.
இவர்கள் இருவரையும் சந்தோஷப்படுத்தும் இரண்டு சமையல் குறிப்புகளை நான் தர உள்ளேன். முதலில் அசைவப் பிரியர்களுக்கு...முதலில் இதனை எனக்கு கொடுத்து உதவிய முத்து விஜயா என்னும் விஜிக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .( ஓர் அறிமுகம்..விஜி- சமைப்பதில் கில்லாடி, home science படித்தவர், புதிது புதிதாக சமைத்து அசத்துவார், நன்றாக படம் வரைவார், பாட்டு கேட்பதில் அலாதி பிரியம்.)
Fish moilee:
தேவையான பொருட்கள் :
வஞ்சிரம் மீன் : அரை கிலோ
வெங்காயம் பொடியாகவெட்டியது : 1 அல்லது 2
குடமிளகாய் 1" சதுரத்துண்டுகளாய் வெட்டியது : 1
தக்காளி 1" சதுரத்துண்டுகளாய்
வெட்டியது : 1
பச்சை மிளகாய் : 4 அல்லது 5
தேங்காய்ப்பால் : 2 கப்
1 கப் கெட்டியானது
1 கப் நீர்த்தது
ஒயிட் பெப்பர் : அரை டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் : 3 டேபிள்ஸபூன்
உப்பு. : தேவைக்கேற்ப
கறிவேப்பிலை : 2 ஆர்க்கு
செய்முறை:
1. வாணலியில் சிறிது எண்ணெய் காய வைத்து மீனை லேசாக வறுத்து தனியே வைக்கவும்.
2. பேன்(pan) ஒன்றில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மூன்றையும் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
3. பின்னர் நீர்த்த தேங்காய்ப் பாலையும் உப்பையும் சேர்க்கவும்.
4. சிறிது நேரம் கொதித்த பின் வெட்டிய குடமிளகாயை சேர்க்கவும். மூடி வைக்கவும்.
5. குட மிளகாய் பாதி வெந்தவுடன் தக்காளிப்பழத்தை சேர்க்கவும். சில நிமிடங்கள் வேக விடவும்.
6. பின்னர் மீன் துண்டுகளைஒவ்வொன்றாக சேர்த்து வேக விடவும்.
7. கெட்டித்தேங்காய்ப்பால் சேர்க்கவும்.
8. ஒயிட் பெப்பர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக விடவும்.
9. சுடச்சுட சாதம்,ஆப்பம் அல்லது தோசையுடன் பரிமாறவும்.
இதை அவர் விவரித்த வித த்தைக் கேட்டாலே நாவில் எச்சில் ஊறியது. கண்டிப்பாக முயன்று பாருங்கள் . மீன் உண்ண விரும்பாதவர்கள் கூட இதை விரும்பி ருசிப்பர் என்று உறுதிபட கூறினார்.
சைவப் பிரியர்களுக்கு புரோட்டீன் நிறைந்த , கொலஸ்ட்ரால் இல்லாத காளான் செய்முறை ஒன்றை அறிந்து கொண்டேன். இதனை எனக்கு தந்து உதவியவர் சங்கரேஸ்வரி- எனது தம்பி மனைவி, மற்றும் மகள். கோலம் போடுவதில் வல்லவர். சமையலில் அதீத ஈடுபாடு. குழந்தைகள் மீது கொள்ளை பிரியம். கொஞ்சித்தள்ளி விடுவார். இவரது சமையலுக்கு இவரது கணவரும் குழந்தைகளும் நம்பர் ஒன் ரசிகர்கள். குறிப்பாக மகன். நீங்களும் இதை முயற்சித்த பிறகு தீவிர ரசிகர்கள் ஆகிவிடுவீர்கள் என்று எதிர் பார்க்கிறேன்.
தேவையான பொருட்கள்:
காளான். : ஒரு பாக்கெட்
வெங்காயம்: 2
தக்காளி. :3
குடமிளகாய்.: 2
உப்பு
சர்க்கரை
எண்ணெய்
எண்ணெயில் வதக்கி பின் அரைத்துக் கொள்ளவும்:
துருவியதேங்காய் : 2 டேபிள்ஸபூன்
மிளகு : அரை டீஸ்பூன்
பட்டை : சிறிய துண்டு
லவங்கம்: சிறிய துண்டு
பூண்டு : 7 பல்
இஞ்சி : 1 அங்குலத்துண்டு
செய்முறை:
1. காளானை எலுமிச்சை கலந்த நீரில் கழுவி , நீரை வடித்து விட்டு மெல்லிய துணியில் பரப்பி உலர வைக்கவும். இரண்டிரண்டாக அரியவும்.
2. வெங்காயம் , தக்காளி , குடமிளகாய் இவற்றை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.
3. வாணலியில் எண்ணெய் விட்டு , காய்ந்தவுடன் வெங்காயத்தை போட்டு , பின் குட மிளகாயைப் போட்டு வதக்கவும்.
4. நன்றாக சிவந்தவுடன் தக்காளியைப் போட்டு ஈரப்பதம் போகும்வரை வதக்கவும்.
5. பின் காளான் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கவும்.
6. இத்துடன்அரைத்து வைத்த மசாலாவை சேர்க்கவும். உப்பு, சர்க்கரையை ருசிக்கேற்ப அளவோடு சேர்க்கவும்.
7. எண்ணெய் பிந்து வரும் வரை வதக்கவும். 8. தேவைக்கேற்ப நீர் ஊற்றி குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
9.புல்கா அல்லது சப்பாத்தியுடன் சூடாகப் பரிமாறவும்.
நீங்கள் கவனித்திருக்கிறீர்களா!! ஹோட்டலுக்குச் செல்கிறோம். மெனு கார் டைப் பார்த்து அலசி ஆராய்ந்து ஒரு உணவை வாங்கி ரசித்து சாப்பிடுகிறோம். சிலர் அத்துடன் விடுவதில்லை அதை எப்படி தயாரித்துள்ளார்கள் என்று சிஐடி போல் ஆராய்ச்சி செய்வார்கள். வீட்டிற்கு வந்தவுடன் அதே மாதிரி செய்ய முயல்வார்கள். சிலர் ஹோட்டலில் வீட்டில் கிடைப்பது வீட்டில் கிடைக்காது என்று குடும்பத்தினருக்கு உணர்த்தி விட்டு நிம்மதியாய் இருப்பார்கள். முதலில் பாரத்தவர்களுக்கு சமைப்பதில் ஆர்வம். இரண்டாம் வகையினருக்கு சாப்பிடுவதில் ஆர்வம். நீங்கள் எந்த ரகம்? சொல்லுங்கள்.
ஒன்று சொல்லட்டுமா? அருணா என்னுடன் பேசிக்கொண்டிருந்த போது, அம்மா ஒரே மாதிரி எழுதாதீங்கம்மா..கொஞ்சம் different ஆ try பண்ணுங்க. Recipe போடுங்க.,கதை எழுதுங்க( ஐயோ பாவம் நீங்கள்.. அதை வேறு முயற்சி பண்ணலாம்னு இருக்கேன்.. உங்களை மாதிரி புண்ணியவான்களை நம்பித்தான்) என்றாள். அதன் பிரதிபலிப்பு தான் இந்த சமையல் குறிப்புகள். நண்பர்களே இந்த சமையல் குறிப்புகள் உங்களுக்குப் பிடித்ததா? உன்னிடம் இல்லையா என்று கேட்காதீர்கள். அதன் பின்னால் பெரிய கதை உள்ளது. என் சமையல் ஞானத்தை அடுத்த பகிர்வில் விவரிக்கின்றேன். அது வரை காத்திரு ங்கள்.
அருமையான சுவை (கட்டுரை)
ReplyDeleteThank u 😍😃😜சாப்பிட வாங்க
ReplyDelete