சிறு வயதில் எனக்கு ஏதாவது ஒரு சந்தேகம் தோன்றும். உடனே அறிந்தவர் தெரிந்தவர் என அனைவரிடமும் அதைப் பற்றிக் கேட்பேன்.அவர்களுக்குத் தெரியாவிட்டால் லைப்ரரியில் போய் அதைப் பற்றி ஏதாவது புத்தகம் இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பேன். அங்கும் இல்லை என்றால் அதற்கு மேல் முயற்சி செய்ததில்லை. ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. Google என்று எனக்கொரு பெரிய அக்கா இருக்கிறார்கள்.,அவர்கள் வசம் web, news, YouTube, blogs என்று ஒரு பெரும் படையே உள்ளது. அவர்களிடம் சரண்டைந்து விடுவேன். இவர்களில் யாராவது ஒருவரிடம் என் தேடலுக்கு கண்டிப்பாக விடை இருக்கும்.
நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? Google நமக்கு முன்னாலேயே நம் வேலையை செய்ய ஆரம்பித்து விடுவதை.. உதாரணத்திற்கு ஏதாவது ஒரு வார்த்தையை மட்டும் டைப் செய்து பாருங்கள். உடனே அதுவாகவே யூகித்துக்கொண்டு சுமார் பத்து தேடல்களை நமக்கு அது வழங்கும். இப்படித்தான் ஒரு நாள் YouTube இல் வீடியோ பார்த்துக் கொண்டிருந்த வேளையில் சும்மா வேடிக்கையாக "how to talk" என்று டைப் செய்தேன். நமக்கே பேச சொல்லித்தரபோகிறார்களா...திருநெல்வேலிக்கே அல்வா வா? என்று நகைப்பினூடே ஸ்க்ரோல் செய்தேன் . நமக்கே பேசக்கற்றுக் கொடுக்கும் சில வீடியோக்களை காட்டியது. அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பார்க்க ஆரம்பித்தேன்.
இந்தியர்களான நமக்கு இந்தப் பயிற்சியெல்லாம் தேவையில்லை. உங்கள் உரையாடலை யாருடனாவது ஒரேயொரு கேள்வியுடன் ஆரம்பித்தால் போதும், அதற்குப்பின் உரையாடல் நீடிக்க அவரே பார்த்துக் கொள்வார். நீங்கள் போதும் போதும் என்று நினைக்கும் அளவிற்கு அனைவரும் பேசுவர். உதாரணமாக நீங்கள் பார்க்கிலோ , பீச்சிலோ அல்லது க்யுவில் நிற்கும் போது அருகிலிருப்பவரிடம் சும்மா ஒரு பேச்சுக்காக ஒரு கேள்வி கேட்டு உங்கள் உரையாடலைத் தொடங்குங்கள். அப்புறம் அவர்கள் நிறுத்தவே மாட்டார்கள். மாறி மாறி பேசிக் கொண்டே இருப்பார்கள் .நீங்களாக நினைத்தால் கூட உரையாடலிருந்து வெளியே வருவது கஷ்டம் தான். நாகரீகம் கருதி தலையை ஆட்டிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
உங்களுக்கு யாரிடமாவது பேச விருப்பம்? ஆனால் அவர்கள் உங்களிடம் பேசுவாரா?உங்களை அவருக்குப் பிடிக்குமா என்ற சந்தேகம் உள்ளதா? கவலையை விடுங்கள், கைவசம் ஒரு டெக்னிக் உள்ளது. அதைப்பின்பற்றினால் யாராக இருந்தாலும் அவருக்கு உங்களைப் பிடித்து விடும். முதலில் அவரை உற்று கவனியுங்கள். அவரிடம் புகழத்தக்க ஏதேனும் ஒரு அம்சம் இருக்கும். அதனைக் கூறுங்கள். உடனே அவருடைய முகத்தில் ஆயிரம் வாட்ஸ்பல்ப் எரியும். சந்தோசப்படுவார். பிறகென்ன அவருக்கு உங்களை ரொம்பப்பிடிக்கும் .உங்களுடன் பேச ஆசைப்படுவார். சில நாட்களுக்கு அவருடைய சந்தோசம் தொடரும்.
ஆனால் ( என்னை அறிந்தால் படத்தில் அஜித் கூறுவது போல) ஒரு மெல்லிய கோடு தான் பாராட்டுவதையும் ஐஸ் வைப்பதையும் பிரிக்கிறது. அதை உணர்ந்து அந்த எல்லை தாண்டாதீர்கள். இதையும் மீறி அவர் சீரியஸானவராக இருக்கிறார் என்றால், இன்னொரு அஸ்திரம் உள்ளது, அதைப் பயன்படுத்துங்கள். 'உங்களுக்குப் புகழ்ச்சி பிடிக்காது என்று தெரியும்' என்று புகழ்ந்து கூறுங்கள். இந்தப் புகழச்சிக்கு மயங்காதவர்
உலகில் எவருமே இல்லை.
பொதுவாக உங்கள் பேச்சினூடே நகைச்சுவை இழையோடினால் அனைவரும் ரசிப்பர். சீரியஸாக நமக்குத் தெரிந்த விஷயங்களைப் பேசி நாம் ரொம்ப புத்திசாலியாக்கும் என்று பறைசாற்றுவதை விட நகைச்சுவையாக் பேசி உங்களில் ஒருவன் நான் என்ற எண்ணத்தை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தினால் அனைவருக்கும் பிடிக்கும். அந்த நகைச்சுவையின் உட்பொருள் நீங்களாகவே இருந்தால் அது அதிக நன்மை பயக்கும்.
யாருக்கும் பிறர் நம்மை கிண்டல் கேலி செய்வது பிடிக்காது. ஆனால் எல்லோருக்கும் அடுத்தவரை கிண்டல் செய்வதை ரசிக்க ரொம்பப்பிடிக்கும். இதை எழுதும் போது என்னால் இதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. என் பிள்ளைகளிடம் பேசும்போது ஏதாவது ஜோக் சொல்லி சிரிப்பேன். உடனே அவர்கள் சொல்வார்கள்' அம்மா ஜோக்குக்கு அம்மா மட்டும் தான் சிரிப்பாங்க..' அவர்களுக்கு நான் கேலிப்பொருள் ஆவதில் ஒரு சின்ன சந்தோசம். சில சம்பவங்களை எப்போது நினைவு கூர்ந்தாலும் சிரிப்பு வரும் ., அது போன்ற சம்பவங்களை திரும்பத் திரும்பக் கூறி இடத்தை கலகலப்பாக்கலாம்.
எந்த விஷயத்தைப் பற்றியும் 10 விநாடிகளுக்கும் பேசலாம் ., 20 நிமிடங்களுக்கும் பேசலாம். அது பேசுபவரது திறமை மற்றும் கேட்பவரது பொறுமை .. இரண்டையும் சார்ந்தது. நாம் பேசுவதை பிறர் ஆர்வத்துடன் கவனிக்க வைப்பது தனிக்கலை. அதில் தான் நம் திறமை உள்ளது. இன்னொரு முக்கிய விஷயம் ., புன்னகை தவழும் முகத்துடன் பேச வேண்டும். யாரிடம் எதைப்பற்றி பேசினால் அவர்களுக்குப் பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு அதைப் பற்றி பேச வேண்டும். அது சிலருக்கு கை வந்த கலை. தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன டிப்..டீன் ஏஜ் பையன்களாக இருந்தால் அவர்களிடம் வீடியோ கேம்ஸ் பற்றி பேசுங்கள்., டீன் ஏஜ் பெண்களாக இருந்தால் அவர்களிடம்
மேக் அப் பற்றி பேசுங்கள் ., இளம் பெண்களிடம் குழந்தை வளர்ப்பு பற்றியும்.,ஆண்களிடம் கிரிக்கெட் மற்றும் சினிமா பற்றியும்.,நாற்பது வயதிற்கு (ஆண், பெண்) மேற்ப்பட்டவரிடம் ஆன்மீகம்
பற்றியும் பேசலாம்.
சரி பேச்சை எப்படி ஆரம்பித்து எப்படி கொண்டு செல்லலாம் என்று பார்த்தோம். எப்படி முடிப்பது?? சிலர் இடைவிடாது பேசிக் கொண்டே இருப்பார்கள். அவர்களிடமிருந்து எப்படி விடைபெறுவது?நாசுக்காக அவர்கள் மனம் புண்படாதவாறு எப்படி வெளியேறுவது? ஒரு எளிய முறை உள்ளது. பேசிக்கொண்டிருக்கும் போதே உங்கள் மொபைல் போனை வெளியே எடுங்கள்., அதைப்பார்த்தவாறே ' ஒரு நிமிடம்., முக்கியமான மெஸேஜ் வந்திருக்கு. உடனே போகணும்' என்று சொல்லுங்கள். அவர் விடை கொடுத்து விடுவார்.
எதையும் வீணாக்காதவர்கள் நம் மக்கள். உதாரணமாக நீங்கள் எங்காவது போகும் போது உங்களைச் சுற்றிலும் உள்ளவர்களை உற்றுப்பாருங்கள் , மற்றும் கேளுங்கள்..பேசிக்கொண்டே இருப்பார்கள். கிடைக்கும் நேரத்தை வீணாக்காமல் பேசிப்பேசி உபயோகமாக்குபவர்கள் நம் மக்கள். நான் ஒரு வீடியோ பார்த்தேன் என்று முதலில் கூறினேன் அல்லவா? அது ராமித் சேத்தி என்னும் அமெரிக்க இந்தியரது. சேத்திசார் அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு வேண்டுமானால் பேச சொல்லிக்கொடுக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் உள்ளவர்களுக்கு அது கூடவேப் பிறந்தது , தானா வரும்.
முரு, ரொம்ப நல்லா எழுதியிருக்கிங்கப்பா... .தொடர்ந்து படிக்கும் போது சட்டுன்னு முடிச்சாப்போல ஒரு உணர்வு....போரடிக்காம படிக்க முடிஞ்சதுப்பா...ஆனா ஃபினிஷிங் சட்டுன்னு வந்துருச்சு..
ReplyDelete