Wednesday, February 4, 2015

அக்கா என்னும் மந்திரச்சொல்

அழகிய மாலைப் பொழுது., கைப்பை நிறையப் பணம். மனம் நிறைய சந்தோசம். தேவைகள் பல. என்ன செய்யலாம் ? பொழுது போக வேண்டுமா? உடனே ஸ்கூட்டியை எடு. விடு பல்பொருள் அங்காடிக்கு( அதாங்க சூப்பர் மார்க்கெட்..) குளிரூட்டப்பட்ட அங்காடியில் கதவைத்திறந்தவுடன் ஜிலீரென்ற ஏசிக்காற்று முகத்தில் அறைந்து வரவேற்கின்றது. என்னை எடுத்துக்கொள்ளேன் என்று கெஞ்சலாய்ப்பார்க்கின்றன தள்ளுவண்டிகள். அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள். தேடி எடுப்பதற்கு இலகுவான வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதையும் மீறி தேர்வு செய்ய தடுமாற்றம் ஏற்ப்பட்டால் புன்சிரிப்புடன் ஓடி வந்து உதவும் ஊழியர்கள். தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு பில்போட கவுண்டருக்குச் சென்றால் சட்டென சிறிதும் தாமதமின்றி பில் போடப் படுகின்றது. சில்லறை இல்லை என்று சாக்லேட் தரும் அடாவடித்தனம் இல்லை. Family card என்ற பெயரில் செய்யும் மோசடி இல்லை. வாசல் வரை வந்து பொருட்களைக் கொணர்ந்து தரும் ஊழியர். மீண்டும் இதே கடைக்கு வரவேண்டும் என்று நிறைவான மனதுடன் திரும்பும் நாம்..... இதெல்லாம் கனவில் தான் நடக்கும். ஷாப்பிங் என்பது சுகானுபவமாகி இருந்த நிலை மாறி நினைத்தாலே மிரள வைக்கும் அனுபவமாக மாறி வருகிறது.
              இப்போதெல்லாம் பல்பொருள் அங்காடியில் நுழைந்தால் , பகல் நேரத்தில் ஏசி எதற்கு என்று சிக்கன நடவடிக்கையாக ஏசியை அணைத்து விடுகிறார்கள். பொதுவாக ஏசிக்காக ஜன்னல்கள் இல்லாத கட்டிடங்களாக அவை இருப்பதால் சுத்தமாக காற்றோட்டமே இருப்பதில்லை. நாம் வெந்து போவோம். பொருட்கள் ஒழுங்காக அடுக்கி வைக்கப் படுவதில்லை. மானாவாரியாக இறைந்து கிடக்கும். தேடித்தேடி எடுக்க வேண்டியதிருக்கும். ஊழியர்களிடம் ஏதாவது விபரம் கேட்டோம் என்றால் அங்கு தான் இருக்கும் தேடிப்பாருங்கள் என்று நமக்கு உத்தரவு கிடைக்கும்.  சரி போகட்டும் தலைவிதியே என்று தேடி எடுத்து விடுவேன். (சின்ன வயதில் விளையாடிய விளையாட்டுக்கள் இப்போது உபயோகமாய் இருக்கிறது. அப்போதெல்லாம் என் தம்பி தங்கைகள் என்னுடைய கழுகுக் கண்களில் அவர்களுடைய விளையாட்டுப் பொருட்கள் சிக்கி விடக்கூடாது என ஒளித்து வைப்பர். ஆனால் விடுவேனா நான்? தேடி எடுத்து விடுவேன். அந்த அனுபவம் இப்போது கைகொடுக்கிறது).இப்போதும் அதே போல் தான், எனக்குத்தேவையான பொருட்களை எப்படியாவது தேடி எடுத்து விடுவேன். பல சமயங்களில் நான் வேறு ஏதோ ஒன்றைத்தேட வேறு ஏதோ ஒன்று கண்ணில் தட்டுப்படும். யுரேகா..இதை எவ்வளவு நாட்களாகத்தேடிக் கொண்டிருந்தோம் என நான் குதூகலித்த நாட்களும் உண்டு. சரி அது போகட்டும் , பில் போடும் போது அங்கு காத்திருக்கும் நேரம் தான் மிக கொடுமையானது. கூட்டம் அதிகமிருந்தால் மற்றொரு கவுண்டரில் பில் போடலாம் தானே. சும்மாவேனும் நின்று பேசிக் கொண்டிருப்பார்கள். நம் அவசரம் அவர்களுக்குப் புரிவது இல்லை.
பாத்திரக்கடைக்குச் சென்றேன். பாத்திரங்கள் மலை போல் குவிந்து கிடந்தன. ஆட்களும் அதிகம் ., ஆனால் இரண்டிரண்டு பேராக நின்று வம்பளத்துக் கொண்டிருந்தார்கள். நெருங்கிச் சென்று கேட்டால் ... வீட்டுக்கதை. ஆனாலும் வியாக்கியானம் பேசுவதில் இந்தியர்களுக்கு நிகர் ஒருவரும் இல்லை .( ரஜினி கூட தன்னுடைய பாஷா படத்தில் கூறுவார் .. "பேசாம இருந்தா இந்தியாக்காரன் செத்துப்போயிருவான்னு சொன்னீங்களே..சூப்பர் மேட்டர் யா....")வேலை நேரத்தில் கதை பேசு வதை என்னால் ஒத்துக்கொள்ளவே முடியாது. ஒருடாக்டரோ அல்லது ஒரு ஆசிரியரோ தன்னுடைய வேலை நேரத்தில் வெட்டிக்கதை பேசிக்கொண்டிருந்தால் ஒத்துக்கொள்வோமா? அது போலத்தான்  இதுவும். எனக்கு வெகு நாட்களாக ஒரு எண்ணம் தோன்றுவதுண்டு.. இது போல் sales செய்யும் நபர்களுக்கு குறைந்த பட்சம் மூன்று மாத டிரெய்னிங் கொடுக்க வேண்டும் என்று ..ஆனால் இது நடைமுறை சாத்தியம் இல்லை என எனக்குத் தெரியும். வேலைக்கு ஆட்கள் கிடைப்பதே குதிரைக்கொம்பாய் இருக்கும் வேளையில் எந்த உரிமையாளர் இது போல் தகுதித்தேர்வு வைத்து ஆட்களை எடுப்பார்?
ஜவுளிகள் கடைக்குச் சென்றாலும் இதே கதை தான். அங்கு பத்து சேலைகளுக்கு மேல் எடுத்துக்காட்டுவதில்லை. அவ்வளவு தான் என்று சொல்லி விடுவார்கள். நாம் அனைத்தையும் பார்த்து விட்டு ஒன்றும் பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டால் அவர்கள் தானே அதை மடித்துவைக்க வேண்டும்.இதில் அவர்களை மட்டும் குறை கூறி புண்ணியமில்லை., நம் பெண்களுக்கு சும்மா சேலைகளைப் பார்ப்பதில் ஒரு அலாதி இன்பம். வாங்கும் எண்ணமே இல்லை என்றாலும் பல சமயங்களில் சும்மா பார்ப்பார்கள்.
 இப்படித்தான் நான் ஷாப்பிங் போவது பற்றி வெறுப்பாய்பேசி வந்த காலத்தில் ஒரு நாள் ஒரு பாத்திரக்கடைக்குப்போனேன். யாரும் நம்மை கவனிக்க மாட்டார்கள் நாமே தான் தேடி எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ரசக்கும்பாவை தேடிக்கோண்டிருந்தேன். என்ன அக்கா வேண்டும் என்று ஒரு குரல்.. பாரதியார் கூறியது போல் என் காதில் தேன் வந்து பாய்ந்தாற் போலிருந்தது . இன்ப அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தேன்.சுமார் இருபது வயது மதிக்கத்தக்க கடைப்பையன்  என்னக்கா தேடுறீங்க என்றான். ரசக்கும்பா என்றவுடன் அவனுக்கு விளங்கவில்லை. அவனுக்கு விளக்கிக் கூறினேன் . அது இல்லை ஆனால் தருவித்துத் தருகிறேன் என்றான். பொருள் கிடைக்கவில்லை என்றாலும் அந்தப் பையன் அக்கா அக்கா என்று அழைத்ததினால் மனம் நிறைய  சந்
தோசம் ஏற்பட்டது. நானாக நினைத்துக் கொண்டேன்.. அந்தப் பையன் நிச்சயம் திருநெல்வேலி பக்கமாகத்தான் இருக்க வேண்டும். சென்னையில் உள்ளவர்கள் இப்படி மரியாதையாகப் பேச மாட்டார்கள். வயது வித்தியாசம் பார்க்காமல் இன்னாம்மா நீ என்று ஒருமையில் தான் விளிப்பார்கள்
எனக்கு மற்றொரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. நான் சென்னை வந்த புதிதில் வாசலில் தள்ளு வண்டியில் கொய்யாப்பழம் வந்தது. வாங்கச்சென்றேன்., நான் வாயைத்திறந்ததும் வியாபாரி உடனே கேட்டார். "ஊருக்குப்புதுசாம்மா?" எப்படித்தான் கண்டுபிடித்தாரோ.. நான் விழித்ததிலிருந்தா அல்லது என் பேச்சிலிருந்தா .. தெரியவில்லை ., ஆனால் நான் அசட்டு சிரிப்பு சிரித்து சமாளித்தேன். மற்றொரு முறை காய்கறிக்கார்ரிடம் பேரம் பேசினேன். அவர் உடனே " உனக்கு திருநெல்வேலி பக்கமா?" என்று கண்டுபிடித்து விட்டார். அத்துடன் விடவில்லை தான் நாசரேத்திலிருந்து வந்துள்ளதாகவும் பதினைந்து வருடங்களாக சென்னையில் காய்கறி வியாபாரம் செய்து வருவதாகவும் கூறினார். அவர் இப்போது எனக்கு ரொம்ப friend ஆகிவிட்டார்.
 என் பிள்ளைகளுக்கு எப்போதும் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. சந்தையில் இல்லாத ஒன்றைத் தான் கேட்பார்கள். Diary milk எல்லோருக்கும் பிடிக்கும். சிறிய ஸ்டோர் முதல் பெரிய சூப்பர் மார்க்கெட் வரை அனைத்து இடங்களிலும் கிடைக்கும். 5 ரூபாய், 10, 20 ,50 , 100 என வகை வகையாய் கிடைக்கும். அதனால் சாக்லேட் வாங்க வேண்டும் என்றால் பிரச்னையின்றி எங்காவது  சென்று வாங்கி வந்து விடுவேன். ஆனால் சில நாட்களுக்கு முன் home treats என்று புதிதாக ஒரு diary milk அறிமுகப்படுத்தினர்.
 அதனை உடைக்க வேண்டியதில்லை. சாப்பிடுவதற்கு ஏதுவாக இரண்டிரண்டாக உடைத்து மொத்த பேக் ஆக கிடைக்கும்.தன்பிறந்த நாளுக்கு அது தான் வேண்டும் என்று கூறினாள். என் தோழிகள் சாப்பிட வசதியாக இருக்கும் என்றாள். Nilgiris இல் ஸ்டாக் இல்லை என்று கூறிவிட்டார்கள். நானும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினேன். எங்கும் இல்லை. ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கேட்டேன். அவர்கள் இருக்கிற அனைத்து வகைகளையும் எடுத்துக்காட்டினர். நான் இவை இல்லை என்று அவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தேன். அப்போது மானேஜர் அங்கு வந்தார் விபரம் கேட்டார் . சொன்னேன் . இவை இல்லை .,எப்படி home treatsசிறு சிறு துண்டுகளாக சாப்பிடுவதற்கு வசதியாக இருக்கும் என விளக்கினேன். அவர்" ஓ.. இப்படி புதிதாக வருகிறதா? இன்று காலையில் கூட diary milk 4 box டெலிவரி கொடுத்தார்கள். ஆனால் இதைப்பற்றி சொல்லவிலையே., தெரிந்திருந்தால் வாங்கியிருப்பேன்." என்று டீலர் மீது கோப்ப்பட்டார். " அக்கா .. சொன்னதற்கு நன்றி.,நான் வாங்கி வைக்கிறேன் சாயங்காலம் வந்து வாங்கிக் கொள்ளுங்கள்." என்றார். ( மறுபடியும் அக்கா .. என் மகிழ்ச்சியை சொல்லவும் வேண்டுமோ?)
    அடுத்த முறை அங்கு போன போது இராஜ உபசாரம் தான் போங்கள். அக்கா home treats வந்து விட்டது .. வேறு ஏதாவது வேண்டுமா? என்று மானேஜரே வந்து தேவையானவற்றை எடுத்துக் கொடுத்து பேசுவார். நானும் அண்ணாச்சி என்று அழைத்து தேவையானவற்றை சந்தோசமாக வாங்கி வருவேன். புதிதாக ஏதாவது கேட்டால்தான் நம்மை நினைவில் வைத்துக்கொள்வார்கள் போலிருக்கிறது .இப்போது எனது ஷாப்பிங் எல்லாம் அந்த சூப்பர் மார்கக்கெட்டில் தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ?
 

3 comments:

  1. அக்கா....மந்திரச்சொல் தான்....என் தங்கை அணு மதுரையிலிருந்து போன் ல பேசும்போது ’அக்கா“னு சொல்றதுலே மயங்கி போயிருவேன்....அதுமாதிரி தங்கச்சி புராணம் தான்னு நினைச்சேன்...ஹ ஹ ஹா...ஆனா பிறர் அன்பா அக்கான்னு கூப்பிட்டா இன்னும் மனசுக்கு இதம் தரும்...உன் கூடவே சூப்பர் மார்கெட் சுத்தி வரமாதிரி இருந்துச்சுப்பா.... ;)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா சென்னையில் என் காதுகள் அக்கா என்ற அன்பான அழைப்பிற்பாக ஏங்குகின்றன...

      Delete
  2. ஹா ஹா நானும் தங்கச்சி புராணம் பாடற டைப் தான்

    ReplyDelete