அதிகாலை மணி ஆறு. அவளுக்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன். கையில் காப்பியுடன் என்னவள் வருகிறாளா வருகிறாளா என்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளை சைக்கிளில் சுமந்து வருகிறான் ஒரு வாலிபன். அவசரகதியில் அவளைத்தூக்கியெறிந்து விட்டு தன் வழியே பறக்கிறான். பாவம் அவன் அவசரம் அவனுக்கு . எட்டு மணிக்கு வேறு வேலைக்குப் போக வேண்டும் அல்லவா அவன்.
ஆனால் எனக்குத்தான் மனம் பதைபதைக்கின்றது. ஓடிப்போய் அவளை அள்ளி எடுக்கின்றேன். மண்ணில் பட்டு அவள் மேனி சிதைந்துள்ளதா என சரி பார்க்கின்றேன். ஒன்றும் ஆகவில்லை அவளது திருமேனிக்கு என்று அறிந்தவுடன் மகிழ்ச்சியுடன் அவளை அணைத்தவாறே வீட்டினுள் நுழைகின்றேன். இதோ அவளை அள்ளி முகரப் போகின்றேன். .. அவள் தான் என் மனம் கவர்ந்த காதலி, தினந்தோறும் என் வீடு தேடி வரும் உற்ற தோழி, நாளெல்லாம் என்மீது மையல் கொள்ளும் மங்கை..... அவள் என்று ஒருமையிலா குறிப்பிட்டேன்? தவறு., எனக்கு நான்கைந்து காதலிகள்.. ஆங்கிலம், தமிழ் என தலா இரண்டு காதலிகள்.
நான் இவ்வளவு சிலாகித்துப் பேசும் நாளிதழ்கள் என்க்கு வாழ்வில் பலவற்றை கற்றுக்கொடுத்தன. கல்லூரிக் காலத்தை முழுமையாக படித்துணர்ந்து அனுபவிக்க முடியாத எனக்கு இவர்களே ஆசான்கள். தெரியாத விஷயங்களை இவர்களை ஊன்றிப் படித்து தெரிந்து கொண்டேன். எவ்வளவோ நான் கற்றுக்கொண்டாலும், நீ இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது பல உள்ளது என நாள்தோறும் புதிது புதிதாய் தகவல்களைத் தாங்கி வரும் தாரகைகள் இவர்கள்.
நாள்தோறும் ஒரு சிறப்பு ஆடை உடுத்தி இவர்கள் என்னை மயக்குவார்கள். ஆன்மீகம், சினிமா, அறிவியல், பெண்கள் பகுதி, விளையாட்டு என இவர்களது ஆடைகள் ஜொலிஜொலிக்கும். அதுவும் ஞாயிறு என்றால் போச்சு... ஏதோ fashion paradeக்குப் போவது போல வித விதமாய் ஒய்யாரமாய் வலம் வருவார்கள். என்னால் அன்று அவர்களை விட்டு கண்ணை எடுக்கமுடியாது..ஜாலக்காரிகள்..அவர்களது மாய வலையில் நான் வீழ்ந்து விட்டேன்.
உங்களுக்கெல்லாம் கதை பேசுவது, வம்பளப்பது எல்லாம் பிடிக்கும் தானே? எனக்கு ரொம்பப்பிடிக்கும். அதைத்தெரிந்து இந்த அழகிகள் நள்தோறும் சுவையான தகவல்கள் தருவார்கள். நவரசத்திற்குப்பஞ்சமே இராது. திகில், நகைச்சுவை, கோபம், அருவருப்பு என்று பல தரப்பட்ட உணர்ச்சிகளுக்கு இவர்களைப் படித்தவுடன் ஆளாவேன்.
சமீபத்தில் நான் வாய்விட்டு சிரித்த இரண்டு நிகழ்ச்சிகள்...கிரீஸ் நாட்டின் அதிபர் தேர்தல் சமீபத்தில் நடந்தது. பொருளாதார மந்த நிலையில் இருக்கும் கிரீஸ் நாட்டு அதிபர் வெளியிட்ட முதல் அறிக்கை என்ன தெரியுமா? நாட்டின் பொருளாதார நிலை சீரடையும்வரை தான் டை அணியப்போவதில்லை என்று..ஹா..ஹா.. இரண்டிற்கும் என்ன சம்பந்தம் என்று எனக்குப் புரியவில்லை .
மற்றொன்று சென்ற வாரம் நியுஸிலாந்து சென்ற கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஹாரிஸ்சொஹைல் தனது அறையில் பேய் இருப்பதாகத் கூறி அங்கிருந்து வெளியேறினாராம்..ஹா..ஹா..
மனம் துணுக்குற்ற செய்தி..ஆன்லைன் மூலமாக துப்பாக்கி வாங்கிய இளைஞர்.
இவ்வாறாக என்னுடைய எண்ணம், சிந்தனை , செயல் என அனைத்திலும் இவர்களே வியாபித்துள்ளனர். இவர்களைத்தாண்டி என்னால் யோசனை செய்ய முடியாது.. இவர்கள் இல்லாத வாழ்வை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை.என் கணவருடனான காரசாரமான விவாதம் இவர்களைப் பற்றியே இருக்கும். உற்றார்உறவினருடனான என்னுடைய உரையாடலில் உட்பொருள் இவர்களே தான்.
முடிவில் ஒரு சிறிய சந்தேகம். நானோ பெண். நான் நாளிதழ்களை உருவகப்படுத்தியதோ காதலிகளாக.. தவறோ?!? காதலனாக உருவகப்படுத்த வேண்டுமோ என்ற ஐயம் எழுந்தது. விமரிசனம் எழுந்தால் அதை சமாளிப்பதற்காக இந்தக்
கடைசிப் படம்.( பெருமாள் முருகன் சம்பவத்தை வாசித்ததினால் ஏற்ப்பட்ட தாக்கம்..எதற்கும் ஒரு முன் எச்சரிக்கை உணர்வு தான் . சரி தானா அன்பர்களே?!)
I could see your thirst to read News papers, Magazines...It definitely gives you vast knowledge.All the best to have that lover with you ever.
ReplyDeleteThat's my passion , obsession will be with the m forever .. Thank i
Delete