அன்று கீதாவுக்கு கடைசி நாள் காலேஜ். ஹாஸ்டலிருந்து அன்று மாலையே ஊருக்கு கிளம்ப திட்டமிட்டாள். நினைத்துப் பார்க்கவே ஆச்சர்யமாய் இருந்தது. எப்படித்தான் இந்த நான்கு வருடங்கள் ஓடியதோ அவளுக்கே தெரியவில்லை. தான் கல்லூரியில் சேர்ந்த முதல் நாளை எண்ணிப் பார்த்தாள். கண்களில் மிரட்சியுடன் அவள் நுழைந்ததை அவளால் இன்றும் மறக்க முடியவில்லை.அவளுடைய அம்மா தான் அவளுக்கு தைரியமூட்டினாள். " முதல் இரண்டு நாட்கள் அப்படித்தான். பெற்றோரைப் பிரிந்தால் பயமாகத்தான் இருக்கும். ஆனால் பழகிவிடும். பின் எப்போது மனிதர்களைப் பற்றி தெரிந்து கொள்ளப்போகிறாய்?"
கீதா புன்னகைத்தாள். நம்முடைய அம்மா மிகச் சரியாக சொல்லியிருக்கிறார்களே என்று எண்ணினாள். கீதாவை ஹாஸ்டலில் கொண்டு வந்துவிட அவளுடைய அம்மா பார்த்து பார்த்து ஷாப்பிங் செய்ததை நினைத்துப் பார்த்தாள். ஸ்டேஷனரி, மெத்தை, தலையணை என அனைத்தையும் நோட்டம் விட்டாள். இவை அனைத்தையும் ஊருக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டே பேக் செய்ய ஆரம்பித்தாள்.
அம்மா தந்த முதலுதவி பெட்டி கண்ணில் பட்டது. திறந்து பார்த்தாள்..சில மாத்திரைகள், ஆயிண்மெண்ட், நான்கு பேண்ட் எய்ட் இருந்தது. 'அட, இந்த பேண்ட் எய்ட் அம்மா முதல் முதலில் வாங்கித் தந்தது அல்லா?! நாம் இதை உபயோகிக்கவே இல்லையா?' என்று புன்னகையுடன் பெட்டியை மூடினாள். மூடி சரக்கென்று விரலைக் கீறி இரத்தம் கொட்டியது. அய்யோ என்று பதறியவாறே ஒரு பேண்ட் எய்ட் எடுத்துப் போட்டாள்.
அன்றைய தினம் கடைசி தினம் அல்லவா வகுப்புகள் இனித்தன. பழைய நினைவுகளில் அனைவரும் மூழ்கினர். முகவரிகள் பரிமாறிக் கொண்டனர். கட்டாயம் வருடமொரு முறை சந்திக்க வேண்டுமென உறுதி எடுத்தனர். ' சரி, எல்லாரும் மெஸ்ஸில் இன்று கடைசி நாளாக ஒன்றாக சாப்பிடுவோம்.' என்று திட்டமிட்டவாறே மெஸ்ஸிற்கு புறப்பட்டனர். தோழிகள் முதலிலேயே சென்று விட்டனர். கீதாவும் அவசரமாக கதவை சாத்திவிட்டு கிளம்ப எத்தனித்தாள்.
என்ன நேரமோ என்னவோ, கதவிடுக்கு சுண்டு விரலில் பட்டு இரத்தம் வர ஆரம்பித்து விட்டது. பதட்டத்துடன் இன்னொரு பேண்ட் எய்ட் எடுத்து போட்டுவிட்டு வேகமாக படியிறங்கினாள். பட்ட காலிலேயே படும் என்றாற் போல் படிகளில் வழுக்கி விழுந்து முழங்கையில் இளைத்து விட்டது. இன்னொரு பேண்ட் எய்ட்.
'இனிமேல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்' என்ற எச்சரிக்கையுடன் மெதுவாக சென்றாள்.மெஸ்ஸில் தோழிகள் இவள் வருகைக்காக காத்திருந்தார்கள். இவள் நுழைவதைப் பார்த்தவுடன் உற்ற தோழி மீனா சிரித்து விட்டாள். " என்ன கீதா,பேண்ட் எய்ட் வேஸ்ட்டா போயிடும்னு எல்லாத்தையும் எடுத்து ஒட்டிக்கிட்டாயா? என்ன திடீர் னு இத்தனை பேண்ட் எய்ட்?" தோழிகள் அனைவரும் சிரித்தனர். கீதாவும் சிரித்துக் கொண்டாள்.,' அட, ஆமாம்ல, காலையில் தான் நாலு பேண்ட் எய்ட் நாலு வருசமாய் பத்திரமாக வைச்சிருக்கோம் ன்னு நினைச்சோம். மதியத்திற்குள் நான்கையும் காலி செய்து விட்டோமே! ஊருக்குப் போய் அம்மாவிடம் இந்த கதையை சொல்ல வேண்டும்.' என்று எண்ணினாள்.
சிரித்துக்கொண்டே தோழிகளின் அரட்டையில் கலந்து கொண்டு மெதுவாக சாப்பிட ஆரம்பித்தாள்.
No comments:
Post a Comment