப்பவர்கள் ஜெர்மானிர்கள். இங்கு ஓயாமல் ஹார்ன் அடிப்பது, டிராபிக் ரூல்ஸ்களை மதியாமல் இஷ்டப்படி வண்டி ஓட்டுவது போன்றவை அவளுக்கு புதுமையாய் இருந்தது. ஆட்டோக்கார்ர்கள் சந்துபொந்துகளில் புகுந்து புகுந்து  வண்டி ஓட்டியதை அவள் ரொம்பவும் ரசித்தாள். நாங்கள் தான் உயிரை கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தோம். அவளுக்காக நாங்கள் பல நாட்கள் காரைத்தவிர்த்து ஆட்டோவில் பயணித்தோம்.
  தமிழ் சினிமாக்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் ஆட்டோக்காரர்கள் முக்கிய கதாபாத்திரங்களாய் வலம் வந்துள்ளனர். பல படங்களில் கதாநாயகர்கள் ஆட்டோ ஓட்டுனர்களாய் ஜொலித்துள்ளனர். ரஜினி நான்ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் என்று பாடி அவர்களுக்கு ஒரு தனி அந்தஸ்தையே ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். 
 ஆட்டோ டிரைவர்கள் பொதுவாக சுவையாகப்பேசுவதுண்டு. ஒரு முறை நான் ஆட்டோவில் செல்லும் போது  ஆட்டோக்கார்ருக்கு போன் வந்தது. ஏர்போர்ட் சவாரி ஒன்று அவருக்கு வந்தது போலிருந்தது. போனில் பேசிக்கொண்டே வந்தவர் சட்டென்று திரும்பி "மேடம் உங்களுக்கு ஹிந்தி தெரியுமா? இவர் என்ன சொல்கிறார் என்று கேட்டுச்சொல்லுங்கள்" என்று என்னிடம் போனை கொடுத்து விட்டார். நான் முதலில் விழித்தேன். பின் சுதாரித்துக் கொண்டு, ஹிந்தியில் பேசி எந்த இடத்திற்கு வர வேண்டும் என்ற விபரத்தை அறிந்து கொண்டு அவரிடம் தெரிவித்தேன். கஸ்டமரைத் தன்னுடைய PA ஆக்கிய அந்த ஆட்டோக்காரின் management திறனை என்னவென்று புகழ்வது.(ஹி..ஹி..சமாளிப்பு!!)
மற்றொரு முறை வீட்டின் வாசலில் நின்று கொண்டு ஸ்டாண்டில் உள்ள ஆட்டோவை அழைத்தேன்.வீட்டின் எதிரே தான் ஸ்டாண்ட் உள்ளது. அவர் கிளம்பி வருவதற்குள் மற்றொரு ஆட்டோ வந்தது, அதில் நான் ஏறி விட்டேன். உடனே அவர் கத்திக்கொண்டேஅங்கேயிருந்து ஓடி வந்து         என்னைத்திட்டினார். " என்னம்மா நீ ? வர்ரதுக்குள்ள அடுத்த ஆட்டோவைப் பிடித்துவிட்டாய்?"என்று கோபமாக்க் கேட்டார். நான் கண்டுகொள்ளாமல் சென்று விட்டேன். பதில் பேசியிருந்தால் அங்கே ஒரு கூட்டம் கூடியிருக்கும். ஒரு பத்து பேர் நியாயம் பேசியிருப்பார்கள்( வாழ்க இந்தியா!!😝😜)

ஆட்டோக்கார்ர்கள் அடாவடியாகப்பேசுகின்றனர், தடாலடியாகப் பணம் கேட்கின்றனர் என்ற பொதுவான குற்றச்சாட்டு அவர்கள் மீது உண்டு. எல்லோரும் அதனை அனுபவித்திருப்பார்கள். நானே வெளி மாநிலங்களில் கொடுத்த கட்டணத்தை விட சென்னையில் அதிகம் கொடுப்பதை உணர்ந்துள்ளேன். வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளி நாட்டினர் இங்கு வரும் போது, சென்னையில் ஆட்டோக்கார்ர்கள் இப்படி கொள்ளை அடிக்கிறார்களே? யாரும் கேட்கும் மாட்டார்களா , என்று நினைப்பார்களே..நம் மாநிலத்தைப்பற்றி இகழ்வாக நினைப்பார்களே என நான் வருந்துவதுண்டு.

பொது மக்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து கட்டாயம் மீட்டர் போடணும், மீட்டருக்கு மேல் கட்டணம் வசூலித்தால் ரூபாய்.2500 அபராதம் என்று தமிழக காவல்துறை அதிரடியாய் நடவடிக்கை எடுத்துள்ளது. அவசரத் தேவைக்கு ஆட்டோவைத் தான் நாடியாக வேண்டும். நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம், ஆட்டோ உரிமையாளர்களுக்கு தினசரி இவ்வளவு என்று கொடுத்தாக வேண்டிய நிலை போன்றவற்றை ஆட்டோக்கார்ர்கள் தங்கள் தரப்பு நியாயமாகச்சொல்கிறார்கள். 
மீட்டர் போடாவிட்டால் அபராதம் என்ற சட்டம் அமலுக்கு வந்த அன்று, ஆட்டோவில் சென்னைப்பல்கலைக்கழகம் வரை சென்றேன். ஏறும் போதே மீட்டருக்கு மேல் 20 ரூபாய் தர வேண்டும் என்று நிபந்தனை விதித்தார் ஆட்டோக்கார்ர். "முடியாது, நான் போன் செய்து உன் ஆட்டோ மீது கம்ப்ளெயிண்ட் கொடுத்தால்  உனக்கு ரூபாய் 2500 fine போடுவார்கள், தெரியுமா?" என்றவுடன் அமைதியாக ஏற்றுக்கொண்டார் . ஆனால் வழியெங்கும் தன் தரப்பு நியாய வாதங்களை பேசிக்கொண்டே வந்தார்." ஊர் உலகத்துல கோடி கோடியா கொள்ளை அடிக்கிறவங்களை விட்டுற்றாங்க, நாங்க ஐம்பது நூறு அதிகமா கேக்கறதப்பெரிசு படுத்துறாங்க." மோசடி என்பது எல்லாம் ஒன்று தானே!!!அது ஐம்பது ரூபாயாக இருந்தாலும் ஐம்பது கோடியாக இருந்தாலும் தவறு தவறு  தானே!! அமௌன்ட் கம்மி என்றால் குற்றம் தவறில்லை என்றாகி விடுமா? அவர் மேலும் கூறியது, "இந்த அரசாங்கமா ஆட்டோ வாங்கிக் கொடுத்தது? நான் என் சொந்தப்பணம் ஒண்ணேமுக்கால் லட்சம் போட்டு ஆட்டோ வாங்கியிருக்கேன். அதுல மீட்டர் போடுன்னு அரசாங்கம் எப்படி சொல்லலாம்?அரசாங்கம் ஆட்டோ வாங்கிக்கோடுத்தால் அது பேசலாம்." நான்  ஆமா, அதானே அரசாங்கத்துக்கு வேலை என்று நினைத்துக்கொண்டேன். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல மற்றொன்று சொன்னார்." வேணும்னா ஒண்ணு செய்யலாம் ..ஒரு பத்து வருஷம் ஆட்டோ ஓட்டினவங்களாப் பாத்து அரசாங்கமே செலக்ட் பண்ணி அதுவே ஆட்டோ வாங்கிக் கொடுத்து ஓட்டசொன்னால், அதுல மீட்டர் போட்டு காசு வாங்கலாம். இப்போ இது நியாயமே இல்லை." என்றார்.ஆஆஆ..... எப்பேற்பட்ட சிந்தனை!! இப்படி கூட யோசிக்க முடியுமா? நான் அப்படியே ஆடிப்போயிட்டேன். எல்லாவற்றையும் இப்படி அரசாங்கத்தின் தலையில் கட்டுவது சாத்தியமா? அரசாங்கத்தை ஆஊ என்றால் குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம்? நேர்மை, நமக்கென்று சில சமூக்க்கடமை போன்றவை இல்லையா என்றெல்லாம் என் சிந்தனை செல்ல ஆரம்பித்தது. அதற்குள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. எண்ணங்களைஉதறி விட்டு வந்தவேலையை கவனிக்க சென்று விட்டேன்.
மற்றொரு ருசிகரமான தகவல். இதனை எழுதி விட்டு என்ன தலைப்பிடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். Auto என்பதையே தமிழில் எழுதலாம் என்று ஆட்டோக்கு தமிழ் வார்த்தை கூகுளில் தேடினேன் .தானியங்கி மூவுருளி உந்து - இது தான் ஆட்டோவாம்.. சிரித்துக்கொண்டே auto  என்றே தலைப்பிட்டுவிட்டேன்.

2 comments:

  1. ஆட்டோ.....ஆட்டோமெட்டிக்கா சிந்தனையை தூண்டுகிறதுப்பா....!
    //என்னம்மா நீ ? வர்ரதுக்குள்ள அடுத்த ஆட்டோவைப் பிடித்துவிட்டாய்?"என்று கோபமாக்க் கேட்டார்.///
    ஹ ஹ ஹா நியாயம் தானே!
    இது மாதிரி நேரத்துல பேச முடியாது ....
    நான் ஸ்கூலுக்கு போறப்ப ஆட்டோ அதுவும் ஷேர் ஆட்டோல அதிகமா போக வேண்டியுள்ளது....சின்னப்பசங்க ஓட்டினா சும்மா ஃப்ளைட்டுல போற எஃபெக்ட் கிடைக்கும்...
    ஆட்டோல உட்கார்ந்த பிறகு பஸ் வந்து நிக்கும் எல்லோரும் தப தபன்னு இறங்கி பஸ்சுக்கு ஓடுவாங்க....எனக்கென்னவோ அப்படி செய்யத் தோணாது...
    நீ சொல்றமாதிரி ஆட்டோ காரங்க ரொம்ப அறிவானவங்க....சந்து பொந்து எப்படி அத்துப்படியோ அதே மாதிரி விஷயஞானியாவும் இருப்பாங்க!

    ReplyDelete
  2. ஆட்டோ - எனக்கு நேர்ந்த அனுபவங்களை சொன்னேன் .நான் முதலிலேயே குறிப்பிட்டது போல் உலகளாவியது. எல்லோரும்க்கும் வெவ்வேறு அனுபவங்கள்.

    ReplyDelete