சிவபெருமான் திருக்கோயில்களில் இராஜகோபுரத்தை அடுத்து முதலில் பலிபீடம், ந ந்தி, கொடிமரம் ஆகியவை காணப்படும். இவை இத்திருக்கோயிலில் இல்லை.
கருப்பகிரகத்தில் ஆவுடையார் என்ற பீடம் மட்டுமே உள்ளது. அதற்கு மேலே குவளை சாத்தி அலங்காரம் செய்யப்படுகிறது.
சுவாமிக்கு நைவேத்தியம் செய்யும் போது நைவேத்தியத்தை மூடிய பாத்திரத்தில் கொண்டு வந்து சுவாமி திருமுன் வைத்து வெளியில் நிற்பவர்கள் பார்க்க முடியாத படி இடையில் மறைப்பு பரிவட்டமும் தொங்கவிட்டு மறைவாக நைவேத்தியம் செய்வார்கள். மற்றைய கோயில்களில் மறைப்பு பரிவட்டத்தை நீக்கி தீபாரதனைகள் நடைபெறும். ஆனால் திருப்பெருந்துறையில் ஆத்மநாதசுவாமி திருமுன்னுள்ள பெரிய படைக்கல்லில் கருவறை முழுவதும் ஆவி பரவிச் சூழும் படியாக நைவேத்திய அன்னத்தை மலை போல குவித்து தேங்குழல், அதிரசம், அப்பம் முதலிய பட்சண வகைகளை அதனைச் சூழ வைத்து வில்வ தழைகளைத் தூவி, அன்னமுள்ள படைகல்லுக்கு வெளியிலிருந்து தீபாரதனை செய்வது போலிருக்கும்.
கோயில்களில் நடைபெறும் நாள், பூசை,விழாக்கள் ஆகியவைகளின் போது நாதசுரம், மேளம், பேரிகை, சுத்த மத்தளம் முதலிய வாத்தியங்கள் முழங்கப்படும். இத்தகைய வாத்திய ஒலிகளை இங்கு கேட்க முடியாது. திருச்சின்னம், சங்கு, மணி முதலிய ஒலிகளே கேட்கப்படும்.
தாம் பெற்ற சிவானுபவங்களை தேனினும் இனிய அமுதமாக செந்தமிழ்ப் பாடல்களாக மாணிக்கவாசகர் திருவாய் மலர்ந்தருளிய திருவாசகம் என்னும் அருள் நூல் மலர்ந்த பெருமைக்கு உரியதும் இத்தலமே.
இக்கோயில் முன் மண்டபங்களில் எழில் பெற விளங்கும் சிற்பங்கள். அச்சிற்பங்பளில் காணப்படும் நுண்ணிய வேலைப்பாடுகள், அவை தம் உடலமைப்பாலும், முகபாவத்தாலும் வெளிப்படுத்தும் செய்திகள் யாவும் காண்பவர் கண்களை வியப்பில் விரியச் செய்யும். அவற்றை சொல்லில் வடித்துக் கொட்டவும் ஒண்ணாது.
இங்குள்ள கொடுங்கை ( கொடுங்கை - மேல்கூரை) வேலைப்பாடுகள் உலகப் பிரசித்தமானவை. அந்தக் காலத்தில் சிறப்புகளை கூப்பிட்டு," நாங்கள் கட்டும் கோயிலுக்கு சிற்பம் செய்ய வேண்டும். அதற்கு ஒப்பந்த ஓலை எழுதிக் கொடுங்கள்" என்று சொன்னால் அந்த சிற்பிகள் ஒப்பந்த ஓலை எழுதும் போது ,' தாரமங்கலம் தூணும், திருவலஞ்சுழிப் பலகணியும், ஆவுடையார் கோயில் கொடுங்கையும் தவிர மற்ற எல்லாவிதமான சிற்ப வேலைகளையும் செய்து கொடுக்கிறோம்' என்று எழுதித் தருவார்கள் என்று கர்ண பரம்பரைச் செய்தி வழங்கி வருகிறது. இந்த செய்தியால் ஆவுடையார் கோயிலில் உள்ள கொடுங்கையின் மேன்மை நன்றாகத் தெரிகிறது .
தியாக ராச மண்டபம் கொடுங்கை சிறப்பு:
இந்த மண்டபத்தில் மாணிக்க வாசகரின் மந்திரி கோலச் சிற்பமும், துறவுக்கோலச் சிற்பமும் உள்ளன. அந்த மண்டபத்தின் கொடுங்கையின் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. கருங்கல்லைத் தகடாக்கி அதிலே பல வளைவுகளை உருவாக்கிக் கூரை போட்டது போல அமைந்திருக்கும் திறம் பெரும்பாலும் வியப்பை உண்டாக்குகிறது. மர வேலையில் உள்ள நுட்பங்கள் எல்லாம் இங்கே கருங்கல்லில் காண முடிகிறது. மரச்சட்டங்களில் குமிழ் ஆணி அடித்தாற்போன்ற தோற்றங்களில் கல்லிலும் காட்டிய சிற்பியின் கைத்திறத்தை எப்படித்தான் புகழ்வது?
இங்குள்ள அபூர்வ சிற்பங்கள் வேறு சில:
1. டுண்டி விநாயகர் சிற்ப உருவம்.
2. உடும்பும் குரங்கும்.
3. கற்சங்கிலிகள்- சங்கிலியின் நுனியில் பாம்பு ஒன்று பின்னிக் கொண்டு தலையினைக் காட்டுவது.
4. இரண்டே தூண்களில் ஓராயிரம் கால்கள்.
5. 1008 சிவாலயங்களில் உள்ள இறைவன் இறைவியர் திருவுருவங்கள்.
6. பல நாட்டு குதிரைச்சிற்பங்கள்.
7. 27 நட்சத்திர உருவச் சிற்பங்கள்.
8. நடனக் கலை முத்திர பேதங்கள்.
9. சப்தஸ்வர கற்தூண்கள்.
19. கூடல் வாய் நிழல் விழும் பகுதி பசுமாட்டின் கழுத்து போன று காணப்படுதல்.
No comments:
Post a Comment